மீசைக்காரியின் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 119 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

“அண்ணே!”-என்று வாசலில் குரல் கேட்டதும் மணி குரைத்தான். வீட்டின் உள் கதவை திறந்து கொண்டு வாசலில் வந்து நின்றாள் சிகப்பி. நடுவீட்டில் தேக்கு ஊஞ்சல் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.

“அப்பா, கடைக்கு போயிட்டாங்க மாமா”-என்றாள். மஞ்சப் பையை அவளிடம் தந்துவிட்டு போய்விட்டார்கள் ஊர் நாட்டாமையும்,தெரு நாட்டாமைகளும். அதில் அரைமுறி தேங்காய்,மஞ்சள் வாழைப் பழம், வெத்தலை,கொட்டை பாக்கு இருந்தது. அரைமுறி தேங்காய் ஒரு தலைக்கட்டுக்கான வரியை உணர்த்தியது. ஒவ்வொரு சித்திரை மாதத்தின் இறுதிச் செவ்வாய் கிழமைகளில் பூமாரி அம்மனுக்கு திருவிழா தொடங்கும். செவ்வாய் கிழமை அம்மனுக்கு ஏற்ற நாள். மூன்று நாள் திருவிழா. பந்தக்கால் நடுதலும், காப்புக் கட்டுதலும்,கைகளில் மஞ்சள்கயிறு கட்டுதலும்,கோயிலுக்கு வெள்ளை அடித்தலும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்கூடி மகிழ்ச்சியுடன் திருவிழா வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். காப்புக் கட்டிய பின் விரதம் இருந்து கொண்டனர். மூன்றே நாள் திருவிழாவில் ஒரு நாள் மண்டகப்படிதாரராக சாத்தப்பன் இருப்பார். அன்றைய செலவுகளும், அருசுவை அன்னதானமும் அவருடையது. அதற்காக வருஷாவருஷம் பரிவட்டம் கட்டி அவரை சிறப்பிப்பார்கள். சிகப்பி, சாத்தப்பன் அண்ணனின் ஒரே மகள்.பருவத்தை கடந்தவள். பதிமூன்று வயதே ஆனவள். பரம்பரை பரம்பரையாக வட்டிக்கடை வியாபாரத்தில் நல்ல சம்பாதனை செய்தவர். நேர்மையும்-தொழில் பக்தியும்தான் அவர் உயர்வுக்கு காரணம். கடையில் அவர் இருக்கைக்கு மேல் கற்பக விநாயகர் படம் எப்போதும் அன்று அலர்ந்த மலர் தாங்கிய மாலையில் காட்சிதரும்.

‘சத்திரப் பட்டியாம் வயப்பட்டியாம்
சாமி பிறந்தது வீரபாண்டியாம்…!’

ஊர் பெண்கள் எல்லாம் பெரியாத்தா வீட்டு மாடியில் ஒன்றுகூடி கும்மியடித்து பாடும் சத்தம், சாலையில் போகிறவர்களை நிறுத்தி நின்று கேட்டுப் போகச் செய்தது. கணீரென்ற குரலும், இசை வாத்தியங்களற்ற சங்கீதமுமாக காற்றில் கலந்து கொண்டிருந்தது. வட்டவட்டம் ஆண் பொழக்கம் இல்லாத பெரியாத்தா வீட்டில்தான் ஒரு செவ்வாய் கிழமையன்று முளை பரத்துவார்கள். நவதானியங்களை கொண்டு பெண்கள் மட்டுமே கூடி செய்யும் முறை முளைப்பாலிகை. தட்டப்பயிறு,கல்லுப் பயிறு, கம்பு, சோளம், கடுகு, மல்லி,நெல்…என தானியங்களை உடைந்த மண்சட்டியின் அடியில் தேங்காய் நாரும் அதன் மேல் செம்மண்ணும் ஆட்டுப் புளுக்கையும் போட்டு நடுவர். எட்டு நாளுக்குள் வளர்ந்து இளம் பச்சையாக நிற்கும். முளைப்பாரி எந்த அளவிற்கு உயரமாக வளர்கிறதோ அந்த அளவிற்கு ஊர் செழிக்கும் என்பது ஐதீகமாகும். பெண்கள் மாதவிடாயின் போது தண்ணீர் விட்டால் முளைப்பாரி கருகிவிடும் என்று நம்புகிறார்கள். முளை பரத்தும் நாள் முதல் அம்மன் பூஞ்சோலை அடையும் நாள்வரை கும்மிப்பாடலின் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஒன்பதாம் நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று தேனி கொட்டக்குடி ஆற்றில் கரைத்துவிடுவார்கள். 

சிகப்பி, ஒவ்வொரு வருடமும் தன் அம்மா நாச்சம்மையுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாள். முளைவிட்டு மேலெழுந்து செடி வளர்வதை ஒவ்வொரு நாளும் ரசிப்பாள். அதை அலங்காரம் செய்து சாமி சன்னதி முன் வைக்கும் வரை நிழலாக தொடர்ந்து கொண்டே இருப்பாள்.

‘ஒன்னாந்த நாளையிலே ஓங்கி வளர்ந்திடுவா
இரண்டாந்த நாளையிலே இரட்டின கிளி
போலிருப்பா….’

என்று கும்மிதட்டி உடலை வளைத்தும் நிமிர்த்தியும் காலை முன்னும் பின்னுமாக வைத்து இடம் பெயர்ந்து கும்மியடிப்பதை ஒரு பயிற்சியாக தன் வீட்டிலே செய்து பார்ப்பாள் சிகப்பி. சிகப்பிக்கு பருவமடைந்த பின் நடக்கும் முதல் திருவிழா என்பதால் அவள் மனதில் ரொம்ப நாட்களாக அழுத்திக் கொண்டிருந்த மனகுமறலை நீக்க வேண்டுதல் வைத்திருந்தாள். அந்த அச்சம் வரும் போதெல்லாம் கண்ணாடி முன் நின்று தன் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்துக் கொள்வாள். அன்று விடிந்ததும் விடியாததும்மாக கண்ணாடி முன் நின்று மூக்குக்கு கீழே மேல் உதட்டுக்கு மேல் உள்ள பகுதியை தடவிப் பார்த்தாள். மீசை போல் வளர்ந்திருக்கும் பூனை முடியை ஒவ்வொன்றாக புடுங்கிக் கொண்டிருந்தாள் .அவள் கையில் பிளேடும் இருந்தது.

“ராசாத்தி என்னடி பண்றவ!”-அதட்டலாக கேட்டாள் நாச்சம்மை. “அசிங்கமா மீச வளருதும்மா!”- என்று சொல்லிவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தாள். அந்த அதிகாலை கோர முகத்தை இன்றுதான் மகள் பார்ப்பது போல் கையால் வாயை மூடிக் கொண்டது அனிச்சையாகவே நடந்தது நாச்சம்மைக்கு. தினமும் முகம் மழித்து கஸ்தூரி மஞ்சள் பூசிக் கொள்பவள்தான் நாச்சம்மை. ஆனால், அன்று கோபமாக மகளை திட்டினாள், பிளேடு போடாதே என்று. அந்த காலத்திலே அவளுக்கு அறிவுரை சொல்ல யாரும் இல்லை. ஆண்களைப் போல மழித்ததில் மயிர்கால்கள் வலுத்து அடர்த்தியாக கருத்து வளர ஆரம்பித்துவிட்டது. கிழவிகள் பேசிக் கொண்டார்கள், ‘உங்க ஆத்தா நீ பொறக்கும் போதே மஞ்சள் பூசி குளிப்பாட்டி இருக்கனும்.அத செய்யாததால இப்ப முகத்துல முடி மொழச்சிக் கிடக்கு’-என்று . இது மரபு வழியாக வரும் குறைதான் என்று கேரள வைத்தியர்களும் சொல்லிவிட்டார்கள். நாச்சம்மை பரம்பரையில் அவள் அம்மாவின் அம்மா அம்மாச்சிக்கு அது போல் இருந்ததாம். பகல் வெளிச்சத்தை தன் ஆயுள் முழுச்சூடும் பார்க்காமல் இருட்டறை வாழ்க்கை வாழ்ந்து மடிந்தவள். அதற்குப்பின் நாச்சம்மைக்கும் வந்துவிட்டது. அந்த பயத்திலே தன் மகள் சிகப்பிக்கும் குழந்தை பருவத்திலிருந்தே முகத்தில் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குழிப்பாட்டினாள். ஆனால், இன்று அவள் முகத்திலும் பூனை முடி அரும்பி நிற்கிறது. இந்த மரபுவழி குறைகளை களைய ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் கிடையாது. தற்போது நவீன முறையான லேசர் சிகிச்சையில் மயிர் கால்களை கொண்றுவிடலாம் என மருத்துவர்கள் சொன்னாலும் அந்த தழும்புகள் சாகும் வரை முகத்தைவிட்டு மறையாது என்பது நிதர்சன உண்மை. இதையெல்லாம் சரி செய்ய  பூமாரி அம்மனிடம் வேண்டுதல் வைத்ததில் தவறு இல்லை என்று நாச்சம்மையும், சாத்தப்பனும் சிகப்பிக்கு துணை நின்றார்கள். 

எப்போதும் போல் ஏழாம் நாள் சிகப்பியும், அவள் அம்மா நாச்சம்மையும் பெரியாத்தா வீட்டுக்கு முளைப்பாரி கும்மி அடிக்க போனார்கள். சிகப்பியின் முளைப்பாரி மட்டும் வாடி கிடந்தது. அது இனி முளைக்காது கருகிவிடும் என்று பெரியாத்தா சொன்னாள். குழந்தைக்கு நல்லது- கெட்டது சொல்லிக் கொடுக்க கூடாதா என நாச்சம்மையை வைதாள் பெரியாத்தா. சிகப்பி அழுத முகமாக வீட்டிற்கு வந்தாள்.

“ஏண்டி, சிகப்பி வீட்டுக்கு தூரமா நிய்யி!?”-கடுசா கேட்டாள் நாச்சம்மை. “ஆமாம்மா!”-என்றாள் சிகப்பி. “அப்படின்னா நீ எதுக்கு அங்க வந்த. அந்த நேரம் முளைப்பாரிக்கு ஆகாதுன்னு ஆரும் உனக்கு சொல்லலையாடி …!”-நாச்சம்மை மூக்கை சிந்தி எறிந்துவிட்டு கேட்டாள். சிகப்பி மவுனமாக இருந்தாள். “சாமி குத்தமா ஆகிப்போச்சே!”- நாச்சம்மையும்,சாத்தப்பனும் இடி விழுந்தது போல் இருந்தார்கள். 

அம்மன் கோயிலுக்கு முன் புதிதாக கொட்டகை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில்தான் கரகம் எடுத்து வரும் போது அவரவர் முளைப்பாரியை சிங்காரித்து எடுத்து வந்து வைப்பார்கள். சந்நதிக்கு நேர் எதிராக சற்று தொலைவில் நீண்ட பள்ளம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல காய்ந்த விறகு ஒரு வண்டி நிறைய வந்து நின்று கொண்டிருந்தது. இளவட்டங்கள் விறகை பிளந்து சிறு சிறு துண்டுகளாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நீண்ட பள்ளத்தில் விறகை நிரப்பி நெருப்பிடுவார்கள். அதுதான் பூக் குண்டம். கடைசி நாள் நிகழ்வில் பூக்குழி இறங்குவார்கள். வேண்டுதல் உள்ளவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊத்தி கனன்று கொண்டிருக்கும் நெருப்புத் துண்டுகளில் வெறும் காலில் நடப்பது உச்சபட்ச நேர்த்திக் கடன். அம்மன் திருவிழா முறையாக உத்தரவு கேட்டல், நாள் குறித்தல், பொறுப்பாளர் தேர்வு, வரிப் பணம் பிரித்தல், கலைஞர்களுக்கு முன் பணம் கொடுத்தல், வெள்ளையடிப்பு, அழைப்பிதழ் அச்சடிப்பு, கால் நடுதல், காப்புக் கட்டுதல், விரதம் இருத்தல், கோயில் சாமான்களை எடுத்து வந்து புளி போட்டு விளக்கி வைத்தல் என்று தொடர்ச்சியாக எல்லோர் மனமும் குளிரும்படி நடந்து கொண்டு வந்தது.

 நாச்சம்மைக்கு மீசைக்காரி என்ற பட்டப் பெயர் உண்டு. சிகப்பியையும் மீசைக்காரியின் மகள் என்றே கூப்பிடும் ஊர்வாய். ஒரு நல்லது, பொல்லாததுக்கு ஒரு நாளும் முகம் மழிக்காமல் மஞ்சள் பூசாமல் வெளியே இறங்க முடியாத நிலை நாச்சம்மைக்கு. இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றிருக்கிறாள். அவளை புரிந்து கொண்டு அவளுடன் அனுசரனையாக குடும்பம் நடத்தும் சாத்தப்பன் அவளுக்காக வேண்டாத தெய்வம் இல்லை. ஒவ்வொரு வருடமும் மாவூற்று வேலப்பருக்கு சித்திரை திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செய்திருக்கிறான். மீசை ஆண்களுக்கு இருப்பது பெருமை. அதுவே பெண்களுக்கு இருந்தால் அவமானம். ம.பொ.சிவஞானம்,ப.ஜீவானந்தம், ரசிகமணி டி.கே.சி, நாவலர் சோமசுந்தர பாரதி, சுப்ரமணிய பாரதி போன்றவர்களின் மீசைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம், அவர்களின் அடையாளத்தை குறிக்கிறது. மீசையால் ஆண்களை எளிதில் அடையாளப்படுத்திவிட முடிகிறது. வீரத்தின் குறியீடாகவும் உள்ளது. வீரப் பெண்மணிகள் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் இவர்களுக்கு மீசை கிடையாது. பூமாரி அம்மனுக்கும் மீசையில்லை. வழுவழுப்பான, கருணை மிக்க முகப் பொலிவு! 

தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. குழாய் விளக்குகள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. கோயிலை சுற்றி நியான் விளக்குகள் எரிந்தாலும் கருவறைக்குள் எண்ணெய் விளக்குதான் ஏற்றப்பட்டிருந்தது.

உடம்பின் உறுப்புகளில் வலித் துன்பம் தொடர்ந்து இருந்தால் மாவிளக்கு எடுப்பதாக நேர்ந்து கொண்டவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினார்கள். பச்சரிசி மாவில் கருப்பட்டி பாகு கலந்து பிசைந்து செய்யப்பட்டது மாவிளக்கு. அதில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றினார்கள். 

முதல் நாள் விழாவில் மேளதாளத்துடன் கும்பம்(குடநீர்)எடுத்து வந்து அம்மனை நீராட்டி சோடிப்பு செய்து தீப ஆராதனை செய்த பின் கரகம் ஆடுபவர்கள்,தீச்சட்டி எடுப்பவர்கள் என தொடந்து கொண்டிருந்தது. இரண்டாம் நாள் சாத்தப்ப செட்டியார் மண்டகப்படிதாரராக இருந்து தொடர்ந்து வழிபாடும் அன்னதானமும் நடந்தது. சிகப்பி தீச்சட்டி எடுத்து முதல் வேண்டுதலை நிறை வேற்றினாள். மூன்றாம் நாள் திருவிழா மஞ்சள் நீராட்டுதல். அம்மனை பூஞ்சோலைக்கு அனுப்புவார்கள். இந் நிகழ்விலும் நீரில் மஞ்சள் கலந்து ஆண்களும்,பெண்களும் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி மகிழ்வர். பூ மற்றும் நகைகளினால் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளத்துடன் அம்மன் புறப்பாடும் அதன் பின்னே பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று தேனி ஆத்துப் பாலத்தின் கீழ் ஓடிக்கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் முளைப்பாரியை கரைத்துவிட்டு அவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட பொது வாகனங்களில் வீடு வந்து சேர்வார்கள். 

சாமி புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்னால்தான் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடை பெற்றுக் கொண்டிருந்தது. நெகிழிக் குப்பைகளை தீக்குண்டத்தில் போட வேண்டாம் என ஒலி பெருக்கி எச்சரித்தது. ஏழு கன்னிப் பெண்கள் பெருமாள் கோவிலிருந்து நெய் விளக்கு ஏற்றி வந்து பூக்குழி கற்பூரத்தை ஏற்றியதில் கட்டைகள் எரிந்து தணலாக கனன்று கொண்டிருந்தது. என்னதான் மஞ்சள் தண்ணீ ஊற்றினாலும் பொசுக்கும் கங்குகளில் வெறும் காலில் நடப்பது பெரியவர்களால் முடியும். சின்னஞ்சிறுசுகள் அதற்கு முயற்சிக்க கூடாது என பூசாரி தாத்தா சொல்லியும் கேட்காமல் பூக்குழி இறங்க தயாராளாள் சிகப்பி. அதற்காக விரதம் இருந்திருக்கிறாள். மஞ்சள் சட்டையும் மஞ்சள் பாவாடையும் அணிந்திருந்தாள். முகத்தில் மஞ்சள் அப்பி இருந்தது. கைகளில் வேப்பிலை வைத்திருந்தாள். நாச்சம்மையும், சாத்தப்பனும் வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார்கள். “பள்ளிக்கூடம் போகும் பிள்ளை நீ,வேண்டாம்!”-என தடுத்தாள் நாச்சம்மை. தன் முகத்தை அம்மன் சந்நதியில் இருக்கும் கண்ணாடியில் பார்த்தவள், ஆதாளிப் போட்டு சாமி ஆடினாள். சாத்தப்பனும்,உறவுக்காரர்களும் அவளை பிடித்தும் முடியாமல் திணறினார்கள். அம்மன் அவள் மேல் இறங்கிவிட்டதாக பேசினார்கள். பூக்குழி இறங்கும் வேண்டுதலை நிறைவேற்ற அம்மனே உத்தரவு கொடுத்ததாக கத்தினாள். பூசாரியும் இன்னும் சிலரும் அவள் மீது மஞ்சத் தண்ணி ஊற்றினார்கள். சாத்தப்பனையும், நாச்சம்மையையும் கூட்டத்தினர் விலக்கிவிட்டார்கள். வானம் கருத்து இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து குளுந்த காற்று வீசியது. கருட பகவான் வானத்தை வட்டமடித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.தகிக்கும் தீ குண்டத்தில் தன் முதல் பாதத்தையும் பின்பு அடுத்தும் அடுத்தும்மாக எட்டு வைத்தாள். பிஞ்சுக் கால்கள் பொசுங்கிக் கொண்டிருந்தது. பெண்கள் குலவை சப்தமிட்டனர். கோயிலின் முன் போடப்பட்ட கீற்று கொட்டகையில் சடசடவென சப்தம் கேட்டது. கோயிலைச் சுற்றி நின்றவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள். ஆலங்கட்டி மழை அடித்துக் கொண்டிருந்தது. கூடவே பலத்த காற்றும் வீசியது. சிகப்பி என்று கத்தினாள் நாச்சம்மை. தீக் குண்டத்தில் விழுந்த ஆலங்கட்டி “ச்சூ!”-என்ற சப்தத்துடன் புகையாக கிளம்பியது. ஏதோ தன் வேண்டுதலுக்கு தடை ஏற்பட்டுவிட்டதாக எண்ணிய சிகப்பி, தீகுண்டத்திலேயே விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தாள். சிவந்த இதழ்களாய் புகைந்து கொண்டு இருக்கும் நெருப்பில் தன் முகம் பதிய விழுந்தாள். சில நிமிடங்களிலேயே தன் தடித்த மழையால் தீக்குண்டத்தை முற்றிலும் அனைத்துவிட்டாள் பூமாரி அம்மன். எல்லோரும் ஓடி வந்து சிகப்பியை தூக்கி அவள் முகத்தை துடைத்தனர். 

மூக்குக்கு கீழே உதட்டுக்கு மேலே இருந்த பூனை முடி முற்றிலும் கருகிவிட்டிருந்து. சிகப்பி கண் விழித்து பார்த்தாள். நாச்சம்மை அவளை தாங்கிப் பிடித்திருந்தாள். முகத்தில் இருந்த மயிர் கருகிவிட்டதால் அதன் வேர்களில் இனி முடி முளைக்காது என வைத்தியர் சொன்னார். சிகப்பியின் முகத்திலும், நாச்சம்மையின் முகத்திலும் சந்தோசம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

– ‘தளம்’ இதழில் செப்டம்பர் 2026ல் பிரசுரம் கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *