மண்ணின் முனகல்…!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 367 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வன்னியிலை கஷ்டப்படுகிற சனங்களுக்கு உதவுறதுக்காக வீடு வீடாய் நிதி சேகரிக்கினம்’ கேற்றைத்திறந்து உள்ளே வந்த சத்திய தகப்பன் கிருஷ்ணானந்தனைப் பார்த்துக் கூறுகின்றான். 

தேன்கூடு கலைந்தது போல், வலிகாமம் காலைந்து… தங்கள் உயிர்ப்பூச்சியைக் காப்பாற்றிக் கொள்ள கால் போன போக்கில் ஓடியவர்களில் வன்னிவரை சென்றவர்கள் ஏராளம்… இப்போது அவர்களால் வாழவும் முடியவில்லை. திரும்பி வரவும் முடியவில்லை. 

மகனால் கூறப்பட்ட செய்தியை உள்வாங்கிய கிருஷ்ணானந்தன், தலையை நிமிர்த்தி, பார்வையைக் கூர்மைப்படுத்தி, சத்தியனைப் பார்க்கிறார். காசு சேர்ப்பவர்கள் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது வெளி இடத்திலிருந்து வந்தவர்களா?…” கிருஷ்ணானந்தனின் பார்வையில் கருத்தரித்திருந்த கேள்வியை சத்தியன் புரிந்து கொள்கிறான். 

“எல்லாம் புது ஆக்கள்… தெரிஞ்சவை ஒருதரும் இல்லை…”, சத்தியன், தான் புரிந்து கொண்ட கேள்விக்கப் பதிலைக் கூறிக் முடிக்கிறான். 

கிருஷ்ணானந்தன் மௌனமாகவே இருக்கிறார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை: லீவு நாள்… காலை பத்து மணியிருக்கும், வெளியில் சென்று வந்த அவர், சேட் தெறிகளைக் கழற்றி விட்டு… வலது காலை மடித்து இடது காலைப் படிக்கட்டில் பதித்த படி வீட்டு விறாந்தையில் அமர்ந்திருக்கிறார். 

தகப்பன் ஏதாவது கூறுவாரென எதிர்பார்த்து சத்தியன் சில நிமிடங்கள் நின்றான். தகப்பன் வேறு சிந்தயிைல் மூழ்கியிருக்கிறார் என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடிகின்றதே தவிர சிந்தனைக்கான பிரச்சினையை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. தாய் யோகேஸ்வரி தூணோடு நிற்பதையும் அவன் அவதானிக்கின்றான். 

“மேசன் என்னவாம்…” புருஷனின் ‘வியர்வை பனித்திருக்கும் முகத்தையும், அந்த முகத்தில் இழையோடியிருக்கும் தெளிவற்ற உணர்வலைகளையும் அவதானித்த யோகேஸ்வரி கேட்கிறாள். 

“மேசனார் சொல்றதைப் பார்த்தால் இருக்கிற காசு போதாது போலை கிடக்கு…” 

“இப்ப எல்லாம் விலை தானே…” 

“உண்மைதான்…” 

“…அதுக்கு யோசிச்சு என்ன செய்யிறது… வேலையைத் துவங்கினால் எப்பிடியும் முடிக்கலாம்…” புருஷனின் ஆதங்கத்திற்கு ஆதரவு கொடுத்துப் பேசுகிறாள் யோகேஸ்வரி புருஷன் பிழையான பாதையில் செல்லமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்குண்டு. 

வலிகாம இடப்பெயர்வுக்குச் சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணானந்தனின் தந்தை இறந்து போனார். இறந்து போன தகப்பனின் நினைவாக ஒரு கல்லறை கட்ட வேண்டுமென்பது கிருஷ்ணானந்தனின் ஆசை. துகப்பன் காலமான சில மாதங்களில் அந்தக் கல்லறையைக்கட்டிவிட கிருஷ்ணானந்தன் முயற்சி எடுத்தர். அதற்குத் தேவையான பணமும் ஓரளவு அவரிடமிருந்தது. 

அதற்கிடையில்… ஆண்டவன் கூட நினைக்காத அந்தச் சம்பவம் நடந்து விட்டது…? 

மழை பெய்து நிலம் ஊறி… தப்புத் தண்ணியில் நிற்கும் மரவள்ளி மரத்தை நான்கு பக்கமும் அசைத்து இழுத்து நீர்க்குமிழிகள் வெடிக்க… சேற்று நீர்வடிய ஒரு கிழங்கும் பிசகாமல்… சின்னனும் பெரிதுமாய்… மரத்தோடு பிடுங்கி… வரட்பில் எறிந்தது போல்… வலிகாமத்தைப் பிடுங்கி தென்மராட்சியில் எறிந்த… அந்த வரலாற்றுப் பதிவான இடப்பெயர்வு நடந்து… 

கிருஷ்ணானந்தன் குடும்பமும் இடப்பெயர்ந்து கல்லறை கட்டத்தேடிய காசும் கரைந்து விட்டது! 

இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த பின்னர்… ஏறத்தாழ ஆறு மாதங்கள்… அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்த மக்கள்… ஞானத்தைப் பெற்றார்களோ இல்லையோ… வெய்யில் காலத்தில் அடிமரத்தை நோக்கி கொடிவிட்டு நிகர்கின்ற மயிர்க்கொட்டிகள் போல் வலிகாமத்து மக்கள், வலிகாமத்தை நோக்கி கொடி விட்டு வந்தனர்…! 

கிருஷ்ணானந்தன் குடும்பமும் சொந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கல்லறை கட்ட வைத்திருந்த பணம் கரைந்ததே தவிர, கல்லறை கட்ட வேண்டும் என்ற எண்ணம் கரையவில்லை!… அந்த எண்ணம் இப்போது மரங்கொத்திக் குருவி போல் கிருஷ்ணானந்தன் ஒரு கல்லறை அமைக்க பகீரதப் பிரயத்தனம் செய்வது பலருக்குப் பரிகசிப்புக்குரிய செய்தியாகி விட்டாலும் கிருஷ்ணானந்தன் மனம் சோர்ந்து விடவில்லை! 

நம்மவர்களின் செல்லரித்த மனங்கள் பற்றியும், அதில் கருத்தரிக்கின்ற ‘முண்டங்கள்’ போன்ற சிந்தனைகள் பற்றியும் கிருஷ்ணானந்தன் நன்கு விளங்கி வைத்திருந்தார். 

விறாந்தைக்கும், கேற்றுக்குமிடையிலுள்ள சீமெந்து நிலத்தில் நின்ற சத்தியன், கேற்றைடிக்கு வந்து வீதியை எட்டிப் பார்க்கின்றான்… வன்னி மக்களுக்காக நிதி சேகரிப்பவர்களைத் தான் அவன் பார்க்கிறான். 

”வருகினமே…” 

இதுவரை மௌனமாக இருந்து நடப்பவைகளை அவதானித்த கிருஷ்ணானந்தனின் இரண்டாவது மகன் செந்தூரன் கேட்கிறான். 

“கிட்ட வந்திட்டினம்… இன்னும் கொஞ்ச நேரத்திலை இஞ்சை வருவினம்…” 

இவர்களின் பேச்சைக் கிருஷ்ணானந்தன் அவதானிக்காம லிலை… கிருஷ்ணானந்தன் மிகவும் இரக்க சிந்தனையுள்ளவர்… ஆனால், இப்போது அவரது சிந்தனை… தகப்பனின் கல்லறையில் நங்கூரமிட்டு நிற்கின்றது! 

“அம்மா…நிதி சேகரிக்கிறவை வந்தாப் பிறகு ஓடுப்பட்டு… பிரச்சினைப்படுத்தாமல்… என்ன செய்யிறதெண்டு யோசிச்சு வையுங்கோ…” செந்தூரன் பட்டும் படாமலும், அர்த்த புஷ்டியாகக் கதைக்கின்றான். 

“…என்னட்டைக் காசில்லை… கல்லறை கட்டிற காசிலை எந்தக் காரணங்கொண்டும் கைவைக்கேலாது…” கிருஷ்ணானந்தன் தன் மனதிலுள்ளதை அப்படியே கூறுகின்றார். 

“வீடு தேடி வாறவைக்கு இல்லையெண்டு சொல்றது சரியாய் இருக்குமா…” யோகேஸ்வரி தன் கருத்தை வெளிப்படுத்துகின்றாள். 

மௌனமாக இருந்த கிருஷ்ணானந்தன் திரும்பி யோகேஸ்வரியைப் பார்க்கின்றார்… அவரது பார்வையில் ஆழமான நீரோட்டத்தின் அமைதியான அசைவு பளிச்சிடுகின்றது… உதடுகள் பிரியாத நிலையில் அடக்கமான சிரிப்பு! 

“யோகேஸ் நீர் கெளரவத்தை யோசிக்கிறீர்… நான் மனிதாபிமானத்தை யோசிக்கிறன்… வன்னியிலை குடல் கருகிச் சாகிறதும் எங்கடை சகோதரங்கள்… குடல் கருகிச் சாகிற சனங்களுக்காக வீடு வீடாய் நிதி சேகரிக்கிறவையும் எங்கடை சகோதரங்கள் தான்… எங்களாலை முடிஞ்சதை நிச்சயமாகச் செய்யத்தான் வேணும்… கல்லறை கட்டிற காசிருக்கு…” இப்படிக் கூறிய கிருஷ்ணானந்தன்… கேள்விக்குறியோடு யோகேஸ்வரியைப் பார்க்கின்றார்… 

வயிறு சுருங்கி உயிர்க்குருத்துக் கருகுகின்ற வன்னி மக்கள் ஒருபுறம்… தன்னையும் தனது சகோதரங்களையும் வளர்த்து ஆளக்கிய தந்தையின் நினைவு மறுபுறம்… மனத்துலாபாரம் தாண்டுமிதக்கின்றது!… 

“வன்னி மக்களுக்கான நீதி எப்படியோ சேகரிக்கப்படும்… ஆனால் எனது தகப்பனின் கல்லறையை நான் தான் கட்ட வேணும்… 

…கல்லறை கட்டிற காசிலை எடுக்க வேண்டாம்…” கிருஷ்ணானந்தன் கூறிவிட்டு மௌனமாக இருக்கின்றார். 

“என்னம்மா வீடு தேடி வாறாக்களை ஒண்டுமில்லையெண்டு திரும்பி விடப் போறியளே…” சத்தியன் மன எரிச்சலுடன் தாயிடம் கேட்கிறான். 

“சத்தியன்… பக்கத்து வீட்டு தர்மலிங்கத்தாரிட்டை நான் சொன்னதெண்டு நூறு ரூபா காசு வாங்கிக் கொண்டு வா… சில நிமிடங்கள் சிந்தித்த கிருஷ்ணானந்தன் இப்படியொரு முடிவுக்கு வருகிறார். 

“தர்மலிங்கத்தார் இப்பத்தான் காசு கேட்ட உடனே பஞ்சம் கொட்டுவார்…”சத்தியன் வெறுப்போடு கூறுகிறான். போவதா விடுவதா என்ற கேள்விக்குறியோடு தகப்பனைப் பார்க்கின்றான்! 

கிருஷ்ணானந்தன் 

பொதுநிறம், உயர்ந்த தடித்த கம்பீரமான தோற்றம், அடர்த்தியான கட்டையான தலைமயிர் அழகான சிறிய நெற்றி… கூர்மையான பார்வை இடாம்பீகமில்லாத தூய்மையான உடுப்பு, அவசரமில்லாத அமைதியான போக்கு! 

திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான பின்… படித்துப் பட்டம் பெற்ற தன்னம்பிக்கை மிகுந்த மனிதன். 

பொறுப்பான பதவி முக்கியமான வியாபார நிலையங்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்கின்ற கேந்திர ஸ்தாபனத்தின் ‘மனோஜர்’ இராணுவக் கட்டுப்பாடு போக்குவரத்துப் பிரச்சினை என்ற காரணங்களை உச்சாடனம் செய்து… பிற்கதவால் பேரம் பேசுகின்ற ‘யோக்கியவான்களைக் கட்டி அவிழ்க்கின்ற பெரும் பொறுப்பு! 

தினசரி பல இலட்சங்கள் வந்து போகும், ஆனால் கிருஷ்ணானந்தனோ… தனது இலட்சியத்திலிருந்து பிசகவில்லை! 

நேர்மை… கிருஷ்ணானந்தனின் பலமும் அதுதான்… பலவீனமும் அதுதான்! கிருஷ்ணானந்தன் வாழத் தெரியாதவன் இப்படித்தான் பேசிக் கொள்கின்றனர். 

மௌனமாக இருந்த கிருஷ்ணானந்தன் திரும்பி மகனைப் பார்க்கிறார்… சத்தியன் இன்னமும் அப்படியே நிற்கிறான். அவரின் மனத்துள் சிந்தனைகள் முரல் மீனாயக் குத்துகின்றன…! 

“யோகேஸ்… கல்லறை கட்டிற காசிலை ஒரு நூறு ரூபா எடுத்துக்குடும்…” கிருஷ்ணானந்தன் தனது முடிவில் சிறு மாற்றத்தைச் செய்கின்றார். 

“யோகேஸ்… எங்களுக்குரிய நியாயத்தை நாங்கள், எங்களுக்குள்ளை தான் தேடவேணுமே தவிர… முன்பின் அறிமுகமில்லாத மனிசரின்ரை இதயத்துக்குள்ளை தேடக்கூடாது… உதவி செய்யிறது தொகையைப் பொறுத்தல்ல, மனதைப் பொறுத்தது… நூறு ரூபா குடுக்கலாம்…” ஆழமான கடலில் அமைதியாகப் புரள்கின்ற கடலலை போல் கிருணானந்தனின் உதடுகளில் வார்தைகள் புரள்கின்றன! 

கிருஷ்ணானந்தனிடமிருந்து இப்படியான தத்துவார்த்தப் போச்சுக்களைக் கேட்பது யோகேஸ்வரிக்குப் புதிய அனுபவமல்ல! 

“அம்மா… நிதி சேகரிக்கிறவை தர்மலிங்கம் மாமா வீட்டைப் போகினம்…” கேற்றடியில் நின்ற சத்தியன் கூறுகிறான். 

தர்மலிங்கம். 

கிருஷ்ணானந்தன் வீட்டுக்கு வலது பக்கமாகவுள்ள அடுத்த வீட்டுக்காரர். புக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் கிருஷ்ணானந்தனின் பிள்ளைகள் அவரை ‘மாமா’ என்ற நெருக்கமான உறவு முறையில் அழைக்கின்றனர். 

கிருஷ்ணானந்தனுக்கு ‘மிகவம் பிடிக்காதவர்களில்’ தர்மலிங்கத்தார் முதன்மையானவர் என்பது அவரது மனைவி, பிள்ளைகளோடு, நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும். 

“ஐயா வணக்கம்…” 

“வணக்கம்… வாருங்கோ… என்ன விஷயம்…” தர்மலிங்கத்தாரின் வழமையான கரகரத்த குரல்… கிருஷ்ணானந்தன் விறாந்தையில் இருந்தபடி பேச்சை அவதானிக்கின்றார். 

“வன்னியிலை கஷ்டப்டுகிற சனங்களுக்கு நிதி சேகரிக்கிறம்… உங்களைப் போலை வசதியானவை தான் உதவி செய்யவேணும்…” 

“முருகா… நான் வசதியானவனா…” தர்மலிங்கத்தார் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கின்றார்: தர்மலிங்கத்தாரிடம் ஒரு: பழக்கமுண்டு. நன்மையோ தீமையோ முதலில் முருகனை அழைத்து விடுவார். அத்தோடு அடிக்கடி சாரத்தை உரிந்து ‘பணவண்டி’ யின் மேல் லாவகமாக உடுத்திக் கொள்வார். 

“ஏன் பாருங்கோ… வன்னியிலை வாழ்றவைக்குத் தானே நிறைய நிவாரணம் கிடைக்குது. பிறகென்ன கஷ்டம்…” 

“அதெல்லாம் வெறும் பேச்சு…” 

“முருகா… எங்கடை கஷ்டத்தை ஆரிட்டைச் சொல்லுறது…” தர்மலிங்கத்தாரை லட்சாதிபதியென்று நாக்குப் புரளாமல் கூறி விடலாம். ஆனால்… அவரது வாயில் என்றும் பஞ்சப் பேச்சுத்தான்! 

விறாந்தையில் இருந்த கிருஷ்ணானந்தன் எழுந்து வந்து வேலிக்கரையிலுள்ள சண்டி மரத்தோடு நின்று தர்மலிங்கத்தார் வீட்டில் நடப்பவைகளை அவதானிக்கின்றார். 

”ஓமோம்… நீங்கள் சொல்றது சரி… எங்களுக்குள்ள சந்தேகங்களையும் உங்களைப் போலை ஆக்களிட்டைத்தான் கேக்கவேணும்… இஞ்சை பாருங்கோ… வன்னியில் வாழ்ற வலிகாமத்துச் சனங்களுக்கு இப்பிடிக் கஷ்டங்கள் வரக் காரணமென்ன? உடுத்த உடுப்புகளோடை ஏன் ஓட வேண்டி வந்தது? சிங்கப்பூர் போல் இருந்த இடத்தை சுடுகாடாக்கினது ஆர்…? 

வந்தவர்கள் மௌனமாக நிற்கின்றனர். கிருஷ்ணானந்தன் இன்னமும் வேலிக்கரையிலேயே நிற்கிறார். 

“பத்து வரியத்துக்கு முன்னம்… பொழுதுபட்டு றயிலில் ஏறினால் விடியக் கொழும்புக்குப் போயிடலாம்… இப்ப… கொழும்புப் பயணத்தை யோசிச்சுப் பாருங்கோ… ஆராலை வந்தது..?… 

“ஐயா… நாங்கள் அரசியல் கதைக்க வரவில்லை… வன்னியிலை வாடிற சனங்களுக்கு அரை வயித்துக் கஞ்சிக்கு வழி செய்யுங்கோ எண்டு தான் கேக்க வந்தம்…” 

“ஓமோம்… நீங்கள் சொல்றதை நான் ஏற்றுக் கொள்ளுறன்… நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்கோ . நீங்கள் தான் கேக்க வேணும்… இந்த வீட்டைப் பாருங்கோ, என்ரை தாத்தா கட்டின வீடு… 

இதிலை என்ரை தகப்பனார் வாழந்து இப்ப நானும் பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் வாழ்றம்… இந்தக் கிராமத்திலை முதல் நாற்சார் வீடு கட்டினது என்ரை தாத்தாதான்…! 

இந்தக் கிராமத்திலை எங்கடை காலடிபடாத மண் துகழ் இருக்காது… அவ்வளவு உரிமை இந்த மண்ணிலை எங்களுக்கிருக்கு… அப்பிடிப்பட்ட நாங்கள் எல்லாத்தையும் விட்டிட்டு தென்மராட்சிக்கு ஓடினம்… இந்த மண்ணை விட்டு எங்களைக் கலைக்க எவனுக்கு அதிகாரமிருக்கு…” தர்மலிங்கத்தாரின் பேச்சில் கடுமைதொனிக்கின்றது. அவரது முகம் சுருங்கி விட்டது’ 

வந்தவர்கள் மௌனமாகவே நின்கின்றனர். கிருஷ்ணானந்தன் செவிப்பறையைக் கூர்மையாக்கி, அவதானமாகப் பேச்சுக்களைக் கேட்கின்றார்…! 

தர்மலிங்கத்தார் தொடர்கிறார்… 

“தம்பியவை… நீங்கள் ஆரெண்டு எனக்குத் தெரியாது… என்ரை உள்ளக்கொதிப்பு… அதைத்தான் சொல்றன்… 

றோட்டுகளெல்லாம் திருத்தப்பட்டு இப்பதான் றோட்டுக்களிலை நடமாடக்கூடியதாய் கிடக்கு… 

… பஸ் ஓடுது… 

… ‘கரண்ட்’ வந்திட்டிது… 

…ரெலிபோன் வந்திட்டிது… 

… இப்பதான் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறம்… இந்த மண்ணிலை வாழ்ந்தால் தான் எங்களுக்கு நிம்மதி… இது எங்கடை பூர்வீக மண்…” தர்மலிங்கத்தார் கோபத்துடனும், வேதனையுடனும் கூறுகின்றார்…! 

“ஐயா… நீங்கள் எங்களிட்டை எத்தனையோ கேள்வியள் கேட்டுப் போட்டியள்… எல்லாத்துக்கும், எங்களிட்டைப் பதிலிருக்கு… அதுக்கு முன்னாலை, நாங்கள் கேக்கிற ஒரேயொரு கேள்விக்குப் பதில் சொல்றீங்களா…” வந்தவர்களில் ஒருவர் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் கேட்கிறார். 

தர்மலிங்கத்தார் கண்களைக் கூசி கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார். 

ஒரே ஒரு கேள்வி…!…? 

கிருஷ்ணானந்தன் அந்தக் கேள்வியைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்… 

”கேளுங்கோ” 

வந்தவர் கேள்வியைப் கேட்கின்றார். 

”ஐயா… றோட்டுப் போட்டாச்சு… கரண்ட வந்திட்டிது… ரெலிபோன் வந்திட்டிது… கொம்பியூட்டர் வந்திட்டிது… 

…இது உங்கடை பூர்வீக மண்… இந்தக் கிராமத்திலை உங்கடை காலடிபடாத இடமிருக்காது… இப்ப உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை… அப்பிடித்தானே…? 

ஐயா… இதே மண்ணிலை ‘ஐடென்ரிக்காட்’ இல்லாமல் உங்களாலை சுதந்திரமாக நடமாட முடியுமா?…!” கிணற்றுக்குள் இருந்து பேசுபவரின் குரல் எதிரொலிப்பது போல் அந்தப் புதியவரின் பேச்சு எதிரொலிக்கின்றது…! 

“ஐடென்ரிக் காட் இல்லாமல்… சுதந்திரமாக நடமாட…” அந்தக் கேள்வி கிருஷ்ணானந்தனின் செவிப்பறையில் மோதி… இதயத்துள் அமிழ்கின்றது…! 

தர்மலிங்கத்தார் மெளனமாக நிற்கிறார். அவரது சேட்பையுள் ‘அல்பம்’ போல் பல ஐடென்ரிகாட்டுகள்… 

வேலிக்கரையில் நின்ற கிருஷ்ணானந்தன் திரும்பி யோகேஸ்வரியைப் பார்க்கிறார்… அவரது முகத்தில் பல சிந்தனைகளின் பேயாட்டம்! அவரது சிறிய நெற்றியில் வியர்வை பனித்து மினுங்குகின்றது… 

…குனிந்து இந்த மண்ணைப் பார்க்கின்றார்… விதம் விதமான ஐடென்ரிக்காட்டுகளின் நிழலுருவங்கள்… அதற்குமப்பால்… புதிய மனிதர்களின் பாதணிகளின் வட்டம் வட்டமான ஆழமான பதிவுகள்…? 

தர்மலிங்கத்தார் வீட்டில் இன்னும் மௌனம் கலையவில்லை! 

கிருஷ்ணானந்தன் கண்ணிமைக்காமல் இன்னும் இந்த மண்ணையே பார்க்கின்றார். 

…இந்த மண்ணின் முனகல் ஒலி கேட்பது போன்ற பிரமை…! 

“யோகேஸ்… அப்பாவுக்குக் கல்லறை கட்டி சேர்த்த காசை எடுத்து நிதி சேகரிக்க வாறவையிட்டைக் குடுத்துவிடும்…” கிருஷ்ணானந்தன் கூறுகிறார். அவரது பேச்சில் வேதனை கொப்பளிக்கின்றது! 

“கல்லறை வேண்டாமா” யோகேஸ்வரி அதிர்ந்து போய்விட்டாள். 

“இந்த மண்ணிலை அப்பாவுக்கு ஒரு கல்லறை தேவையில்லை..” கிருஷ்ணானந்தன் நிதானமாகவே கூறுகின்றார்! 

– தினக்குரல், 23.05.1999.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *