கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 3,029 
 
 

சிலர் பலருக்காக உழைக்கிறார்கள், பலர் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். அனைவரும் ஒரே மாதிரியான மனிதப்பிறப்பாக இருந்தாலும் ஒவ்வொருவர் குணமும், ஒவ்வொருவருவருடைய வாழ்க்கை முறையும், வாழுகின்ற விதமும் மாறுபட்டிருப்பதை உறக்கத்தைக் கெடுத்து யோசித்துக்கொண்டிருந்தார் இருபது வயதில் ஏழையாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று அறுபது வயதில் மாளிகையில் வசிக்கும் தொழிலதிபர் பரமசிவம்.

“என்ற ஜாதகத்துல நெறைய யோகமிருக்குதுன்னு அடிக்கடி சொல்லுவீங்க, இப்பங்கூட சொல்லறீங்க…. ஆனா நாம் பொறந்து எனக்கு இருபது வயசுல இருந்து தொழில், தொழில்னு ஓயாமக்கஷ்டப்படறேன். இப்ப அறுபதாகப்போகுது. தெருக்கோடில இருந்த எனக்கு நூறு கோடிக்கு இப்ப சொத்து இருக்குது. நிம்மிதின்னு ஒன்னு என்ற கிட்ட வரவே பயப்படுது. மன பயத்த விட, பண பயம் ஒன்னந்தீரமாட்டீங்குது. ஜாதகத்த கொஞ்சம் நல்லாக்கணிச்சு சொல்லுங்க” பிரபல ஜோதிடர் கந்தனைப் பார்த்துக் கேட்டார் பரமசிவம்.

“யோகமுள்ளவங்கள அதிர்ஷ்டசாலிகள்னும், அனுபவிக்கப்பொறந்தவங்கன்னும் நெனைக்கறீங்க. ஆனா உண்மையிலேயே யோகமில்லாதவங்கதான் இந்த பூமில அதிஷ்டசாலிகள்னும், அனுபவிக்கப்பொறந்தவங்கன்னும் நாஞ்சொல்லுவேன்”

“எப்படி…?”

“யோகத்தோட பொறந்தவங்களுக்கு வருமானம் ஏதாவதொரு வழில வந்துட்டே இருக்கும். வருமானம் வானத்துல இருந்து கொட்டப்போறதில்ல. தொழில் அமைஞ்சு அது மூலமாத்தாங்கெடைக்கும். தொழில்னு அமைஞ்சுட்டாலே தெனமும் வேலை செஞ்சுட்டே இருந்ததாத்தான் தொழில் நடக்கும். அப்பறம் நெறைய வருமானம் வரோணும்னு தொழில விரிவாக்கம் பண்ணக்கடன் வாங்க வைக்கும். பழைய ஊட்ல வாழப்புடிக்காது. புதுசா ஊடு கட்டச்சொல்லும், கார வாங்கச்சொல்லும். அப்பறம் பங்களா ஊடு கட்டச்சொல்லும். பெரிய காரா வாங்கச்சொல்லும். சுற்றுலாவுக்கு எல்லாரும் பக்கத்துல இருக்கற ஊட்டிக்குப்போனா, யோகமுள்ளவங்கள சிங்கப்பூரு, மலேசியா, இந்தோனேசியான்னு வெளிநாட்டுக்குப்போகச்சொல்லும். அப்பறம் ஆயுசுக்கும் பிரேக் போட முடியாது. பிரேக்போடவும் தோணாது. பணத்தேவையும், பயணத்தேவையும் இருந்துடே இருக்கறதுனால பணம், பணம்னு மனசு அத நோக்கியே போகும்” என அனுபவமுள்ள ஜோதிடர் கூறியதைக்கேட்ட போது நடைமுறைக்கு ஒத்துப்போவதாகப்பட்டது.

“ஆனா யோகமில்லாம பொறக்கறவங்களுக்கு பெருசா வருமானம் வராது. அதனால கடன வாங்குனா கட்டமுடியாதுன்னு புரிஞ்சுட்டு முன்னோர்கள் கட்டி வெச்சுட்டுப்போன ஊடே போதும்னு அதுலயே காலத்த ஓட்டிக்குவாங்க. நிரந்தரமில்லாத வேலைக்கு தேவைக்கு மட்டும் போவாங்க. பணத்தேவையில்லேன்னா‌ போக மாட்டாங்க. லீவு போட்டுட்டு வந்த வருமானத்த முழுசா செலவு பண்ணிக்குவாங்க. சொந்த பந்தத்துல விசேசம்னா நாள் கணக்குல போயி இருந்துட்டு அவங்க கிட்டையும் நல்ல பேரு எடுத்துக்குவாங்க. குடிக்கிறவங்க கூடச்சேர்ந்தா குடிப்பாங்க. கோயிலுக்கு போறவங்க கூடச்சேர்ந்தா விரதமும் இருப்பாங்க. மொத்தத்துல எல்லாருக்கும் நல்லவங்களா இருப்பாங்க. அடிக்கடி டூர் போவாங்க. பகல்லியும் தூங்குவாங்க. கம்மி வெலைக்கு கெடைக்கிற எடமாத்தேடி கண்டுபுடிச்சு சாப்பாட்டுக்கு தேவையானத வாங்கிக்குவாங்க. ஒடம்புக்கு வெளில ஆடம்பரம் காட்ட மாட்டாங்க. ஆனா நேரத்துக்கு விருப்பப்பட்டத செஞ்சு ஆடம்பரமா சாப்பிடுவாங்க. யோகமுள்ளவங்களுக்கு சாப்பிட நேரம் இருக்காது. சொந்தக்காரங்க விசேசத்துக்கு போகவும் முடியாது. சம்பாதிக்கறாங்கன்னு பொறாமப்பட்டு இவங்க ஊட்டுக்கு ஊரும், உறவும் வர மாட்டாங்க‌. ஆனா சமுதாயத்துல மதிப்பிருக்கும். அன்னதானம் பண்ணுவாங்க, கஷ்டப்படவங்களுக்கு ஒதவி செய்யுவாங்க. கோயிலுங்கூட கட்டுவாங்க. அடுத்தவங்களுக்கு நல்ல துணி தானங்கொடுத்துட்டு இவங்க அவசரத்துல பழைய துணியக்கூடப்போட்டுக்குவாங்க” 

“இப்பத்தானுங்க புரிஞ்சுது. காய்க்கிற மரத்துக்கு கல்லடி உண்டுன்னு சொல்லாம சொல்லிப்போட்டீங்க. நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சொல்லறத நல்ல யோகமுள்ளவங்களுக்கு, தான் வாழறதுக்கு நேரமில்லைன்னு புரிஞ்சுக்க வேண்டியது தான். யோகசாலிகள் வாழ்க்கை பகல் பொழுது மாதர. பாடு பட்டுட்டே இருக்கோணும். யோகமில்லாதவங்க வாழ்க்க ராத்திரிப்பொழுது மாதர. சுகபோகமா வாழ்ந்து போடலாம். நல்லாப்புரிஞ்சுக்கிற மாதிரி விளக்கங்கொடுத்துப்போட்டீங்க. ம்..‌ நாம வாங்கி வந்த வரம் அப்படி. அடுத்த ஜென்மத்துலயாவது யோகமில்லாமப்பொறந்து, இந்த பூமில சொகத்த அனுபவிக்கோணும்னு சாமிய வேண்டிக்கிறதைத்தவிர இப்ப வேற வழியில்லை…‌” என கூறிய தொழிலதிபர் பரமசிவம், ஒரு ஜாதகத்துக்கு மற்றவர்கள் கொடுக்கும் தட்சணையை விட பத்து மடங்கு அதிகமாக சேர்த்துக்கொடுத்து ஜோதிடரை மகிழ்ச்சிப்படுத்தி விட்டு, தான் வாழும் வசதி மிகுந்த ஆடம்பர வாழ்வில் மகிழ்சியற்ற மனநிலையுடன் தனது விலையுயர்ந்த சொகுசு காரில் ஏறினார்!

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *