மூன்று கனவுகள்
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜகோபாலன் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு படுத்தான்; உறக்கம் வரவில்லை. போர்வை யைத் தூர எறிந்துவிட்டுச் சாய்ந்து படுத்தான். அப்படியும் உறக்கம் வரவில்லை!
எப்படியும் நாளைக் காலை அப்பாவிடம் தன்னு டைய முடிவைச் சொல்லியாகவேண்டுமே!
சுந்தரி நல்ல அழகி. அவளுக்கு நிகரான அழகும் கலகலத்த பேச்சும் கலாசாலையிலேயே வேறு யாருக்கும் கிடையாது. அவளையே கல்யாணம் செய்துகொண்டால் என்ன? அந்த அழகும் கலகலப் பும் தன்னுடைய வாழ்க்கைக்கு அணி தருமே!
வாணிக்கு நல்ல சாரீரம். வீணையை மீட்டிக் கொண்டு பாட ஆரம்பித்துவிட்டால், யாரோ தேவ லோகத்து அப்ஸரஸ் பூமிக்கு வந்து இந்த ரஜ கோபாலனுக்கு என்றே கீதமிசைப்பது போல இருக்கும்! தனது வாழ்க்கை அந்த வீணையின் சுருதியிலே சேர்ந்துகொண்டால் என்ன?
ராஜலக்ஷ்மியோ பெரிய பணக்காரி. நேரத்துக்கு ஒரு உடை. நிமிஷத்துக்கு ஒரு மினுக்கு. வினாடிக்கு ஒரு பகட்டு! கலாசாலைக்கு வருகிற கார் ஒன்று. மத்தியான டிபனுக்குப் போகிற கார் இன்னொன்று. மாலையில் அவளை வீட்டுக்கு அழைத்துப் போகிற காரோ மற்றொன்று! ராஜகோபாலன் தன்னுடைய வாழ்க்கையை அந்த
உல்லாஸமான காரிலேயே பவனி செலுத்தினால் என்ன?
விழியை மூடிக்கொண்டே வெகுநேரம் யோசனைகளைச் சுழற்றிவிட்டான் ராஜகோபாலன்.
2
சுந்தரி ராஜகோபாலன் கையைப் பிடித்த முகூர்த்தம் சுந்தர முகூர்த்தம்தான் போலும்! அவனுடைய வாழ்க்கையில் ஓர் அழகு ஏற்பட்டது. பந்துக்கள் எல்லாரும் சுந்தரியின் அழகையும் சாமர்த்தியத்தையும் பிரமாதமாக வியந்தார்கள். அவனுடைய நண்பர்கள் அனைவரும் அவன் யோகத்தை ஒரே “உயர்வு நவிற்சி”யில் பாராட்டி னார்கள். அப்பொழுதெல்லாம் ராஜகோபாலனு டைய உயரமே ஒரு சாண் அதிகரிக்கும்.
ஆறு மாதம் ஆனந்தமாகக் கழிந்துவிட்டது.
உலகம் விசித்திரமானது என்கிறார்கள். மனித ரின் மனம் அதைவிட விசித்திரமாகத்தான் இருக் கிறது. தனக்கு எந்தப் பொருளிடத்தில் பற்று அதி கரிக்கிறதோ அந்தப் பொருளிடத்தில்தான், ஓர் ஏகபோக உரிமை கொள்கிறது மனம். இந்த உணர்ச்சி அதிகமாக அதிகமாக, மற்றவரால் இந்தத் தனி உரிமைக்குப் பாதகம் வந்துவிடுமோ என்ற கவலையும் அதிகரிக்கிறது.
ஆமாம்: ராஜகோபாலனுடைய வாழ்க்கையில் மாறுதல் உண்டாகத் தலைப்பட்டது!
நண்பர்கள் பலர் வீட்டுக்கு வருவார்கள். அவர் கள் ஒவ்வொருவருடனும் சுந்தரி எப்படிப் பேசு கிறாள், அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதில் எல்லாம் ராஜகோபாலன் கவனம் செலுத்தினான். சந்தேகம் என்ற நோய் அவனைப் பீடித்தது!
சுந்தரி அழகி; அபாரமான அழகி. அந்த ஊரி லேயே அவளுக்கு இணையான அழகி இல்லை. ராஜகோபாலனுக்கு நன்கு தெரியும். ஆனால் இன்பம் தரு வதற்குப் பதிலாக அந்த அழகு கொடிய துன்பத் தைத் தந்தது.
ஒரு நாள் மாலை. ஆபீஸிலிருந்து வர நேரம் ஆயிற்று. ராஜகோபாலன் வீட்டுக்கு வந்தபோது இரவு எட்டு மணி. மாடியிலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னலுக்கு அருகே சற்று நேரம் நின்று யார் பேசுகிறார்கள் என்று உற்றுக் கேட் டான். சுந்தரேசன் குரல் கேட்டது. சுந்தரேசன் மிகவும் நல்ல சிநேகிதன். ஆனால் இன்றைக்கு என்னவோ ராஜகோபாலனுக்குச் சுந்தரேசனைப் பற்றிய பழைய அபிப்பிராயம் மாறியது!
ராஜகோபாலன் வாழ்க்கையில் அன்றிலிருந்து புயல் வீச ஆரம்பித்தது. சுந்தரிக்கும் அவனுக்கும் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டது. ஒருநாள் சாப் பிடாமல்கூட ஆபீஸுக்குப் போனான் அவன்!
“இந்தாருங்கள், சுந்தரேசன் சென்னைக்குப் போயிருந்தாராம். உங்களுக்குப் பிடிக்குமே என்று இந்த ‘டேபிள் லாம்’பை வாங்கி வந்தார்!” என்று ஒரு நாள் அன்போடு கொடுத்தாள் சுந்தரி.
ராஜகோபாலனுக்குக் கோபம் வந்தது. “சுந்த ரேசன் இனிமேல் இந்த வீட்டில் அடியெடுத்து வைத்தால் என்ன செய்வேனோ, தெரியாது. சொல்லிவிட்டேன். ஆமாம்…!!”
சுந்தரிக்கு அந்தவார்த்தைகள் அக்கினித்திராவ கத்தை இதயத்திலே கொட்டுவதுபோல் விழுந்தன. “நீங்கள் சொல்வதொன்றும் எனக்குப் புரிய வில்லையே ! இப்போது கொஞ்ச நாளாகவே நீங்கள் ஒரு மாதிரியாக..”
ராஜகோபாலனுக்கு ஆத்திரம் பொங்கிவந்தது. அப்படியே பாய்ந்துபோய் அந்த ‘டேபிள் லாம்’பை எடுத்தான்.ஒரு ஓங்கு ஓங்கித் தரையிலே வீசினான். “தடா….ல்!” என்று விளக்கு சுக்கு நூறாகச் சிதறியது.
ராஜகோபாலன் கண்ணை விழித்தான். சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் தூங்க முயற்சித்தான்.
3
வாணியும் அவளுடைய வீணையும் ராஜ கோபாலனுடைய வீட்டில் நுழைந்த நேரம் ஸுஸ்வர ” மான நேரமாகத்தான் இருக்க வேண் டும்: வீட்டில் எப்பொழுதும் இன்பநா தம். வீணையும் குரலும் இசைந்து அவனுடைய வாழ்க்கை – நாடகத் திற்கு இனிய பின்னணி இசையாக ஒலித்தன !
ஆறு மாதம் ஆனந்தமாகக் கழிந்துவிட்ட து. உலகம் விசித்திரமானது என்கிறார்கள். மனித ரின் மனம் அதைவிட விசித்திரமாகத்தான் இருக் கிறது. ராஜகோபாலன் எண்ணினான்:
“வீணை நல்ல வாத்தியம். வாணிக்கு நல்ல குரல். ஆனாலும் ஒரு ஓய்வு ஒழிவு வேண்டாமா! அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். சங்கீதம் ஒரு அமுதந்தானே?”
ராஜகோபாலனுடைய வாழ்க்கையில் மாறுதல் உண்டாக ஆரம்பித்தது.
நண்பர்கள் வருவார்கள். அவர்களோடு நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசவிடமாட்டாள் வாணி.
“அப்பப்பா! பேச்சு, பேச்சு! என்ன பேச்சு ! அவர்களுக்கெல்லாம் வேலை இல்லையென்றால் உங்களையும் வந்து ஏன் தொல்லைப் படுத்துகிறார்கள்?… இன்றைக்கு பேகடா ராகத்தில் ஒரு புதிய உருப்படி படித்திருக்கிறேன். கேட்கிறீர்களா?”
ஐயோ, ஐயோ! நித்தம் ஒரு புதிய பாட்டு; ஒரு புதிய ‘ஸங்கதி’, அல்லது ஒரு புதிய ‘பிடி!
“இந்தாருங்களேன், என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்களே! எழுத்து, எழுத்து! என்னஎழுத்து! ஆபீஸிலே போய் எழுதுவது போதாதா!….இன்றைக்கு நான் குந்தல வராளியில் ஒரு புதிய கல்பனை செய்தேன். கேட்கிறீர்களா?”
ராகம், கல்பனை, ஸங்கதி, உருப்படி, பிடி- இந்த வார்த்தைகளைக் கேட்டாலே ராஜகோபாலனுக்கு. நரம்புகள் துடித்தன !
ஒரு நாள் – ஞாயிற்றுக்கிழமை யன்று – ஆபீஸ் கட்டுகள் அத்தனையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான். அந்தப் பாழாய்ப்போன வருஷ – முடி வுக் கணக்கு, கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தரம் கூட்டும்போதும் ஓரொரு தொகை வந்தது. என்ன செய்வான், பாவம்! இருப்புப் பணம் நூற்றுக் கணக்கில் வித்தியாசப்பட்டால் எப்படி இருக்கும் அவனுக்கு!
எழுத்து! என்ன எழுத்தோ ! முத்தோ!
“இந்தாருங்களேன், எழுத்து! எழுத்து! எழுதுவது போதாதா! ஞாயிற்றுக்கிழமையிலும் தினந் தினம் எழுத்தா?… இன்றைக்கு, கமனச்ரமத்தில் ஒரு புதிய பாட்டு பார்த்திருக்கிறேன்.கேட்கிறீர்களா?”
ராஜகோபாலனுக்கு வந்த எரிச்சலைத் தாங்கி வரப் பாஷைக்குச் சக்தி இல்லை. ஆவேசமாக மாடிப் படிகளில் இறங்கினான். ஓடியே போய் அந்த ஜமக் காளத்தின்மேல் இருந்த வீணையை எடுத்தான். தலைக்கு மேலே ஓங்கினான்.
“தடா………ல் !”
ராஜகோபாலன் கண்ணை விழித்தான். சுற்று முற்றும் பார்த்தான்.யாருமில்லை. கண்களை நன்றாய்த் துடைத்துக் கொண்டு மறுபடியும் உறங்க முயற்சித்தான்.
4
ராஜலக்ஷ்மி வீட்டுக்கு வந்த முகூர்த்தம் லக்ஷ்மி முகூர்த்தமாகத்தான் இருக்க வேண்டும். வாழ்க்கையில் ராஜகோபாலனுக்குத் திருமகள் கடாக்ஷம் பரிபூரணமாக உண்டாயிற்று.
மாதம் தவறினாலும் ராஜலக்ஷ்மிக்கு அவளுடைய அப்பாவிடமிருந்து ‘செக்’ வரத் தவறுவதில்லை. நேரத்துக்கு ஒரு புடவை, நிமிஷத்துக்கு ஒரு மினுக்கு, வினாடிக்கு ஒரு பகட்டு, விருந்துகள், சினிமாக்கள், நாடகங்கள், உல்லாசப் பிரயாணங்கள் எங்கே சென்றாலும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்தான்!
ஆறு மாதம் பிரும்மானந்தமாய்க் கழிந்து விட்டது.
உலகமும் மனித மனமும் விசித்திரமானவை என்று நமக்குத் தெரியும். ராஜகோபாலன் வாழ்க் கையில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது.
தீபாவளிக்கு முந்நூறு ரூபாய்க்குப் புடவை எடுத்தாள் ராஜலக்ஷ்மி. இவனாவது நாலு முழத்தில் ஒரு வேட்டி உபாயமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா? முந்நூறு ரூபாய்ப் புடவைக்கும் மூன்று ரூபாய் வேட்டிக்கும் எப்படிப் பொருந்தும்? நல்ல அகலமான கரைபோட்ட ஜரிகை வேட்டியாகவே எடுத்து ரா ஜ கோ பா லனிடம் கொடுத்தாள் ராஜலக்ஷ்மி.
ராஜகோபாலன் தன் மனைவியின் செலவைக் கட்டுப்படுத்த முயற்சித்தான். தன்னுடைய மாதச் சம்பளம் நூறு ரூபாயும், அவளுடைய ஒரு நாள் “ஷாப்பிங்” குக்கே போதாது என்பதை வற்புறுத் திக்கூற எண்ணினான். ஆனால் அவளுக்கு இதெல் லாம் புரிந்தால்தானே? மாதம் தவறினாலும் அவளுடைய அப்பாதான் ‘செக்’ அனுப்பத் தவற மாட்டாரே!
அன்று ராஜகோபாலன் கடுமையான் ஜோலிக் குப் பிறகு ஆபீஸிலிருந்து சோர்வுடன் வீடு திரும் பினான். இங்கு வந்தால் வீடு ஒரே தீப வர்ணாலங் காரமாகக் காட்சி தந்தது. ராஜலக்ஷ்மி ‘கிளப்’பி லுள்ள தனது சிநேகிதிகள் அத்தனை பேருக்கும் ஒரு நிலா விருந்து ஏற்பாடு செய்திருந்தாள்.
“எனக்கு உடம்பு சரியாயில்லை. நான் போய்ப் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே மாடிக்குப் போய்விட்டான் ராஜகோபாலன்.
இரவு ராஜலக்ஷ்மி விருந்து முடிந்து மாடிக்கு வர இரண்டு மணி ஆகிவிட்டது. வந்து பார்த்தால், ராஜகோபாலன் ஆபீஸ் – கட்டுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன இது! உடம்பு சரியாயில்லை என்று சொன்னீர்களே….?”
“ஆமாம். உடம்பு எப்படிச் சரியாக இருக்கும்! நூறு ரூபாய்ச் சம்பளத்திற்கு நான் இப்படி இரவும் பகலும் உழைக்கிறேன். நீ என்னடா என்றால்…”
ராஜலக்ஷ்மிக்கு இந்த வார்த்தைகளைக் கேட்க மிகவும் கஷ்டமாயிருந்தது.
“பணம் பணம் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? இன்று காலைத் தபாலில் அப்பாவிட மிருந்து…”
அதற்குமேல் ராஜகோபாலன் அவளைப் பேச விடவில்லை.நாற்காலியிலிருந்து எழுந்தான். மேஜையிலே கிடந்த அந்த அப்பாவின் கடிதத்தை எடுத்தான்! அதிலிருந்த ‘செக்’கை உலைத்தான்.
“இந்தா, நீயும்,உன் அப்பாவும், அவருடைய செக்கும்!” என்று சொல்லிக்கொண்டே அந்தச் ‘செக்’கைத் துண்டு துண்டாகக் கிழித்து அவளுடைய முகத்திலே எறிந்துவிட்டுச் சாய்வு நாற்காலி யில் ‘தடால்’ என்று ஒரு உதை கொடுத்தான்!
5
‘கலகல’ என்று சத்தம் கேட்டது. ராஜகோபாலன் கண் விழித்தபோது அவனுடைய அப்பா அருகிலே நின்று சிரித்துக்கொண்டிருந்தார்.
“என்னடா, இரவு யோசனை ரொம்ப பலம் போலிருக்கிறது! மணி எட்டாகிறது. இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே!”
ராஜகோபாலன் கண்களைத் துடைத்துக் கொண்டே எழுந்தான்.
“என்ன முடிவு செய்திருக்கிறாய்? சுந்தரியா, வாணியா, ராஜலக்ஷ்மியா – மூன்று பேரில் என் மருமகள் யார்?”
“மூன்று பேருமே இல்லை!”
“என்னடா, புதிர் போடுகிறாய்!”
“மாமா மகளைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அப்பா!”
ராஜகோபாலன் தந்தை, தம்முடைய மகன் சொன்ன இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டார்.
“உன் இஷ்டம் போலவேதான் உனது கல்யாணம் என்று ஏற்கனவே நான் சொல்லி விட்டேனே! இப்போது திடீரென்று இந்தத் தீர்மானத்துக்கு வர என்னடா காரணம்?”
ராஜகோபாலன் தன் அப்பாவிடம் சொன்ன காரணங்கள் மூன்று. முதலாவது, அவனுடைய மாமா மகள் ஒரு ‘ஒப்பற்ற அழகி’ இல்லை. இரண்டாவது, அவளுக்கும் வீணைக்கும் எப்பொழுதுமே ஒத்து வந்ததில்லை. கடைசியாக, மூன்றாவதும் மிக மிக முக்கியமானதுமான காரணம், அவளுடைய அப்பாவுக்கு எந்தப் பாங்கிலும் ‘அக்கௌண்ட்’ கிடையாது!
– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |