பெண் நெஞ்சம்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 119
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

ரகுநாதன் வாசல்படியைத் தாண்டும்போது சூரிய சக்தி மிகவும் குறைந்திருந்தது. குறைந்த மின் சக்தியில் எரியும் பல்பு போல பிரகாசம் குன்றி…இருந்தது.
மரியாதை நிமித்தம் காரணமாக அக்கம் பக்கம் கவனிக்காமல் தலைகுனிந்தபடி நடந்தான்.
யாராவது அடையாளம் கண்டு பேசிவிடுவார்களோ… பயம் அடி வயிற்றில் நின்றது.
இந்த மரியாதை, மனவொழுக்கம் மனதளவில் வருவது. வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பிள்ளை வீட்டிற்கு வந்து ஐந்தாறு நாட்கள் தங்கினால் அடக்க ஒடுக்கமாய் இருக்கும். மரியாதையாக இருக்க வேண்டும். மதிப்புடன் போக வேண்டுமென்கிற நினைப்பு வரும். மேலும் பழகியவர்களாக இருந்தாலும் எதிரே வருபவர்கள் எப்படி வருகிறார்கள் என்று தெரியாமல் பேசப்போய்… அது அவர்களுக்குத் தொந்தரவாக ஆகி.. வீண் கஷ்டம்.
இதை சில பேர்…
“வேலைக்குப் போன திமிர். மதிக்க மாட்டேங்கிறான்..!” என்பார்கள்.
“பதவி வரும்போது… சமூகத்துல ஒழுங்கா நடக்கனும்ன்னு பணிவு வருது பாரு. அது புள்ள..” சொல்வார்கள்.
பல நாக்குகள் பலப்படி பேசும். எதை எடுத்துக் கொள்வது என்று தெரியாது.
பொதுவாக ரகுநாதனுக்கு நல்ல பெயர் எடுக்கவே விருப்பம். சிறுவயதில் எப்படி இருந்தானோ தெரியாது. ஆனால்… விடலை பருவத்தில் யோக்கியமாக இருந்தான்.
அன்றைக்கும் அப்படித்தானிருந்தான்..
ஆனால்…. ஆனால்….
யாரோ ஒரு பெண் உருவம் எதிரே வருகின்றதேஎன்று மரியாதையாக ஒதுங்கி நடந்தான்.
இவன் வயசுக்கு வந்தபிறகு பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பது கிடையாது. பெரிய வீட்டுப் பிள்ளை என்ற பெயருக்குத் தக்கவாறு எல்லோரிடமும் மரியாதையாக பேசி பெண்களைக் கண்டால் குனிந்தே நடப்பான். மேலும் பெண்களென்றால் கூச்சம். கொஞ்சம் வெட்கம். பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற பயம் வேறு. இப்போதும் அதே பயத்திலும், மரியாதையில் தான் ஒதுங்கினான். ஆனால்…
“யாரு.. ரகு மச்சானா..?” வந்த பெண் குரல் கொடுத்தாள்.
‘யார் அழைப்பது..?’ என்று துணுக்குற்றுத் நிமிர்ந்து பார்த்தான்.
இடுப்பில் குடத்துடன் கோடி கோயில் கிணற்றிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்துச் செல்பவள். கொஞ்சம் துப்புரவாக அழுக்கப் பாவாடை தாவணியில் பருவம் பதினெட்டு ஆகாத அழகு கொஞ்சும் கிராமத்துக் கிளி.
நாட்டுப்புறப் பெண்களாகட்டும், நகர்புறக் கன்னிகளாகட்டும் இந்த பாவாடையும், தாவணியும் ஏன் இப்படியொரு அழகைக் கூட்டுகின்றன. சல்வார் கம்மிஸ், அது இதுவென்று கவர்ச்சிக் காட்டாமல் உடலை மூடி மறைத்தாலும், மறைக்காமலிருந்தாலும் இதில் உள்ள அழகு வேறு எதிலிருக்கிறது..?
அந்த அழகு ரகுநாதனுக்கே கொஞ்சம் தடுமாற்றமாகத்தானிருந்தது.
“என்ன மச்சான் அப்படியே நின்னுட்டே. ஊர் மாறிப் போனதும் உறவு மறந்து போச்சா…? மனுச மக்கள் நெனப்பில்லையா..?”
‘இவ்வளவு உரிமையாக, சரளமாக பேசுகிறாளே.. யாரிவள்..? இவளை எங்கோ பார்த்திருக்கிறோம், பழகி இருக்கிறோம். எங்கே..?
கிராமத்து வயசுப் பெண்கள் வாலிபர்களைக் கண்டாலே… வாலிபர்கள் என்ன… ஆம்பளைகளைக் கண்டாலே அடங்கி ஒடுங்கி செல்வார்கள். இவள் இவ்வளவு உரிமையாகப் பேசுகிறாள், பயமில்லாமல் நிற்கிறாள். யார்..?’
“என்ன மச்சான்! இன்னுமா புரியல..? வெண்ணிலா. அடுத்தத் தெரு அத்தை மவ. நெனப்பு வரலையாக்கும்..?” – அவள் பளீரென்று சிரிக்க…
இவனுக்குச் சுரீரென்று மண்டியில் உரைத்தது.
அவளா இவள்..? தான் பள்ளிக்கூடம் செல்லும்போது மூக்கொழுகி, துணிப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வருவாளே…! அந்த சின்னப் பெண்ணா இவள்..?!
அம்மாடி! எவ்வளவு வளர்த்தி. பத்தாண்டுகளுக்குள் எவ்வளவு மாறுதல்..? பெண்ணின் வளர்த்தியும் பீர்க்கன் வளர்த்தியும். மடமடவென்று வளரும் என்பார்களே..! ரொம்ப சரி.
“மாமா! மாமா!” என்று பின்னாலேயே ஓடி வருவாள், அழுக்கும், அவலட்சணமும், வசதியியல் குறைவு என்பதாலும் அலட்சியமாக ஒதுக்கிய அந்தப் பெண்ணா இவள்..?!
“என்ன சாரு அப்படியே மலைச்சி நின்னுட்டாரு. பேச்சு வரலியா..? ஊமையா..?”
கிண்டல் வேறு…
“வந்து… வந்து…” தடுமாறினான்.
“அப்பா! பேச்சு வந்துடுச்சி. ஆள் ஊமை இல்லே..” கலகலவென்று சிரித்தாள்.
ஆணா.. ‘எப்படிடா இருக்கே..?’ அருகில் சென்று தோள் தட்டிக் கேட்கலாம்.
“திருமணமான ஆளென்றால் என்னப்பா! சௌக்கியமா..? மனைவி மக்கள் எல்லாம் நலமா..?” என்று மரியாதையாகக் கேட்கலாம்.
பெரியவர், வயதில் மூத்தவர்களென்றால்…”நல்லா இருக்கீங்களா..?” என்று அன்பாய்க் கேட்கலாம்.
இவளிடம் எப்படி பேச..?
“அம்மா நல்லா இருக்காங்களா.. வெண்ணிலா..?”
”அதுக்கென்ன கொறைச்சல்.? குத்துக் கல்லாட்டம் இருக்கு.”
“நான்தான் ரகுநாதன்னு உனக்கு எப்படித் தெரியும்…?”
“ம்ம்… பட்சி சொன்னிச்சி.” என்று முயக்கிய வெண்ணிலா… “நல்லா இருக்கே சேதி. ஆளு அசலூர்க்குப் போனாலும் மொகம் மறந்து போகுமா..?” பார்த்தாள்.
“மறக்காது! நான் வந்திருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்..?”
“அதுவா..? அதான் சின்னா மச்சான்..உன் தம்பி. என் அண்ணன் வந்திருக்கு, அண்ணன் வந்திருக்குன்னு ஊரெல்லாம் தமுக்குப் போடாத குறையா பார்க்கிறவங்ககிட்டே எல்லாம் சொல்லிப் போச்சே..!” சொன்னாள்.
சேகர் சொல்லி இருக்கிறான். அவனுக்கு அண்ணன் வந்ததில் கட்டுக்கொள்ளாத மகிழ்ச்சி. இவன் எதிரில் காட்ட முடியவில்லை முகம் காட்டியது. உள்ளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வார்த்தைகள்..? அது இப்படியாக ஒலிபரப்பாயிற்று. இவனுக்குப் புரிந்தது.
“என்ன ஒரு கேள்வி கேட்டா ஒம்பது மணி நேரம் யோசனைப் பண்ணிப் பேசுறீங்க.? பேச்சும் மறந்து போச்சா..? பரவாயில்லே. வீட்டுக்கு வாங்க ஒரு வாய் காபி குடிக்கலாம்.”
அட! நக்கல் நையாண்டி அடிப்பது மட்டுமில்லாமல்… வீட்டுக்கு வேறு அழைப்பா…?
“என்ன இதுக்கும் யோசனையா..? இல்லே பொட்டப்புள்ள பின்னால வர வெட்கமா..?”
சரியான வாயாடி. பேசி மீள முடியாது ! – இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
“இன்னைக்கு வேணாம் வெண்ணிலா! இன்னொரு நாளைக்கு வர்றேன்.” சொன்னான்.
“ஏன்… இன்னைக்கு நாள் நல்லா இல்லையாக்கும்! நல்ல நாள் பார்க்கணுமாக்கும்!”
விடமாட்டாள் போலிருக்கிறதே..! சங்கடமாக நெளிந்தான்.
நல்லவேளையாக ஆபத்பாந்தவனாக செம்பட்டையன் இவர்களை நோக்கி தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.
அதையும் வெண்ணிலா பார்த்தாள்.
“ஆத்தாடி ! செம்பட்டை வருதா..? இனி கூப்பிட்டாலும் வரமாட்டே. பழசும், பழசும் இழைஞ்சுக்கோங்க. நான் வர்றேன். இன்னும் கொஞ்ச நேரம் நின்னா ஆத்தா என்னைக் கொன்னு போட்டுடும். நீ வர்றபோது வா.” ஒற்றையில் உரிமையாய்ச் சொல்லிவிட்டு நடந்தாள்.
சரியான ஆள்! – அவள் செல்வதையே பார்த்தான்.
அத்தியாயம் – 8
செம்பட்டையன் தோள் தொடத்தான் ரகுநாதன் திரும்பினான். நடப்பு உலகத்திற்கு வந்தான்.
“என்ன! ஆளை அசத்திட்டுப் போய்ட்டாளா..?” கேட்டு சிரித்தான்.
ரகுநாதன் மெல்ல புன்னகைத்து மௌனமாக நடந்தான்.
ஏதோ இனம் புரியாத இறுக்கம். கனவில் நடக்கும் மயக்கம். வார்த்தைகள் வராத வாய்.
ஏன்… தனக்கு என்னாச்சு…? – ஆற்றங்கரையை நோக்கி நடந்தான். ஆறு அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர். மண் சாலை. இரு பக்கமும் காட்டாமணக்கு அடர்த்தி. ஒரு சோலைப் பாதையில் நடக்கும் சுகம்.
உடன் வந்த செம்பட்டையனும் ரகுநாதனிடம் எதுவும் பேச்சுக் கொடுக்காமல் நடந்தான்.
இருவரும் ஆற்றங்கரையில் இருக்கும் அந்த மகிழ மரத்தடியில் போய் அமர்ந்தபோது… பொழுது சுத்தமாகப் போய்விட்டிருந்தது.
பௌர்ணமி நிலவு வானத்தின் அடிவாரத்தில் பெரிய வட்டமாக கிழக்கே எழும்பியது.
இது இவர்கள் வழக்கமாக அமரும் இடம். இன்று நேற்றல்ல. இவர்கள் நண்பர்களாகை ஒன்பதாவது படிக்கும் காலத்திலிருந்து இரவு தொடங்கினால் இப்படி ஒதுங்கி விடுவார்கள். ஊர்கதை, உலகக்கதை, நாட்டு நடப்பு, நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் பற்றி பேசுவார்கள்.
அப்படியே நிலவின் ஒளியில்..வெள்ளியாய்ப் பளபளத்து ஓடும் ஆற்றின் நீரை அலுக்காமல் பார்ப்பார்கள்.சிலுசிலுவென்று அடிக்கும் காற்றை மானசீகமாக ஏந்தி ரசிப்பார்கள். பௌர்ணமி நிலவொளி என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம். விட்டு விலகவே மனமில்லாமல் அமர்ந்திருப்பார்கள். கோடை என்றால் ஆற்றின் நடுவில் மணலில் மல்லாந்து படுத்து சுகம் அனுபவிப்பார்கள்.
இன்றைக்கும் ரகுநாதன் அப்படிதான் ஆற்றின் மணலில் படுத்தான்.
செம்பட்டையனும்… படுத்தான்.
வீட்டை விட்டு ஓடி நந்தனம் ராணுவ முகாமில் போய் நின்று..ராணுவத்தில் சேர்ந்த பிறகு இப்படிப்பட்ட சுகானுபவத்தையெல்லாம் இவன் சுத்தமாக மறந்து விட்டிருந்தான். அப்படி அனுபவிப்பதற்கான நேரம் காலம் இல்லை. முகாமில் இப்படி அனுபவிக்க யார் விட்டார்கள்.
வெகு நேர மெளனத்திற்குப் பின்…
“என்ன ரகு பேசாமலிருக்கே..?” செம்பட்டையன் கேட்டான்.
“என்ன பேச…?”
“நீ இருக்கே. நாம பழையபடி படுத்திருக்கோம். பேச்சு வரமாட்டேன்குது. நீ ஏதாவது பேசேன். கேளேன்…?”
“வெண்ணிலா என்ன சொன்னா..?”
”ஒன்னும் சொல்லல. விசாரிச்சா. வீட்டுக்குக் கூப்பிட்டாள்.”
“அவ்வளவுதானா..?”
“ஆமாம். இதுல ஆச்சரியம் என்னன்னா… அவள் என்னை அடையாளம் கண்டு பிடிச்சி பேசினாள். “
“இதுல ஆச்சரியப்பட எதுவுமில்லே ரகு. அவ இந்த கிராமத்தை விட்டு நகராதவள். இந்த ஊர் மக்களையே பார்த்தவள். அதனால் உன்னை மறக்க வாய்ப்பில்லே.”
“அவள் வளர்ச்சி. எனக்கு அவளை அடையாளம் தெரியல. என் வளர்ச்சி அவளுக்குத் தெரிஞ்சிருக்கு.”
“வெண்ணிலா வளர்ந்துட்டாளே தவிர…கள்ளம் கபடு இல்லே.”
“இப்போ நீ என்ன செய்யுறே செம்பட்டை..?”
“கிராமத்துல இருந்துகிட்டு அதிகாரியாக முடியுமா..? வயல் வேலைதான்!”
“வயல் வேலை மட்டமில்லையேடா..”
“இல்லே. நிறைவா இருக்கு. ஆனா…முன்னேற முடியாம எங்கும் நெருக்கடி. அதான் ஜீரணிக்க முடியல..”
“அப்பா இருக்காரா..?”
“இல்லே. தவறிட்டார்.”
“அம்மா…?”
“அதுவும் போயாச்சு.”
“சாப்பாடு…?”
“கலியாணம் முடிச்சாச்சு.”
“புள்ளைக்குட்டிங்க..?”
“இருக்கு..”
இதற்கு மேல் என்ன விசாரிக்க…? ரகுநாதன் மனதில் தேடினான். செம்பட்டையனும் அடுத்து பேச வழி..? துழாவினான்.
மௌனம் அவர்களுக்குள் உறவாடி, பேசி… நேரத்தைக் கடத்தியது.
“போகலாம் செம்பட்டை!” ரகுநாதன் எழுந்தான்.
செம்பட்டையனும் எழ… எதிரே டார்ச் லைட் வெளிச்சம்.
வந்தது சேகர்.
“தேடித் தேடி அழுத்துட்டேன் போ ” நின்றான்.
“…..”
“அப்புறம்… வெண்ணிலா வீட்டு வழியா வந்தேன். நீங்க ரெண்டு பேரும் இங்கே இருப்பீங்கன்னு சொன்னாள். வந்தேன். போகலாமா..?”
நடந்தான். நடந்தார்கள்.
தெரு வந்ததும்…”செம்பட்டை அப்புறம் பார்க்கலாம்..” ரகுநாதன் விடை கொடுத்தான்.
“சரி” நடந்தான்.
“தினம் வர்றீயா..?”
”வர்றேன்!” சென்றான்.
“களம் முடிச்சி எப்போ வந்தீங்க சேகர்?”
“இருட்டினதும் வந்துட்டோம்.”
“இப்போ அப்பா வீட்டிலிருக்காரா..?”
“அவர் எப்பவும் வீட்டில்தான் இருப்பார். நான்தான் எல்லாத்துக்கும் ஓடுவேன்.” பாலுக்குக் காவல் பூனை! – ரகுநாதன் உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான்.
அரை மணி நேரத்தில் அவர்கள் தொட்டுக் கொள்ள முடியுமா…? இருக்காது.! இருக்க வாய்ப்பில்லை. சிந்தாமணி சமையல் வேலை செய்வாள். இவர் கணக்கு வழக்குகள் பார்ப்பார். மேலும் தன்னிடம் மாட்டிக் கொண்டோம் என்கிற பயம் இருவர் மனதிலும் இருக்க விலகி இருப்பார்கள். ஆண் வற்புறுத்தினாலும் பெண் ஒத்துக்கொள்ள மாட்டாள்.
“என்ன ரகு! என்னமோ கேட்டே பேசாமல் வர்றே..?”
“ஒண்ணுமில்லே..” – வேகமாக நடந்தான்.
இவர்கள் வீட்டில் நுழைந்தபோது… சிந்தாமணி அடுப்படியில் இருந்தாள். அப்பா அவர் அறையிலும் இருந்தார்.
இரவு தடபுடலான சாப்பாடு. சேகர்… அண்ணனுக்குப் பக்கத்தில் இலையைப் போட்டு தனக்கு வைத்ததையெல்லாம் ரகுநாதனுக்கு வைத்தான்.
”தின்னு ! தின்னு!” என்று ஊட்டாத குறையாய் ஊட்டினான்.
தணிகாசலம் முதலிலேயே சாப்பிட்டு விட்டு சென்று விட்டதால் இவர்களுக்கு இடைஞ்சலில்லை.
ரகுநாதன் தன் தம்பியின் அன்பு, ஆகாரத்தில் மூச்சு முட்டினான்.
உணவு அருந்திவிட்டு இருவரும் மொட்டை மாடிக்கு வந்தார்கள். ரகுநாதன் ஒரு வார்த்தை பேசினால் சேகர் பத்து வார்த்தைகள் பேசினான். அருகிலேயே இருக்க ஆசைப்பட்டான்.
ஏன்…? இவனுடன் படுத்துக்கொள்ள… அண்ணன் அறையிலேயே வந்து பாயைப் போட்டான்.
ரகுநாதன்தான்….
“பெண்டாட்டி தனியா இருப்பாடா…” என்று அனுப்பி வைத்தான்.
ரகுநாதன் மதியம் தூங்கியதால்… தூக்கம் வரவில்லை.
“ரகு அத்தானா..?” – வெண்ணிலா குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒயிலாகக் கேட்டது… காரணகாரியமில்லாமல் இவன் நினைவிற்குள் வந்து கண்ணுக்குள் வந்தது.
‘அழகாத்தான் இருக்கிறாள்..!’ மனம் மதிப்புச் சான்றிதழ் அளித்தது.
ஆசை வேண்டாம் மனமே! என்று அடக்கினாலும் அவள் கண்ணுக்குள் வந்து நெஞ்சுக்குள் இறங்கினாள்.
கஷ்டப்பட்டு ஒதுக்கினான். வலுக்கட்டாயமாக அழித்தான்.
அது என்னவோ… அழிக்க அழிக்க அவள் தோன்றிக்கொண்டே இருந்தாள். கலகலவென்று சிரித்து கிளர்ச்சியூட்டினாள்.
மன ஆழத்தில் பதிந்து, விரிந்தவளாய் இருந்தாள்.
அத்தியாயம் – 9
ரகுநாதன் இரவு எப்போது தூங்கினானோ… காலையில் சேகர் வந்து காபியுடன் எழுப்பினான்.
“நீ சாப்பிட்டுவிட்டு இரு. நான் அவசர வேலையாய் வெளியே போறேன். வந்துடுறேன்!”
ரகுநாதன் அவனை எங்கே, என்ன வேலை, என்ன, ஏது என்று கேட்பதற்குள்ளாகவே அவன் அவசரமாக சென்றுவிட்டான்.
இந்தக் காலை வேளையில் அப்படியென்ன அவசரவேலை..? ரகுநாதன் காபியைக் குடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
கொல்லை…தோட்டத்திற்குச் சென்றான். முகம் கழுவி வாசலுக்கு வந்தான்.
சிந்தாமணி தேங்காய் சட்னி தாளித்துக் கொண்டிருந்தாள். வாசனை கும்மென்று மூக்கைத் துளைத்தது.
‘இவளுக்குக் கை மணம் அதிகம். அப்பா எங்கே..? இன்றைக்கும் அறுவடையா…? அறுவடை என்றால்தான் கருக்களிலேயே செல்ல வேண்டும்.
அறுவடை செய்யும் வேலை ஆட்கள் முன்னிரவு நேரத்திலேயே வயலில் இறங்கி அரிவாளைப் பிடித்து விடுவார்கள்.
அவர்களுக்கு முன் உடையவன் போய் அறுவடை வயல் தலைமாட்டில் நின்றால்தான்… ஆள் இறங்கும்போதே….
“கதிரை மட்டும் அறுக்காம பதியப் பிடி! சொல்லலாம். செய்யாதவர்களைச் செய்யச் சொல்லலாம். இல்லை கரை ஏற்றலாம். ஆள் இல்லாவிட்டால் சுமை தூக்க பயந்து கொண்டு..மேல் அறுப்பாக அறுத்து வைக்கோலை வயலில் விட்டு விட்டு கூலி வாங்கிச் சென்றுவிடுவார்கள். மாடு கன்று வைத்திருக்கும் மிராசு… வைக்கோலுக்கு அலைய வேண்டும்.”
அப்பா – சிந்தாமணி கதை ஊருக்குத் தெரியுமா..?
தெரிந்தால் செம்பட்டையன் சொல்லி இருக்க மாட்டானா..? ஒருவேளை தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றானா.? பத்து வருடம் கழித்து வந்தவனிடம் வத்தி ஏன் வைக்க வேண்டும் என்று நினைத்து சென்றுவிட்டானா..?
அவனிடம் அதிகம் பேசினால்தானே சொல்வதற்கு..? பேசவில்லை..! சொல்லவில்லை..!
செம்பட்டையன் மனதில் எதையும் மறைக்காதவன். சிறு வயதிலிருந்தே… கேட்டது, பார்த்தது …என்று மனதில் இருப்பதை ஒன்று விடாமல் சொல்பவன். தெரிந்தால் சொல்லி இருப்பான்.
இது வீட்டிற்குள் நடக்கும் விசயம் வெளியே தெரிய வழி இல்லை.
தம்பிக்குத் தெரியுமா..? தெரிந்தால் சும்மா இருப்பானா..? மனைவி மேல் அன்பும், ஆசையுமாய் வைத்து குடித்தனம் நடத்துவானா..? இல்லை… தெரிந்தும் தெரியாதது மாதிரி இருக்கின்றானா..? அப்படி எப்படி இருக்க முடியும்..? அப்பா அடாவடி, முரட்டுத்தனத்திற்குப் பயந்து கொண்டு கிடக்கின்றானா..?
இது என்ன மர்மம்.??! ஒன்றுமில்லாததற்கு நாம்தான் மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கின்றோமா..?
“யாரோ வர்றாங்க. எழுந்திரிங்க…” வார்த்தைகள் சன்னமாக காதில் பட்டு கசந்தது. இந்த தொடர்பு… சிந்தாமணி இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்தே ஏற்பட்டதா..? இதுதான் ஆரம்பம், தொடக்கமா..?
சிந்தாமணி உடன்பட்டு நடக்கின்றதா..? உடன்படாமல் நடக்கின்றதா..?
குடும்ப மானம் காற்றில் பறந்து காணாமல் போய்விட்டதா..? இல்லை… இனிமேல்தான் பறக்கப்போகின்றதா..? என்றைக்கு வெடிக்கும்..? வெடித்தால் என்ன ஆகும்..?
தற்கொலை, கொலை, கொள்ளை, பலி..! – நினைக்க ரகுநாதனுக்குக் குப்பென்று வியர்த்தது.
வேண்டாம் விவகாரம் ! விட்டு விடலாமா..? கண்டு கொள்ளாமல் சென்று விடலாமா..? அப்படி செய்வது நியாயமா..?
‘அண்ணே..! விவகாரம் தெரிஞ்சும் தெரியாதது மாதிரி போய்ட்டீயே அண்ணே..! சொல்லி இருந்தா.. நாம ரெண்டு பேருமே சேர்ந்து அடுக்கு ஏதாவது ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்கலாமே..!?’ கதறச் செய்வான். அப்படி பாச, நேசமான தம்பியைத் தவிக்க விட்டுவிட்டுச் செல்வது சரியா..? தன் மீது குற்றம் சொல்ல வைக்கலாமா..? சொல்லாமல் சென்றால்… தானும் இந்த குற்றத்திற்கு உடந்தை ஆனது போல் ஆகாதா..?
நாம் விடுப்பு முடிந்து செல்வதற்குள்… இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அதை விட்டுவிட்டு வாய் முடி சென்றால்… அப்பாவிற்கு இன்னும் துளிர் விட்டுப் போகும். துணிச்சல் அதிகமாகும்.
நாம் சென்றபிறகு தெரிந்தால்… தந்தை மகனுக்கும் குத்து, வெட்டு நடக்கலாம். வயதில் சின்னவள் வயதான மாமனாரிடம் உடன்படுகிறாளென்றால்… சேகரிடம் குறையா..?
அப்பா பணத்தைக் காட்டி பணிய வைத்தருக்கிறாரா…?
இதோ பார். நீ சம்மதிக்கலைன்னா… சொத்து பத்து எல்லாம் என் பேர்ல இருக்கு. புருஷன் பொண்டாட்டிக்கு பத்து பைசா கிடையாது ! – மிரட்டி இருப்பாரா..?
நம்மை மாதிரி வசதியான வீட்டுப் பெண்ணாய் இருந்தால்… குடும்பத்துக்குச் சரி பட மாட்டாள். ஒரு வேலை வித்து செய்யமாட்டாள். இப்படி நாளையும் யோசிச்சுதான் உன் தம்பி சேகருக்கு ஒரு ஏழை வீட்டுப் பெண்ணாய்ப் பார்த்திருக்கேன். வசதி இல்லையே தவிர பொண்ணு அழகு, அம்சம்டா..! என்று அப்பா எழுதியதை படிக்கப் பெருமையாக இருந்தது. இவ்வளவு புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருக்கிறாரே..! நினைக்க வியப்பாய் இருந்தது. இந்த முடிவால் ஒரு ஏழைப் பெண்ணிற்கு வாழ்க்கை ! நினைக்கப் பெருமையாக இருந்தது.
ஆனால் அதன் உள்ளார்ந்த நோக்கம்..? ஏழையை எப்படியும் மிரட்டி பணிய வைத்துவிடலாம். தொட்டால் ஓடமாட்டாள். நல்ல வாழ்க்கை கிடைத்ததை இழக்காமல் இருக்க உடன்படுவாள்.. என்பது..! ச்சே..!
அப்பா மனதுக்குள் கயமை வைத்து மேலுக்குப் பொன் முலாம் பூசி இருக்கிறார். நாம் ஏமாந்து விட்டோம். தம்பி ஏமாந்து விட்டான்.
அப்பா வலையைக் கச்சிதமாக பின்னி வெற்றிகரமாக காரியத்தைச் சாதித்து இருக்கிறார். – தலை வெடிக்கும் போலிருந்தது ரகுநாதனுக்கு.
தனியே இருக்கும் சிந்தாமணியை இப்போது அழைத்து விபரம் கெட்டாலென்ன..? அவனுக்குச் தோன்றியது. அதற்கு முட்டுக்கட்டையாய் ..
தணிகாசலமும், சேகரும்… ஒன்றாக வந்து வீட்டில் நுழைந்தார்கள்…!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
