புனிதமெனும் பொய்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 138 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

பகலின் உச்சி வெயில் அழகிய அந்த ஊரின் செம்மண்ணைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. காற்றில் உலர்வான புழுதி பறந்தது. ஆனால், ஐந்து வயது ஜமாலாவிற்கு அந்த வெயிலைப் பற்றியோ, புழுதியைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. தன் கிழிந்த பாவாடை காற்றில் பறக்க, வீட்டின் வாசலில் அமர்ந்து வண்ணக் கிளிஞ்சல்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் வெள்ளேந்தியாக மின்னின. அவளது மழலைச் சிரிப்பொலி அந்த கிராமத்துக் காற்றில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அன்று ஜமாலாவின் வீட்டில் வழக்கத்திற்கு மாறான ஒரு பரபரப்பு நிலவியது. விடியற்காலையிலேயே வீட்டின் வாசல் கூட்டப்பட்டது. மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. உள்ளே சாம்பிராணி நறுமணப் புகை சூழ்ந்திருந்தது. ஊர்ப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வாழுமிடங்களில் கலாச்சாரங்கள் ஒன்றையொன்று கட்டிப் புரண்டு தழுவியபோதும் ஆணாதிக்கம் என்றும் தன் இறுக்கமான கட்டுப்பாடுகளை என்றைக்கும் தளர்த்துவதில்லை.

“ஜமலா, இங்கே வாடி என் செல்லம்,” என்று பாட்டி கூப்பிட்டாள். அவளைப் பிடித்து, நறுமண எண்ணெய்கள் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள். பட்டுப் போன்ற புத்தாடை ஒன்றை உடுத்தினார்கள். அவள் கைகளில் மருதாணி வைக்கப்பட்டது. “பாட்டி, இன்னைக்கு எனக்கு என்ன விசேஷம்? ஏன் எல்லாரும் என்னை ஒரு மாதிரியே பார்க்குறாங்க?” என்று அப்பாவியாகக் கேட்டாள் ஜமாலா. பாட்டி அவளது தலையை வருடினாள். ஆனால், அவளது கண்களில் ஒருவிதமான குற்ற உணர்ச்சியும், அதே சமயம் தவிர்க்க முடியாத கடமையும் கலந்திருந்தது. “இன்னைக்கு உனக்குப் புனித சடங்கு நடக்கப்போகுது ஜமலா. நீ பெரிய பொண்ணாகப் போறாய். இந்தச் சடங்கு முடிஞ்சாத்தான் நீ இந்தச் சமூகத்துல ஒரு நல்ல பொண்ணா வாழ முடியும்,” என்றாள். தன் முகத்தில் பூசப்பட்ட மஞ்சள் மணத்தோடு, தனக்கு ஏதோ பெரிய பெருமை கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் ஜமலா புன்னகைத்தாள். தனக்கு நடக்கப்போகும் விபரீதம் ஏதும் அறியாமல், அவள் பாட்டி கொடுத்த இனிப்பைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 ஜமாலாவிற்குத் தெரிந்திருக்கவில்லை, அது ஒரு புனிதச் சடங்கு அல்ல. புனிதத்தின்  பெயரால் நடாத்தப்படுகிற ஆணாதிக்க அராஜகம் என்பதை..  மூவாயிரம் ஆண்டுகளாகப் பெண்களின் உடலின் மீதும், ஆன்மாவின் மீதும் நடத்தப்படும் ஒரு கொடூரமான ஆக்கிரமிப்பு அது . எகிப்தின் பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளின் உடல்களில்கூட வடுக்களாய் எஞ்சியிருக்கும் அதே வரலாற்றுப் பேரவலம் அது.

சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, எகிப்து எனத் தொடரும் எண்ணற்ற நாடுகளில், 98 சதவீதப் பெண்களுக்குத் தலைமுறை தலைமுறையாக இந்த அநீதி இன்னமும் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘பெண் சுன்னத்’ என்று அவர்கள் பெருமையோடு அழைக்கும் அந்தச் சடங்கு, உண்மையில் உலக சுகாதார மையம் மானிட குலச் சீரழிவு என்று எச்சரிக்கின்ற பெண்ணுறுப்புச் சிதைவு’ ஆகும்.

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தாலே ஆண்களுக்குப் பாலுணர்வு பீறிட்டுத் தோன்றும். அவர்கள் கட்டுக்கடங்காத காமம் கொண்டவர்கள். ஆகவே, அவர்களின் பாலுணர்வை சிறு வயதிலேயே கத்தியால் அறுத்துச் சிதைத்துவிட்டால், அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து, கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்,” என்ற ஆணாதிக்கக் கலாச்சாரத்தின்  திமிரான கோட்பாட்டு விதியே பெண்ணுறுப்புச் சிதைப்பு.

அது அந்தச் சமூகத்தின் வேதவாக்காக இருந்தது. அப்படிச் செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாகக் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்குத் திருமணமே நடக்காது. இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்வதற்குக் காரணம், அவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைகள்தான். “இந்தச் சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும்; உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும்; முகம் அழகு பெறும்; பெண்மை அதிகரிக்கும்” ஆண்களின் அங்கீகாரம் கிடைக்கும் என்று ஏகப்பட்ட முட்டாள்தனமான நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக அங்கு ஆணாதிக்க சமூகத்தால், கடவுள் போதனையாகப்  போதிக்கப்பட்டு வருகின்றன.

பெண்களின் தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் பெரும்பேற்றைப்  பாதுகாத்து, ஆண்பேய்களுக்குப் புனித  இரையாக்க வேண்டுமென்கின்ற ஆணாதிக்கச் சுயநலத்தில்தான்  இத்தனை ஏற்பாடுகளும் அந்த சமூகத்தால் செய்யப்படுகின்றன.
அதே போல, பெண் மார்பை அறுக்க வைப்பதென்பதும், கணவனோடு உடன் கட்டை ஏறுவதென்பதும் காலங்காலமாக வீரத்தின் பெயரால், கற்பின் பெயரால் ஆண்மைத்தனம் பெண்களிடம் புகுத்தியுள்ள அக்கிரமான மிக மிக நுட்பமான கொடுமையாகும். 

திடீரென வீட்டின் வாசலில் குலவைச் சத்தம் கேட்க, ஊரின் சடங்கு செய்யும் வயதான பெண்மணி உள்ளே நுழைந்தாள். விளையாடிக் கொண்டிருந்த ஜமாலாவைத் திடீரென நாலைந்து முதிய பெண்கள் கைகளைப் பற்றிப் பலவந்தமாக இழுத்துச் சென்றனர். இருண்ட, காற்றோட்டமற்ற, வெளிச்சம் வராத அந்தச் சின்னஞ்சிறு அறையின் நடுவே அவளைத் தரையில் படுக்க வைத்தனர். ஜமாலாவின் மனதில் சட்டென்று பயம் தொற்றிக் கொண்டது. அவளது கைகளும் கால்களும் அசையாதபடி நான்கு பெண்கள் பலமாக அழுத்திக் பிடித்துக் கொண்டனர். அவளது கால்கள் அகலமாக விரிக்கப்பட்டன. நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்வெறித்தனம். பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது. அந்தப் பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன. ‘த்துப்..’ என்று பிளேடின் மீது எச்சில் துப்பினாள் அந்த மருத்துவச்சி. அதை, தன் அழுக்குத் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, என் அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள். நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி… ‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. ஆணுறுப்பில் எந்த அளவுக்கு உணர்ச்சி இருக்குமோ, அதே அளவு உணர்வுகள் ததும்பும், சிறிய மொட்டுப் போல் இருக்கும் ‘க்ளிட்டோரியஸ்’ என்ற பாகத்தை வெட்டி எடுப்பதுதான் இந்தச் சிதைவின் முதல் பகுதி. எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல், கதறக் கதற ரண வேதனையோடு அறுத்தெறியும் இந்த முதல் நிலைக்கு மருத்துவத்தில் ‘க்ளிட்டோரிடேக்டமி’ என்று பெயர். இந்த கொடூர வேலையைச் செய்வது எந்தவொரு டாக்டரோ, அறுவை சிகிச்சை நிபுணரோ இல்லை.. ஒரு வயது முதிர்ந்த கிழவியோ,  அல்லது பெண்ணின் சொந்தத் தாயோதான்.

எந்த காலத்து பிளேடோ தெரியவில்லை, துருபிடித்து, நடுப்பாகமுடைந்து இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்த மூதாட்டி…
.ஐயோ.. என்று கத்திய எனக்குள் நரக வேதனை பிறந்தது. ஆனால், அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் பயத்திலும் வலியிலும் நடுங்கின. ‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’ என்னை இரட்சிக்க மாட்டாயா? என்று என் மனதுக்குள் அலறினேன்.

அதோடு நிற்கவில்லை. இந்தச் சிதைவின் தொடர்ச்சியாக இரண்டாம் நிலை மிக கொடூரந் தருவது . கலவியின் போது  பெண்ணுக்கு இன்பத்தை அதிகப்படுத்தும் யோனியின் பக்கவாட்டில் இருக்கும் சிறகுகளைப் பிளேடால் அறுத்து எடுத்தாள் அந்தக் கிழவி. இதனை ‘லேபியாபிளாஸ்டி’ என்று மருத்துவம் சொல்கிறது. ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள்.
இந்த வேதனைகளையெல்லாம் அந்த சமூகத்து அம்மாக்கள் கடந்து வந்த போதிலும் இவற்றையெல்லாம் எதிர்க்காமல் பூமியை விடப் பொறுமையாயிருந்தது தான்  இந்த மண்ணில் ஆண்களுக்கு அடித்திருக்கிற லாட்டரிப் பரிசு.

வெளியே வெளிச்சத்துக்கு என் கண்கள் கூசியது..  அந்த கிழவியின் அருகில் ஒருவகை முட்கிழுவை மரத்தின் முட்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அந்த மரத்து முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமான வெள்ளை நூல் கொண்டு என் உறுப்பை தைத்திருக்கிறாள். இதுதான் மூன்றாம் நிலை .. பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது, அதாவது மருத்துவப் பெயரில் ‘வெஜைனாபிளாஸ்டி’. அதன் மூலம் சிறுநீர் மற்றும் மாதவிலக்கு திரவம் வெளியேற ஒரே ஒரு சிறிய துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு முற்றிலும் மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தின் கெளரவமும், ஆண்களுக்கு நாம் சுமந்து செல்கிற அதி உன்னத  கற்பும் இதனால் காப்பாற்றப்பட்டுவிட்டதாம்!

தையல் முடிந்ததும் அந்தக் கிழவி எழுந்து போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். ஆனால், என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால் ஒன்றாகச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. அம்மா என்னை மெதுவாக நகர்த்தியதும், எனலறை வைத்து வெட்டிய  அந்தப் பலகையைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கோழியை வெட்டி, அரை உயிரோடு மீதியை அப்படியே துடிக்க விட்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி ரத்தச் சகதியோடு உறைந்து கிடந்தது அந்தப் பலகை. கடவுள் கொடுத்த என் உடலின் மிக உன்னதமான, உணர்ச்சிமிக்க பாகங்கள் கடவுளின் பெயராலேயே வேண்டுமென்றே  வெட்டப்பட்டு, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்ட தசைப்பிண்டங்கள் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. அவர்களுக்குக் கன்னிப் பெண் வேண்டும் என்ற ஒரே ஆதிக்க வெறிக்காக, ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது திருமண முதலிரவுக்கு முன்பு, அதே கத்தியால் தைத்த யோனியை வெட்டித் திறந்துவிடுகிறார்கள். பெண்ணுறுப்பின் வாசலைக் குறுக்கிப் போடப்படும் இந்தத் தையல், பிற்காலத்தில் உடலுறவின் போதும், குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் கடுமையான மருத்துவச் சிக்கல்களையும் உருவாக்குவதாகவும், பிரசவத்தின் போது குழந்தை இறந்து போவதற்கோ அல்லது தாய்கள் ரத்தப்போக்கால் இறந்து போவதற்கோ இந்த முட்டாள்தனமான சடங்குதான் முதன்மைக் காரணம் என்று உலக சுகாதார மையம் எத்தனையோ தடவை எச்சரித்தும்்இது இன்னமும் தொடர்நது கொண்டு தானிருக்கின்றது.

மூவாயிரம் ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி, ஒரு சொட்டு மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த நரக அறுவை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. சில ஏழைச் சிறுமிகளுக்குக் கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைப்பதில்லை, கூர்மையான பாறைக் கற்களைக் கொண்டே இந்தச் சிதைவை நடத்துகிறார்கள். அறுவையின் போது வலி தாங்காமல் அலறித் துடித்தபடியே பயத்தோடு சிலர் இறக்கின்றார்கள் அறுவைக்குப் பின் அழுக்குக் கருவிகளால் ஏற்படும் கடுமையான நோய்த் தொற்று மற்றும் ரத்தப்போக்கால் பலர் இறந்து மடிகின்றார்கள். , அப்படியே தப்பிப் பிழைத்தவர்கள் பிற்காலத்தில் ஆணாதிக்க வெறியரின் தாங்க முடியாத நரக வேதனையை அனுபவித்தபடி  செத்துப் போகிறார்கள்.

இந்த ஆண் வர்க்கத்தின் ஆணாதிக்க மதக் கோட்பாட்டுக் கொடூரத்திலிருந்து எங்களை யார் காப்பாற்றுவது என்கிற இந்த அபலைப் பெண்களின் கூக்குரலைக் கேட்கவல்ல உண்மைக் கடவுள் இந்தப் பூமியில் யார்??

ரத்த வெள்ளத்தில், உணர்வற்றுக் கிடந்த ஜமாலாவின் கால்கள் கட்டப்பட்டபடியே இருந்தன. காயம் ஆறி கட்டுகளால் பிரிபட்ட பகுதி ஒன்று சேர வேண்டும் என்பதற்காக, 42 நாட்கள் அவளது இரு கால்களும் ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகக் கட்டிப்போடப்பட்டன. கால்களைச் சேர்த்துக் கட்டியபடியே அசைய முடியாமல் கிடக்க வேண்டும் என்பது விதி.. கொடுமைகள் நிறைந்த இந்தச் சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, மற்றும் மன உளைவு ஜமாலாவிற்குள் பலவிதமான உடல் சார்ந்த நோய்களைக் கொண்டுவந்தது. சிறுநீர் கழிப்பது கூட அவளுக்கு நரக வேதனையாக மாறியது. லட்சக்கணக்கான பெண்கள் இந்தச் சடங்கிற்குப் பின் கடுமையான மன அழுத்தத்திற்கும், ஆறாத உளவியல் வடுக்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு ஜமாலாவும் விதிவிலக்கல்ல. நாட்கள் கடந்தன. உடலின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறினாலும், ஜமாலாவின் மனதில் விழுந்த வடு அவளது வாழ்நாள் முழுவதும் ஆறவே இல்லை. அவள் வளர வளர, அவளது இயல்பான சிரிப்பும், துள்ளலும், மகிழ்ச்சியும் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தன.

இன்று இந்தக் கொடூரமான முறைமையைத் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய வேண்டுமென பலநாடுகள் சட்டங்களை நிறை வேற்றுகின்றன. . ஆனாலும் ஜமாலாவின் கிராமம் இருப்பதைப் போன்ற மூட நம்பிக்கை மிக்க நாடுகளில் இன்றும் இந்த கொடூரம் தங்கு தடையின்றித் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கலாச்சாரம் என்ற போர்வையில், புனித சடங்கு என்ற முகமூடியோடு, ஆண்களின் சுயநலத்திற்காக இன்றும் உலகெங்கிலும் பல கோடி ஜமலாக்களின் உடல்களும் ஆன்மாவும் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *