முகங்கள்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 726
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் முழுவதுமாய் விழித்துக் கொள்ளாமல் திலோக் ப்ளாங்கா வட்டாரமே அதிகாலைச் செல்லத் தூக்கத்தில் இருந்தது. ஐந்து நிமிடங்களில் பேருந்து நிறுத்ததை அடைந்து விடலாம். மின்தூக்கியை விட்டிறங்கியவளின் மூளையில் மாற்றுடை எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக் கொள்ள மறந்தது பளிச்சென்று நினைவு வந்தது. அடடா எப்படி மறந்தேன்?
இன்று வழக்கமாகப் பிடிக்கும் நூற்றியிருபத்தி நான்காம் இலக்கப் பேருந்தை இனி பிடிக்க முடியாது, இருந்தும் வேறு வழியும் இல்லையே என்று யோசித்த படியே மீண்டும் மின் தூக்கியின் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். காலை வேளைகளில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அதிகமென்பதால் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மின்தூக்கி மற்றும் கீழ்த்தளம் அனைத்தையும் பங்களாதேஷ் துப்புரவாளர்கள் சுத்தம் செய்ய ஆரம்பிப்பர். வீடமைப்புப் பேட்டைகள் நாற்றமின்றி சுத்தமாய் இருக்கிறதென்றால் இவர்கள் தயவினால் தானே.
பேசாமல் ஆறு மாடியும் ஏறிவிடலாமே, ஆனால் குளித்து உடுத்திய வெள்ளைச் சீருடை மீண்டும் வியர்வையில் நனையும், காத்திருப்பதே மேல். பொறுமையை அதுகம் சோதிக்கமால் மின் தூக்கி வரவே மின்னலாய் உள்ளே புகுந்து ஆறாம் மாடிக்குரிய பொத்தானை அழுத்தினேன். ஆறாம் தளத்தில் விரைவாய் வெளியேறி, எதிரில் வந்தவருக்கு இயல்பாய் உடலை நெளித்து வழிவிட்டு, தளத்தின் மூலை வீடான எங்கள் ஐந்தறை வீட்டையடைந்தேன்.
அதற்குள் எப்படி அடுக்கு மாடிக்கட்டடத்தின் படிகள் வரை ஒரே வெள்ளம். அடுத்த வீட்டு யீபிங் தான் எங்கள் வீட்டின் முன்பும் தன் வீட்டின் முன்பும் தாராளமாகத் தண்ணீரைக் கொட்டிக் கழுவியிருந்தார். மருத்துவனை வாசனைக்குப் பழக்கப்பட்ட என் மூக்கையே தாக்கியது அவர் உபயோகித்திருந்த செயற்கைக் கிருமி நாசினியின் வாசம். குப்பி முழுவதையும் ஒரே நாளில் தீர்த்து விட்டாரோ.
படீரென்று தன் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு கதவைச் சாத்தி விட்டு உள்ளே நுழையும் முன் வழக்கத்திற்கு மாறாக என் புன்னகையை அலட்சியம் செய்தபடி, என்னை ஒருமுறை வினோதமாகப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி வீட்டினுள் போனார். அவரது செயல் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருடைய எட்டு வயது மகன் ஜுன்ரோங் வீட்டுச் சன்னல் வழியாக என்னைப் பார்த்து கையசைத்தான். இத்தனை அதிகாலையில் அழுந்து இவன் என்ன தான் செய்கிறான். பதிலுக்குக் கைசைத்த நான் அவசர அவசரமாக வீட்டுக் கதவைத் திறந்தேன்.
வீட்டுக் கதவைத் திறந்து வாயிலருகே கிடந்த தினசரியைக் கையில் எடுத்து ஒரு அவசரப் பார்வை செலுத்தினேன். கொட்டை எழுத்தில் ஈராக் போர், இரண்டாம் பக்கமும் ஈராக் போர். சலிப்புடன் தாளை மேசையில் போட்டுவிட்டு, என் பையை எடுத்துக் கொண்டு நுழைந்த வேகத்தில் வெளியேற நினைத்த என்னைத் தொலைபேசியின் அலறல், சட்டென்று திடுக்கிட வைத்தது.
தம்பி எழுவதற்கு நிச்சயம் இன்னும் நேரம் ஆகும். அண்ணனும் அண்ணியும் எழ இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அப்பாவும் அம்மாவும் தெம்பனீசிலிருக்கும் அக்கா வீட்டிற்குப் போயிருந்தனர். ஆக, தொலைபேசியை எடுக்க என்னைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. எனக்கிருந்த அவசரத்தில் எரிச்சலுடன் தான் எடுத்தேன். பாண்டிச்சேரியிலிருந்து அண்ணியின் அப்பா தான் அழைத்திருந்தார். எரிச்சலை மறந்து, வழக்கமான குசலம் விசாரித்து விட்டு இரண்டு மணிநேரம் கழித்து அழைக்கும்படி அவரிடம் அன்புடன் மணிந்தும் அவர் விடுவதாய் இல்லை. அவர்களெல்லோரும் தூங்குகிறார்களென்று மறுபடியும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். இந்திய நேரம் பின்னிரவு மூன்றரையிருக்குமே, இரவெல்லாம் தூங்காமல் மகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, வீட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பினேன்.
அடுத்த வீட்டு யீபிங் இம்முறை மறுபடியும் ஒரு வாளித் தண்ணீரோடு முகம் நிறைய சலிப்போடும் காத்திருந்தார். என்னைப் பார்த்ததும், “செல்வி, உனக்கு காய்ச்சல் இருக்கா? நீ எங்க வீட்டைக் கடந்து போகும் போதும், வரும் போதும் எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு தெரியுமா? உனக்கு ஏதும் அறிகுறிகள் தோன்றும் முன்னரே நீ ஏன் உன் அக்கா வீட்டுக்குப் போய் விடக் கூடாது? சின்னப் பிள்ளைங்க இருக்கிற இடம் பாரு,” என்று பீடிகை ஏதுமின்றி முகத்திலறைந்தாற் போல் கேட்டார். அக்கா வீட்டுப் பக்கத்தில் மட்டும் பிள்ளைகளே இல்லையோ, அக்கவிற்கே இரண்டரை வயது மகளுண்டு என்று யீபிங் அறிவார். “எனக்கு காய்ச்சல் இல்லையே, இருந்தால் நான் வேலைக்குப் போவேனா?’ அவருக்கு விளக்கமாய் பதில் சொல்லவோ, வாக்குவாதம் செய்யவோ எனக்கு நேரமிருல்லாதிருந்தால், நீள அகலமான ஒரு சிரிப்பைக் கொடுத்து விட்டு மின் தூக்கியை நோக்கி ஓடினேன்.
ஓகோ, ஒரு வாரமாய் வீட்டின் முன்புறத்தை அடிக்கடி கழுவி விட நான் தான் காரணமா? சுமார் இரண்டு வாரங்களாய் அவர் என்னிடம் பேசவே இல்லை என்பதும் நினைவில் மோதியது. சந்தர்ப்பம் வாய்த்தால் பேசாமல் ஆளை விடாதவர், பல சந்தர்ப்பங்கள் வாய்த்தும் கூட என்னைத் தவிர்த்திருந்தது உறைத்தது. ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் ஒரு புறம் அவர் பயம் நியாயமோ என்றும் தோன்றியது. அவருக்கு ஐந்து, மூன்றும் வயதில் இரண்டு சிறார்கள் இருக்கிறார்கள். ஒரு தாயாய் நடக்கும் யீபிங்கின் செயல் நியாயம் தான். ஆனால், எங்கள் வீட்டில் நான் மட்டும் தனியாகவா இருக்கிறேன். நோய் எனக்குத் தொற்றினால், குடும்பத்தினருக்குத் தொற்றாதா, இல்லை மருத்துவத்துறையில் இருக்கும் எனக்கு நோயைப் பற்றித் தெரியாதா?
இதே போலத் தான் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒரு முறை மாலையில சீருடையோடு நாங்கள் சகசெவிலியர்கள் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம். வந்த ஒரு வண்டியும் நிறகாமல் எங்களைக் கடந்து போனது. ஒட்டுனர்களுக்கு அவ்வளவு பயம். நோயைப் பற்றிய அரைகுறை அறிவிருந்தால் பயம் தானே வரும். அதுவும் சார்ஸ் ஆரம்பித்திருந்த நேரமது.
நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் எவ்வளவு தேவை. பொதுமக்கள் சுயனலமிகளாக இருக்கிறார்களே! நன்றிகெட்ட உலகம். சார்ஸ் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் தாதியருக்கு நோய் வரும் அபாயம் அதிகம். மருத்துவர்கள் உட்பட அனைவரும் தினமும் இருமுறை காய்ச்சலிருக்கிறதாவென்று சோதித்துக் கொள்கிறோம்.
முதலில் சில நாட்களுக்கு, “என்னடா பிழைப்பு, தாதியர் பணி நோயாளிகளுக்கு சேவை செய்யும் உயரிய பணியென்றெல்லாம் ஆசைப்பட்டு அப்பாவோடு கிட்டத்தட்ட சண்டை போட்டுப் படித்து வேலையில் அமர்ந்து என்ன பயன்?” என்று சலிப்பு தலைதூக்காமல் இல்லை.
சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் வந்திருந்த சமயம். நான் தொடக்கக் கல்லூரிக்குத் தான் விண்ணப்பிப்பேனென்று நினைத்திருந்த அப்பாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதுவும் பல முறை அவர் கூறியிருந்தும் நான் நன்யாங்க் தொழில் நுட்பக்கல்லூரியில் தாதிமைப் படிப்பிற்காக விண்ணப்பிக்கப் போகிறேனென்று அறிந்தும் அவரது கோபம் உச்சிக்குப் போனது. நானோ அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு அழுதபடியிருந்தேன். அப்பாவின் கோபம் மூன்று வேளை பட்டினி வரை தொடர்ந்த போதுதான் அவரது தீவிரத்தையே அறிந்தேன். அப்பொழுது குழப்பமும் கவலையும் என்னை அரித்தது. நல்ல வேளை, அண்ணனும் அம்மாவும் அடுத்த நாள் எடுத்துக் கூறியதும், “என்னவோ செய்ங்க. நல்ல படிப்பாப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னு நான் சொன்னா அவளுக்கும் சரி உங்களுக்கும் என்ன புரியுது. அதெல்லாம் ஒரு வேலையாக்கும், என் மனசுக்குத் துளியும் விருப்பமில்லை. அப்புறம் உங்க இஷ்டம்.” என்று கூறிவிட்டார். பல நாட்கள் குழந்தைத்தனமாய் என்னோடு சரியாகப் பேசாமல் இருந்தார்.
முன்பு அண்ணனும் அம்மாவும் அண்ணனுக்கு இந்தியாவில் தான் பெண் எடுக்க வேண்டும் என்றும் அப்பா சிங்கப்பூர் பெண்தான் என்றும் வாதிட்டு கடைசியில் இப்படித்தான் அப்பா விட்டுக் கொடுத்தார். கல்யாணம் முடிந்த ஒரு வருடத்திற்குள், “சிவகாமி, உன்னோட தீர்மானம் உன்னோட தீர்மானம் சரியாத்தான் இருக்கு. என்ன இருந்தாலும் ரோகிணி மாதிரி இவ்வளவு நல்ல பொண்ணு இங்க கிடைச்சிருக்க முடியுமா? சந்தேகம் தான்.” என்று ஒப்புக் கொண்டார். அதே போல நான் பயிற்சி முடிப்பதற்குள் என்னிடமும் கூறியது இன்று போல் பசுமையாய் என் நினைவில் இருக்கிறது. அப்பாவிற்கு இருந்து வந்த மூட்டுவலி அதிகரித்த போது தாங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தார். ஒரு சிகிச்சையும் பலனளிக்காமல், மூட்டுவலிக்காக முதல் முறையாக மருத்துவமனையில் மூன்று நாட்கள் இருந்து சிகிச்சை பெற்று விட்டுத் திரும்பிய அப்பா, “செல்வி, நான் கூட தாதியா இருந்தாக் கேவலம்னு நெனைச்சேன். இந்த மூணு நாளா என்னப் பார்த்துக்கிட்டாளே ஒரு சீனப் பெண், உன்னோட வயசுதானிருக்கும். யப்பா, என்ன ஒரு பொறுமை. என்ன சகிப்புத்தன்மை. செவிலியர்கள் எவ்வளவு உயரிய சேவை செய்ய்றாங்கன்னு எனக்கு இப்பத்தான் புரியுதும்மா. இப்ப, நீயும் ஒரு நர்ஸ் ஆகப் போறேன்னு நெனச்சா எனக்கு ரொம்ப பெருமை இருக்கு” கண்கள் பனிக்கத் தன் உணர்வுகளை வெளியிட்டார்.
நோயைப் பற்றி அறியாமல் மக்கள் ஒதுக்கிவந்தால் நாம் புழுங்க வேண்டியதில்லை என்று கீக்கிரமே எனக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் மாலையில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வருவது பொது மக்கள் எங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க வழி என் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் மிகப் பெரிது.
எங்களைத் தவிர்த்த வாடகை வண்டிகள் இப்போது மக்களால் தவிர்க்கப்படுகின்றன. வருமானம் குறைந்ததில் அவர்களுக்கு இப்போது பாவம் பொருளாதாரத் திணறல்! காரணம், பயம், சார்ஸ் நோயிருக்குமென்று சந்தேகத்திற்குரிய நபர் ஏறிய வாடகை வண்டி ஓட்டுனரை பல நாட்கள் தேடிவிட்டு ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டனர். அவ்வோட்டுநர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெப்பமானிகள், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சீன மூலிகை மருந்துகள் போன்ற வியாபாரிகளுக்கு சுக்கிரதிசை! பொதுமக்கள் பருவத்தைப் போல தங்கள் கவனத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த போது அதையே அலுக்காமல் பேசி அதையே தொலைக்காட்சியில் பார்த்தனர். இப்போது ஈராக் போரை ஹாலிவுட் படத்தைப் பார்ப்பதைப் போல அதே பெட்டியில் பார்க்கின்றனர். அதற்கிடையில் இந்த சார்ஸ் வேறு வந்தது.
அண்ணியின் அப்பா பாண்டிச்சேரியிலிருந்து தினமும் ஒரு முறை தவறாமல் அழைக்கிறார். தன் ஒரே மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை அவருக்கு. நானும் மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு ஒரே நடுக்கம். “ரோகிணி, நீயும் மாப்பிள்ளையும் ஒரு ரெண்டு மாசத்துக்கு வேற வேலை தேடிக்கலாமா. உயிர்க் கொல்லியால்ல இருக்கு இந்த சார்ஸ். ஒரு வருஷம் பிள்ளைங்க படிப்பு போனாப் போகுது. என்ன பெரிய படிப்பு. எங்க ரெண்டு பேருக்கும் தூக்கமே போச்சு. அம்மா உன்னைப் பத்தியே நினைச்சிட்டு அழுதுகிட்டேயிருக்கா,” என்கிறார். இத்தனைக்கும் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியது அவருக்கு தெரியும். அண்ணியால மட்டும்தான் அவருடைய பேச்சிற்கும் நச்சரிப்பதற்கும் ஈடு கொடுக்க முடிந்தது. அப்போதைக்குப் பணிந்து விட்டு மறுபடியும் அடுத்த நாளே அண்ணியை அழைத்துத் தொந்தரவு செய்தார்.
வழக்கமாய்ப் பிடிக்கும் பேருந்து போய்விட்டிருந்ததால், அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பேருந்தில் ஏறியமர்ந்த எனக்கு அடுத்த வீடு யீபிங்கின் திடீர்ப் பாராமுகம் ஒரு புறம் சிரிப்பையும் மறுபுறம் சலிப்பையும் தந்தது. சீருடையில் இருந்த நான் யாருடனும் அமராமல் தனியாக அமர்ந்தேன். டன் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரே காரணத்திற்காக நான் திடீரென்று யீபிங்கிறகு அந்நியமானேனா, எப்போதும் என்னிடம் சிரித்துச் சிரித்துச் சிநேகமாகப் பேசுவாரே.
யீபிங்கின் சிறார்கள் இருவரும் போன தீபாவளிக்குக் கூட அண்ணனின் குழந்தைகள் ராதா, ரகுவுடன் போட்டி போட்டுக் கொண்டு அம்மா தயாரித்திருந்த எல்லா முறுக்கையும் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர். ‘பாட்டி முறுக்கு தாங்க’ என்று அரைகூறைத் தமிழில் கேட்கக் கற்றிருந்தான் ஜூன்ரோங். தீபாவளி தோறும் அவர்களுக்கும் சேர்த்தே அம்மா முறுக்கு சுடுவார். ஒவ்வொரு முறையும் தீபாவளி தான் தமிழர் புத்தாண்டு என்ற எண்ணத்தில் யீபிங் கூறும், புத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு, தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மத்தியில் வரும் என்ற விளக்கமும் நான் கொடுப்பதுண்டு. சீனப்புத்தாண்டு வந்தால் பதிலுக்கு எங்களை பலத்த உபசரிப்பால் ஒரேயடியாய்த் திணற அடித்து விடுவார்.
கட்டடத்தின் எல்லா வீட்டுச் சங்கதிகளையும் யீபிங் எனக்குச் சொல்வார். கிடைக்கும் பத்து நிமிடத்தில் பத்தாயிரம் விஷயங்களை நாடகப்பாணியில் முகத்தில் பளிச் பளிச் என்று உணர்ச்சிகளுடன் மளமளவென்று சொல்வார். வம்பு பேசுவது போலத் தோன்றினாலும் நோக்கம் யாரையும் புண்படுத்துவதாகவோ கோள் சொல்வதாகவோ இருந்ததில்லை. இல்லை, எனக்கு தான் அப்படித் தோன்றியதோ அதுவும் தெரியவில்லை.
இல்லத்தரசியாக இருக்கும் அவருக்கு பன்னிரண்டு தளங்களிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியறியவும் பகலில் கணிசமாக நேரமிருந்தது. சிறுவயதில் தானும் ஒரு தாதியாக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டதாயும் பல முறை கூறியிருக்கிறார்.
அடுத்து வந்த பேருந்து திறுத்தத்தில் ஒரு நடுத்தர வயது மலாய் மாது என்னருகில் இருந்த இருக்கையில் உட்காராமல் கைக் குழந்தையோடு நின்றபடியேயிருந்தார். எழுந்து கொண்டு அவரை உட்காரச் சொல்லலாமென்றால், அவர் நிச்சயம் அந்த இடத்தில் உட்காரமாட்டார் என்று தோன்றவே சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். சீருடையில் இருக்கும் நானும் நான் உட்கார்ந்த இடமும் அண்மையில் தீண்டத் தகாததாகியிருந்ததுவே!
சீனக்கடைக்காரர்கள் கடைகளிலும் கடை வீடுகளிலும் சீனர்களின் பணத்தாள்களை எரிப்பது கண்ணில் பட்டது. பௌர்ணமியா அமாவாசையா என்று மனம் கணக்கிட முயன்றது. சாலைகளிலும் உணவங்காடிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சிங்கப்பூரர்கள் வீட்டிலேயே சமைக்கத் தொடங்கிவிட்டனரோ?!
கடைசியாக யீபிங் பேசியது ஒரு சனிக்கிழமை மாலை. கடைக்குப் போய் விட்டுத் திரும்பியவள் எங்கள் கட்டடத்தின் கீழ்த் தளத்தில் யாருக்காவோ இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற படியிருந்ததைப் பார்த்தேன். திடீர் கழிப்பறைகள், சமையல் சாமான்கள், மேசை நாற்காலிகள் என்று எல்லாம் மளமளவென்று ஏராளமான சாமான்கள் வந்திறங்கியிருந்தன. சீன எழுத்துக்களும், வாசகங்களும், படங்களும் கொண்ட பந்தலும் பூக்களும் கட்டியிருந்தார்கள். உடற்பயிற்சியாக இருக்கட்டுமென்று படிக்கட்டிலேயே ஏறி வந்தவளை அன்று யீபிங் கதவைக் கூடத் திறக்க விடாது பிடித்துக் கொண்டார். “செல்வி, அந்தக் கிழவி திடீர்னு ராத்திரி தூக்கத்துலயே செத்துடுச்சாம், தெரியுமா. ஆஸ்துமாத் திணறல் வேற உண்டாமே அதுக்கு. இருக்கற வரைக்கும் அந்தக் கிழவி ஒரு அவமானச் சின்னமாவும் பாரமாவும் இருந்திச்சி. இப்போ ஊருக்கு காண்பிக்க இந்த ஆடம்பரம். கீழ பார்த்தியா ஏற்பாடெல்லாம், இப்பெல்லாம் ஒரே நாள்ள அடக்கம் பண்ணனுமாமே? அதான் மளமளன்னு ஆரம்பிச்சிட்டாங்க,” என்று ஆரம்பித்து ஏகப்பட்ட தகவல்களை அள்ளித் தெளித்தார். யீபிங்கிற்கு எங்கள் வட்டாரத்தில் கொடுத்திருந்த ‘பீபீசி’ என்ற பட்டப்பெயர் மிகப் பொருத்தம்.
இறந்த சீனக்கிழவி சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் சிங்கை அழைத்து வரப்பட்டாராம். எப்படியும் எண்பத்தைந்து வயதிற்குக் குறையாதவர். அவருடன் ஒரு அறுபது வயது ஆடவரைப் பார்த்திருக்கிறேன். தாயும் மகனும் என்றே அன்று வரை நம்பியிருந்தேன், யீப்ங் சொன்ன தகவல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையுமே தந்தது. அவர் கிழவியின் கணவராம். சீனாவில் பெண் குழந்தைகளை அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்களின் சிறுபிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவென்று அவர்களிடமே விற்று விடுவார்களாம். விடுவார்களாம். பெண்ணை வாங்கியவர்கள் வயதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தங்கள் சிறுவர்களுக்கு மனைவியாக்கி விடும் விநோதம் தான் கிழவிக்கு அவர் கணவனான கதை. இக்காலத்திலோ சீனர்களாலும் இவ்வகைப் பழக்கங்களை மனதாலும் ஏற்க முடிவதில்லை. அந்த ஆளின் வயது அறுபதிற்கும் குறைவாம். சோம்பலின் பயனாய் ஏற்பட்ட தளர்ச்சி வயதைக் கூட்டிக் காட்டியது.
“நம்ம ஊருல, மலாய்க்காரங்க கல்யாணத்துக்கு ‘வோய்ட் டெக்’ல ஒரே இரைச்சல் பண்ணுவாங்க. சீனவுங்க வீட்டுல சாவுன்னாலும் கீழே ஒரே இரைச்சல் தான். நாளைக்கு இந்நேரம் கட்டடத்துல ஒரு கைக்கொழந்த தூங்க முடியுமா?” என்று ஏதோ பெரிய நகைச்சுவையைச் சொன்ன பாவனையோடு சிரித்தார் யீபிங்.
கிழவியை நினைத்தால் தான் எனக்குப் பாவமாய் இருந்தது. அவருக்கு ஒரு குழந்தையும் பிறக்காததால் கணவன் அந்தக் காலத்திலேயே சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த இடத்தில் தன் வயதுக்கேற்றாற் போல் ஒருத்தியைத் தேர்வு செய்து மணமுடித்து பிள்ளைகள் இரண்டும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டாம் மனைவி மகனையும் மகளையும் விட்டுவிட்டு சிறு வயதிலேயே இறந்துவிட்டதும் பிள்ளைகளை வளர்க்க சீனா சென்று தன் முதல் மனைவியை அழைத்து வந்தார். கிழவி பெரும்பாலும் எங்கள் கட்டடத்தில் இருக்கும் மகளுடனும், கணவன் சற்று தொலைவில் இருந்த மகனிடமும் வசித்து வந்தனர். இருவரையும் சேர்ந்து பார்க்க நேர்ந்தாலும் இருவரும் வாய் பேசாது மௌனிகளாய் கீழ்த்தளத்திலிருக்கும் இருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடியிருப்பர். ஒருவரோடு ஒருவர் பேசி நான் பார்த்ததே இல்லை.
மகளும் மருமகனும் தம் பிள்ளைகளை பள்ளிகளில் விட்டுவிட்டு வீட்டையும் பூட்டி விட்டு வேலைக்குச் சென்று விடுவர். கிழவிக்கு உணவு வாங்கி உண்ண சில வேளைகளில் காசு கொடுப்பதும் பல வேளைகளில் கொடுக்காமல் செல்வதுமே அவர்கள் வழக்கம். கட்டடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கும் கிழவி போவோர் வருவோரிடம் அழுது கொண்டு பாவனையாகவே காசு கேட்கும். வயிற்றைத் தொட்டுக் காண்பித்து பசிக்கிறதென்று சொல்லும். நானே ஒரு முறை கொடுத்திருக்கிறேன். யீபிங் கொடுக்காதே என்று தடுத்தும் நான் கொடுத்தேன். அந்தக் கிழவி கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறாரென்றும், சில சமயம் மின் தூக்கியில் மூத்திரமும் கழிக்கிறாரென்றும் யீபிங் சொன்ன போதும் கூட ஏனோ எனக்குப் பாவமாய்த் தானிருந்தது. சீனவிலிருந்து வரும் சீனர்களைக் கண்டபடி விமர்சித்தார் யீபிங். “வயதான ஒருவரால் அடக்க முடியாது போகாதா, பாவம் அவர்கள் வீடு வேறு பூட்டியிருக்கிறதே,” என்று நான் நயமாகக் கேட்டதற்கு யீபிங் தானே பல முறை அருகில் இருக்கும் காப்பிக் கடையில் போய் அவரைச் சிறுநீர் கழிக்கச் சொன்னதாகச் சொன்னார்.
காப்பிக் கடை என்றதுமே யீபிங்கிற்கு சுவாரசியமான அடுத்த தலைப்பு கிடைத்தது. ஆர்வமாய்த் தன் குரலில் புது உற்சாகத்துடன், “செல்வி, அந்த ஏழாம் மாடி கடைசி வீடு மலாய்க்காரங்க வீட்டுல ஒரு வாரமா கரண்டு தண்ணீ எல்லாத்தையும் கட் பண்ணீட்டான் தெரியுமா. அவங்க பீயூபி பில்லி கட்டலயாம். அவங்க வீட்டுல எல்லாரும் முக்குல இருக்கே ‘ஃபூஜி ஈடிங் ஹௌஸ்’னு காப்பிக்கடை, அங்க போயித்தான், அங்கிருக்கிற கழிப்பறையில காலையில முகம் கழுவி, பல்லுத் தேய்ச்சு, குளிச்சுட்டும் வராங்க. என்னிக்கி அந்தக் கடைக்காரன் ஏசப் போறானோ தெரியல்ல. அந்தப் பொண்ணு தான் பாவம் கீழ ‘வோய்ட்
டெக்’ல உட்கார்ந்து ராத்திரி படிக்குது.” அவர் குறிப்பிட்ட மலாய்க்காரர்கள் வீட்டில் மூன்று வளர்ந்த பிள்ளைகளும் ஒரு தொடக்க நிலையில் படிக்கும் மகளும் உண்டு. மொத்தம் இரண்டு மகங்கள் இரண்டு மகள்கள். மூத்தவள் உயர்நிலை நாங்கில் படிப்பவள். ‘சிட்டி’ என்ற அந்தப் பெண் மிகவும் பொறுப்புடன் படிப்பாள். ஒரு முறை என்னிடம் கூட அறிவியல் பாடத்தில் சந்தேகம் கேட்டுத் தெளிந்தாள். சமீப காலமாய் கணவன் வேலையிழந்ததில் அந்தத் தாய் தன் பிள்ளைகளை வளர்க்க வழி தெரியாமல் திணறுகிறார். நாசி லீமா, கறிப் பஃப் போன்ற காலை உணவுகள் செய்து விற்பார். இப்போது சார்ஸ் நெருக்கடியில் வாங்குவோர் பயத்தில் வாங்குவதில்லை. இருந்த அந்த ஒரே வருமானமும் போனது. அவர்கள் சமூக அமைப்பான ‘மெண்டாகி’ உதவும். ஆனால், சிலர் உதவியை நாடுவதை அகௌரவமாக நினைக்கிறார்களே.
அண்ணி துணைப்பாடம் எடுக்கப் போகும் தொடக்கப் பள்ளியில் கூட ஓர் இந்தியச் சிறுவன் இரு முறை இரண்டு நாட்களாய் சாப்பிடவில்லை என்றானாம். அண்ணி பரிதாபப்பட்டு மீ வாங்கிக் கொடுக்கிறேன் என்றதற்கும் வேண்டவே வேண்டாமென்றுவிட்டானாம். உடனேயே அண்ணி தொண்டூழியம் பார்க்கும் சிண்டாவிற்குத் தகவல் கொடுத்ததில், அரை மணி நேரத்தில் அந்தச் சிறுவன் வீட்டிற்கு ஓர் அரிசிப்பையும், நீளமான ஒரு ரொட்டியும் வேறு சில தின்பண்டங்களும் அனுப்பச் சிண்டா ஏற்பாடு செய்திருக்கிறது.
இரண்டு இருக்கைகள் தள்ளி இருந்த இரு இந்தியப் பெண்மணிகள் உரக்கப் பேசிக் கொண்டது தற்செயலாகக் காதில் விழுந்தது. “சார்ஸ் நோய் நம்மளவர்களுக்கெல்லாம் வராதாமே. மலாய்க் காரவங்களுக்கும் கூட வராதாம். பன்னிக்கறி சாபிடறவங்களுக்குத் தானாமே வரும்” ஒருவர். “கேக்க நல்லாதானிருக்குக்கா. ஆனா, நோய்க் கிருமிக்கி என்னா ஆறாவது அறிவா இருக்கு. மனுஷ ஒடம்பெல்லாம் ஒரே மாதிரி தானேக்கா. நீங்க வேற இதையெல்லாம் நம்பிக்கிட்டு.” – சிரித்தபடி மற்றொருவர்.
“இல்லப்பா. நாம் காரசாரமா சாப்பிடறதால நமக்கு வராதுன்னு சொல்லிக்கிறங்க. ஆமா, எய்ட்ஸ் வியாதிய விட கொடுமையானதாமே, ஒரேயடியா மூச்சுத் திணறி தான் சாவுறாங்களாமே. எம்மகன் கூட ‘எய்ட்ஸ் நின்று கொல்லும். சார்ஸ் அன்றே கொல்லும்’னு புதுமொழி சொல்றான்.” முதலாமவர், “ஐயோ அக்கா, அதையெல்லாம் நம்பாதீங்க. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவா இருக்கற யாருக்கு வேணா வரலாம். சுகாதாரமா இருக்கறது முக்கியம். பொது இடங்களுக்குப் போய் வந்தா கைய நல்லா சோப்புப் போட்டுக் கழுவணும். முடிஞ்சா குளிக்கலாம். ஒரேயடியா அவ்வளவு தூரம் பயப்படவும் ஒண்ணும் தேவையில்ல. எத்தன பேரு குணமாகி வீட்டுக்குத் திரும்பியிருக்காங்க தெரியுமா. நாம கவனமா இருந்தா வியாதி வராது.”
கிளிப்பிள்ளைகளுக்குச் சொல்வது போல சுகாதார அமைச்சும் பல வகைகளில் சார்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சியைப் பரப்பியபடியே தானிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் மூடிய பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்களாகின்றன. பொறுப்பெற்ற பொறுப்பெற்ற ஒருசில பொது மக்களால் சார்ஸைக் கட்டுப்படுத்துவது தாமதமாகவும் சிரமமாகவும் இருந்து வருகிறது.
நான் பணிபுரிவது தொற்று நோய்ப் பிரிவிற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத புற்று நோய்ப் பிரிவு. இருப்பினும் கூட நாங்கள் காலையில் போகும் போது காய்ச்சல் இருக்கிறதாவென்று தினமும் பரிசோதித்துக் கொள்கிறோம். அதன் பிறகே உள்ளே நுழைகிறோம். அது மட்டுமில்லாமல் தினமும் மருத்துவமனையிலேயே ஒளித்துவிட்டு தான் வீடு திரும்புகிறோம். இருப்பினும் கூட, யீபிங் போன்றவர்கள் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். யீபிங்கைக் குற்றம் சொல்ல வேண்டியதே இல்லை. யீபிங்காவது சற்று படிப்புக் குறைவானவர். ஒரு சில படித்தவர்களும் கூட அவ்வாறே நடப்பதுதான் விநோதமாய் இருக்கிறது.
சிரங்கூனில் ஒரு வாரம் முன்பு நடந்த கூத்தில் இப்போதெல்லாம் உணவங்காடிகளும் கூட ஈயாடுகின்றனவாம். காய்ச்சலுடன் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி உணவங்காடியில் போய் உணவருந்தி யிருக்கிறார்கள். மருத்துவமனை வண்டி வருவதற்குள் அவர்களுக்கு தங்கள் நாவையும் வயிற்றுப் பசியையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. வெளியே வந்து பார்த்து மருத்துவருக்கு பலத்த அதிர்ச்சி.
ஒருமுறை ஜெர்மனிய சுற்றுலாப்பயணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் நகைச்சுவையாகச் சொன்னது நினைவில் மோதியது. சிங்கப்பூரர்களின் பிடித்தமான முக்கிய பொழுதுபோக்கே ‘சாப்பிடுதல்’ என்று புதிதாகக் கண்டுபிடித்ததைப் போலப் பெருமைப்பட்டுக் கொண்டார். நானு இதே நாட்டுக் குடிமகள் தான் என்பதைக் கூறாமல், அந்த ‘ஓராங்பூதே’ சொன்னதற்கு அசடு வழிய சிரித்து வைத்தேன்.
அந்த எண்மரும் ‘காய்ச்சல் இருந்தால் சார்ஸா’ என்று மருத்துவருடன் தெனாவெட்டாய் ஹொக்கெயின்னில் வாக்குவாதம் வேறு செய்திருக்கிறார்கள். எல்லாக் காய்ச்சலும் சார்ஸ் ஆகாது என்ற போதிலும் ‘சார்ஸ்’ நோயின் முக்கிய அறிகுறியே கடும் காய்ச்சல் தான் என்பது பலருக்குப் புரியவே இல்லை. காய்ச்சல் இருக்கிறதா என்றும், காய்ச்சலின் அளவென்ன என்றும் நெற்றியில் கைவைத்து மட்டும் கண்டுபிடிக்கவியலாது என்பதும் பொதுமக்கள் புரிந்து கொள்ளாத மற்றொன்று. தெர்மாமீட்டர் எனப்படும் வெப்பமானியை வைத்து மருத்துவமனையின் உள்ளே நுழையும் பார்வையாளர்களின் உடல் வெப்பத்தை அளந்தால், அவர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு சிலரோ முகம் சுளித்துச் சலிப்பைக் காட்டுகின்றனர். தாதியருக்கு இதனால் வேலை கூடியுள்ளது. ஆனால், அவர்களோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொந்தரவாய் நினைக்கிறார்கள்.
பேருந்தை விட்டு இறங்கி குன்றின் மேல் இருக்கும் எங்களின் கோவிலுக்கு, அதான், டான் டோக் செங் மருத்துவமனைக்கு ஜாலான் டான் டோக் செங் வழியே ஏற ஆரம்பித்தேன். எங்கள் கட்டடத்தின் அருகில் என்னுடன் வேலை செய்யும் பரிச்சயமான முகங்கள் தென்பட்டன். அங்கிருந்த இருக்கையில் வேலரி அமர்ந்து மூக்கை மூக்கைச் சிந்திக் கொண்டும் விசும்பிக் கொண்டுமிருந்தாள். அங்கே அவளைத் தேற்றிக் கொண்டிருந்த திருமதி மேரியின் அருகில் சென்று அருகில் என்னவென்று விசாரித்தேன். “அதை ஏங்கேக்கற செல்வி, அவ குடியிருக்கிற அறையை நாளைக்கே காலி செய்யச் சொல்லிட்டானாம் வீட்டுக்காரன். அவ கூட தங்கியிருக்கிற மத்தவங்கள எல்லாம் ஒண்ணும் சொல்லல. இவ மட்டும் தானே நர்ஸா இருக்கா. எங்க போவேன், ஒரே நாள்ல எப்பிடி வேற எடம் கெடைக்கும். போற எடத்துலயெல்லாம் நர்ஸுன்னு தெரிஞ்சா வாடகைக்கு அறை எப்படிக் கிடைக்கும்னு ஒரேயடியா அழுவுறா, பேசாம் மணிலாவுக்கே திரும்பிப் போயிடறேன்னு சொல்றா. அங்க ஊருலயும் ஏகப்பட்ட கடனிருக்காம். இங்கேயும் கொடுக்க வேண்டியது இருக்காம். இந்த நிலையில வேலையை எப்பிடி விட முடியும். அதான் குழப்பமாயிருக்கு அவளுக்கு. பாவம்பா.” “இத்தகைய சிலுசிலுப்பிற்கெல்லாம் வேலையை விட்டால், பிறகு சிங்கையில் தாதியரே இருக்க முடியாது” என்றேன் வேலரியிடம் நான்.
ஒவ்வொருவருக்கும் எத்தனை பிரச்சனை, நெருக்கடி என்று நினைக்கும் போது மிகவும் பாவமாய்த் தானிருக்கிறது. இன்று வேலரியின் பிரச்சனையைப் பார்த்ததும் தைரியமாய் பேசும் இதே திருமதி மேரி, போன வாரம் சோகமே ஒருவாக அமர்ந்திருந்தார். தன் விலாசத்திற்கு மொட்டைக் கடிதம் வந்ததாய்ச் சொன்னார். ‘கட்டடத்தை விட்டே வெளியேறி விடு, இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாய் இருக்கும்,’ என்று எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினார். அன்றே சிங்கப்பூரை விட்டுவிட்டு திரும்ப தாயகம் திரும்பி விடுபவர் போலத் தான் பேசினார். அப்போதே அவருக்குக் கொச்சியில் போய் இறங்கிவிட மாட்டோமாவென்று இருந்தது. ஏதும் செய்பவன் மொட்டைக் கடிதத்திற்குள் முகத்தை மறைத்துக் கொள்ள மாட்டான் என்று சொல்லி நாங்கள் எல்லோருமாய் சமாதானம் செய்தோம். அத்துடன் அவருடன் யாராவது ஒவ்வொரு நாளும் துணைக்கு போனோம். இன்று அவருக்குத் தன் பிரச்சனை சிறிதாகிவிட்டது போலும். மற்றவர் பிரச்சனையைக் கேட்டது ஒரு காரணமென்றால், ஒரு வாரகாலம் செய்யும் ஜாலமும் ஒரு காரணம்.
ஒரேயடியாய்த் தலைக்கு மேல் தூக்குவதற்கும் ஒதுக்குவதற்கும் மக்களுக்கு எவ்வளவு எளிதில் வருகிறது என்று நினைக்கும் போது என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. அச்சம் தேவைதான், அது எச்சரிக்கையுணர்வாக இருக்கும் வரை, நெருக்கடியான நேரத்தில் தாதியரை ஒதுக்கும் இதே சமூகம் பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை விதிகளை மட்டும் மீறுவது ஏன்?
காய்ச்சல் கண்டுவிட்டதாலோ, சார்ஸ் உள்ள வெளிநாடுகளுக்குப் போய் வந்தாலோ முன்னெச்சரிக்கைக்காக இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கும்படி சுகாதார அமைச்சு அதிகாரப் பூர்வ கட்டளை பிறபித்தும் சிலர் அலட்சியம் செய்து வெளியில் போகின்றனர். வேறு சிலரோ வீட்டில் இருக்கிறார்களா என்று சோதிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்தால், தொந்தரவாக நினைக்கிறார்கள். வெடுவெடுவென்று பேசுகிறார்கள்.
நேரமாகிவிட்டதால், வேலரியைச் சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு எல்லோரும் அவரவர் பணிக்குத் திரும்பினோம். கடைசியாய் தங்க தங்க இடம் கிடைக்காவிட்டால், மெய்ஃபங் தன் வீட்டில் தற்காலிகமாக வேலரியைத் தங்க வைக்க ஏற்பாடு செய்து தருவதாக ஒத்துக்கொண்டாள். அதுவும் இல்லையானால் திருமதி அலி தன் வீட்டில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ஒரு பெரிய தரை வீட்டில் அவர் வசிக்கிறார்.
மேலும் இரண்டு வாரங்கள் சென்றது. ஒரு நாள் இடைவேளை உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்கள் பிரிவின் செயற்கைக் கோளாக அறியப்பட்ட மெய்ஃபெங், நடிகை முதல் பாராளுமன்றம் வரை அலசுவாள். கலகலப்பான ஒரு செய்தி சொன்னாள். “நம்ம ஜோ டே, இல்ல, அதாம்பா மீடியா கார்ப் நிறுவனத்துல பன்னிரெண்டு வருஷமா நடிகையா இருக்காளே. ‘சேஜ்ஜேயே’ (பெரியக்கா)னு கூப்பிடுவாங்க. அவளுக்கு வைத்தியம் பார்த்த சீன மருத்துவருக்குக் காய்ச்சல் சார்ஸ்னு ஊர்ஜிதம் செய்துட்டாங்க. அதுனால், ஜோவை பத்து நாளைக்கு வீட்டிலேயே இருக்க ஆணை போட்டிருக்காங்க. அவ நிச்சயம் வீட்டுலயே இருப்பா. அவ கொழந்தை பெத்துக்கலையேன்னு கவலப்படுறதும், அவளப் பார்த்து புருவத்தை வழிச்சிக்கிறதும், முடிய சரச்சிக்கிறதும்னு செய்ற இந்த ஜனங்க இது மாதிரி சில நல்ல விஷயங்களையும் அவ கிட்டயிருந்து கத்துக்கிட்டாச் சரி. நான் நினைக்கிறேன், அவள நர்ஸா நடிக்க வச்சு, நாம படற பாட்டயெல்லாம் ஒரு சீரியலா எடுத்தா நிச்சயமா பேப்பர்ல படிச்சுத் தெரிஞ்சிக்கறத விட ஒழுங்கா புரிஞ்சுப்பாங்க மக்கள்,” சிரித்தபடியே சொன்னதும் நாங்களும் ஆமோதித்துச் சிரித்தோம்.
உண்மை தான் என்று தோன்றியது எனக்கு. சுகாதார சுகாதார அமைச்சு சார்ஸ் விழிப்புணர்வுக்கு மட்டும் எத்தனை மில்லியன் செலவு செய்கிறது. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வெப்பமானி என்று ஐந்து மில்லியன் செலவாம். தினமும் இருமுறை காய்ச்சலிருக்கிறதா என்று பரிசோதித்தறிய வேண்டியே இத்தகைய ஏற்பாடு. இருந்தும் எதிலும் கவர்ச்சியை விரும்பும் பொதுமக்கள் நிச்சயம் நடிகைகளிடமிருந்து விழிப்புணர்வு பெறுவர்.
ஞாயிறன்று ஜூன்ரோங் மெள்ள எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினான். என்னவென்று கேட்டதும், “ஆண்டி, அம்மா கடைக்கிப் போறாங்க. என்னை உங்க வீட்டுல கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னாங்க.” என்றான். உள்ளே அழைத்ததுமே இருக்கையில் வசதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினான்.
சிறிது நேரத்திலேயே யீபிங் வந்து, “செல்வி, நான் கொஞ்சம் ‘என் டீ யூ சி′ வரைக்கும் போயிட்டு வரேன். சின்னவ உள்ளே தூங்கறா. இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டா. நான் இதோ, அரை மணியில வந்துடறேன். இந்தா, எதுக்கும் சாவி வெச்சுக்கோ.” என்று மிக இயல்பாகச் சொன்னார். சரியென்று வாங்கிக் கொண்ட நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த யீபிங், “என்ன அப்பிடிப் பாக்கற, வரேன். வந்து உங்ககூட நிறைய பேசணும். உன்னோடப் பேசி எவ்வளவு நாளாச்சு. உங்கூட பேசாமத் தான் எனக்கு மூச்சுத் திணறுது. சார்ஸ் வந்தாக் கூட நான் பிழைச்சுப்பேன். பேசாதன்னா, அவ்வளவுதான் என்னால முடியாதுப்பா,” பகபகவென்று சிரித்தபடி விடுவிடுவென்று நடையைக் கட்டினார்.
உள்ளிருந்து அண்ணி, “செல்வி, நல்லா வசமா மாட்டிக்கிட்டையா? எங்க கிட்டயெல்லாம் அவங்க நின்னு பேசரதில்ல. கேக்கறவங்க கேக்கறவங்க பொறுமையாக் கேக்கணுமே. அதுக்கு நீ தான் லாயக்கு. அன்புத் தொல்லையாக நினைத்து அவர் செய்யும் வம்புத் தொல்லைய நீ தான் சகிச்சுப்ப. இத்தன நாள் உன்னோட பேசாம இருந்ததே ரொம்ப பெரிய விஷயம். யீபிங்கின் மனமாற்றத்துக்கு காரணம் என்னன்னு தெரியுமா?” என்றதும் நானும் குழப்பத்துடன் அவரது பேச்சையும் ரசித்தபடி தெரியவில்லையென்று தலையாட்டியதும், “ஹூம், ஸ்கூல் ஆரம்பிச்சதுமே, சார்ஸ் பற்றிய எல்லா விதமான சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஜூன்ரோங் உனக்கு ஒரு வாழ்த்து அட்டை வேற செஞ்சிருக்கான். தெரியுமா?” அண்ணி கூறியதுமே ஜூன்ரோங் கையிலிருந்த அட்டையை என் முகத்தைப் பார்த்தபடி என்னிடம் நீட்டினான். நன்றி கூறி வாங்கிக் கொண்டேன். அட்டை சிறுவனின் குழந்தைத்தனமான வண்ணக் கையெழுத்தில் ‘செல்வி ஆண்டிக்கும் மற்ற எல்லா மருத்துவ ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்’ என்றது. “செல்வி, இந்தச் சின்னப்பய தான் அவங்கம்மாவுக்கு புரிய வச்சிருக்கான். சுத்தமா, கவனமா, இருந்தா சார்ஸ் வராது. பயப்பட வேண்டாம். இந்த இக்கட்டில் தாதிகள் சேவை மிகவும் போற்றத்தக்கதுன்னும் அவங்க டீச்சர் சொல்லிக் கொடுத்தத அவங்கம்மா கிட்ட சொல்லி அவங்க மனச மாத்தியிருக்கான். இந்தச் சின்னப் பொடியன் சொல்லித்தான் யீபிங் சார்ஸைப் பற்றி மேலும் தெரிஞ்சிக்கிட்டாங்களாம். ஒரு வாரமா இதைப் பற்றிய தகவல் சேகரிப்பு தான் யீபிங்கின் வேலை. இப்போ உனக்கே ஏதும் சந்தேகம் இருந்தா நீ அவங்ககிட்ட கேட்டுக்கலாம்.”
அண்ணி கூறியதில் எனக்கு துளியும் வியப்பிருக்கவில்லை. அது தானே யீபிங். சேகரித்த செய்திகளை இறக்க வேண்டியேனும் யீபிங் என்னிடம் பேசுவார். அவருடைய அபிமான நடிகை ஜோடேயைப் பற்றிப் பேசவே அவருக்கு நேரம் போதாதே. தீவிரவாதம், விட்டால் போர், பிறகு இருக்கவே இருக்கிறது சார்ஸ். பாவம் யீபிங்கிற்கு ஒரு மாறுதல் வேண்டுமே. மாறுதலுக்கு அவரும் தான் எங்கே போவார்? பாராமுகமானாலும் சரி, தோழமையானாலும் சரி, சரி, பெரிய உள் நோக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் குணம் அவருடன் பிறந்தது.
அடுத்த வாரம் திங்கள் மதியம் மெய்ஃபெங், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் விதியை மீறினால் ஆறு மாதம் வரை சிறைவாசமும், பத்தாயிரம் வெள்ளி வரை அபராதமும் என்பது இன்று தான் தீர்மானத்திற்கு வந்துள்ளது என்று சுடச்சுட காலையில் கூறினாள். செய்தித் தாளையும் காண்பித்தாள்.
“செல்வி, இதுனால சார்ஸ் பரவாமக் கட்டுப்படுத்த முடியும். நம்ம ஜனங்க தான் ஃபைன் (fine) போட்டாத் தான் கட்டுப்படறேன்றாங்க. என்னதான் செய்யும் அரசாங்கமும் சரி, இந்தா, பிடி அபராதம் போடறேன், இப்பவாவது ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இருன்னுது அரசாங்கம். என்ன, ஒண்ணே ஒண்ணு, குப்பை போடறதுக்கும் அபராதம், சார்ஸ் தனிமையை மீறரதுக்கும் அபராதம் அப்படின்னு வெளினாட்டுல சிங்கப்பூரப் பரிகசிப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. உலகிலேயே ஆக அதிக குற்றங்களுக்கு அபராதம் என்ற பெருமையும் நமக்கு வரும்.” துளியும் சிரிக்காமல் இவளால் எப்படித் தான் நையாண்டி செய்ய முடிகிறதோ.
அடுத்த வாரமே சிரங்கூன் புகழ் குடும்பத்தின் எழுபத்திரண்டு வயது மூத்தவர் இறந்தார். போதோங்க் பாசிர் ஈரச்சந்தை பத்து நாட்கள் மூடப்பட்டு திறந்தது. முதல் இந்திய சார்ஸ் நோயாளியும் இறந்தார். அரசாங்கம் வசதி குறைந்தோருக்குப் பீயூபி கட்டணத்தில் இருபது வெள்ளி மானியம் வழங்குகிறது என்பது மற்றொரு முக்கியச் செய்தி. இது சிட்டியின் குடும்பத்துக்கு பேருதவியாக இருக்கும். சார்ஸின் தீவிரம் கட்டுப்பட்டது போலவே மக்களின் அறியாமையும் மெல்ல விலகியது.
“இன்னொன்னு தெரியுமா உனக்கு, வேற ஏதாவது சூடான விஷயம் கிளம்பினா சார்ஸையும் மறந்துடுவாங்க நம்ப ஆளுங்க. சார்ஸ் அன்றாட வாழ்க்கையோட அங்கமாயிடும். சார்ஸுடன் வாழப் பழகணும்னு தினசரியிலயே இப்போவே போட ஆரம்பிச்சுட்டாங்க. ‘கிட்டி’ பொம்மை வந்த புதுசுல என்ன ஆச்சு. ம்… ஜப்பானியப் பொருள்கள் மீது மோகம் கொண்ட நம்ம ஆளுங்க ராத்திரியெல்லாம் வரிசையில் நின்னு சண்டை போடாத கொறையா அந்த போக்கத்த பொம்மைய வாங்கினாங்க. அதையும் செய்தியா வெளியிட்டாங்க. சரியான ‘கியாஸு’ப்பா நம்ப சிங்கப்பூரியன்ஸ். வாங்கினதோட சரி. அதுக்கப்புறம், வீட்டுல சீந்துவாரில்லாம கெடக்கும் அது. இப்போப் பாரு, ‘கிட்டி’ கடை கடையாச் சீரழியிது, வாங்கத் தான் ஆளில்ல. தள்ளுபடி பண்ணினாலும் இப்ப வாங்கப் பொருளாதாரம் விடல்ல.’
“அத்த விடுப்பா. நொவீனா எம்ஆடீ ஸ்டேஷன்ல ஏராளமான வாழ்த்து மற்றும் பாராட்டு அட்டைகள் வச்சிருக்காங்க. நிச்சயம் நீ அதப் போயி பார்க்கணும் செல்வி. நானும் இந்த ஒரே வாரத்துல உங்கிட்ட பல முறை சொல்லிட்டேன்.”
எப்போதும் பேருந்தில் வரும் மெய்ஃபெங் இப்போதெல்லாம் இலகு ரயிலிலேயே வருகிறாளாம். “ஏதோ ஒரு நல்லவர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து மேலும் மேலும் பலர் எழுதி வைக்கிறார்கள். இதில் மருத்துவர்கள், தாதியர் மற்றும் மருத்துவ ஊழியர்களை ஊக்குவித்து அழகான சொல்லோவியங்கள் உள்ளன. அதில் எத்தனை சிறார்கள் தங்கள் கைவண்ணத்திலேயே உருவாக்கிய அட்டைகள் தெரியுமா? ஒண்ணொண்ணும் கொள்ளை அழகு. சார்ஸால் அவதிப்பட்டு, போராடிப் பிறகு குணமாகி வீடு சென்றவர்களின் உருக்கமான வார்த்தைகள் தான் பொதுமக்களிடம் செவிலியரின் சேவையின் நிதர்சனத்தை உணர்த்தப் போகிறது என்று நான் நம்புகிறேன். நான் தினமும் அதை படிக்கவே இப்போதெல்லாம் இரயிலில் தான் வருகிறேன். காலையில் உற்சாகமாக வேலையைத் தொடங்க ஒரு டானிக் மாதிரி இது மிகவும் உதவியாக இருக்கு. நிராகரிப்பையும் தீண்டாமையையும் மறக்கணும்னா நிச்சயமா இது மாதிரி உள்ள பிரகாசமான் பக்கம் தான் நம்ம கவனத்தத் திருப்பணும். இல்ல, நாம வேலை செய்யவும் முடியாது. நமக்கு ஈடுபாடும் வராது. புழுங்கித் திணறி சார்ஸில்லாமலேயே செத்துட வேண்டியது தான்.”
அட, இது கூட நல்ல யோசனை தான். கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்தாலும், நேராகப் பேருந்திலேயே வராமல் முதலில் வேறு பேருந்தை எடுத்து ‘ரெட் ஹில்’ ரயில் நிலையம் வரை வந்து, பிறகு ரயிலில் இதற்காகவே வரலாம் போலிருக்கிறதே. நாளையிலிருந்து பத்து நிமிடம் முன்பாகவே வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டியது தான். ஜூன்ரோங் கொடுத்த அட்டையையும் கூட அங்கு வைக்க வேண்டும். புதிதாய் ஒரு நாளைத் தொடங்க செய்தித்தாளை விட இதுவே நல்ல உத்தி.
– திசைகள், நவம்பர் 2003.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
