பொய்க்கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 157 
 
 

“இன்று என்ன விசேஷம் பாட்டி” என்று கேட்டபடியே பாட்டியைத் தேடி பூஜை அறைக்குள் வந்தான் பேரன் பாலன்.

அதற்குள் பூஜையறையில் நெய்விளக்கை தயார் செய்து கொண்டு இருந்த பாட்டி, முகத்தில் சிரிப்புடன், “வாடாப்பா! வாடா!” என்று அவனை வரவேற்றாள். ஒரு கணம் வேலையை நிறுத்தி, பாலனின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தாள்.

“இன்று சித்திரா பௌர்ணமி,” என்றாள் பாட்டி சற்றே உற்சாகத்துடன். “ஆபீஸ்ல, கடைகள்ல மாதமும், வருடமும் கணக்கு பார்த்து, பழையதை முடித்து, புதுசா ஆரம்பிக்கிறாங்க இல்ல? அதே மாதிரி நம்ம வாழ்க்கையில கூட நல்லதும், கெட்டதும் சூழ்ந்த ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறதே… அதை, நம் வாழ்க்கைக் கணக்கை சித்ரகுப்தன் ஆய்வு செய்யும் நாள்தான் இன்றைய நாள்” என்றாள்

“சித்ரகுப்தர்?” என பதைபதைத்து கேட்டான் பாலன்.

“ஆமாம் பா… எமதர்ம ராஜாவின் கணக்காளர். நாம் உயிர் துறந்த பிறகு, நம்ம பாவ புண்ணியங்களை எழுதிப் படிக்கிறவர்,” எனச் சிரித்தபடியே விளக்கமளித்தாள் பாட்டி.

அவர் தொடர்ந்து சொன்னாள்: “நம் ஒவ்வொருவருக்கான கணக்குப்புத்தகமும் அவரிடம் இருக்கும்.இன்றுதான் அவர் நம் ஒவ்வொருவரின் நல்ல செயல்களுக்கும் கெட்ட செயல்களுக்கும் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யும் நாள். அதற்கேற்றாற்போல பலன்களை கொடுப்பார்.

பாவம், புண்ணியம், இறப்புக்கு பின்னரான சொர்க்கம், நரகம், போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்நாளில் விரதமிருப்பார்கள். அதனால் இன்றைய நாள் பக்தியும், சிந்தனையும் மிகுந்த நாளா இருக்கணும். விரதம் இருந்து, கடவுளுக்குப் பூஜை செய்து, சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம் என நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்வோம். அதை மட்டுமே நாமும் சாப்பிட்டு, செய்த தவறுகளை நினைத்து மனதளவில் மன்னிப்புக் கேட்கணும்.”

பாலன் ஆர்வத்துடன் கேட்டான், “அவ்வளவுதான் பாட்டி? இல்ல வேற ஏதாவது செய்யணுமா?”

பாட்டி சற்றே மிதமான குரலில் சொன்னாள்: “இல்ல பா… இதோ பார், ஒரு பனைஓலை எடுத்து அதுல ‘சித்ரகுப்த பெருமானே! நான் கடுகளவு புண்ணியம் செய்து இருந்தால் அதை மலையளவு கணக்கில் எடுத்துக்கொள்; நான் மலையளவு பாவம் செய்து இருந்தால் அதை கடுகளவு கணக்கில் எடுத்துக்கொள். அதற்கேற்ப எனக்கு நல்ல பலன்களை கொடு” என்று எழுதி அதை இறைவனிடம் ஒரு கோரிக்கையாக வைத்து வேண்டிக்கொள்ளுவோம. இது நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே நடப்பது.” என்று விளக்கம் கூறினாள்.

அதைக் கேட்ட பாலன் சிரித்தான். விரதம், பூஜை, நைவேத்தியம் எல்லாம் சரிதான். ஆனால் இப்படியான ஒரு வேண்டுதல் சரியா பாட்டி? நியாயமா? என்றான்.

பாட்டி சற்று குழம்பியவாறே கேட்டாள்: “ஏன்பா? நாங்கள் எல்லோரும் ரொம்ப வருடங்களாக இப்படித்தான் செய்து வருகிறோம். அதில் தவறு எதுவும் இல்லையே?” என்றாள்.

பாலன் சற்றே சிந்தனையுடன் சொன்னான்: “பாட்டி …. கொஞ்சம் யோசிங்க. லஞ்சம் வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம். எல்லாம் தெரிந்த சித்ரகுப்தன் உங்கள் லஞ்சத்தை ஏற்றுக்கொள்வாரா? அதே போல பொய்க்கணக்கு எழுதுவதே தப்பு. அதையும் இறைவனையே செய்ய சொல்வது மகா தப்பு. செய்த பாவக்கணக்கை குறைத்து எழுத வேண்டும் என்று கேட்டு நீங்கள் செய்த எல்லாவற்றையும் தூக்கியடிக்கும் அளவில் இன்னுமொரு பெரிய பாவத்தை செய்கிறீர்களே? இது நியாயமா?”

“நீங்க இருக்கும் விரதம் புண்ணியக்கணக்கில் சேர்ந்தால், லஞ்சம்கொடுப்பது, பொய்க்கணக்கு எழுதக்கேட்பது இவையெல்லாம் பாவக்கணக்கில் மேலும் சேராதா?”

பாட்டி மெளனமானாள். பாலன் தொடர்ந்து சொன்னான்:

“நீங்கள் எழுதி வைத்த மாதிரி வேண்டாம் பாட்டி. அதற்குப் பதிலாக, ‘நான் எப்போதும் நல்லவைகளையே செய்ய ஆசைப்படும் மனசைக் கொடு. தவறு செய்யாத உறுதி கொடு’ என்று எழுதினால், அது தான் உண்மையான வேண்டுதல் அல்லவா?”

பாலனின் வார்த்தைகள் பாட்டியின் மனதில் எங்கோ ஆழமாகப் பதிந்தன. அவள் சில வினாடிகள் ஆழ்ந்த மெளனத்தில் மூழ்கி நின்றாள். முகத்தில் மெதுவாக ஒரு ஒளியோடு, தன் பேரனின் விழிப்புணர்வை ரசித்தாள்.

“சரிதான் பா… இனிமேல் நானும் அப்படித்தான் எழுதப்போறேன்,” என்றாள் பாட்டி. விழிகளில் பெருமிதக் கண்ணீர் நிரம்பித் தளும்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *