முத்து முத்தாய்…
கதையாசிரியர்: முல்லை சத்தி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி முத்தாரம்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 116
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருள் அரசி தன் முந்தானையால் வையகத்தை மூடியிருந்தாள். கரும் மேகமலைகளை வான வீதியில் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது புயல் காற்று. அன்னையைக் காணக் குதித்தோடிவரும் குழந்தையைப் போல, காவேரியில் புது வெள்ளம் குபு குபுவென்று ஓடிக் கொண்டிருந்தது. இவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு பாவை கரையோரத்திலிருந்த ஒரு பாழ் மண்டபத்தை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தாள். முகத்திலே துளிர்த்த வியர்வைத் துளிகளை ஒரு கையாலே துடைத்துக் கொண்டு, மற்றொரு கையால் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு, மணலில் புதையுண்ட கால்களை எடுத்து எடுத்து, இட்டடி நோக. எடுத்தடி கொப்பளிக்க நடந்து கொண்டிருந்தாள். பாழ் மண்டபத்திற்குள் காலெடுத்து வைத்ததும். சுருண்டு மயங்கிக் கீழே விழுந்துவிட்டாள்.
மீண்டும் அவள் கண் விழித்த போது ஒரு சிறிய அகல் விளக்கின் ஒளி அந்த மண்டபத்தின் இருளை விரட்டிக் கொண்டிருந்தது. கண்களைச் சுழல விட்டாள். அங்கோர் மூலையில் பரட்டைத்தலை – பயங்கரக்கோலம் உடலை மறைக்க அழுக்கடைந்த கந்தல் இப்படி உட்கார்ந்திருந்த ஒரு உருவத்தைக் கண்டதும் அவள் அங்கமெல்லாம் பயத்தால் நடுங்கியது. ‘வீல்’ என்று கத்தினாள். அதைக் கேட்டு. அவன் அவளருகே ஓடிவந்தான்.
“பயப்படாதே..நான் ஒன்றும் செய்ய மாட்டேன்!'”
மெல்லக் கண் விழித்தாள். அவன் முகம் பயங்கரமாகத் தோற்றமளித்தாலும், கண்களில் கருணை பொழிவதைக் கண்டாள்.
“ஐயா, நீங்கள் யார்?”
“நானா? என்ன சொல்வது? சமுதாயம் என்னைத் திருடன் என்றழைக்கிறது. சட்டம் சூட்டிய பெயரோ கைதி! ஆனால். இரண்டாண்டு சிறைவாசத்தை இரண்டே வாரத்தில் முடித்துக்கொண்டு இருட் குகையிலிருந்து ஒளிக்கு வந்து விட்டவன்!”
“விடுதலையாகி விட்டீர்களா?”
“இல்லை! என்னை நானே சிறைப் பொறியிலிருந்து விடுவித்துக் கொண்டேன்; சிறைச் சாலையிலிருந்து தப்பி வந்துவிட்டேன்…”
“ஐயோ! மீண்டும் தண்டித்து விடுவார்களே..”
“கவலையில்லை”
“பின் ஏன் அங்கிருந்து ஓடி வரவேண்டும்?'”
“பழிவாங்க! என் வாழ்வைப் பாழ்படுத்திய சண்டாளனை – சிறையிலே அடைத்த சமுதாயத்தை- தண்டனை அளித்த நீதியை…”
“ஐயா. உங்கள் பதில்கள் புதிராக இருக்கின்றனவே: ஏன் இப்படி உலகை வெறுத்துப் பேசுகிறீர்கள்? தயவு செய்து விபரமாகச் சொல்லுங்கள்…”
“வேண்டாம் – என் வாழ்வே ஒரு நீண்ட சோகக் கதை… அதிருக்கட்டுமம்மா…நீ யார்? நிறை கர்ப்பிணியாகிய உனக்கு நடுநிசியில் இங்கென்ன வேலை?”
“அன்புள்ளம் கொண்டவரே! நீங்கள் குறிப்பிட்டீர்களே. சமுதாயம் உங்களைத் திருட்டுப் பட்டம் சூட்டியதென்று, அதே சமுதாயம் தான் என்னையும் ‘விபசாரி’ என்று விரட்டிவிட்டது. என் கழுத்திலே மாங்கல்யம் இல்லை; ஆனால் என் வயிற்றிலே கரு வளருகிறது….கேளுங்கள் ஐயா. இந்தக் கேடு கெட்டவளின் சரிதையை…
“அதோ தெரிகிறதே . அக்கிராமத்தில் தான் நான் பிறந்து, வளர்ந்தது. கணவனற்ற ஏழை அன்னை – மாசு மருவற்ற அழகுத் திருமேனி – இவைதான் என் சொத்து! துருதுரு வென்று சுழலும் என் கண்களும், என் அங்கங்களில் மின்னலிட்டு ஓடிய அழகும். பார்த்தவர்களை எல்லாம் மயக்கியது. பலர் போட்டி போட்டனர். என்னை மனைவியாக்கிக் கொள்ள அல்ல: தமது படுக்கையறைப் பதுமையாகப் பாவிக்க – இன்பக் கருவியாகப் பயன்படுத்த! வறுமையில் வாடுபவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது தானே வஞ்சக நெஞ்சம் படைத்த ஆண் வர்க்கத்தினரின் விளையாட்டு. பொழுது போக்கெல்லாம்! எனக்கும் மணம் முடித்துவிட என் அன்னை முயன்றாள். ஆனால் திடீரென்று ஊரிலே பரவிய காலரா என் அன்னையை அபகரித்துச் சென்று விட்டது.
“பெரிய பண்ணையார் வீட்டில் என் தாய் செய்து வந்த வீட்டுவேலையை நான் செய்ய ஆரம்பித்தேன். எனக்குத் தெரியாது. அந்தப் பெரிய மனிதர் பசுத்தோல் போர்த்திய புலியென்று!
”ஒருநாள்.. அவரது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது. அந்தப் பெண் பித்தன் வந்துவிட்டான். காத்திருந்தவன் போலும்; கண்களில் வெறியாட, கருத்தில் சதி சேர்த்து என்னைத் தீயென நெருங்கினான்.
“ஐயோ” என்று ஓலமிட்டேன். ஆனால் அந்த ஓலமோ அக் காமப் பேயின் சிரிப்பொலியிலே மங்கி மறைந்து அடங்கிப் புதைந்தது. இனி மேலுமா விளக்க வேண்டும்?… அந்த அற்பனின் ஆசை கருவாக என் வயிற்றிலே உருவாகி விட்டது! நான் விபசாரியானேன்! ஊர் என்னைத் தூற்றிற்று. ‘கேடு கெட்டவளே! ஓடு இதை விட்டு!’ என்று துரத்திற்று. ஓடினேன்: பல முறை தற்கொலை செய்து கொள்ள ஓடினேன். ஆனால் என் வயிற்றிலே வளருகிறதே ஜீவன். அதை நினைக்கும் போது, என் நெஞ்சத்திலே தாய்மை உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பும். ஆகவேதான் ஆற்றுக்கு அக்கரையிலே உள்ள கிராமத்திலாவது சென்று வாழலாம் எனப் புறப்பட்டேன். இதுதான் என் கதை.. இனி ‘தாலியில்லாத தையல் வேலியில்லாத பயிர்’ என்று நினைக்கும் மனித எருமைகளின் மத்தியில் எப்படி வாழப் போகிறேன்…!”
“வேதனை நிரம்பிய சோக வரலாறம்மா உன் வாழ்வு! ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யும் தவறுக்குத் தண்டனை – பெண்களுக்குக் கிடைக்கும்படி இயற்கை உறுப்புகள் அமைந்திருக்கின்றன! கலங்காதே! உடனே புறப்படு! பொழுது விடிவதற்குள் உன்னை அக்கரையில் சேர்த்துவிடுகிறேன்!”
இருவரும் புறப்பட்டனர். ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு பரிசல் புறப்பட்டது. எங்கிருந்தோ புறப்பட்ட சீறிவரும் புயல் காற்றையும் பொருட்படுத்தாமல் பரிசலைத் தள்ளிக்கொண்டிருந்தன அவனது கைகள் – ஒரே மெளனம்!
“உங்கள் வரலாற்றைக் கூற வில்லையே…!” என்றாள் அவள்.
“கூறுகிறேன். உன்னைப் போல அனாதையாக வளர்ந்தவன் தான் நான். உழைத்தேன். உல்லாசமாக வாழ் முடியா விட்டாலும் உணவுக்குக் குறைவில்லை. திருமணம் செய்து கொண்டேன்; என் மனைவியும் கர்ப்பவதியானாள். ஆனால் குறைப் பிரசவம் ஏற்பட்டு அவளுக்கு ஜன்னி கண்டது. வைத்திய உதவி செய்வதற்கு என் கையிலே காசில்லை. என் முதலாளியிடம் என் நிலையைக் கூறிப் பத்து ரூபாய் கடன் கேட்டேன். காலைப் பிடித்துக் கொண்டு கதறினேன். ஆனால் அவன் இதயம் இளகவில்லை. உதவியளிக்க மறுத்துவிடவே வீடு திரும்பினேன். மனைவி அங்கே பிணமாகக் கிடந்தாள்! அதைக் காண என் உள்ளம் துடித்தது; இதயம் வெடித்தது; இரத்தம் கொதித்தது: அவளை – என் மனைவியைத் தூக்கிக் கொண்டு முதலாளியிடம் போனேன்.
“பாரடா, பார்! என் வாழ்வின் ஜீவஜோதியை அணைத்து விட்டாயடா பாவி! உன்னை என்ன செய்கிறேன் பார்…!” என்று அவன் மேல் பாயப் போனேன். சுற்றியிருந்த எடுபிடிகள் என்னைப் பிடித்துக் கொண்டனர்…!
“என் மனைவியின் உடலுக்கு தீவைத்து சுடலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது போலிசார் என்னைக் கைது செய்தார்கள். பண்ணையார் வீட்டிலே கொள்ளை அடிக்க முற்பட்டேன் – என்று வழக்கு! இரண்டாண்டு சிறை வாசம் என் வாழ்வைப் பாழாக்கியவனைப் பழி தீர்க்கத்தான் சிறையிலிருந்து தப்பி வந்தேன்…” என்று முடித்தான்.
இந்த இரண்டு ஜீவன்களின் சோக வரலாற்றைக் கேட்ட வானமும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது. தத்தளித்த பரிசலோ திசை மாறியது. தடுமாறினர் இருவரும். ஆற்று வேகத்தில் துடுப்பும் நீரோடு மறைந்தது. உழைத்து உரமேறிய அவனது கரங்கள் பரிசல் கவிழாமல் இருப்பதற்கு பட்டபாடு… பழி தீர்க்கப் புறப்பட்ட அவனை இயற்கை பழிவாங்கி விடுமோ என்ற அவனது உள்ளப் போராட்டம்.. திசை மாறியது பரிசல் மட்டுமல்ல; பரிசலில் இருக்கும் பரிதாபத்திற்குரிய பாவையும்கூட; அவளைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையும் கூட- என்ற அவனது உயர் குணம்… குமிழிட்டு ஓடும் ஆற்றுநீரோடு போராடிய அவனது உள்ளத்தில் இப்படி ஆயிரமாயிரம் குழப்பங்கள்!
வாழ்வுச் சுழலில் சிக்கித் தவித்த அவர்கள், சாவூரிலாவது நிம்மதியாக இருக்கட்டும் என்பதைப்போல் மரணத்திற்கு இழுத்தோடிய இயற்கையுடன் அவன் தொடுத்த போர். இறுதியில் வெற்றியையே தந்தது.
கீழ்த் திசையில் கதிரவன் உதயமானான். களைத்துப்போன் அவனது கரங்கள் பரிசலைக் கரையில் சேர்த்தன. கதியற்ற அந்தக் கன்னித்தாயை காப்பாற்றி விட்டோமே என்ற மகிழ்ச்சியால் அவன் அகம், முகம் எல்லாம் மலர்ந்தது!
பரிசலிலிருந்து இறங்கி ஊரை நோக்கிப் புறப்பட்டனர். பத்தடி எடுத்து வைப்பதற்குள் அவனைத் தேடி அலைந்த போலீஸார் எதிர்ப்பட்டு விட்டனர். சிக்கிக்கொண்டான். தப்பி வந்த அந்தக் கைதி. அந்தப் பெண்ணின் உள்ளம் உலைக்கூடமாயிற்று.
“ஐயோ! என்னால் அல்லவா உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டது…வெள்ளத்திலே மறைந்திருந்தாலும், நம் வேதனை வாழ்வக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்குமே!” என்றாள்.
”கலங்காதே அம்மா.. நான் சிறைக்கு மீண்டும் போகப் பயப்படவில்லை. கவலையுமில்லை. உனக்கு உதவ முடிந்ததே என்று நினைக்கும்போது என் நெஞ்சம் மகிழ்கிறது. இதோ. இத்தனை நாட்களாக எவர் கண்களுக்கும் தென்படாமல் காப்பாற்றி வந்த பொருள்…. என் ஆசை மனைவியின் ஒரே அடையாளச் சின்னம் – நான் கட்டிய மாங்கல்யம் – உன் சங்குக் கழுத்திலே இடம் பெறட்டும்! இனி உன்னை யாரும் ‘விபசாரி’ என்று அழைக்க மாட்டார்களல்லவா? கன்னிப் பெண் கருவுற்றாள் என்றும் தூற்றமாட்டார்கள்!” என்று கூறி, அவளது கழுத்திலே அந்த அன்புச் சின்னத்தைக் கட்டினான்.
போலீசார் புடைசூழ, அந்த நல்லவன் மறைந்தான்.
அந்தப் பெண்ணின் கண்கள் தகொட்டிய நீர்த் துளிகள். அவள் கழுத்திலே புதிதாகக் குடியேறியிருந்த தங்க மாங்கல்யத்தில் முத்து முத்தாய் விழுந்தன!
– ஆகஸ்ட் 1956, முத்தாரம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
சடங்கு
க.சட்டநாதன்
July 5, 2026
இணையச் சிலந்திகள்!
மா.சித்திவினாயகம்
July 5, 2026
சின்னச்சாமியைத் தேடி
நாகரத்தினம் கிருஷ்ணா
July 2, 2026