‘பாலிட்டி’ தெரியுமா உனக்கு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2025
பார்வையிட்டோர்: 68 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காஞ்சிப் பெரியவர்கள், திருப்பதி போகும் வழியில் ஒரு சின்ன கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள். மெயின் சாலையிலிருந்து வயல்களுக்கிடையே உள்ள கப்பி ரோடு வழியாக அந்த கிராமத்தை அடைய வேண்டும். நான் அப்போது ‘தினமணி கதிரில் இருந்தேன். சுவாமிகளைப் பார்ப்பதற்காக நானும் எம்.கே. என்று அழைக்கப்படும் திரு எம். கிருஷ்ணசாமியும் (இப்போது லூகாஸ் டி.வி.எஸ்.) திரு டி.கே. தியாகராஜனும் போயிருந்தோம். எங்களைப் பார்த்ததும், சுவாமிகள் கையால் சைகை காட்டி எதிரே உட்காரச் சொன்னார்கள். 

பிறகு என்னைப் பார்த்து “எக்ஸ்பிரஸில் ‘கீ’ போஸ்ட்டில் இருக்கியோ?” என்று கேட்டுக் கொண்டே சாவியால் திறப்பது போல் அபிநயத்துக் காட்டினார். நான் பதில் ஏதும் சொல்லாமல் பரவசத்தோடு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரியவர்கள் ரொம்ப உற்சாகத்தோடு காணப்பட்டார்கள். 

“நீ அமோகமாக இருப்பே. க்ஷேமமாய் இருப்பே” என்று வாயார வாழ்த்தினார். 

சிறிது நேரம் மௌனம். 

“பாலிட்டி என்றால் என்ன தெரியுமோ?” என்றார் சட்டென்று. 

எனக்குத் தெரியவில்லை. தயங்கிவிட்டு, “‘பாலிடிக்ஸ்’ என்றால் தெரியும்” என்றேன். 

“நான் கேட்பது பாலிடிக்ஸ் இல்லை. பாலிட்டி” என்றார். விழித்தேன், அல்லது விழித்தோம். 

“மனித சமுதாயத்துக்கு மொத்தமாகச் செய்யப்படுகிற சேவைக்கு ‘பாலிட்டி’ என்று சொல்லலாம். ‘பாலிட்டி’ என்று தலைப்பிட்டு நீ உன் பத்திரிகையில் வாரா வாரம் ‘ரிலிஜனை’ப் பற்றி எழுது” என்றார். ஏறக்குறைய ஒரு கட்டளை மாதிரி. 

“மதம், பக்தி இது பற்றியெல்லாம் பத்திரிகையில் எப்போ தாவது வரலாமே தவிர, வாரா வாரம் எழுதுவது கூடாது என்ற கொள்கை உடையவன் நான்” என்றேன். 

சுவாமிகள் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சற்று வியப்புடன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார். 

“ரிலிஜன் எழுதினால் பத்திரிகை விற்பனையாவதில்லை. சீரியஸாக எழுதினால் ஸர்க்குலேஷன் உயராது” என்றேன். 

”பரவாயில்லை; நீ எழுது. விற்பனையாகும்” என்றார்.

எனக்கு என் கொள்கையிலிருந்து விலகிப் போக விருப்பமில்லை. 

”பெரியவா மன்னிக்க வேண்டும். என் பத்திரிகையில் நான் ரிலிஜனைப் பற்றி எழுதுவதாக இல்லை. விற்பனை பாதிக்கும்” என்றேன். 

நான் பிடிவாதமாகச் சொன்னாலும் பெரியவர்கள் என்னிடம் ஒரு குழந்தையிடம் காட்டும் அன்பைக் காட்டிப் பேசினார். 

“அப்படியா நினைக்கிறாய்?” என்று இழுத்தாற் போல் விட்டு விட்டார். 

அப்புறம் மூவரும் பெரியவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். காரில் ஏறி கப்பி ரோடில் போய்க் கொண்டிருந்தபோது சுவாமிகள் முகாமிலிருந்த பிராமணர் ஒருவர் எங்களைத் துரத்திக் கொண்டு சைக்கிளில் வருவதைக் கவனித்தோம். அவர் எங்களிடம் ஏதோ சொல்லத்தான் வருகிறார் என்பதை ஊகித்து காரை நிறுத்தச் சொன்னோம். 

“பெரியவர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்றார் அந்த மடத்து ஆள் மூச்சு வாங்க. 

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று மூவரும் யோசித்துக் கொண்டே போனோம். 

“ரிலிஜன், கடவுள் பற்றியெல்லாம் எழுதினால் பத்திரிகை விற்காது என்று சொன்னயே, இப்போது தினமணி பேப்பரில் தினமும் மாம்பலத்து திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி எழுதுகிறார்களே! இதனால் விற்பனை அதிகரித்திருப்பதாகக் கேள்விப் பட்டேனே!” என்றார். 

அப்போது மாம்பலத்தில் திடீர்ப் பிள்ளையார் பூமியிலிருந்து கிளம்பி தினம் ஓர் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த திடீர்ப் பிள்ளையாரைப் பார்க்கப் பெரும் கூட்டமாகக் கூடிக் கொண்டிருந்தார்கள். 

“பெரியவா நினைக்கிற மாதிரி அது ரிலிஜன் எழுதுவதால் ஆகும் விற்பனை அல்ல. தெய்வ பக்திக்கும் அதற்கும் சம்பந்த மில்லை. ஒரு பரபரப்பான செய்தியில் சஸ்பென்ஸும் சேர்ந்து கொண்டது. அதனால் விற்பனை கூடி உள்ளது. அவ்வளவுதான்” என்றேன். 

”ஓகோ, அப்படி நினைக்கிறாயா, சரி நீ போகலாம்” என்பது போல் தலையசைத்து விட்டார். 

– பழைய கணக்கு, முதல் பதிப்பு: 1984, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *