கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 6,668 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த அருமையான மராத்திக் கதையைத் தமிழ்ப்படுத்தியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. கிழவி அந்த வீட்டில் ஒரு பழைய பந்தலைப் போல இருக்கிறாள். ஆனால், மல்லிகைக் கொடி படருவதென்றல் பழைய பந்தலில் தானே படரமுடியும், என்று ஒரு நாள் திடீரென்று கிழவிக்கு ஞானோதயம் பிறந்துவிடுகிறது. எப்படி?

பள்ளிக்கூடத்தி லிருந்து வந்ததும், குஸுமா ஹார்மோனியப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு பாடவானாள்.

“யமுனை நதிக்கரையில்
கண்ணன் குழலூதுகிறான்”

பாட்டைக் கேட்டால் அலுப்புத் தீரும் என்பார்கள். ஆனால் பின்கட்டில் பழைய வெள்ளைப் புடைவையைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்த பாட்டிக்கு இது வேதனையாக இருந்தது. “இந்தப் பெண் பள்ளிக்கூடத்தி லிருந்து வந்தாலே, சனியன், இந்த லொட லொடப்புத்தான்! இதைக் கேட்பதைவிடப் புராணம் கேட்கப் போகலாமே!” என்று முணு முணுத்த வண்ணம் அவள் எழுந்து முன்கட்டுக்கு வந்தாள். அப்பொழுது கோபு, கையிலே வர்ணக் காகிதத்தில் அச்சிட்ட ஒரு விளம்பரத்தோடு, குதித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான். பாட்டியைப் பார்த்தவுடனே, “பாட்டி பாட்டி! இன்றைக்கு ஜோரான சினிமா வந்திருக்கிறது” என்று கூவினான். அவன் அப்படியே ஓடிப்போய்ப் பாட்டியின் காளைக் கட்டிக் கொள்வதாக இருந்தான்; ஆனால் அவளுடைய முகத்தைக் பார்த்ததும் அவனுடைய குழந்தையுள்ளம் திடுக்கிட்டது. “அக்கா, அக்கா!” என்று கூவிக் கொண்டே அவன் குஸூமாவிடம் ஓடினான்.

கோயிலுக்கு வெறுங்கை யுடனா போவது? கோயிலில் வைத்திருக்கும் பானையில் போடக் கொஞ்சம் அரிசியாவது எடுத்துப் போகலாம் என்ற எண்ணத்தோடு பாட்டி சமையலறைக்குள் போனாள். ஒரு கிண்ணத்தில் அரிசியை எடுத்துக்கொண்டாள். “நான் கோயிலுக்குப் போய் வருகிறேன்” என்று அவள் மருமகளிடம் சொல்லத் திரும்புவதற்குள்ளே, “சற்று இந்தக் குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள். ஓயாமல் சிணுங்கியபடியே இருக்கிறது. இன்றைக்குச் சமையலும் சீக்கிரம் ஆக வேண்டும். சினிமாவுக்கு-” என்ற வார்த்தை அவள் காதில் விழுந்தது.

மாமியாரின் முகத்தைப் பார்த்ததுமே மருமகள் சட்டென்று வாயை மூடிக்கொண் டாள். “நான் புராணம் கேட்பது நின்றுவிடுமே என்ற கவலைப் இந்த வீட்டில் யாருக்காவது இருக்கிறதா?” என்று பாட்டி நினைத்தாள். குழந்தை பலமாக அழுததையும் சட்டை செய்யாமலே வீட்டை விட்டு வெளியே வந்தாள். முதல் நாள் காலட் சேபத்திலே கேட்ட ஒரு பாடலை அவள் வாய் முணுமுணுத்தது.

“கொண்ட பெண்டிர் மக்களுற்றர்
சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டதல்லால்
காதல்மற்று யாதுமில்லை”

தெருவிலே குஸுமாவின் பாட்டு விளக்கமாகக் கேட்டது.

“யமுனை நதிக்கரையில்
கண்ணன் குழலூதுகிறான்”

பாட்டி கழுத்தை வளைத்துத் தன் மங்கிய பார்வையால் அந்த வீட்டைப்பார்த்தாள். தான் ஒரு கரையிலும் வீட்டிலுள்ள மற்ற வர்கள் யாவரும் மறு கரையிலும் இருப்பதாக அவளுக்குத் தோன் றிற்று. இந்த இரு கரைக்கும் கடுவே ‘அகாதமான ஆற்றின் சீல வெள்ளம் ஓடுகிறது. அவள் திரும்ப அக்கரைக்கு எப்படிப் போக முடியும் ? மற்ற ஆறுகளுக்கு வாராவதி உண்டு; ஆனால் வாழ்க்கை யாற்றுக்குப் பாலம் போடக் கடவுளால் கூட முடியாது.


பாட்டிக்குக் கிட்டத்தட்ட எழுபது வயது ஆகிவிட்டது. தன் வாழ்க்கையில் அவள் பட்ட துன்பங்கள் யாவும் அவளுடைய சூன்ய மனத்தில் சுழன்று படிந்தன. உடல் தளர்ந்து விட்டது. வீட்டு வேலை செய்ய முடிவதில்லை . மனமும் சோர்ந்துவிட் டது. ஒரு நாள் போவது ஒரு யுகம்போல இருந்தது. இரவிலே ஒருதரம் தூக்கம் கலைந்தால் மறுபடி வருவதில்லை ஆனால் இரவுப் பொழுதோ விரைவில் கழிவதில்லை. மகன், மருமகள், பேரன், பேத்திகள் ஆகியவர்களின் உலகம் தன் உலகத்தினின்றும் முற்றும் வேறுபட்டது என்று அவளுக்குச் சில நாளாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அவள் கண்ணைத் திறந்தபடியே இருட்டைப் பார்த்துக்கொண்டு படுக்கையில் உட்கார்ந்திருப்பாள்; அந்தச் சமயத்தில் வீட்டிலே மீதிப்பேர் எல்லோரும் இனிய தூக்கத்திலே ஆழ்ந்திருப்பார்கள். சாப்பாடு, துணிமணிகள், வேடிக்கை முதலிய எல்லா விஷயங்களிலும் வீட்டிலே ஓர் ஆச்சரியகரமான மாறுதல் அவளுக்குத் தென் பட்டது.

அவள் புராணம் கேட்க வந்து உட்கார்ந்தாள். சாஸ்திரிகளின் வாக்குப்பிரவாகம் படை யெடுத்து ஓடியது. “இந்த உலகத்திலே யாரும், யாருக்கும் சொந்தமில்லை. ஆகையால் நாம் பிறந்த நிமிஷம் முதல் நம்மால் கூடியவரையில் சிந்திப்பது நம்முடைய கடமை. ஆண்டவனைச் ஈசுவரனுடைய நாமத்துக்கு உள்ள மகிமையை அளவிட்டுச் சொல்லயாராலும் முடியாது…” வீட்டில் யாரோ நோயாளியாக இருந்ததனால் அவர் அன்று சற்றுச் சீக்கிரமே புராணத்தை முடித்துவிட்டார்.

பாட்டி மிகுந்த பக்தியோடு அவருடைய பிரவசனத்தைக் கேட்டான். எதிரே கர்ப்பக் கிரகத்துள் இருந்த சங்கரலிங்கம் அவள் கண்ணுக்குத் தெரிய வில்லை. ஆயினும் நடு நடுவே அவள் அந்தப் பக்கம் பார்த்துக் கூப்பினாள். ஆண்டவனுடைய தரிசனம் கிடைத்தால் தான் தன் மனத்துக்கு இனி அமைதி உண்டாகும் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் ஆண்டவனுடைய தரிசனம் சொர்க்கத்திலேதானே கிடைக்கும்! சொர்க்கத்துக்குப் போவதென்றால் – சாவைப்பற்றி என்ணியதுமே அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன் மகள் சிறு வயதில் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, ”கடவுளே, என்னைக் கொண்டுபோ; இந்தக் குழந்தைக்கு உயிர்ப் கொடு!” என்று அவள் மிகவும் மகிழ்ச்சியோடு வேண்டிக் கொண்டது உண்டு. அதற்குப் பிறகு எத்தனையோ ஆண்டுகள் கடந்துபோயின என்பது உண்மை! ஆனால் சாவைப்பற்றி நினைத்ததும், முன்னைக் காட்டி இப்பொழுது உயிர் விடுவது அவளுக்குக் கஷ்டமாகத் தோன்றிற்று. “நமக்குச் சாவே வேண்டாமே! ஆனால் உயிரோடு இருந்து மட்டும் நாம் என்ன செய்துவிடப் போகிறோம்! நமக்கு இந்த உலகத்திலே என்ன வேலை இருக்கிறது?” இப்படி அவள் எண்ணினாள்.

புராணம் நடந்து கொண்டிருந்த போதே அவள் ஒருதரம் வெளிப்புறம் பார்த்தாள். மாலைக் கரு நிழல் உலகத்தை இருட்டாக் கியது. மரத்திலிருந்து சருகுகள் உதிரும் ஓசை கேட்டது. கூட் டுக்குத் திரும்பும் காக்கைகளின் கூச்சல் ஓயாமல் காதில் விழுந்தது. பாட்டியின் மனத்தில் விசித்திரமான கருத்து உதித்தது. “மற்றப் பறவைகள் மட்டும் அமைதியாகக் கூட்டுக்குத் திரும்புகின்றன. ஆனால் இந்தக் காக்கைகள் கூச்சல் போடாமல் போவதில்லை.”

புராணம் முடிவதற்கு முன்பே இருள் கவிந்து கொண்டது. பாட்டி மெதுவாக எழுந்தாள். வழியில் அவள் கண்ணுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. ஆயினும் சோர்ந்த மன நிலைபிலே அந்த இருட்டில் நடந்துபோவது அவளுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.

வாசலில் அவளுடைய புதல்வர் நின்றிருந்தார். “என்னம்மா இவ்வளவு நேரம்! அதுவும் இந்த இருட்டிலே!” என்றார்.

பாட்டி ஏதும் பேசாமலே உள்ளே போனாள். ‘கோயிலுக்கு எடுத்துக் கொண்டு இவன் வந்திருந்தால், இவனுடைய அன்பை உண்மை சொல்லலாம்’ என்றது அவள் மனம். அவள் உள்ளே போய் பார்த்தபோது சமையலறையில் கடை கட்டியாகி விட்டது. குஸுமாவும் கோபுவும் சினிமாவுக்குப் போகும் ஆனந்தத்தில் மூழ்கியிருந்தார்கள். பிள்ளை தன்னையும் வாவென்று கூப்பிட வேண்டும்; அப்பொழுது “எனக்கோ கண் தெரிவதிலலை. எதுக்கடா பணத்தைக் கரியாக்குகிறாய்? நான் குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய்ப் பார்த்து வந்தால் நான் பார்த்த மாதிரிதான்’ என்று பதில் சொல்ல வேண்டுமென்று பாட்டி நினைத்தாள்.

ஆனால் இதே விஷயத்தை மருமகள் சொன்னபோது அவளுக்குப் பிரமாதமான கோபம் வந்து விட்டது. கைக்குழந்தையை வீட்டிலே விட்டுச் சினிமாப் பார்க்கப் போகும் மருமகளுக்குச் சரியான புத்தி புகட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் மறு கணம், மாலை நேரத்திலே அவள் கண்ட காட்சியை நினைத்துக் கொண்டாள். அவள் ஆற்றின் ஒரு கரையிலே இருக்கிறாள்; மற்றவர்கள் யாவரும் மறு கரையில் இருக்கிறார்கள். இனி அவர்களுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டுமே!

அவள் பூசையறையில் வுளுக்கு முன்னால் போய் உட் காசந்தான், நந்தா விளக்கில் திரி கருக்காடி யிருந்ததை அவள் பார்த்தாள். சுடரைத் தட்டாமலே அவள் வெகுநேரம் அமைதி யாக உட்கார்த்திருந்தாள். பிறகு ஆண்டவன் முன்பு லையைச் சாய்த்துத் தழுதழுத்த குரலில், “நாராயணா, இந்தப் பந்தத்திலிருந்து என்னை விடுவித்துவிடு, அப்பனே!” என்றாள். அவள் இப்படிச் சொல்லிவிட்டாள்; இந்தப் பந்தததிலிருந்து ஆனால் விடுபடமரணத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்பது கவனத்துக்கு வந்ததுமே, அவ என்னவோபோல இருந்தது. ஆனால் அவள் திரும்பி மறு கரைக்கு எப்படிப் போகமுடியும்? கடுவிலே ஆழமான வெள்ளம் ஓடுகிறதே!

பலகாரம் செய்வதற்காக அவள் பூசையறையிலிருந்து வெளிவந்ததும், வீட்டிலே இருந்த மற்றோர் உலகத்தின் மாறுதல் அவளுக்குத் தெளி வாகப் புலப்பட்டது. வெள்ளைப் புடவையைத் தவிர்த்து வேறு துணி அவள் உடம்பிலே பட்டுப் பல வருஷங்களாகி விட்டன. சினிமாவுக்குப் போவதற்குச் சிங்காரித்துக் கொண்டு வாத குஸுமாவை அவள் பார்த்தாள். ரோஜா நிறப் புதுப் புடவை, அதே கிறத்தில் பிளவுஸ், வட்டமான கூந்தற்கட்டு, இடதுகை மணிக்கட்டிலே பொன் கைக் கடிகாரம்! – நல்ல வேளையாக, அவள் முகத்திலே அப்பிக் கொண்டிருந்த பவுடர் பாட்டியின் கண்ணுக்குத் தென்பட வில்லை. ஆனால், அவள் தண்ணீர் குடிப்பதற்காகப் பாட்டியைத் தாண்டிச் சென்ற போது, ஏதோ ஒரு ஸென்டின் தீவிர நெடி பாட்டியின் மூக்கிலே அடித்தது. பாட்டி மூக்கை அழுத்தி மூடிக் கொண்டாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் குஸுமாவின் தாயும் அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்தாள். ‘அந்தப் பெண்ணுக்குத் தாய் தானே இவள்!’ என்று பாட்டி மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவள் நிலைக்கண்ணாடியிலே அழகு பார்த்துத் தலை பின்னிக் கொள்வது, பாட்டிக்கு அடியோடு பிடிக்கவில்லை. இம்மாதிரி உலகத்திலிருந்து தான் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக் கொண்டே போவது ஒரு விதத்தில் நல்லது தான் என்று பாட்டிக்குத் தோன்றிற்று.

ஆனால் குழந்தையைத் தொட்டிலிலே விட்டு, அவர்கள் எல்லோரும் வெளியே கிளம்பும் வரையில் தான் இந்த எண்ணம் நிலைத்திருந்தது. சிறிது நேரம் அவள் பூசையறையில் போய் உட்கார்ந்தாள். ஆனால் வீட்டிலே இருந்த நிசப்தமான அமைதி அவளை வாட்டியது. ‘நாம் எப்பொழுதோ இந்த உலகத்தை விட்டுப் போயாகி விட்டது. ஏதோ ஓர் ஆசையில் ஒட்டிக் கொண்டு இருந்ததனால் பிசாசாகி யிருக்கிறோம். இந்தக் கணத்திலே இதோ ஆண்டவன் முன்னால் உட்காரத்திருப்பது நாமல்ல; நம்முடைய பிசாசு!’ என்றுகூட அவளுக்குத் தோன்றிற்று

இதை எண்ணியதும் அவளுடைய இருதயம் படபட வென்று அடித்துக்கொண்டது. அவள் பூசையிலிருந்து வெளியே வந்து இந்த விளக்கைப் போடுவதும், அந்த விளக்கைப் போடுவதமாகச் சும்மா வீடு முழுவதும் சுற்றி வந்தாள். சமையலறையில் மூலையிலே நாலைந்து கரும்புத் துண்டுகள் கிடப்பதை அவள் இயல்பாகப் பார்த்தாள். பக்கத்திலேயே அரிவாள்மணை இருந்தது. பாட்டிக்குக் கருப்பு தின்ன வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. மறுகணமே அவளுக்குச் சுய நினைவு வந்தது. பொக்கைவாய்க் கிழவி எப்படிக் கரும்பு தின்ன முடியும்? அரிவாள்மணையைப் பார்த்து, “கிடக்கட்டும் சனியன்!” என்று சொல்லிவிட்டு, அவள் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

மருமகளின் அறைக்குள் போனதும் அவள் மனம் பட்ட பாடு சொல்லும் தரமல்ல. கட்டிலிலே தொங்கிய மெல்லிய கொசு வலை, மேஜை மேல் வைத்திருந்த விலையுயர்ந்த ரேடியோப்பெட்டி, சுவரிலே மாட்டியிருந்த அழகிய படங்கள் – எல்லாம் ஒரே உல்லாச உலகந்தான்! தரையில் விழுந்திருத்த கைக்குட்டை பாட்டியின் காலிலே பட்டது. இந்தக் கைக்குட்டைக்கு இவ்வளவு வெண்மை எப்படி வந்தது! இதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டால் என்ன என்று அவ்வளவு கோபம் வந்தது பாட்டிக்கு. மருமகளின் இந்த ஒய்யார வாழ்க்கை பாட்டிக்குச் சகிக்கவில்லை.

குழந்தைகளின் அறைக்குப் போனதும் அவளுடைய எரிச்சல் அதிகமாகிவிட்டது. குஸுமாவின் மேஜை மேல் கொண்டை யூசிகள் குவியலாகக் கிடந்தன. அருகிலே ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. பாட்டி அதை எடுத்து கண்ணருகே கொண்டு வந்து உற்றுப்பார்த்தாள். ‘நாசமாய்ப் போக!’ என்று சொல்லி க் கொண்டே அவள் அதை விட்டெறிந்தாள். அது ஒரு சமூக நாவல், அதன் அட்டைப் படத்தில், ஓர் இளைஞன் குனிந்து தன் காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்தான்!

கோபுவின் சட்டை ஆணியில் தொங்கியது. அதை மேலாகப் பார்த்துவிட்டு, அவனுடைய பலகை மேல் வைத்திருந்த புத்தகத்தைப் பாட்டி எடுத்தாள். விளக்கு வெளிச்சத்தில் போய் அதைப் பிரித்தாள். மிகவும் சிரமப்பட்டு இந்த வரிகளை மட்டும் படித்தாள்:

தாத்தாவுடைய உச்சிக்குடுமி
புசு புசுவென்று பறக்குது பார்!
வளைந்து நிற்கும் பாட்டினுயிடைய
பொக்கைவாய்ச் சிரிப்பின் அழ
கைப்பார்!

மிகுந்த வெறுப்போடு அவன் அந்த புத்தகத்தைத் தூர எறிந்து விட்டு, அவசரமாக வெளியே வந்து வாசற் கதவைத் திறந்தாள். வெளியே மையிருள் பரவிருந்தது. வாசல் முற்றத்தில், பழைய பந்தலில் ஏற்றிய மல்லிகைக் கொடி எங்கும் நறுமணததை வீசியது. ஆனால் பாட்டிக்கும் அந்த மணத்துக்கும் சம்பந்தமே இல்லை.

அவன் விளக்குகளையெல்லாம் அணைத்தாள்; மறுபடி பூசையறைக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் உள்ளத்தில் கடுமையான வேதனை உண்டாயிற்று. அவள் யாருக்காக உயிர் வாழ்கிறாள் என்பதே அவளுக்கு விளங்க வில்லை. கடவுளின் முன்னால் தலையைச் சாய்த்து அவள் பேசாமல் படுத்திருந்தாள்.மூடிய அவள் கண்முன்பு, அவளுடைய வாழ்க்கை முழுவதும் பறவையைப் போலப் பறந்து மறைத்தது, அந்தப் பாதி மயக்கத்தில், ‘இத்தனை வருஷங்கள் நாம் வாழ்ந்தோம்’ என்பதே அவளுக்கு உண்மையாய்ப் படவில்லை. எதற்காக, யாருக்காகத் தன் உயிர் இந்த இளைத்த உடம்பிலே இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க, அவள் மனம் சோர்ந்து போயிற்று. இந்தச் சோர்வினால்தானோ என்னவோ, அவள் கண் அயர்ந்தது.

சிறுது நேரத்துக் கெல்லாம் யாரோ கதவைத் தட்டினார்கள். தூக்கம் கலைந்ததனால் சிடு சிடுப்போடு பாட்டி கண்ணைத் திறந்தாள்.

நந்தா விளக்கு அணைந்திருந்தது. இருட்டில் தடுமாறிக் கொண்டே வெளியே வந்து, அவள் மின்சார விளக்கைப் போட்டாள்; வாசற்கதவைத் திறந்தாள். சினிமாவுக்குப் போனவர்கள் திரும்பி வந்திருந்தார்கள்.

“குழந்தை எழுந்ததா என்ன?” என்று மருமகள் கேட்டாள். பாட்டி பேசவே இல்லை.

மருமகள் தொட்டிலினருகே சென்று, குழந்தையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே, “அடியம்மா! குழந்தை சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறதே! அட என் ராஜா, இந்த ஈரத்திலே யாடா நீ தூங்கினாய்!” என்று கூறிய வண்ணம் குழந்தையை எடுத்துத் துடைத்து, அன்போடு முத்தமிட்டாள்.

இதைப் பார்த்ததும், ‘நான் சற்று நேரம் முன்பு துணைக்காக வீடு முழுவதும் தேடினனே. குழந்தையிடம் மட்டும் நான் போகவில்லை. வீட்டிலுள்ள மற்றவர்களின் உலகம் என் உலகத்தினின்றும வேறுபட்டிருக்கலாம். ஆனால் குழந்தையின் உலகம் வேறுபட்டதா?’ என்று பாட்டிக்குத் தோன்றிற்று. அவள் குழந்தையை எடுத்துக் கொள்ள முன் வந்தாள்; அதற்குள் மருமகள் கோபத்தோடு அதைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போய்விட்டாள்.

இருளடர்ந்த பூசையறைக்குள்ளே போய், பாட்டி கண்ணைத் துடைத்துக்கொண்டாள். குழந்தையோடு தானும் ஒட்டிக் கொள்ளலாம் என்று பாட்டி நினைத்தாள். ஆனால் அவளுக்குக் குழந்தையிடம் என்ன உரிமை இருக்கிறது? இப்பொழுது தாயின் அணைப்பிலே குழந்தை சிரித்துத் தூங்கக்கொண்டிருக்கும். பாட்டிக்கோ இனி இரவு முழுவதும் தூக்கம் வரப்போவதில்லை.

தனிமை-எப்போதும் அழியாத தனிமை – இனி அவள் வாழ்க்கையிலே என்ன மகிழ்ச்சியை உண்டாக்கப் போகிறது!

நந்தா விளக்கை ஏற்ற வேண்டு மென்று அவள் ஆயிரம் தடவை நினைத்தாள். ஆனால் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. ‘ஆண்டவன் இருட்டில்தான் இருக்கட்டுமே’ என்ற எண்ண, அவளுடைய சிரத்தைக்குச் சிறிதும் பொருந்தாத எண்ணம் கணப்பொழுது தோன்றின.

இதற்குள் ‘குழந்தையின் அழுகை கேட்டது. அது பலமாக அழுதது. பாட்டி தன் இடத்தை விட்டு அசையவில்லை. ‘பூசையறையிலே இருப்பார்!’ எனறு மருமகள் சொல்லிய வார்த்தை அவள் காதில் விழுந்தது.

பாட்டி அவசரமாக எழுந்து நந்தா விளக்கை ஏற்றினாள்.

குழந்தையை எடுத்துக் கொண்டு அதன் தாய் உள்ளே வந்தாள். அந்தக் குழந்தை “பாத்தி-பா-த்-தி” என்று கூவிக்கொண்டு அவள் மேல் தாவியது.

“எழுந்ததமே பாட்டி பாட்டி என்று உங்களிடம் வர அடம் பிடித்தான். எவ்வளவோ தட்டினேன். விளையாட்டுக் காட்டினேன். ஆனால் பாட்டி பாட்டி என்று புலம்பிக்கொண்டே யிருந்தான். உங்களுக்குச் சிரமமாக இருக்குமே என்று பார்த்தேன்…”

“சிரமம் என்னடி எனக்கு? இந்தக் கண்ணான குழந்தையோடு கொஞ்ச என்ன சி ரமம்?” என்று பாட்டி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

குழந்தையின் தாய் தூங்கப் போனாள். பாட்டி குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட வாசலுக்கு எடுத்து வந்தாள். “அதோ விளக்கு, விளக்கு!” என்று ஆகாயத்திலிருந்த நட்சத்திரங்களை அவனுக்குக் காட்டினாள். இப்போது அவன் மனதில் வேறு எண்ணம் தோன்றியது. முன் போலவே இப்போதும் பூமியில் இருள் சூழ்ந்துதான் இருந்தது, ஆகாயத்தில் தாரகைகள் மினுமினுத்தன. காற்றலையோடு மல்லிகை மலரின் மணமும் வீசியது. அந்தப் பழைய பந்தலின் வாழ்க்கை – தரையிலே ஊன்றிக் கொண்டு அது நிற்பது – மல்லிகையின் இந்த இனிய மணத்துக்காகத்தான் என்பதை உணர்ந்ததும் பாட்டியின் மனம் அமைதி யடைந்தது.

மகிழ்வுற்ற அவள் மனம், “ஆண்டவனின் வீட்டிலிருந்து சமீபகாலத்தில் வந்த உயிரும், ஆண்டவனின் வீட்டுக்கு விரைவிலே செல்லப்போகிற உயிரும் உறவு கொண்டாடுவதில் என்ன தடை இருக்கிறது?” என்று பேசியது.

தாய் சொல்லவே, குஸுமா குழந்தையைத் திரும்பி எடுத்துக் கொண்டு போக வந்தாள்.

‘யமுனை நதிக்கரையில்
கண்ணன் குழலூதுகிறான்’

என்ற முணுமுணுத்துக் கொண்டே அவள் வந்தாள்.

அவள் முணுமுணுத்த அந்தப் பாட்டைக் கேட்டு, குழந்தையைப் போலவே பாட்டிக்கும் புகலரிய ஆனந்தம் உண்டாயிற்று.

நன்றி: https://s-pasupathy.blogspot.com/

– மூலம்: வி.ஸ.காண்டேகர், மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.

– ‘சக்தி’ இதழில் 1948-இல் வந்த கதை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *