பதவிப் பரிதாபங்கள்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 178
அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8

மறுநாள்.
தன்ராஜ், விகாஷ் பில்லர்ஸ் ராக் – பாறைத் தூண்கள் பக்கம் ஒதுங்கி விட்டார்கள்.
வழக்கமாய் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் இளைஞிகள், காதலர்கள், தம்பதிகள், முதியவர்கள், கடைகள் வியாபாரம் என்று அந்த இடம் எப்போதும் பரபரப்பாக இருந்தாலும் கரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் கொஞ்சம் குறைவு.
ஆனால் அதே இயற்கை, பசுமை, குளிர்ச்சி.
தன்ராஜ் கொலையைத் தொடர்ந்தார்.
“இது பெரிய இடத்து விவகாரம். இது சம்பந்தமா அதிகாரிகள், அமைச்சர்கள் ஏன் முதலமைச்சர் வரை விசாரிக்க வேண்டு வரும் . அவர்களை விசாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் உத்தரவு வேணும். இதெல்லாம் வாங்க நேரம் காலம் கடக்கும். தேடலில் தொய்வு வரும். திசை மாறிப் போகும். சரிவராது. உயிருக்கு வேறு உத்திரவாதம் கிடையாது! என்று பயந்து எல்லாரும் ஒதுங்கி விட கடைசியில் விசாரணை என் தலைக்கு வந்தது மாப்ளே.
எங்களுக்கெல்லாம் மேலதிகாரிக்கும் மேலதிகாரி…
“இந்த வழக்கை நீதான் கையிலெடுத்து துப்புத் துலக்கி முடிக்கனும்!” ன்னு கறாராய்ச் சொன்னார்.
நானும் கராறாய்…
“இதுல இன்னென்ன கஷ்டங்கள் இருக்கு. இவர் இவர்களை விசாரிக்கனும். இதுக்கு அனுமதி வேணும். அவர்கள் ஒத்துழைக்கனும். ஒத்துழைக்க வில்லை என்றால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யனும். இதெல்லாம் நீங்க முடித்துத் தருவதாய் இருந்தால் நான் இந்த வழக்கை கையிலெடுக்க சம்மதம்.” சொன்னேன்.
அதற்கு அவர்….
“நீ யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அனுமதி. அதற்கான எல்லா உத்தரவுகளும் இந்த பைல்ல இருக்கு. கொலை நடந்த அன்று வீட்டைப் பூட்டி சீல் வைத்த சாவியும் இதில் இருக்கு. அங்கே நீ எப்போது வேண்டுமானாலும் சென்று தடையங்கள் தேடலாம். ஆராயலாம்! இந்தா பிடி.” – சொல்லி எனக்கு எதிரே மேசை மேல் வைத்து விட்டு என் பதிலை எதிர்பாராமல் எழுந்து வெளியே போய் விட்டார்.
கையில் திணிக்காதக் குறையாய் வைத்ததை வழி இல்லாமல் எடுத்தேன். எல்லா உத்தரவுகளும் இருக்கிறதா என்று அங்கேயே இருந்து சரி பார்த்தேன். இருந்தது. எனக்குள் தெம்பு தைரியம் வந்தது. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. சாவைப் பத்தியும் பயப்படக்கூடாது! துணிந்தேன்”. சொல்லி நிமிர்ந்து அமர்ந்தார் தன்ராஜ்.
விகாசும் நிமிர்ந்து அமர்ந்து அவரின் துப்பறிதலைக் கேட்கும் ஆவலில் அவர் முகத்தைப் பார்த்தான்
“என் தனி அறைக்கு வந்து அந்த பைலை விரித்து… கொலை சம்பந்தமாய் அன்று எடுத்த படங்கள், கை ரேகை நிபுணர்கள் கொடுத்த தகவல்கள், பிணக்கூராய்வு முடிவுகள் எல்லாற்றையும் ஒன்று விடாமல் ஆராய்ந்தேன்.
படங்களில் ஆனந்தவள்ளி அன்னைக்குப் பார்த்தது மாதிரியே கண் மூடி புதுமையாய் இருந்தாள். கை கால்கள் அகலாமல், ஆடை அணிகலன்கள் குலையாமல், தலையணையில் தலை வைத்து நிசத்தில் தூங்குவது மாதிரியே இருந்தாள்.
கட்டில் மெத்தை மேல் இருக்கும் விரிப்பு கசங்கவில்லை. தலையணைகள் தாறுமாறாய் இல்லை. ஆனால் படுக்கையில் இயற்கையாய் உயிர் போனால் போல் இருந்தாள். முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததற்கான தடையங்கள், அடையாளங்கள் அவள் முகத்திலும் இல்லை. படுக்கையிலும் இல்லை.
கை ரேகை நிபுணர்கள் பதில்கள், துப்பறியும் நாய் குறிப்புகள் எதிலும் திருப்தி இல்லே.
மறுநாள்.
கொலை நடந்த வீட்டிற்கேப் போனேன் ஆகாஷ். அது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களா.
அதிகம் போக்குவரத்து, ஆள் நடமாட்டமில்லாத வீதியில் நடுவில் அந்த இடம். அக்கம், பக்கம், எதிரில் பிரமாண்டமாய் வரிசையாய் வீடுகள். எல்லாம் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் வீடுகள்.
இந்த பங்களா முன் மட்டும் சாலை ஓரம். வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி காவல் பணியில் இருப்பவ ர்களுக்கான கூண்டு. வாசலில் இரண்டு கதவுகளாக இருக்கும் பெரிய இரும்பு கேட். அதைத்தாண்டி கொஞ்சம் நடைபாதை புல்வெளி. போர்டிகோ. இரண்டு படி ஏறினால் பங்களா வராண்டா வாசல். வாசல் தாண்டினால்… உள்ளே பெரிய ஹால். மாடிப்படி . படுக்கை அறை. அந்த படுக்கை அறைதான் ஆனந்தவள்ளி கொலையான அறை.
கீழே.. ஹாலை தாண்டி சாப்பாட்டுக் கூடம். அது சம்மபந்தமான மேசை, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டி. அடுத்து சமையலறை. சாமான்கள் இருப்பு அறை. கொல்லை வாசல். புழக்கடை. இருபது அடி இடைவெளியில் நடைபாதை. அது கொல்லைப்புறம் இருக்கும் சுற்றுச் சுவர் வாசலின் முடிவு. அங்கு முழுதுமாக அடைக்கப்பட்ட மூன்றடி அகல இரும்பு கதவு. பூட்டு. அதைத்தாண்டி தார் சாலை கழிவு நீர் ஓடும் வாய்க்கால்.
இந்த வரிசையில் உள்ள அனைத்து வீடுகளுமே இதே அமைப்புகள்.
இதற்கு முன் பணியின் நிமித்தம் அங்கு அடிக்கடி நான் அங்கே சென்றிருப்பதால் எனக்கு அந்த பங்களா, இடம் முழுதும் அத்துப்படி.
ஆனந்தவள்ளியின் இறப்பிற்கு முன் அமைச்சர் இல்லம் என்பதால் சுற்றுச்சுவருக்கு வெளியே, உள்ளே பாதுகாப்பு கருதி நான்கைந்து காவலர்களின் நடமாட்டம் இருக்கும் விகாஷ்.
இப்போது வீட்டு முன் வாசலில் ஒரே ஒரு போலீஸ் மட்டும் காவல்.
நான் அவனிடம் என் அடையாள அட்டையைக் காட்டி விட்டு சீலை உடைத்து, பூட்டைத் திறந்து, இரும்பு கேட்டைத் திறந்து, மூடி நடந்தேன்.
கவனிக்கப்படாமல் பூங்கா, புல்தரை, சின்னச் சின்ன செடி கொடிகளெல்லாம் வாடி இருந்தன.
பெரிய போர்டிகோ எந்த வாகனமும் இல்லாமல் வெறிச்சென்றிருந்தது.
வாசல் முகப்பில் கண்காணிப்பு கேமரா.
வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். யாரும் இல்லாத இடம். பெரிய ஹால். உள்ளே நுழையவே அச்சமாக இருந்தது.
எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு மாடிப் படி ஏறினேன். படுக்கை அறை திறந்து பார்த்தேன். அந்த கட்டில் வெறுமையாக அப்படியே இருந்தது. நானும் சந்து பொந்து, சுவர், கட்டிலுக்கடியில் என்று பார்வையைச் செலுத்தி ஆராய்ந்தேன். வீடு முழுக்க அலசி, கொல்லை கடைசி வரை சென்று பார்த்து வந்தேன். எல்லாம் அப்படியே இருந்ததேத் தவிர மாற்றமில்லை.
கொலை நடந்த நேரம் இரவு 2.13.
அன்றைய கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தேன்.
ஆனந்தவள்ளி 9.30க்கு தன்னந்தனியாளாய் காரில் வந்து இறங்கினாள். ஆளை இறக்கிவிட்டு கார் சென்று விட்டது. அது திரும்ப காலை ஒன்பது மணிக்குத்தான் பயன்பாட்டிற்கு வரும்.
அவ்வளவு பெரிய வீட்டில் ஆனந்தவள்ளி உதவிக்கு ஒரு கிழவியைத் தவிர வேறு ஆட்கள் கிடையாது. அவளுக்கும் படுத்துறங்க… வீட்டிற்கு வெளியே தென் பக்கம் சுற்றுச்சுவரை ஒட்டி ஒரு சிறு குடில்.
கணவன் வந்தால், இருந்தால் அவன் பயன்பாட்டிற்கு கீழே ஹாலை ஒட்டி பெரிய படுக்கை அறை. கணவன் மனைவி தினப்படி வேலைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் தனித்தனி படுக்கைகள்.
எல்லாவற்றையும் துல்லியம், துப்புரவாக ஆராய்ந்தேன் விகாஷ். ஒரு தடயமும் கிடைக்கலை.
எவன் எப்படி வந்தான்..? கொலை செய்தான்…? போனான்…? எதுவும் தெரியலை!
வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்து நல்லா யோசிச்சேன்.
ஒன்னு கணவன் கொலை செய்திருக்கனும். இல்லே எதிரி கொலை செய்திருக்கனும்
- கணவன் கொலை செய்ய நிறைய காரணங்கள் இருக்கு. அதை மறைக்க வாய்ப்பு வசதிகளும் இருக்கு.
- எதிரி வந்து நிறுத்தி நிதானமாய் கொலை செய்துவிட்டு தப்பி போயிருக்கான் என்றால் அவன் கில்லாடி!
அந்த கில்லாடி…அரசியல் ஏவல் ஆளாய் இருக்கலாம். பிடிக்காதவன் எதிரியாய் இருக்கலாம்!
முதலில் கணவன்.
அவன் கொலை செய்ய காரணம்..? – யோசித்தேன்.
மனைவி பொன் முட்டையிடும் வாத்து. என்ன சண்டை சச்சரவாய் இருந்தாலும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தெளிவாய்த் தெரிந்தது.
எதிரி…?
அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் ஒருத்தர் தானாகவோ, தனியாகவோ, ஏவல் ஆளோ விட்டு கதையை முடித்து தப்பி இருக்கலாம்.
ஆனந்தவள்ளிக்கு அமைச்சர் பதவி கொடுத்து தன் கட்டுப்பாடு, கைக்குள் வைத்திருக்கும் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதனால் கொலை என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு அவள் தேவை! – ஒதுக்கினேன்.
சமையல்காரி, வேலைக்காரி, துணைக்கு இருக்கும் எடுபிடி, தோட்டக்காரன் யாருக்கும் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. அப்படியே செய்திருந்தாலும் தடையங்களே இல்லாத அளவிற்கு செய்து விட்டு செல்லும் அளவிற்கு அவர்கள் புத்திசாலிகள் இல்லை.
‘இப்படி செய்! அப்படி செய்!’ என்று சாமர்த்தியசாலிகள் சொல்லிக் கொடுத்திருந்தாலும் இப்படி தடையங்களே இல்லாத அளவிற்கு செய்து முடித்து செல்ல அவர்கள் திறமைசாலிகள் இல்லை.
வீட்டில் எந்த பொருளும் களவு ஆகவில்லை. அதனால் செய்தவன் திருடன் கிடையாது! – இப்படி நிறைய யோசித்து… முக்கியப்புள்ளிகளைத் தொடாமல் முதலில் கணவனை விசாரித்தேன்.
“இல்லே” சொன்னான்.
“எதிரிகள்..?” வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டேன்.
“எந்த வழியிலும் இல்லே…!” சொன்னான்.
மற்ற இந்த வேலைக்காரர்கள்…விசாரணையில்…
அவர்கள் பதில்களும்… ‘இல்லே’ தான்!
“வீட்டிற்குச் சந்தேகப்படும்படியான ஆட்கள் வந்து போனார்களா…?”
“கிடையாது!” அதற்கும் பதில்!
கைப்பற்றப்பட்ட ஆனந்தவள்ளி கை பேசியை ஆராய்ந்தேன்.
அதிலும் சந்தேகப்படும்படியான ஆட்கள் கிடையாது. எல்லாமே தெரிந்த முகங்கள். முக்கிய முகங்கள்!
எங்கும் எதுவும் சிக்கவில்லை.
எதிரி, கணவன், கைபேசி, கண்காணிப்பு கேமரா, வேலைக்காரர்கள் விசாரிப்பு எல்லாம் சாதாரணமாய் உள்ள நடைமுறை விசாரிப்புகள்.
யாரும் சிக்கவில்லை! வேறு எப்படி கொலை நடந்திருக்கும்..? மூளையைக் கசக்கினேன்.
வேறு வழி?… யோசித்தேன். ஒன்னு சிக்கிச்சு.” நிறுத்தினார்.
“என்ன மாமா..?”
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 1, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
November 1, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 29, 2026
