முடிவான முடிவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 1,795 
 
 

“அடி கள்ளியே….
என் வள்ளியே….
தலையில் வைத்தாய் மல்லியே…
என் மனதைக்கிள்ளியே…
ஏனோ போகிறாய் தள்ளியே…!”

“கவிதை சூப்பர்….” நாடக ஒத்திகையில் நகுல் எழுதிய கவிதை அந்த காட்சிக்கு சிறப்பாக ஒத்துப்போகுமெனத்தோன்றியதால் இந்த வார்த்தையை தன் இதழிலிருந்து உதிர்த்தாள் வான்மதி. இதில் வாங்க வேண்டியது மல்லிகைப்பூ என போன் நோட்டில் குறித்து வைத்துக்கொண்டாள்.

“தலைல பூ வெச்சு பல வருசமாயிடுச்சு. காலேஜ்‌ ஆண்டு விழாவுல நடக்கப்போற நாடகத்திலயாவது வெச்சிடுவோம். கள்ளி, வள்ளி, மல்லின்னு கவிதைல வாரதுனால கண்டிப்பா பாவாடை தாவணிதான் பொருத்தமா இருக்கும். லீவுல அம்மாவோட கிராமத்து ஊருக்கு போன போது அங்க சொந்தக்கார பொண்ணுங்களோட பழகியிருக்கேன். அதனால கிராமத்து பொண்ணு கேரக்டர் எனக்கு செட்டாகும். உனக்கு வேட்டி கட்டி பழக்கம் இருக்கா?” நகுலிடம் கேட்டாள்.

“ஒரு நாள் கூட கட்டினதில்லை. இப்பதான் ராம்ராஜ் காட்டன்ல ஒட்டிக்கோ, கட்டிக்கோன்னு வந்திருக்கே…. சமாளிச்சிடுவேன். உனக்கு குஞ்சம் ஒன்னு சடைக்கு வாங்கிக்கோ அப்பதான் ரியலா இருக்கும்”

“டைரக்டராவே மாறிடுவே போலிருக்கு…‌?”

“ஸ்கூல் பங்சன்ல, ஊர்ல பொங்கலுக்கு நடக்கிற பங்சன்ல நாடகம் போட்டிருக்கேன். அங்க என்னை டைரக்டர்னுதான் கூப்பிடுவாங்க. படிக்காத பண்ணையார்னு ஒரு நாடகம் போட்டதுல அதுல நடிச்சவரை இப்ப பண்ணையார்னு தான் கூப்பிடறாங்க”

“அப்ப நீ எழுதின இந்த நாடகத்துல நடிச்ச பின்னாடி வான்மதிங்கிற என்னோட பேரை மாத்தி வள்ளின்னு எல்லாரும் நம்ம காலேஜ்ல கூப்பிடப்போறாங்கன்னு நினைக்கிறேன்…”

பேசிக்கொண்டே நாடக ரிகல்சர் முடிந்து ஆடிட்டோரியத்திலிருந்து கல்லூரியின் வகுப்பறைக்குச்சென்றனர்.

நடந்து முடிந்த கல்லூரி ஆண்டு விழாவில் கந்தன் வள்ளி பெயர் தான் அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்டது. கதாநாயகனாக நகுல் கந்தனாகவும், கதாநாயகியாக வான்மதி வள்ளியாகவும் நடித்திருந்தனர். நாடகத்தின் பெயர் ‘சொந்த புராணம்’.

அரை மணி நேரம் நடத்த திட்டமிட்டிருந்த நாடகம், ரிகல்சரில் பேசிய வசனங்களைத் தாண்டி இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனதால் ஒரு மணி நேரம் மனதில் தோன்றியதைப் பேசி நடித்து, அவர்களுடைய சொந்த புராணமாகவே மாற்றியிருந்தனர். ‘நடிப்பைத்தாண்டி இயல்பாக வாழ்ந்தனர்’ என்றே பலரும் பாராட்டினர்.

வான்மதிக்கு இரவு தூக்கம் வரவில்லை.

‘கந்தனைப்போல்… இல்லையில்லை நகுலைப்போல் மனதுக்குப்பிடித்தமான நண்பன் கல்லூரியில் கிடைத்தது அதிர்ஷ்டம். கல்லூரி வாழ்க்கை எப்படிப்போகுமோ? என பயத்துடன் காலடி எடுத்து வைத்தோம். ஒரு வருடம் ஓடியது ஒரு நாள் மாதிரி இருக்கிறது. மனதுக்குப்பிடித்தவர்கள் அருகிலிருந்தால் சாதனை சோதனையாகவே தெரியாது. வேதனையும் கொடுக்காது. இப்படியே காலேஜ் லைப் முழுசா அவனை வைத்து ஓட்டிடலாம்’ என மன ஓட்டத்தில் உடல் சோர்வுற உறங்கிப்போனாள்.

நினைத்தது போலவே காலையில் கல்லூரிக்குள் நுழைந்த போதே “வள்ளி….” என தன்னை சக தோழி ரம்யாவே அழைத்தது நாடகத்தின் வெற்றியைக்காட்டி விட்டதாக புரிந்து கொண்டாள்.

“ஸாரிடி வான்மதி…. இன்னும் என்னால நாடகத்துல இருந்து வெளில வர முடியலை. கங்காவோட பரத நாட்டியம், மேரியோட பாட்டுக்கச்சேரி, சலீமோட மேஜிக் ஷோ எல்லாமே மறந்து போச்சு. உங்க நாடகம் தான் கண்ணு முன்னால ஓடிட்டே இருக்கு. என்னடி நிஜமாவே கந்தனை…. மறுபடியும் ஸாரி…. நகுலை நீ லவ் பண்ணற மாதிரி தெரியுது…?”

“போடி… இந்த ஒரு வருசத்துல என்னை நீ புரிஞ்சிட்டது இவ்வளவுதானா…? அவன் பெஸ்ட் பிரண்ட்… அவ்வளவுதான்” செல்லமாகக்கோபித்துக்கொண்டாள்.

“நான் மட்டும் இல்லடி …. ஊரே…. இல்ல, உலகமே லவ்விருக்கும்னு பேசுதே…. அதுக்கு என்ன பண்ண முடியும்?”

“உலகமே பேசுதா….? எப்படி…?”

“யூடியூப்ல நைட்டே நாடகத்தை வீடியோ எடுத்திருந்தத நகுல் போட்டதுல ஒரு லட்சம் வியூஸ் வந்திருக்கு பாரு…” தனது போனில் வான்மதியிடம் ரம்யா காட்ட, இன்ப அதிர்ச்சியால் ஒரு நிமிடம் மூச்சே நின்று வந்தது.

“கமெண்ட்ஸ்ல உன்னோட நடிப்பையும், அழகையும் பாராட்டிட்டே இருக்காங்க. லைக்ஸே பத்தாயிரம் தாண்டியிருக்கு. இதுக்கு அவனோட சேனல்ல ஐநூரு சப்ஸ்கிரைபர் தான். பார்த்தவங்க பிடிச்சுப்போய் ஷேர் பண்ணியிருக்காங்க போலிருக்கு. சினிமால இருந்து உனக்கு அழைப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை” ரம்யா சொன்னதைக்கேட்டு ‘என்னோட கனவே அது தானே…’ என நினைத்தவளாய் உள்ளம் பூரித்தாள் வான்மதி.

கல்லூரியிலிருந்து வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த போது அத்தையின் பேச்சு சத்தமாக காதில் விழுந்தது. சமையலறையிலிருந்து வந்த நறு மணமும் ஏதோ வித்தியாசமாக நடக்கப்போகிறதென்கிற செய்தியை உணர்த்த, தனது அறைக்குச்சென்று உடை மாற்றிய படி சமையலறைக்கு சென்ற போது ஊரிலிருந்து வந்திருந்த அத்தை செண்பகம் அம்மாவுடன் சீரியஸாக பேசியபடி சமையலுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.

“வாடி என் மருமகளே வள்ளி… உன்னோட கந்தன் வந்திருக்கான் பார்த்தியா….? முகனைத்தான் சொல்லறேன். என்ன? ஒன்னுமே புரியாத பாப்பா மாதிரி முழிக்கிறே….? உன்னோட நாடக வீடியோவ நான் தான் பார்த்து உன்னப்பெத்தவங்களுக்கு சொன்னேன். நடிப்பெல்லாம் ஜோருதான். ஆனா கடைசில அந்தப்பையனை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த பாரு…. அதுல தான் எல்லாருமே அதிர்ச்சில இருக்கோம்”

“அது வந்து…. ரியலா இருக்கனம்னு… எல்லாமே நடிப்புதான் அத்தே…. நீங்க நினைக்கிற மாதிரி நகுலுக்கு எனக்கும் லவ்வெல்லாம் ஒன்னுமில்லை….” கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்க்க தாய் நீலாவைப்பார்த்த போது வானலியில் கடுகு பொறிய சூடான எண்ணையைப்போல் முகத்தை வைத்து முறைத்துப்பார்த்தாள்.

தாயும் தன்னை தவறாகப்புரிந்து கொண்டிருப்பதாக நினைத்த வான்மதி ஓடிச்சென்று தனது அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் குப்புறப்படுத்துக்கொண்டு கதறி அழுதாள்.

தாய் வந்து முகத்தை கடினமாக வைத்த படி சேலைகட்டி வரச்சொல்லி கட்டாயமாகச்சொல்லி விட்டுச்சென்றாள்.

சேலை கட்டியபடி ஹாலில் அமர்ந்திருந்த அத்தை மகன் முகனுக்கு காஃபி கொண்டு போய் கொடுத்தாள்.

“சோசியர் பத்துக்கு எட்டுப்பொருத்தம் இருக்கறதா எழுதிக்கொடுத்திருக்காரு. வர்ற கார்த்திகைல திருவண்ணாமலை ஜோதிக்கு முன்னாடி ஒரு முகூர்த்தம் இருக்கு. அதுல நம்ம மருதமலை முருகன் கோயில்ல முகூர்த்தம் வெச்சிட்டு, கீழ இருக்கிற ஹோட்டல்ல விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்” தந்தை சரவணன் உறுதியாக தன் தங்கையிடம் சொன்னது மீளாத அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமாண்ணே… நீ சொல்லற படியே எனக்கும் சம்மதம். என் பையனே கை நிறைய சம்பாதிக்கிறான். வான்மதி படிச்சு வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லே‌. குழந்தைகளை பெத்து வளர்த்துட்டு சந்தோசமா சமைச்சு சாப்பிட்டு இருக்கட்டும். இல்லேன்னா கண்ட நாயிக காரியத்தக்கெடுத்து, குடும்ப கௌரவத்த கப்பலேத்திடுவானுக. உக்காந்தே சாப்பிட்டாலும் நாலு தலை முறைக்கு உங்கிட்டவும் சொத்து இருக்குது, எங்கிட்டயும் கெடக்குது. பொம்மணாட்டி வேலைக்கு போயி சொத்து சேத்தோணும்னு என்ன கெடக்குது? அதுவும் நெலம் இன்னைக்கு விக்கிற வெலைக்கு வாழ்க்க பூராம் வேலைக்கு போனாலும் ஒரு வீடு கடனில்லாம வாங்கி மிச்சம் பண்ண முடியாது. நமக்கே பத்து வீட்டு வாடகை வருது. வந்து சந்தோசமா சம்பாதிக்கிறத நல்லா செலவு பண்ணிட்டு இருக்கட்டும்” அத்தை பேசியது சிறிதும் பிடிக்காதவளாகவே வெறுப்பாக முகத்தை வைத்தவாறு தன் தாயருகில் அமர்ந்திருந்தாள் வான்மதி.

“என்ன மூச்சே உடாம மரக்கட்டையாட்டா உட்கார்ந்திருக்கே….? நீ பண்ணி வெச்சிருக்கிற காரியத்த ஊரே பேசுதே…?” தாய் தன்னைப்பார்த்து பேசியதைக்கேட்டு “அம்மா……” என கத்தினாள்.

“ஆமா… அந்த பையனைத்தான் லவ் பண்ணறேன். எனக்கு அவனை மட்டும் தான் புடிச்சிருக்கு. காலேஜ் படிப்பு முடிச்சிட்டு அவனத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீங்க அவசரமா ஏற்பாடு பண்ணியிருக்கிற இந்தக்கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லே..‌… பேசுனது போதுமா? இல்லே வேற ஏதாவது பேசனமா….?” கோபத்துடன் பேசினாள்.

வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள். தாய் நீலாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அத்தை செண்பகம் தனது மகன் முகனை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமலேயே வெளியேறினாள். தந்தை தனது அறைக்கு சென்று கதவை படிரென சாத்தித்தாழிட்டார்.

சகஜநிலைக்கு வந்து ஒருவரோடு மற்றவர் பேச ஒரு மாதமானது. படிப்பில் கவனம் செலுத்தினாள். சினிமாவில் நடிப்பதற்கு அழைப்பு வந்தும் ஏற்கவில்லை.

படிப்பை முடித்து டிகிரி வாங்கினாள். மகளாக சொல்லாமல் மாப்பிள்ளை பார்ப்பதில்லை எனும் முடிவில் பெற்றோர் இருந்தனர். அத்தை செண்பகத்தை பார்த்துப்பேச வேண்டும் என வான்மதி கூறிய போது ஆச்சர்யத்தில் கைகால் புரியாமல் அத்தை வீட்டிற்கே வான்மதியை அழைத்துச்சென்றனர்.

வான்மதி தன் வீட்டிற்கே வந்திருப்பதைக்கண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள் அத்தை செண்பகம்.

பலவித பலகாரங்களை செய்து விருந்து வைத்தாள்.

“நீங்களும் பொண்ணுதான். அந்தக்காலத்துலயே காலேஜ்ல படிச்சிருக்கீங்க. படிப்பு, நடிப்பு, நட்பு வேற, கல்யாண வாழ்க்கை வேறங்கிறது ஏன் உங்களுக்கு புரியலை? காலேஜ்ல பேசிப்பழகறவங்களோடையும், மேடைல கூட நடிக்கிறவங்களோடையும் குடும்பம் நடத்திட முடியுமா? அப்படிப்பார்த்தா நம்மோட நம்ம வாழ்க்கைல பல பேர் ஒன்னா டிராவல் பண்ணறாங்க. அத்தனை பேருக்கும் ஒருத்தி மனைவி ஆக முடியுமா?” வான்மதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தாள் செண்பகம்.

“முகன் தான் என் கணவனா வரனம்னு நான் உங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். அது எனக்குள்ளே முடிவான முடிவு. ஆழ் மன முடிவுகளை யாராலும் மாத்தவே முடியாது. அதுக்காக மத்த ஆண்களோட பேசாம, பழகாம இருக்க முடியாது. ஆனா நீங்க தான் அவசரப்பட்டீங்க. என்னை தப்பானவளா, தவறு செஞ்சவளா சொல்லி அழ வெச்சீங்க. என்னைப்பெத்தவங்களும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கனம்னு நெனைக்கிறது தப்பில்லை. அத எப்பக்கொடுக்கனம்னு தான் அவங்களுக்கு புரியலை. எப்பவுமே பெத்த குழந்தைங்க மேல நம்பிக்கை வைங்க. நம்ம பொண்ணு தப்பு பண்ண மாட்டாள்னு நீங்களே நம்பலேன்னா வேற யாரு நம்புவாங்க? இப்ப சொல்லுங்க. நாங்கேக்கறேன். பயத்துல, சந்தேகத்துல, புரிதல் இல்லாம என்னோட படிப்பையே கெடுக்க பார்த்தீங்க. குற்றம் பண்ணாத ஒருத்தரை பண்ணினதா சொன்னா, நம்பினா என்ன பண்ணுவாங்க? ஆமான்னு தான் சொல்லுவாங்க. நானும் அதத்தான் சொன்னேன். ஆனா அதையும் நம்புனீங்க… இப்ப புரியுதா நான் நகுலை காதலிக்கலேன்னு… அது வெறும் நடிப்புன்னு. அவரு கூட நட்புன்னு. நீங்க நெனைச்சது உண்மையா இருந்தா நான் இங்க எதுக்கு வந்து உட்காரப்போறேன்?” கேட்ட பெற்றோரும் பேச வார்தைகளைத்தேடி கிடைக்காமல் மௌனமாயினர்.

“குற்றம் பார்த்தா சுற்றம் இல்லை. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். இப்ப சொல்லுங்க எந்த தேதில முகனுக்கும் எனக்கும் கல்யாணம் வெச்சுக்கலாம்?” என்றவள் முகனருகே சென்று நெருக்கமாக அமர்ந்து கொண்டதைக்கண்ட பெற்றோர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியால் முகம் மலர்ந்தனர்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *