பத்ம விகாரை
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 168
(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஷவ்வால் மாதத்தின் காலையொன்றில் எங்கிருந்தோ புறப்பட்டு ஆறாயிரம் வீரர்களுடன் இபின்-அய்-அக்தர், எதிர்ப்படும் கிராமங்களைத் தீயிட்டும், ரத்ன வியாபாரிகளின் சுரங்க அறைகளைக் கொள்ளையிட்டும், கழுதைகள், பசுக்கள், நாய்களை விரட்டி நெருப்பு வைத்து அவறச் செய்தும், கரும் புகையும் ரத்தமும் படித்த வாளோடு தங்கள் ஊரை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஆடு மேய்க்கும் சிறுவனொருவன் குன்றின் மேல் ஏறிவந்து தளித்திருந்த புத்த விகாரையில் சொல்லியபோது என்றைக்கும் போலவே பிக்குகள் தங்கள் பிரதியெடுக்கும். வேலையினின்று கவனம் திரும்பாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த விகாரை ஊரை விலக்கிய பாதையின் உயர்ந்த குன்றின் உயரத்திலிருந்தது. அவர்களின் சலனமற்ற முகங்களைக் கண்ட சிறுவன் முப்பத்தி மூன்று தூண்கள் கொண்ட அறைக்குள் ஓடி, வயதாகியிருந்த பிக்கு அருகில் குனிந்து அதையே சொன்னான். அவர் புன்னகைத்துக்கொண்டு சிறுவனின் தலையைக் கோதி விட்டார். விகாரை வெளிவாசலின் ஒரு கதவு மட்டுமே எப்போதும் மூடப்பட்டிருக்கும். உள்ளே எந்த அறைக்கும் கதவுகளில்லை. ஒரு பத்மம் போல விகாரை அமைந்திருந்தது. அதன் எல்வா அறைகளிலும் தரையில் அமர்ந்தபடி பிக்குகள் ஏதேதோ படியெடுக்கும் வேலையை, எழுதுதலைச் செய்து கொண்டிருந்தனர். விகாரையின் தென்மூலையில் ஒரு சிங்கம் வாய் திறந்து நிற்பது போன்ற நீர்த்தாரையொன்று அமைக்கப் பட்டிருந்தது. அதன் உள்ளே தண்ணீரின் சிறிய கிளையொன்று நீரூற்றாக உயர்ந்தும் தாழ்ந்தும் பொங்கிக் கொண்டிருந்தது. விகாரையின் பின் வழியாகக் குன்றிலிருந்து அடுத்த ஊரை நோக்கி இறங்க முடிவதாக இருந்தது. பிக்கு தன் முகத்தினைப் பிரதியெடுப்பதினின்று விலக்கி சக துறவியிடம் சொன்னார், வெளிவாசல் கதவைத் திறந்து வையுங்கள்.”
நெடிய கதவு திறக்கப்பட்டது. அன்றைய மாலைக்குள் தொலை விலே குதிரைகளின் குளம்பொலியும், வீரர்களின் கூச்சலும் கேட்டன. பிக்குகள் எவரும் வெளியே வரவில்லை. அவர்கள் புள்ளகை கலையாத உதட்டுடன் குனிந்து பிரதியெடுத்துக் கொண்டிருந்தனர். இடையச் சிறுவன் குதிரைகள் பொங்கி வருவதையும் ரத்த நெடியையும் அங்கிருந்தே உணர்ந்து கொண்டான். சில குதிரைகளின் பின்னால் இறந்துபோய்ச் சிதில மான உடல் கயிற்றால் கட்டப்பட்டு இழுத்துவரப் பெற்றி ருந்தன. அவர்கள் மூர்க்கமாக வந்துகொண்டிருந்தனர். ஒளிவ தற்கு இடமற்ற பெண்களும் குழந்தைகளும் வறண்ட கிணறு களில் பதுங்கினர். வயோதிகர்கள் தங்களை மீறி, தெரு நீண்டு கிடப்பதன் துக்கம் தாளாது வெடித்துக் குரலிட்டனர். மரணத்தின் நூறு குதிரைகள் ஓசையெழுப்பி வந்துகொண்டிருந்தன. நாய் களின் அலைக்கழிப்பும் குரைப்புமாக அவர்கள் கிராமத் தெருவில் நழைந்து எதிர்ப்பட்டவரை வாளால் வீழ்த்தியபடி முன்னேறினர். நெருப்பின் வளையம் எங்கும் சுழன்றது. புகை உயர்ந்துகொண்டே இருக்க பார்வை மங்கிய நாயொன்று மிதிபடுவதும் கத்துவதுமாக குதிரையின் ஊடே ஓடியலைந்தது. இபின் – அய் – அக்தரின் வாள் எவர் உடலிலோ புகுந்து வெளிப் பட்டது.
சில மணி நேரங்களுக்குள் ஊர் அவர்கள் வசமானது. ஸ்திரி களையும், முதியவர்களின் நடுங்கும் கண்களையும் கண்டபடி குதிரையில் வந்த இபின் அவர்களை விட்டுவிடச் சொன்னான். கொள்ளையடிக்கும் அளவுக்குப் பொருள்கள் இல்லாத ஊராக இருந்தது. தானிய வாசனை மட்டும் பரவி தெருவில் நீண்டது. வேதனையின் கத்துதல் தொடரும் நாயைக் கண்ட வீரனொருவன் அதைத் துரத்திப் போய் தொலைவில் தெரியும் விகாரையைக் கண்டான். அவன் எழுப்பிய குரலால் யாவரும் குன்றினை நோக்கிப் பயணமாயினர். புகை தெருவெங்கும் சுழன்றுகொண்டி ருத்தது. விகாரையின் வாசலுக்கு வந்து நின்ற இபின் அது திறந்து கிடப்பதைக் கண்டான். தனது படை வீரர்கள் சகிதமாக உள்ளே போனபோது தலை மழிக்கப்பட்டு மஞ்சளாடை உடுத்திய இருநூற்றுப் பதிமூன்று பேர் தரையில் அவர்களைக் கவனியாது படியெடுத்துக் கொண்டிருந்தனர். விகாரையில் குளிர்ச்சி
ததும்பிக் கொண்டிருந்தது. இபின் அக்தரின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. படியெடுத்துக் கொண்டிருந்தவர்கள் சிரசை அறுத்தபடி முன்னேறி உள்ளே சென்றனர். எங்கும் நிசப்தம் ஓடிக்கொண்டிருந்தது. பிக்குகள் என்ன செய்கிறார்கள் என்பதற்குப் பதில் கிடைக்கவேயில்லை. வேதனையின் கீச்சிடலில் விகாரைக்குன் வந்து சேர்ந்திருந்த பார்வை மங்கிய நாயின் தலையைத் தடவி அதைத் தண்ணீர் குடிக்கச் செய்தார் மூத்த பிக்கு.
அது தண்ணீர் குடிக்கும் ஓசை பிரம்மாண்டமாகக் கேட்டது. இபின் அக்தர் இது தன்னை அவமதிப்பதாகவே உணர்ந்தான். மூத்த பிக்குவைத் தவிர வேறு யாவரின் சிரமும் துண்டிக்கப் பட்டிருந்தன. பிரதியெடுக்கும் கையும், பிரதிகளும் சிதறிக் கிடந்தன. இவர்கள் எதை வாசிக்கிறார்கள் என பிக்குவைக் கேட்டான். பதில் இல்லை. பிரதியெடுத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களைக் குனிந்து எடுத்துப் பார்த்தாள். ஒரு புத்தகத்தைத் தான் இருநூற்றுப் பதிமூன்று துறவிகளும் தினமும் பிரதி யெடுத்துக் கொண்டிருந்தனர். இபின் அக்தருக்கு இது புரியவே இல்லை. மூத்த பிக்குவின் பிரதியைப் பிடுங்கிப் பார்த்தான். அதுவும் அவர்கள் பிரதியெடுத்ததைப் போன்ற புத்தகமே.
அந்த விகாரையின் எண்ணற்ற அறைகள் யாவிலும் அந்த ஒரேயொரு புத்தகம் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும், பல ஆயிரம் முறை அந்த ஒரு புத்தகம் திரும்பத் திரும்பப் படியெடுக்கப்பட்டிருப்பதாகவும் வீரர்கள் சொன்னார்கள். அவை யாவற்றையும் வெளியே கொண்டு வந்து கொட்டச் சொன்னான் இபின் அக்தர். ஆயிரக்கணக்கான கட்டுகளாக அந்த ஒரே புத்தகம் நிரம்பியிருந்தது. ஒரேயொரு புத்தகம் மட்டுமே உள்ளே நூலகமாக இருக்கிறதே அது எதனால் என அவள் மூத்த பிக்குவைக் கேட்டான். அவர் பேசவில்லை. எழுதப்பட்டிருந்த பாஷை அவனுக்குப் புரியாததால் அதைப் படித்துக் காட்டச் சொன்னாள். அவர் அதையும் மறுத்துவிட்டு நாயின் உடலில் துடிக்கும் நடுக்கத்தினை சாந்தி செய்து கொண்டிருந்தார். கோபத்தில் நாயை இரு துண்டாக வெட்டினான். உடல் இரண்டாக வீழ்ந்தது. இப்போதும் பிக்கு சலனமுறவில்லை. இபின் மிகுந்த கோபத்தோடு அது என்ன வகையான புத்தகம். அவர்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டான்.
அவர் கண்கள் தாழ்ந்து கொண்டன. அவள் தீராத ஆத்திரத்தில் மீதமிருந்த ஒரே பிக்குவையும் சிரம் துண்டித்தான். தன் கையில் வைத்திருந்த ஒரு பிரதியைத் தவிர்த்து மற்ற யாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினான். அதன்பிறகு அவன் வடபகுதியில் பாதி வரை தன்வசமாக்கிக் கொண்டு தன் நாடு திரும்பினான்.
வழியில் பல முறை தன்னிடமுள்ள புத்தகம் எதைப் பற்றியது, இருநூற்றுப் பதிமூன்று பேர் எதைத் திரும்பப் படியெடுத்தார்கள் எனத் தேடுதல் கொண்டபோதும் அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தனது சாகசங்களை விலக்கிவிட்டு அந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்ள முயன்றான். எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வரப்பட்ட ஒரு துவராடை பிக்கு அவனுக்கு பாஷையைக் கற்பித்தார். திரும்பத் திரும்பப் படியெடுக்கப் பட்டபோதும் அது ஒரே புத்தகமில்லை என்றும், வேறு வேறு புத்தகங்களே என அவர் சொன்னதை இபின் அக்தர் புரிந்து கொள்ளவேயில்லை. அவன் தன் தாளின் பெரும்பகுதியை அந்தப் புத்தகத்தை அறிந்து கொள்வதில் செலவழித்தான். அதை உணர ஒரே வழி அதைப் பிரதியெடுப்பது தானோ என்றபடி. அவனும் பின்நாளில் பிரதியெடுக்கத் தொடங்கினான். அதே வார்த்தைகள், வாசகங்கள், அடுக்குகள் யாவும் ஒன்றாக இருந்தபோதும் இரண்டும் வேறாகவே தென்பட்டன. அவன் குழப்பமுற்றான். தன்னைத் தேடிவரும் வீரர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் விரட்டி அனுப்பினான். தனிமையில், எரியும் சுடரின் முன்பாக அவன் பிரதியெடுத்தபடியே இருந்தான். உறக்கமற்ற இரவுகள் நீண்டன. ஓர் இரவில் அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது படுக்கையில் மூத்த பிக்குவும் உடல் துண்டான நாயும் படுத்திருந்தனர். துண்டிக்கப்பட்ட உடவோடு இருந்த நாயின் முகத்தில் கூட சாந்தம் நிரம்பியிருந்தது. அவன் இது எதனுடைய புத்தகம்’ என உரக்கக் கேட்டான். அவர்கள் பார்த்தபடியே இருந்தனர். மறுநாள் இரவு அவன் பிரதி யெடுக்கும் இடம் நோக்கிப் படுக்கையில் இருந்து ஓர் அடி முன்வந்து பிக்குவும், நாயும் அமர்ந்திருந்தனர்.
‘இந்தப் புத்தகம் என்பது ஒரு வெற்று வெளியா’ எனக் கேட்டாள். அவர் பதில் பேசவில்லை. தினமும் ஓர் அடியாக அவனை நெருங்கிக்கொண்டே இருந்தார்கள். பசி மறந்தவனாக அவன் ஓர் இரவில் பிரதியெடுத்துத் திரும்பும்போது விரல் தொடும் எதிரில் பிக்கு இருந்தார். அவரின் முகம் சாந்தி ததும்பிக் கொண்டிருந்தது. அவள் ‘இந்தப் பிரபஞ்சம் என்பதுதான் இந்தப் புத்தகம், அப்படித்தானே’ என்றான். அவர் சிரித்தார். பின்பு அவர் தணிவான குரலில்…
இது ஒரு தியானம். தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். என்றபடி மறைந்து போனார். அவன் அந்தப் புத்தகத்தை எண்ணற்ற பிரதிகளை எடுத்துக்கொண்டபடி தனியறையில் இருந்த நாள்களில் அவனைப் பலரும் மறந்துபோயினர். பின்பு ஒரு நாளில் அவன் ஒரு வாக்கியத்தை எழுதத் தொடங்க, அது காகிதத்தில் பதியாமலும் மறையாமலும் தண்ணீரின் மீது ததும்புவது போல மிதந்துகொண்டிருக்க அவன் பார்த்துக் கொண்டிருந்த காகித இடைவெளியில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.