பனைமரமும் ஒணாங்கொடியும்
கதையாசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,968
ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது.
தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து தொங்கியது. அப்போது அது பனைமரத்தைப் பார்த்து,
“ஏ—பனைமரமே! பனைபரமே 25 வருடமாக நீ என்ன வளர்ந்திருக்கிறாய்? என்னைப்பார். இருபத்தைந்து நாளிலேயே உனக்கு மேலே வளர்ந்துவிட்டேன்” என்று எக்காளமிட்டது.
ஒணாங் கொடியின் செருக்கைக் கண்ட பனைமரம், எதுவும் சொல்லாமல் மனத்திற்குள் சிரித்துக்கொண்டு சும்மாயிருந்துவிட்டது.
அடுத்து வந்த பங்குனி சித்திரை மாதங்களில் ஒணாங்கொடி வாடிப்போய்த் தலைசாய்ந்து கீழே விழத் தொடங்கியது. கடைசியில் பனைமரத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிற்று.
இதைப்பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் முன் போலவே நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது பனைமரம்.
“ஆற்றலும் அறிவும் உடையவர் எப்போதும் ஒரே தன்மையாக இருப்பர். மற்றவர் எப்படி விரைந்து வளர்கிறார்களோ, அப்படியே தளர்வர்” என்று எண்ணித் தான் பனைமரம் அப்போது மனதுக்குள் சிரித்ததோ?
இதிலிருந்து, அற்பர் வாழ்வு அவ்வளவுதான் என்று மட்டும் நமக்குப் புரிகிறது.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
| கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026