மிசின் பெட்டி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 465 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் இடது பக்கச் சுவரோடு செழித்து வளர்ந்து நிற்கும் செரி மரத்தின் கீழ் இராமநாதன் அமர்ந்திருக்கின்றார். காலுக்கு மேல் கால்போட்டு, கைவிரல்களுக்கிடையில் சிகரட் புகைய அவர் அமர்ந்திருக்கும் தோரணை கடந்த கால, நிகழ்கால வாழ்வின் செழுமைக்கு அளவு கோலிடுகின்றது. 

வீட்டுக் கூரையால் தவறி விழுகின்ற எலிக்குஞ்சின் மயிர் முளைக்காத தோலைப் போன்று அவரது உள்ளங்கால் தோலின் மென்மை… பூமியில் படாத கால்கள்! 

வயது அறுபதுக்கு மேல். ஆனால்… சிவந்து, பருத்த, தொந்தி விழுந்து, மினுங்குகின்ற உடற்கட்டு. பத்து வயது குறைத்துத்தான் மதிப்பிட வைக்கும். வயதுக்கேற்ற இயல்பான உடல் மாற்றங்களே அவரிடம் தோற்று விட்டன! 

ஏதோவொரு ஆங்கிலப் புத்தகத்தில் மூழ்கிப் போயிருக்கின்றார். 

இவர் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பத்தடி தள்ளி, கிணற்றடிக்குப் போகின்ற பாதைக் கரையோடு மிகப் பருத்த ஒரு தேமாமரம். அந்த மரத்தடியில் மூன்று சிறுமிகள் வாடிப் போய் உட்கார்ந்திருக்கின்றனர். சில தினங்கள் வெய்யிலில் கிடந்து தோல் சுருங்கிய குரும் பட்டிகளைப் போல். 

இவர்கள் ‘குரும்பட்டிகளைக் காய்த்து உதிர்த்த அந்தத் தென்னை மரம். ஆவர்களின் தாய் இந்த வீட்டில் ஏதோ வேலை செய்து கொண்டு நிற்கின்றாள். அவளது வருகைக்காக இவர்கள் காத்துக் கிடக்கின்றனர். 

‘எடி கிளி…… நாங்கள் சோறு சமைச்சு விளையாடுவமா’ அவள் மலர் கேட்கின்றாள். 

கெங்கையம்மாவுக்கு ஆறு பிள்ளைகள். ஆறுமே பெட்டைக் குஞ்சுகள். கடற்கரை மணலில் துளையிடுகின்ற நண்டுக் குஞ்சுகளைப் போல். 

மலர் நாலாவது மகள். கிளி ஆறாவது கடைசிப் பெட்டை. 

‘எடி பேசாமல் இரு. சத்தம் போட்டால் ஐயா பேசுவர்’ கிளிக்கு ஐந்து வயது தான் இருக்கும் இருந்தும், பிறப்போடு ஒட்டிய அந்த ஏழ்மை, அதனால் ஏற்பட்ட தாழ்வுச் சிக்கல்.. அவள் கூறுகின்றாள். 

‘சத்தம் போடாமல் விளையாடுவம்’ இருவருக்குமிடையில் இருந்த தேவி கூறுகின்றாள். 

தேவி, ஐந்தாவது கடைசிக்கு மூத்தவள். 

சத்தம் போடாமல் சோறு சமைத்து விளையாடுவதென்ற முடிவுக்கு வருகின்றனர். 

‘தேவி, நீ போய் சிரட்டை பொறுக்கிக் கொண்டு வா. நாங்கள் கல்லுப் பொறுக்கிக் கொண்டு வாறம்’ மலர் கூறுகின்றாள். 

சில நிமிடங்களில் சிரட்டைகளும், கற்களும், இன்னும் சில பொருட்களும் வந்து சேருகின்றன. 

இனி, விளையாட்டுக்கான கதாபாத்திரங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். 

‘நான் அம்மாவாக வாறன்’ ஒரு குடும்பத்தில் மிகப் பொறுப்பான ‘தாய்’ என்ற பதவியைத் தான் ஏற்றுக் கொள்வதாக வாய்விட்டுக் கூறுகின்றாள் மலர். 

பதவி பற்றிப் புரியாத வயது. இருந்தாலும் முக்கிய பதவியை வசிக்க வேண்டுமென்ற ஆசை. 

அவளது ஆசையைத் தேவியும் கிளியும் ஏற்றுக் கொள்கின்றனர். 

‘அப்ப நாங்கள்’ தங்களின் பாத்திரங்களைத் தீர்மானித்துக் கொள்ளாத தேவியும், கிளியும் கேட்கின்றனர். 

‘நீங்கள் இரண்டு பேரும் என்ரை புள்ளையள்’ 

‘சரி…’ 

விளையாட்டுக்குரிய பொருட்கள் சேர்க்கப்பட்டு, விளையாட்டுக்குரிய பாத்திரங்களும் தெரிவு செய்யப்பட்டு விட்டன. இனி அடுத்தது விளையாட்டு. 

‘எடி தேவி, சூரியன் உச்சிக்கு வந்திட்டிது குந்திக் கொண்டிருக்கிறாய் போய் உலையை வையன்’ தாய்ப் பாத்திரம் ஏற்ற மலர் தாயாகிக் கூறுகின்றாள். 

‘உலையை வெச்சு என்ன செய்யிறது. அரிசி கிடக்கே…’ 

மகளான தேவி கேட்கின்றாள். 

‘ஏனடி அரிசி கொஞ்சமும் இல்லையே? 

‘எங்காலை அரிசி? 

தாங்கள் இருப்பது தேமா மரத்தடி என்பதை முற்றாக மறந்து, பாத்திரங்களோடு இரண்டறக் கலந்து விட்ட நிலை. ‘குழந்தைகள் ஒட்டுத்தாள்கள்’ என்பார்கள். அவர்களின் பார்வைக்கு எவைகள் படுகின்றனவோ அவைகளையே அவர்களும் பின்பற்றுவார்கள் என்ற தத்துவத்தை அடியொற்றி …… 

இந்த விளையாட்டு, அவர்களது குடும்ப நிகழ்வுகளா? 

செரி மரத்தடியிலிருந்த இராமநாதன் இவர்களின் விளையாட்டை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார். 

விளையாட்டுத் தொடர்கின்றது ‘இனி ஓடிப்போய் கடையிலை அரைக் கொத்து அரிசி வாங்கிக் கொண்டு வா’ மலர் கூறுகின்றாள். 

‘நான் மாட்டன்’ 

‘ஏன்?’

‘நேத்துக் கடையிலை பேசினவை’ 

‘என்னண்டு’ 

‘கடன் முட்டிப் போச்சாம் எனிமேல் கடனுக்கு வரவேண்டாம எண்டு சொன்னவை’ 

‘பின்னேரம் தாறனெண்டு சொல்லு’ 

‘மாட்டனெண்டு சொல்லாமைப் போட்டுவா கிளி’ 

‘அப்ப என்னடி செய்யிறது. மிசின்பெட்டி வாற நேரமாகிது. மிசின் பெட்டி காலமையும் சாப்பிடயில்லை. வெறு வயித்தோடைதான் போனது’ மலர் எரிந்து விழுகின்றாள். 

குழந்தைகள் ஒட்டுத்தாள்கள். குடும்ப நிகழ்வுகள்?! 

இவர்களின் விளையாட்டை அவதானித்துக் கொண்டிருந்த இராமநாதனால் அந்த ‘மிசின் பொட்டி’ என்றதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

விளையாட்டு நிகழ்கின்றது. ‘எடி தேவி நீ போட்டு வாறியா’ 

‘நான் போறன், அப்பிடியெண்டால் ஒண்டு நீ செய்வியா?’ 

‘என்ன…’ 

‘நீ உப்பிடித்தான் சொல்லுவாய், பிறகு கஞ்சி வடிச்ச உடனை எல்லாருக்கும் குடுப்பாய்’ 

‘இல்லை நான் குடுக்கமாட்டன்’ 

தேவி எழுந்து செல்கிறாள். 

‘மிசின் பொட்டி வந்திடப் போகுது கிளி, நீ ஓடிப்போய் முருக்கமிலை புடுங்கிக் கொண்டு ஓடிவா’ 

திரும்பவும் அதே ‘மிசின் பொட்டி’ என்ற சொல்லு இராமநாதனால் புரிய முடியவில்லை. 

‘ஒவ்வொரு நாளும் முருக்கமிலையே தின்னிறது’ 

‘எடி போட்டுவாடி மிசின் பொட்டி வெரப்போகுது’ 

சோறுகறி சமைத்து விளையாடுவதற்கும் மிசின் பொட்டிக்கும் என்ன சம்பந்தம்? இராமநாதன் தீவிரமாகச் சிந்திக்கின்றார். இடையில் குறுக்கிட்டு அவர்களது விளையாட்டைக் குழப்பிக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. 

அந்தக் குழந்தைகள் மேலுள்ள பற்றுதலாலல்ல. அவர்களது நடிப்பிலுள்ள உணர்ச்சி வெளிப்பாட்டால் ஏற்பட்ட கவர்ச்சி ஒரு நடிக மேதையால் கூட பயிற்றுவித்து விட முடியாத நடிப்பு. 

மீன் குஞ்சின் நீச்சல்! அதிலுள்ள லாவகம் இவைகளை யாருமே கற்பித்ததில்லை. மீன் குஞ்சின் பிறப்பு நீருக்குள். இவர்களின் பிறப்பு வறுமைக்குள் இவர்களின் நாடித் துடிப்பின் ஓசை கூட, ‘வறுமை, வறுமை’ என்று தான் கேட்குமாம். 

இவைகளை இராமநாதனால் புரிந்து கொள்ள முடியுமா? ‘மிசின் பொட்டி’ இதுதான் அவரது பிரச்சினை! 

‘மலர்’ விளையாட்டைக் குழப்பக் கூடாதென்று அவர் எண்ணினாலும் அவரால் பொறுக்கவே முடியவில்லை. மலரை அழைக்கின்றனர். 

‘ஐயா…’ விளையாட்டிலிருந்து விடுபட்ட மலர் எழுந்து வருகின்றாள். 

‘என்னடி அது, மிசின் பொட்டி’ 

‘அம்மா அப்பிடித்தான் சொல்லுறவ’ 

‘ஏனடி சொல்லுறவ?’ 

‘ஏனெண்டு எனக்குத் தெரியாது’ தாய் கெங்கையம்மா அடிக்கடி கூறுவதை மலரும் கிளிப்பிள்ளை போல் கூறி விட்டாள். 

காரணம் தெரியாது. 

குழந்தைகள் ஓட்டுத்தாள்கள் 

‘சரி போ…’ 

மலர் திரும்பவும் தேமாமரத்தடிக்கு வருகின்றாள். விளையாட்டுத் தொடர்கிறது. கடைக்குப் போவது போல் சென்றுப் தேவி வருகின்றாள். 

‘என்னவாமடி’ 

‘இதுதான் கடைசி முறையாம்’ 

முருக்கமிலை பிடுங்கப் போன கிளியும் வருகின்றாள். 

‘தேவி, நெருப்புப் பெட்டி எங்கை’ 

‘அது ராத்திரி முடிஞ்சு போச்சு’ 

‘அப்ப ஒரு பொச்சுமட்டை கொண்டு போய் உங்காலை கொஞ்சம் நெருப்புத்தணல் வாங்கி வாறியா’ 

‘நான் மாட்டன்’ 

‘ஏனடி…..’ 

‘நெருப்புத் தணலுக்கு வழியில்லாத மூதேசியள்’ எண்டு அண்டைக்குப் பேசினவை. 

‘நான் போட்டுவாறன்…’ மலர் எழும்பிப் போகின்றாள். 

‘போறா… பேச்சு வாங்கப் போறா…’ 

;பேசினாப் பேசட்டன்’ இதென்ன புதிசா’ சிறிது தூரம் சென்றவள். ஒரு பொச்சுமட்டையை கையில் கொண்டு வருகின்றாள். அது இரவல் நெருப்பு 

கற்களை அடுப்பாக்கி சிரட்டைகளைச் சட்டிபானையாக்கி மணலை அரிசியாக்கி, முருக்கமிலையைக் கறியாக்கி, வெறும் பொச்சு மட்டையை நெருப்பாக்கி சமையல் நடக்கின்றது. 

‘மலர், எங்கடை வயித்துக்குள்ளை அடுப்பிருக்கா?” விளையாட்டு நிலையிலிருந்து விடுபட்ட தேவி மலரிடம் இப்படிக் கேக்கின்றாள். அவளுக்கு இப்படியொரு சந்தேகம். 

‘ஏனடி…?’ 

நெருப்புச் சுட்டு எரியிறது போலை என்ரை வயித்துக்கள்ளே அடிக்கடி எரியிது. 

‘அது பசி நெருப்பு’ என்று சொல்லிவிட மலருக்குத் தெரியவில்லை. அவள் சிரிக்கின்றாள். 

‘இண்டைக்குக் கஞ்சி முழுக்க எனக்குக் தரவேணும்’ கடைக்குப் போகும் போது ஏற்படுத்திக் கொண்ட கஞ்சி ஒப்பந்தத்தைத் தேவி நினைவு படுத்துகின்றாள். 

‘கஞ்சி எல்லாத்தையும் நீ குடிச்சால் மற்றவை என்ன செய்யிறது’ மலர் கஞ்சி ஒப்பந்தத்தை மீறுகின்றாள். 

‘உப்பிடியெண்டால் எனக்கு இண்டைக்கு ஒண்டும் வேண்டாம்’ 

‘மிசின்பொட்டி வெரட்டும் ‘ரொபிக்குக் காசு தாறன்…’ கஞ்சியை நிராகரித்த மலர். இப்போது தேவியைச் சமாளிப்பற்காக புதிதாக ஒரு ‘ரொபி ஒப்பந்தத்தை’ ஏற்படுத்திக் கொள்ளகின்றாள். 

தேவிக்கு மிகத் திருப்தி. 

மிசின் பொட்டி வெரட்டுந் தாறன்’ என்று மலர் தேவிக்குக் கூறியதும். இராமநாதன் மனம் திரும்பவும் கிண்டப்படுகின்றது. இப்பிரச்சினைகளை மௌனத்தால் வெல்லுகின்ற அந்த அனுபவ முதிர்ச்சி அவர் மௌனமாகவே இருக்கின்றார். 

சுமையல் முடிகின்றது. 

‘வாருங்கோ சாப்பிடுவம்’ 

மூவரும் அமர்க்கின்றனர். மூவருக்கும் மூன்று இலைகள் வைக்கப்பட்டு சிரட்டைக்குள் இருந்த மணலைச் சோறு போல் சிரட்டைகக்குள் பங்கிடுகின்றாள் மலர். கறியும் பங்கிடப்படுகின்றது. 

புறம்பான இன்னொரு இலையிலும் சோறுகறி வைக்கப்பட்டு அதைச் சிரட்டையால் மூடுகின்றாள் மலர் 

‘எல்லாருக்கும் சரியாகப் பங்கிட்டுருக்கு பிறகு கேக்கக்குடாது’ 

‘அப்ப கஞ்சி ஆருக்கு’ 

‘அது இரவைக்கு’ 

‘புறம்பாக ஆருக்கு வெச்சனி’ 

‘அது மிசின் பொட்டிக்கு’ 

‘அதிலை கொஞ்சம் தாவன்’. 

‘மிசின் பொட்டி பாவம். காலமையும் வெறுங்குடலோடை போனது’. 

விளையாட்டு முடிகின்றது. 

‘மலர்’ இராமநாதன் திரும்பவும் அழைக்கின்றார். 

‘ஐயா.. ‘

‘கெங்கையம்மாவை வெரச் சொல்லு’ 

மலர் தாயைக் கூப்பிடப் போகின்றாள். தேவியும், கிளியும் விபரம் புரியாமல் பயந்து போய் நிற்கின்றனர். 

கெங்கையம்மா வருகின்றாள். ‘ஐயா கூப்பிட்டீங்களா’ 

‘ஓம். இஞ்சாலை வா…!’

‘சொல்லுங்க..’ 

‘மிசின் பொட்டி யெண்டால் என்ன?’ அவர் தனது சந்தேகத்தை நேரடியாகவே கேட்கின்றார். 

கேங்கையம்மா சீலைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டு சிரிக்கின்றாள். 

‘என்னடி சிரிக்கிறாய்’ 

‘நான் அப்பிடித்தான் சொல்லுறனான்’ 

‘என்னத்தைச் சொல்லுறனி’ 

‘என்ரை புருஷனை’ புருஷனை மனைவி மிசின் பெட்டி என்றா கூறுவாள் இராமநாதனின் முகத்தில் ஆச்சரியம் கலந்த கேள்விக் குறி. 

‘ஏன் அப்பிடிச் சொல்லுறனி’. 

‘என்னைப் போலை அவரும் ஒரு முதலாளி ஐயாவின் பங்களாவிலை தான் வேலை செய்யிறார். அந்த முதலாளி ஐயா இவரை மிசின் பெட்டி என்று தானாம் கூப்பிடுவார். ஆதைத்தான் நானும் சொல்லுறனான்’. 

‘அந்த முதலாளி ஐயா ஏன் அப்பிடிச் சொல்லுற’ 

‘மிசின் இயக்கி விட்டால் நிப்பாட்ற வரையில் வேலை செய்யும். அது போலை செய்வாராம். ஆதனாலைத்தான்’ 

அவளால் இப்போது சிரிக்க முடியவில்லை. முகத்தில் வேதனைக் கோடுகள். 

தொழிலாளி ஒரு மனித யந்திரம். அந்தத் தொழிலாளி யந்திரம் இறுதி மூலச்சுவரை உழைத்துக் கொண்டெ இருக்கும் ஆனால் அந்த உழைப்பின் ஊதியங்கள் என்றுமே அவனை சேர்வதில்லை. 

இரும்பாலான இயந்திரங்கள் புதுப்பிக்கப்படுவதன் மூலம் தங்களின் உழைப்பின் ஒரு பகுதியையாவது பெற்றுக் கொள்கின்றன! 

‘மிசின் பொட்டி’ 

உலகை வியாபகமான இந்த நிகழ்வுளை கெங்கையம்மா புரியாதளவளாய் பேசுகின்றாள். 

இராமநாதன்…? அவர் குனிந்த தலை நிமிரவில்லை. 

– மல்லிகை, மாசி 1982.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *