மாப்பிள்ளை வந்தார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 6,909 
 
 

வீட்டின் முன்பு நின்று பார்த்தான் கோபால். பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போனது.

கோபாலுக்கு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் வேலை. அதற்காக 400 மைல் தொலைவில் உள்ள சென்னைக்கு வந்தான். பணியில் சேர்ந்த இரண்டொரு நாட்கள் அலுவலக ஓய்வு அறையில் தங்கிக்கொண்டான். உடனடியாக தங்குவதற்கு ஓரு வீடு பார்த்தாக வேண்டிய கட்டாயம். அலுவலக சிப்பந்தி அழைத்து வந்த புரோக்கர் மூலம் இந்த வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு, வீடு பார்க்க வந்தான்!

“சார்..” வாசலில் நின்றபடி குரல் கொடுத்தான்.

“யாரு?” வீட்டுக்காரர் வெளியே வந்தார்.

“சார்.. நீங்கதான் மிஸ்டர் வேலாயுதமா?”

“ம்.. ஆமாம்!”

“சார்.. வணக்கம் சார். என் பேர் கோபால். புரோக்கர் சொன்னார்!”

“அப்படியா.. சொந்த ஊர்?”

“மாயவரம் சார்!”

“அப்படியா.. ரொம்ப சந்தோஷம். வாங்க.. உள்ள வாங்க! வள்ளியம்மா.. இங்கே வா. நம்ம மாயவரத்து மாப்ள வந்திருக்கார்!”

கோபாலுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“உள்ளே வாங்க.. அப்பா, அம்மா யாருமே வர்லியா? நீங்க வர்றீங்கன்னு போன் வரும்னு சொன்னார் புரோக்கர்! உக்காருங்க. வள்ளி.. காபி கொண்டா!”

“சார்.. மன்னிக்கணும். நீங்க தப்பா…”

“நோ.. நோ.. நாங்க தப்பாவே எடுத்துக்கல. எப்படியிருந்தாலும் எங்க வீட்டுக்கு நீங்க தானே மாப்ள! மிச்சத்த அப்பா கிட்ட பேசிக்கறோம். நீங்க வந்த நேரம் எங்க பொண்ணு இங்க இல்ல. ஊருக்கு போயிருக்கா!”

கொடுத்த காபியை மரியாதை நிமித்தமாய் குடித்து விட்டு “வரேன் சார்.. நான் தப்பு பண்ணிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான் கோபால்!

“அடடே… மாப்ள ரொம்பவும் வருத்தப்பட்டுக் கிட்டே போயிட்டாரே.. இந்த நேரம் பார்த்துதானா… இந்த பொண்ணு ஊருக்கு போகணும்!”

தங்களுக்குள் நொந்து கொண்டனர்.

கோபால் இங்கு நடந்ததை போனில் மாயவரத்திலுள்ள அவனது அப்பாவிற்குச் சொன்னான்!

உடனே கோபாலின் தந்தை பெண்ணின் தகப்பனாரிடம் போனில் பேசினார்.

“சார்.. உங்க வீட்டுக்கு வந்தது எம் பையன் தான். நாம ஏற்கனவே பேசினது, ஜாதகம் பார்த்தது எதுவும் பையன்கிட்ட சொல்லல. பொண்ணு பார்க்க வர்ற போது சொல்லலாம்னு இருந்தேன். அவன் உங்க வீட்டுக்கு வந்தது. உங்க வீட்ல ஒரு போர்ஷன் வாடகைக்கு இருக்குன்னு அங்க புரோக்கர் சொன்னதால! பரவாயில்ல… அதுவும் நல்லதாப் போயிட்டது. பையன பார்த்துட்டீங்க. வர்ற வியாழக்கிழமை நல்ல நாளு.. பையனை கூட்டிக்கிட்டு வரலாமா..?”

“என்ன சார்.. இப்படி கேட்டுட்டீங்க. பையன தப்பு.. தப்பு. மாப்ளய எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிப் போச்சி. நீங்க வர்ற நேரத்த மட்டும் சொல்லுங்க!”

வாடகைக்கு வீடு பார்க்க வந்தவன்… அந்த வீட்டுக்கே மாப்பிள்ளையாகி விட்டான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *