மார்க்கெட் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 258 
 
 

சூரியன் மதிய உச்சியில் எரிந்து கொண்டிருந்தது. அட்டாளைச்சேனை மார்க்கெட்டின் கூச்சலும் கூட்டமும் பெருங்கடல் அலைகளைப் போல ஒலித்தன. 

வியாபாரிகளின் கூவல்கள், வண்டிகளின் ஓசைகள், கூடைகளில் காய்கறிகளை அடுக்கும் சத்தம், இதற்கு நடுவே ஓய்வு பெற்ற இளையம்மா டீச்சர். கையில் ஒரு பெரிய பை வைத்துக்கொண்டு, தன் பழக்கமான நடையில் கடைக்கு முன்னால் நின்றார்.

“தம்பி, கொச்சிக்கா ஒரு கிலோ, தக்காளி ஒரு கிலோ போடு!” என்று டீச்சர் சொன்னார். அவள் குரலில் ஒரு கலகலப்பு இருந்தாலும், கண்களில் ஒரு கூர்மையான பேரம் பேசும் பாவனை தெரிந்தது. 

தம்பி மணி, கடையில் அமர்ந்து, வேகமாக காய்கறிகளை எடைபோட்டு ஒரு பையில் அடுக்கினான். “இந்தாங்கோ அக்கா, மொத்தம் 450 ரூபா!” என்று சொன்னான். டீச்சரின் முகம் சற்றே சுருங்கியது. “என்ன தம்பி இது? எங்க வீட்டு பக்கத்து கடையில ரெண்டுக்கும் சேர்த்து 300 தான். இது அநியாய விலையா இருக்கே!” என்று கேட்டாள். 

அவள் குரலில் ஒரு உணர்ச்சி பொங்கியது நியாயத்திற்காக பேசும் ஒரு தாயின் கோபம், ஆனால் அதில் ஒரு சின்ன சிரிப்பும் மறைந்திருந்தது.

மணி, சற்று எரிச்சலுடன், “அப்படின்னா அங்கயே போய் வாங்கிக்கோங்க, இங்க ஏன் வாரீங்க? வியாபார டைம்ல தொந்தரவு பண்ணாம போங்க!” என்று பதிலளித்தான். அவன் கண்களில் குறும்பு மின்னியது. 

டீச்சர் சிரித்துக்கொண்டே, “தம்பி, நான் சும்மா இங்க வரல. கோழி ஒரு கிலோ வாங்க வந்தேன். இதையும் போட்டுட்டு போவோம் னுதான் வந்தேன்!” என்று சொன்னாள். 

இது மார்க்கெட் தந்திரம். ஒரு பொருள் வாங்க வந்தவர், இன்னொரு பொருளையும் பார்த்து, ஆசைப்பட்டு வாங்குவது. 

மணி இப்போது சிரித்தான். “அதான் மார்க்கெட், அக்கா! கோழி, மாடு, ஆடு, மீன்,  கருவாடு எல்லாம் இங்க இருக்கு. விலை முன்ன பின்ன மாறும், அப்படித்தான்!” என்று சொல்லி, ஒரு கணக்கு போட்டு, “சரி, ரெண்டுக்கும் கிலோ போட்டு  250 தாங்க, இந்தாங்கோ!” என்று பையை நீட்டினான். டீச்சர் பையை வாங்கிக்கொண்டு, “இதென்ன கணக்கு, தம்பி?” என்று கேட்டாள்.

மணி மறுபடியும் சிரித்து, “அதான் கணக்கு!” என்று சொல்லிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரைப் பார்க்க திரும்பினான்.அப்போது, ஒரு நடுத்தர வயது மனிதர், வேகவேகமாக வந்து, “தம்பே, இந்தா,  கிலோ தக்காளி, கொச்சிக்கா, சீக்கிரம்!” என்று கத்தினார். மணி வேகமாக எடைபோட்டு, “இந்தாங்கோ, 250 தாங்க!” என்று சொன்னான். அந்த மனிதர் ஒரு வார்த்தையும் கேட்காமல், பணத்தைக் கொடுத்துவிட்டு பையை வாங்கிக்கொண்டு ஓடினார்.

டீச்சர், இதைப் பார்த்து, “பாத்தியா, தம்பி! இப்ப 50 ரூபா மேலதிகமா வச்சு வித்துட்டயே!” என்று சொன்னாள். மணி சிரித்துக்கொண்டே, “அக்கா, அந்தாளு எதுவும் கேட்கல. வாங்கிட்டு போறாரு. நீங்க இவ்வளவு நேரம் கதைச்சிட்டு நின்னது,  ஏன்னா உங்களுக்கு நேரம் இருக்கு. ஆனா, இங்க யாரும் நியாயம் கேட்க மாட்டாங்க. ஏன்னா, அவசரம், அவசரம்!” என்று சொன்னான்.

டீச்சர் சிரித்துவிட்டு, “தாடா வேக்க! நிண்டா கால் கிலோ 250 என்பாய்!” என்று கிண்டலாகச் சொல்லி, பையைத் தூக்கிக்கொண்டு நடந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *