பளிங்குக் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 108 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன யோசிக்கிறாய் ஸர்தார்?” என்று மறுபடியும் கேட்டார் பாதுஷா ஷாஜஹான். 

“ஒன்றுமில்லை, ஸர்க்கார். உள் அறையில் பேகம் ஸாஹிபாவின் சமாதிக்கு மேலே வைத்துப் பதிக்க வேண்டிய கடைசிப் பளிங்குக் கல்தான் பாக்கி” என்று தயக்கத்துடன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பதித் தான் ஸர்தார் ஷேர்கான். குதிரை வீரனுக்குச் சவுக்கைப் போல, பாதுஷாவுக்கு ஷேர்கான். ஆக்ராவின் தலைமை சேனாதிபதி அவன். 

“எந்தக் கல்லைச் சொல்லுகிறாய் ஸர்தார்?” என்று கேட்டார் பாதுஷா ஆவலோடு. 

“பளிங்குக் கல் ஒன்றை இதயத்தின் வடிவத்தில் செதுக்கி அதில் நரம்புகள் ஓடுவது போலப் பச்சைக் கற்களையும், சிவப்புக் கற்களையும் பதிக்கவேண்டும் என்றீர்களே 

“ஆமாம்; அதற்கா இத்தனை நாள் பிடிக்கிறது?” என்று கேட்டார் பாதுஷா. 

இவ்வளவு பெரிய மஹலை இத்தனை அழகாகச் செய்து முடித்த சிற்பிகளால், இந்த இதயத் துண்டு ஒன்றைச் செதுக்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆக வேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. 

“பதினேழு வருஷங்கள் ஆகிவிட்டன. இன்னும் என் கனவு பூர்த்தியாகக் காணோமே!” என்று ஒரே கவலையோடு சொன்னார் பாதுஷா. 

“இல்லை, ஸர்க்கார். எல்லாம் முடிந்துவிட்டதே, இந்த ஒரு சிறு வேலைதானே பாக்கி? இதையும் பாரஸீகத்திலிருந்து உஸ்தாத் ஈஸாவுடன் வந்திருக்கும் பிஜ்லீகானிடமே ஒப்படைத்திருக்கிறேன். முடிந்து விடும்…” 

பாதுஷா பளிச்சென்று கேட்டார்: “பிஜ்லீயா? அவன் ஒரு பெரிய சோம்பேறியல்லவா?” 

“இல்லை, ஸர்க்கார்! இந்தத் தாஜ்மஹாலைக் கட்டுகிற பெரும் பணியில் பிஜ்லீகானின் உழைப்புத்தான் அற்புதமானது. ஐம்பத்தெட்டு அடி குறுக்கு விட்டமுள்ள உள் விதானம் முழுதும் அவனுடைய வேலைப்பாடுகள்தான். உஸ்தாத் ஈஸாவே அவனுடைய கலைத் திறமையைப் பிரமாதமாக மெச்சுகிறார்…” என்று பெருமிதத்தோடு சொன்னான் ஷேர்கான். 

“ஆனால் முழுச் சோம்பேறி. அப்படித்தானே?’ 

“இல்லை ஸர்க்கார். இங்கே வேலை செய்யும் முப்பதி னாயிரம் சிற்பிகளிலும் பிஜ்லீகானுக்கு நிகர் யாருமே கிடையாது. ஆனால் சில சமயங்களில் பளிங்குக் கல்லுக்கு எதிரே இருந்து ஒரே சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறான். இரவு கழிவதும் உதயம் ஆவதும் கூடத் தெரியாமல் பித்துப் பிடித்தாற்போல உட்கார்ந்து விடுகிறான். அவனைச் சுய நினைவுக்குக் கொண்டு வருவதே பெரும் பாடாகி விடுகிறது. பல இரவுகளில் பளிங்குக்கு முன்னால் ஒரே ஏக்கத்தோடு உட்கார்ந்து கண்ணீர் வடிப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன்” என்று விவரமாகச் சொன்னான் ஸர்தார் ஷேர்கான். 

“ஆதாப் அரஸ்” என்று சொல்லி வணங்கி அந்த நேரத்தில் மஜ்லீஸுக்குள் வந்தான் சிற்பத் தலைவன் உஸ்தாத் ஈஸா.. தாஜ்மஹலைக் கட்டுவதற்கு என்றே பாரஸீகத்திலிருந்து வந்திருக்கிற அதிசயத் திறமை வாய்ந்த அபூர்வ சிற்பி அவன். அவனோடு உதவிக்கு வந்தவன் தான் பிஜ்லீகான். 

“ஆதாப் உஸ்தாத்” என்று அவனைப் பரிவோடு வரவேற்றார் பாதுஷா. முழங்காலை மண்டியிட்டு வணங்கிய உஸ்தாத் ஈஸா எழுந்து, ஸர்தார் ஷேர் கானுக்கு அருகில் ஒதுங்கி நின்றுகொண்டான். 

“என்ன உஸ்தாத், தாஜ்மஹல் பூர்த்தியாகி விட்டது என்றெண்ணி, அதைத் திறப்பதற்குக்கூட நாள் குறித்துவிட்டார் நமது அக்தர் ஷுமார். உம் முடைய பிஜ்லீகான்தான் திட்டத்தையெல்லாம் குலைத்து விடுவான் போலிருக்கிறது” என்றார் பாதுஷா. 

“ஸர்க்கார்! நாளைக் காலைக்குள் இதயப் பளிங்கு பூர்த்தியாகிவிடும். பிறகு அதைச் சமாதியிலே வைத்துப் பதிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது!” 

“அது சரி; பொருத்துவது ஒன்றும் பிரமாதமில்லை. இதயம் தயாராக வேண்டுமே!” என்று கேட்டார் பாதுஷா. அந்த வார்த்தைகளில் ஆற்ற முடியாத கவலை தொனித்தது. 

“ஸர்க்கார்! பேகத்தின் நினைவுக்குத் தங்களுடைய இதயத்தின் கடைசிக் காணிக்கை மகத்தானது அல்லவா? அதனால்தான் கொஞ்சம் நாள் பிடிக்கிறது போலும்” என்றான் உஸ்தாத். 

“நாளை மறுபடி வருகிறேன். அந்தச் சோம்பேறி மீண்டும் ஏதாவது சால்ஜாப்புச் சொன்னால் பிறகு என்னையும் மீறிக் கோபக்காரன் ஆகிவிடுவேன்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பாதுஷா நகர்ந்தார். 

“ஜீ ஸர்க்கார்” என்று பணிவோடு ஸலாம் செய் தான் உஸ்தாத் ஈஸா. 

“ஜீ ஸர்க்கார்” என்று ஒப்புக்கொண்டு உறுதி சொன்னபோது, உஸ்தாத் ஈஸாவுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால், மறுநாள் நடந்தது என்னவோ வேறு விதமாக இருந்தது. நடந்தது என்றால் நடக்காதது! 

ஆமாம்; மறுநாள் ஒரு வேலையும் நடக்கவில்லை. பாதுஷா வந்தார். ஆவலோடு கேட்டார், “இதயம் பூர்த்தியாகி விட்டதா?” என்று. 

“ஸர்க்கார்! மன்னிக்க வேண்டும். இன்று மாலைக்குள் நிச்சயம் முடிந்துவிடும். அது முடியும்வரை நானும் பிஜ்லீகானுக்கு எதிரிலேயே இருந்து கவனிக்கிறேன்” என்றான் உஸ்தாத் ஈஸா. 

பாதுஷாவின் முகத்தில் இருந்த துன்பக்குறி கோப மாக மாறியது. பக்கத்திலே நின்ற ஸர்தார் ஷேர்கானை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்தார். 

“ஸர்தார்! அந்த பிஜ்லீகானைக் கொண்டு வாரும் இங்கே! மனைவியைப் பிரிந்து தவிக்கும் ஒரு கணவ னுடைய இதயத்தின் ஆவலைக் கொஞ்சங்கூடப் புரிந்து கொள்ளாத வெறுங்கல்லா அவன்?” 

இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்ததுதான் தாமதம், யந்திரம் போலச் சுழல்கிற ஒரு சப்ராஸீ, விறு விறு என்று சென்று பிஜ்லீயை அப்படியே அலக்காகக் கொண்டு வந்து பாதுஷாவின் முன்பு நிறுத்தினான். 

“இதயப் பளிங்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் பாதுஷா, உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு. 

பிஜ்லீகான் பதிலே பேசவில்லை. 

“வேலை எந்த மட்டில் இருக்கிறது என்று கேட் டேன்!” -பாதுஷாவின் வார்த்தைகளில் சற்றுக் கடுமை உண்டாயிற்று. 

அப்பொழுதும் பிஜ்லீகான் பேசவில்லை. உஸ்தாத் ஈஸா குறுக்கிட்டுச் சொன்னான்: 

“பாதி வேலை ஆகிவிட்டது.  இன்று பொழுது சாய்வதற்குள்…” 

“பாதிதான் ஆகியிருக்கிறதா, பிஜ்லீ? உண்மை யைச் சொல்” என்று மறுபடியும் பிஜ்லீகானையே கேட்டார் பாதுஷா. கோபத்தினால் அவருடைய உடம்பு முழுதும் படபடத்தது. 

“உண்மையைச் சொல்கிறேன். இன்னும் அந்த வேலையை நான் ஆரம்பிக்கவே இல்லை” என்று ஏதோ ஒரு கனவு உலகிலிருந்து பேசுபவன் போலச் சொன்னான் பிஜ்லீகான். 

“ஆரம்பிக்கவே இல்லையா? பிஜ்லீ! என்னுடைய ஆசையும் ஆவலும் கொஞ்சமாவது உனக்குத் தெரிந்திருக்கிறதா? கல்லோடு பழகிப் பழகி நீயும் கல்லாகி விட்டாயா?” 

“ஸர்க்கார்! உணர்ச்சியற்ற கல்லுக்கு உணர்ச்சி கொடுக்க வேண்டியவன் நான். அதற்குத் தேவையான மனநிலை வரமாட்டேன் என்கிறது.” 

இந்தப் பதில் வந்ததோ இல்லையோ, பாதுஷாவுக்குச் சினத்தினால் கண் சிவந்தது. 

“மன நிலையா? வரமாட்டேன் என்கிறதா? அதை வரவழைக்கிறேன், பார்!” என்று சொல்லிக்கொண்டே, ஷேர்கானுடைய கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கினார் பாதுஷா. மறுகணம் ‘பளார் பளார்’ என்று சவுக்கின் நீண்ட வார், பிஜ்லீகானின் இடுப்பைச் சுற்றி நெளிந்தது. சுருண்டான்; சுருண்டு விழுந்தான். மின்னலைப்போலத் துடித்தான் பிஜ்லீ. அங்கு கூடியிருந்த அத்தனை பேரும், எதிர்பாராத இந்த சம்பவத்திலே சொல்லற்றுச் செய லற்று மரமாக நின்றார்கள்! 

அடுத்த வினாடி ஒரே அங்கலாய்ப்போடு அந்த இடத்தைவிட்டு அகன்றார் பாதுஷா. 

சூரியன் விடைபெறும் நேரம். மேற்கு வானத்தின் கடைசிக் கதிர்கள் யமுனை நதியிலே வீழ்ந்து, கரையிலே உள்ள பாதுஷாவின் கோட்டையை வளைத்துப் பிரதி பலித்துக்கொண்டிருந்தன.கோட்டைக்கு உள்ளேயோ?… பிஜ்லீகானின் இடுப்பிலே சுருண்ட சவுக்கு பாதுஷா ஷாஜஹானின் இதயத்திலே எத்தனையோ உணர்ச்சிகளைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் தன்னைத் தனியே தவிக்கவிட்டு மறைந்து போன மும்தாஜ் பேகத்தின் நினைவாக நிறுவப் போகும் அந்தப் பெரிய மஹலில், ஒரு மிகச் சிறிய பளிங்குத் துண்டுக்காக எவ்வளவு ஆத்திரமான நிகழ்ச்சி நடந்துவிட்டது! மனித இதயம் என்பது அவ்வளவு அரிய பொருளா! அதைக் கல்லினாற் செய்வதுகூட அவ்வளவு கஷ்டமா!-பாதுஷா ஒரே கலக்கத்தில் உட்கார்ந்திருந்தார். 

“ஸர்க்கார்” என்று குரல் கேட்டது. உஸ்தாத் ஈஸா உள்ளே நுழைந்தான். 

“கல்லைச் செதுக்கியாயிற்று, திறப்பு வைபவத்துக்கு இனி ஒரு இடையூறும் இல்லை. இதைச் சொல்வதற்குத் தான் இப்பொழுது இங்கேயே நேரே வந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்.’ 

“உஸ்தாத்! எப்பொழுதுமே வார்த்தையைவிடச் சவுக்குக்கு வலிமை அதிகந்தான்போலும்! ஆனாலும் அந்தச் சோம்பேறி பிஜ்லீ, நம் எல்லாருக்கும் எவ்வளவு மனக் கஷ்டத்தைத் தந்துவிட்டான்! அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. பரவாயில்லை, சென்று வாரும். உம்முடைய பரிவுக்கு மகிழ்ச்சி.” 

உஸ்தாத்தை அனுப்பிவிட்டு, கோட்டையின் மாடிப் படிகளிலே ஏறிச் சயன அறைக்கு வந்தார் பாதுஷா. 

“இதயப் பளிங்கைச் செதுக்கி ஆய்விட்டது என்றான் உஸ்தாத் ஈஸா. அந்தக் கல் எப்படி இருக்கிறதோ? சவுக்கினால் அடித்த அடியில் அவசரம் அவசரமாக ஏதோ ஒப்பேற்றி விட்டானோ பிஜ்லீ? இராது. அப்படி ஒப் பேற்றும்படி விடமாட்டாரே உஸ்தாத் ஈஸா! அல்லது, ஒருவேளை அவரும் சவுக்குக்குப் பயந்து போயிருந்தால்?” 

இந்த மாதிரி யோசனைகளின் புகைக் குமைப்பில் மனம் கலங்கி, இரவு வெகு நேரம் வரை நிம்மதியே இல்லை. அறைக்கு வெளியே நிலா முற்றத்துக்கு வந்தார். எதிரே யமுனை நதி. வானத்திலிருந்து ஒரு பேரருவி போல் பொழிந்து கொண்டிருந்த நிலவில், நதியின் வெள்ளி மணற்பரப்பில் தன்னுடைய பளிங்குக் கனவு வளர்ந்தோங்கி நின்றதை இமை கொட்டாமல் பார்த் தார் பாதுஷா. அடுத்த நிமிஷம் அந்த பிரும்மாண்ட மான மஹலுக்குள் இருந்த சமாதி மனக் கண்முன் தெரிந்தது. அந்தச் சமாதியினுள் அமர நித்திரை செய்யும் தன் அருமை மனைவி எழுந்து வந்து, அந்த நிலா ஒளியில் தன் எதிரே நிற்பதுபோல ஒரு பிரமை. ‘மும்தாஜ்’ என்று தன்னையும் மறந்து பரிவோடு அழைத் தார். கண் கலங்கியது. அப்படியே சயன அறைக்குள் வந்தார். விரைவாக எதையோ தேடினார். 

ஆக்ரா நகரத்துக்குள் சில இரவுகளில் மும்தாஜ் பேகத்தின் யோசனைப்படி மாறு வேஷத்தில் பாதுஷா உளவு செல்வதுண்டு. அதற்குத் தேவையான தாடியும், ஒட்டுப் போட்டுத் தைத்த நீண்ட லுங்கிச் சட்டையும் மாடத்தினுள்ளே கவனிப்பில்லாமல் கிடந்தன. பாதுஷா அவற்றை யெல்லாம் எடுத்தார். வெகு துரிதமாக அணிந்துகொண்டார். நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று விளக்கைச் சற்றுத் தூண்டி விட்டுக் கொண்டு பார்த்தார். 

உண்மையில், அவருக்கே அவரை அடையாளம் தெரியவில்லை! மும்தாஜ் எவ்வளவு கெட்டிக்காரி! அவள் கைப்படவே தைத்துக் கொடுத்த அங்கி அல்லவா அது? தன் கணவனை இன்னொருவர் இனங் கண்டுவிடக்கூடாது என்பதில்தான் அவளுக்கு எத்தனை கவனம்! 

பாதுஷா அதையெல்லாம் எண்ணி ஏக்கப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே வெளியே வந்தார். 

‘ஆக்ராவின் புதல்வி’ என்று அழைக்கப்படும் யமுனையின் கரையில், நிலவு மங்கிக்கொண்டு வந்தது. விடிவதற்குச் சற்று முன்பு கவியுமே, ஒளிகலந்த ஒரு இருட்டு, அந்த ஈரடியான நேரத்தில் யாரோ ஒரு நாடோடியைப்போல பாதுஷா ஷாஜஹான் நடந்து சென்றார். தாஜ்மஹலுக்குள்ளே இருக்கும் அந்த இதயக் கல்லைப் போய்ப் பார்த்து, சமாதிக்குள்ளே கண் அயரும் தம் மனைவிக்குத் திருப்தியாக இருக்குமா என்று தெரிந்து வந்துவிட வேண்டும் என்பதே அவர் ஆசை. 

யமுனையின் கரையில் மரம் அடர்ந்த அந்தப் பிரதே சத்தில், சிறு சிறு சமாதிகளாக நின்ற பாழிடத்தில், அதோ ஒரு சின்னஞ் சிறு சமாதிக்கு முன்னால் யாரோ நிற்கிறானே? பாதுஷா சற்றுத் தயங்கினார். பிறகு ஏதோ யோசித்தவர் போல மேலே நடக்க ஆரம்பித்தார். என்ன விந்தை; அந்த இடத்தை நெருங்க நெருங்க அவருடைய உள்ளத்தில் திகைப்பு அதிகரித்தது. காரணம், அந்த மனிதன் வேறு யாருமில்லை, பிஜ்லீகான் தான்! 

பாதுஷா, தமது திகைப்பையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவனிடம் மெதுவாகக் கேட்டார்: “பாயீ, முஸாபீர்கானா எங்கே இருக்கிறது?” 

“முஸாபீர்கானாவா! நீங்கள் யார்? இந்த நேரத்தில் கேட்கிறீர்களே?” என்றான் பிஜ்லீ. 

“பாயீ, தாஜ்மஹலின் திறப்பு விழா 

நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டு, அந்த வைபவத்தைப் பார்க்க தில்லியிலிருந்து வருகிறேன். வழி தெரியாமல் இரவெல்லாம் எங்கெங்கோ சுற்றிவிட்டேன்” என்று பதில் சொன்னார் மாறு வேஷத்தில் இருந்த பாதுஷா. 

“அதோ தெரிகிறதே, ஒரு பெரிய பளிங்குக் கட்டடம். அதற்குப் பக்கத்திலேயே இருக்கிறது முஸாபீர் கானா!’ 

“அந்தப் பளிங்குக் கட்டடம்?” 

“அதுதான் தாஜ்மஹல். பாதுஷாக்களின் மனைவி மார்கள் இறந்து போனால், இப்படித்தான் பளிங்கு மஹல் நிற்கும்” என்று சொன்னான் பிஜ்லீகான். அவனுடைய குரல் ஏனோ கம்மிற்று. அவன் நின்றுகொண்டிருந்த அந்தப் பாழடைந்த சிறிய சமாதிக்கு மேலே சாய்ந்து, உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் பிஜ்லீ. 

“பாயீ, ஏன் மனசை இப்படித் தளரவிடுகிறீர்கள்? என்ன குழந்தை-மனம் உங்களுக்கு!” என்று பரிவு கனியக் கேட்டார் பாதுஷா. 

“குழந்தை மனமா? எனக்கா! நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். ஆனால்……? கல்லோடு பழகிப் பழகி நானும் கல்லாகிவிட்டேன் என்றல்லவா பாதுஷா சொன்னார்? மனைவியைப் பிரிந்த ஒரு கணவனுடைய மனம் எனக்குப் புரியவில்லையாம்! உண்மைதானே!- இந்தப் பாழடைந்த சமாதிக்குமேல நான் ஒரு பளிங்கு மஹலா எழுப்பியிருக்கிறேன்?” என்று ஆத்திரத்தோடு கேட்டான் பிஜ்லீகான். மாறு வேஷத்தில் நின்ற பாதுஷாவின் உள்ளத்திலே சொல்ல முடியாத வேதனை தோன்றியது. 

“பாயீ, அப்படியானால் இந்தச் சமாதிக்குள்ளே இருப்பது…” 

“ஆமாம்; என் மனைவிதான். ஆக்ராவின் செம் மண்ணிலே வந்து சாவதற்கு என்றே என்னோடு பாரஸீகத்திலிருந்து வந்தாள் அவள்!” 

அந்த வார்த்தைகள் ஆழமான வெள்ளத்திலிருந்து வரும் சுழிகளைப் போலச் சுழன்று வந்தன. தொண்டையை இருமிக்கொண்டு பிஜ்லீ சொன்னான்: 

”போய் வாருங்கள், முஸாபீர்! என் கதை ஒரு சோக நாடகம். அதைக் கேளாதீர்கள். தாஜ்மஹலைக் கட்டுகிற ஒரு சிற்பியின் மனைவி, இந்தப் பாழடைந்த சமாதிக்குள்ளே வெய்யிலுக்கும் மழைக்கும் ஒதுங்கி மறைந்து கிடக்கிறாள் என்று எண்ணும்போது என்னால் தாங்க முடியவில்லை. பளிங்குக் கல்லுக்கு முன்னால் உட் காரும்போது, சில சமயங்களில் அதை நினைத்து விடு வேன். அவ்வளவுதான். வேலை ஓடாது. என் இதயத் தையே உளி கொண்டு செதுக்குவதுபோல இருக்கும்!” 

மாறுவேஷத்தில் இருந்த பாதுஷா, அந்த நீண்ட லுங்கிச் சட்டையின் விளிம்புகளைக் கொண்டு பிஜ்லீ கானின் கண்களிலிருந்து பெருகி வரும் கண்ணீரைத் துடைத்தார். 

“சென்று வாருங்கள், முஸாபீர். உங்கள் இரக்கத் துக்கு அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பான்!” 

பதினேழு ஆண்டுகளாகப் பளிங்குக் கல்லும், ஒரு கணவனுடைய இதயத்தில் பளிங்குக் காதலும் சேர்ந்து தவங் கிடந்து, சிற்பக் கனவாய் உருவாகி யமுனைக் கரை யிலே நின்றது. அந்த வைபவத்தைக் கொண்டாடு வதற்கு என்று சிற்றரசர்கள், பேரரசர்கள், இனாம்தார் கள், பக்கீர்கள், மௌல்விகள், சிற்பிகள்-இப்படியாக ஒரே கூட்டம், 

ஒட்டகை பூட்டி ஆடி அசைந்து வரும் வண்டிகள், முகபடாம் போர்த்து அசைகின்ற மலையென நடந்துவரும் யானைகள், படபடவென்று நெரித்துக்கொண்டு ஓடும் துருக்கி நாட்டு ஜாதிக் குதிரைகள், சல்லாத் திரையிட்டுக் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் பல்லக்குகள்-இப்படியாக ஒரே ஊர்வலம்! 

வாணங்கள் வானத்திலே சீறின! அதிர்வேட்டுக்கள் முழங்கின! ஷனாய் வாத்தியத்தின் ஒலி, சோகம் என்ற வர்ணத்தைக் குழைத்துத் தீட்டிய ஒரு நாத சித்திரமாகத் தாஜ்மஹல் முழுதும் வியாபித்து நின்றது! 

ஷாஜஹான் சக்கரவர்த்தி ஆடம்பர ஆடைகள் ஏது மின்றித் தம் மனைவி கைப்படத் தைத்துக் கொடுத்த அந்த லுங்கிச் சட்டையை அணிந்துகொண்டு ஒரு பக்கீரைப்போல வந்தார். வலது காலை முன்னே வைத்து மஹலின் முகப்பில் நுழைந்ததும், மௌல்விகள் திருக் குர்ஆன் ஓதி அந்த வரவைப் புனிதப்படுத்தினார்கள். ராஜ வாத்தியங்கள் அந்த வருகைக்குக் கட்டியம் கூறின. 

பளிங்கு ஓடைகளையும், அந்த ஓடைகளின் வழியாகத் தண்ணீர் பாய்ந்து வளர்க்கும் பூஞ்செடிகளையும் கடந்து உளப் படிகளிலே ஏறி, தாஜ்மஹலின் நெஞ்சகத்தில் உள்ள மனைவியின் சமாதி-அறைக்குள்ளே வந்தார், பக்கீர்களோடு பக்கீராக ஷாஜஹான்! சோகமயமான அந்தக் காட்சியிலே, ஷனாய் வாசித்துக் கொண்டிருந் தவன் மனம் உருகிப் போய்ப் பொங்கிவரும் துக்க வெள் ளத்தையெல்லாம் ஷனாய் வாத்தியத்தின் சிறு துவாரங் களின் வழியாக ஓடவிட்டான். 

சமாதிக்கு எதிரே அடுக்கு ரோஜா மலர்களைக் கொண்டு செய்து, உயர்ந்த பாரஸீகப் பன்னீர் தெளித்து வைக்கப்பட்டிருந்த பூச்செண்டை எடுத்தார் பாதுஷா, மும்தாஜ் பேகத்தின் சமாதிக்கு மேலே, இதயத்தின் வடிவத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த அற்புதமான பளிங்குக் கல்லிலே, மனிதர்களின் கடைசிக் காணிக்கை யாக வைக்க வேண்டிய அந்தப் பூச்செண்டை எதிர் பார்த்து மௌல்விகள் முன்னால் வந்தார்கள். அதை ஸமர்ப்பிக்க வேண்டிய பெருமை தங்களுடைய புனித மான கரங்களைத்தான் சாரும் என்று எண்ணிப் பாரஸீக நாட்டுப் பக்கீர்கள் ஆவலோடு நெருங்கினார்கள். 

“ஸர்தார்” என்று கூப்பிட்டார் பாதுஷா. “பிஜ்லீ கான் எங்கே?” என்றார். 

மூடி விழிக்கும் நேரத்தில், கையும் காலும் விலங் கிடப்பட்ட பிஜ்லீகான் பாதுஷாவின் முன்பு கொண்டு வரப்பட்டான். 

“இதென்ன விலங்கு ஸர்தார்?” என்று கேட்டார் பாதுஷா. 

“ஸர்க்காரின் ஆக்ஞைக்குக் கட்டுப்படாமல் கால தாமதம் செய்து ஸர்க்காரின் அமைதியைக் குலைத்ததற் காகத் தண்டனை” என்று சொன்னான் ஸர்தார் ஷேர்கான். 

“ஸர்தார், முதலில் இந்த விலங்குகளை அவிழும்!’ 

பிஜ்லீயினுடைய முகத்தில் குழப்பத்தின் குறிகள் மின்வெட்டுக்களாய்ப் பாய்ந்து கொண்டிருந்தன. 

“பிஜ்லீ! இந்தா, ராணியின் சமாதியிலே முதலாவது பூச்செண்டை வைக்க வேண்டியவன் நீதான்.” 

ஸர்தார், உஸ்தாத், மௌல்வி, பக்கீர்-எல்லாரும் திகைப்பிலே நின்றார்கள்! 

பாதுஷா சொன்னார்:-“பிஜ்லீ, மனைவியை இழப்பது என்றால் அது என்ன என்பது உனக்குத்தான் தெரியும்.” 

இப்படிச் சொல்லிவிட்டு, பிஜ்லீகான் கண்களை அன்று இரவு துடைத்தாரே அதே லுங்கியின் விளிம் பினால், இப்பொழுது தமது கண்களையே துடைத்துக் கொண்டார் ஷாஜஹான்! ஆனாலும், அந்தத் துடைப்புக்கெல்லாம் அடங்காமல், பெருகிய துக்கத் துளிகள் பாரஸீகப் பன்னீரால் தெளிக்கப்பட்ட அந்தப் பூச் செண்டை நனைத்தன! 

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

– மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *