வசை





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கர்மங்களை அறவே துறந்து, அத் துறத்தலின் பயனையும் துறந்து, அது பற்றி எழக்கூடிய அகங்காரத்தையும் துறத்தல் வேண்டும்… ’

அக்கம் பக்கமாக இரு மாமரங்கள் பழப்பயன் நல்கி வாழ்ந்தன.
ஆண்டுகளின் ஓட்டத்தில், ஒரு மாமரத்தின் மனத்திலே வியாகூலம் வளரலாயிற்று. சிறாரின் கல்லெறிகளுக்கும், பறவைகளின் குட்டல்களுக்கும் ஆளாகித் தான் துன்பப்படுவ தான சோகத்தில் அழுக்காறும் புகுந்துகொள்ளவே தற்பற்று ஏகமாகியது. வேர்களை ஆழமாக நிலத்திலே உழுது நீர் உறிஞ்சியும். வானவெளியில் செழுங்கிளை பரப்பி வெப்பம் காய்ந்தும், கனிகளை விளைவித்து மனிதருக்கும் பட்சிகளுக்கும் கொடுப்பதில் யாது பயன்? என்னால் பழங்களைப் புசித்துச் சுவைக்க முடிகிறதா? தொடர்ந்து ஏற்படும் இந்த ஆக்கினை அனுபலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்… ! என்று பலவாறு யோசித்துத் தீர்மானத்திற்கு வந்தது. எனவே, தன் மிடிமைகளுக்கு விமோசனம் தேடும் முகமாக, அன்னை பராசக்தியை நினைத்து நீண்ட நோன்பு இயற்றலாயிற்று. அதன் பக்தியின் பிணைப்பிலே சிக்குண்ட அன்னை பிரசன்னமாயினள்.
‘நான் இனிக் கனிகள் தராதவளாக, நித்திய கன்னியின் பொலிவில் வாழ வரம் அருளும் தாயே!’ என இறைஞ்சியது. அன்னை அருள் சுரந்தாள்,
அன்றிலிருந்து அம்மரம் ஒரு பழந்தானும் தராது தலை நிமிர்த்து நின்றது. பக்கத்து மரம் வழமைபோலப் பழப்பயன் பொழிந்து வந்தது.
ஆண்டுகள் சில ஓடின. அம்மரங்களின் சொந்தக்காரன், ‘ஒரு மரம் வீணே பயன் தராது திடுமலியாக நிற்கின்றதே. தறித்தால் பலகைகளும், விறகுமாவது தேறும்’ என நினைத்து அதனைத் தறிப்பித்தான்.
ஒவ்வொரு கிளையாகத் தறிபட, சித்திரவதையுடன் மரணாவஸ்தை அடையும் மரத்தைப் பார்த்த பயன்தரு மரத்தின் மனத்திலே கழிபேரிரக்கம் சுரந்தது.
‘சகோதரி!….பயனைத் துறத்தலிலுள்ள இன்பத்தினை அறியாததினால் வந்துற்ற சோகம்…. பயனைத் துறத்தலின் விளைவுகள் பற்றிப் பரமாத்மாவே போதித்திருக்கின்றார். இராசத, தாமச கர்மங்களை அறவே துறந்து, அத்துறத் தலின் பயனையுந் துறந்து, அது பற்றி எழக்கூடிய அகங்கா ரத்தையும் துறந்துவிடல் வேண்டும். சாத்துவிகக் கர்மங் களைத் துறக்காது, பயனை மட்டுமே துறத்தல் வேண்டும். இடையறாது பயனைத் துறந்து கொண்டே சாத்துவிகக் கருமங்களை இயற்றுவோமாயின் சித்த சுத்தி மூலம் சாந்த மும், சாந்தத்திலிருந்து சூட்சுமமும், சூட்சுமத்திலிருந்து சூன்யமும் என்ற தொடரிலே கிரியையே அற்றுப்போகும். இதனால், நன்மை என்ற கர்மம் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும்….’
தறிபட்ட மாமரத்தின் குற்றியிலே அமர்ந்த மரச் சொந்தக்காரன்,
‘நல்ல குருநாதன் நம்மை வருத்துவது
கொல்லவல்ல கொல்லவல்லப்
பொல்லாப் பிணி யறுக்க….’
எனப் பாடலானான்!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |