பழக்கம்..! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 29,283 
 
 

வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம்.

“ஏய் நில்லுடி. ! ‘’ நாற்காலியை விட்டு எழுந்து நின்று அதட்டல் போட்டாள்.

நின்றாள் கல்லூரி மாணவி மீரா.

“எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து..? “வெடித்தாள்.

“எது…? “மீரா தாய் அதட்டல் உருட்டலுக்கு அதிராமல் மிரளாமல் திருப்பிக் கேட்டாள்.

“நீயும் விமலும் .சந்திக்கிறது, பேசுறது, ஒன்னா கல்லூரி போறது..?”

“ரெண்டு வருசமா நடக்குது..?”

“ஓகோ..! எத்தனைத் தடவைக் கண்டிச்சாலும் நீங்க கேட்க மாட்டீங்களா..? “லைலா கோபத்தின் உச்சியில் கத்தினாள்.

“கேட்க முடியாது. ! ” இவளும் விடாப்பிடியாக ஆணித்தரமாகச் சொன்னாள்.

“அவ்வளவு .திமிரா.? இப்போ நான் அடக்குறேன் உங்க கொட்டத்தை..! ‘ என்று வெகுண்ட லைலா அடுத்து தன் கைபேசி எடுத்து… எண்களை அழுத்தி, ஒலிபெருக்கியையும் உயிர்ப்பித்து…..

“மிஸ்டர் சந்திரசேகரன்..! ” என்று அதட்டலாக அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம்.!” எதிர் முனையில் குரல்.

“உங்க பையன் என் பெண்ணோட பேசறான், பழகறான், கெடுக்கிறான்….”

“அதைத்தான் மேடம் நானும் இங்கே கேட்டு கண்டிச்சிக்கிருக்கேன்.”

“அப்படியா…! என்ன சொல்றான்..?”

“அவன்கிட்ட போன் தர்றேன். அதை நீங்களே கேளுங்க..”

“ஹலோ..”

“என்னப்பா..?”

“ஒரே ஊர்ல இருந்து, பெத்த குழந்தைங்களை ஆளுக்கொன்னா பிரிச்சி வளர்க்கிறது உங்களுக்கு வேணுமின்னா சரியா இருக்கலாம். உங்களுக்கு விவாகரத்துக் கொடுத்த சட்டத்துக்கும் அது முறையாய் இருக்கலாம். ஆனா.. அண்ணன், தங்கச்சியை பொறந்த எங்களுக்கு அது சரி இல்லே. நாங்க சகோதரப் பாசம் தெரியாம வளர, வாழ விரும்பலை. முடிஞ்சா நீங்களும் சேர்ந்து வாழுங்க. இல்லாட்டி எங்களை பழக விடுங்க. எங்க சகோதரன், சகோதரி பாசம்,நேசம், பழக்கத்துக்குக் குறுக்கே நிக்காதீங்க. மீறி நின்னா… இதுக்குப் பதில் சொல்லக் சொல்லி நாங்க கோர்ட்டுக்குப் போவோம். ஆமாம் ஜாக்கிரதை !” நிறுத்தினான் விமல்.

லைலா முகத்தில் அதிர்ச்சி. சிந்தனைக் கோடுகள். சிலையாக நின்றாள்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *