படி இல்லாத கிணறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 276 
 
 

உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்தால் அதிகமான செலவாகுமென மருமகள் சொல்லியதைக்கேட்ட மகன் சரண், வீட்டில் கொண்டுவந்து தன்னைப்படுக்க வைத்தது கவலையைக்கொடுத்தது சங்கரனுக்கு.

சிறு வயதில் தாயின் உழைப்பால் வறுமையைக்கடந்து நன்றாகப்படித்து, வேலையில் சேர்ந்து திருமணம் செய்து, சிக்கனமாக இருந்து சம்பாதித்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை நகரத்தில் சேர்த்தும் வயதான காலத்தில் தன்னை மகன் சரியாக கவனிக்கவில்லை எனும் வருத்தம் மேலோங்கியது..

தனது சிறுவயது அனுபவங்கள் மனதில் நிழலாடியது. அவை பசுமையான நினைவுகள் என்பதை விட, வறட்சியான நினைவுகள் என்பது தான் சரி. 

“அம்மா பள்ளிக்கொடத்துல என்ற டவுசரப்பார்க்கிறவங்க கேவலமா சிரிக்கறாங்கம்மா. எனக்கு வேற புது டவுசர் வாங்கிக்கொடம்மா. டெய்லரு வெள்ள டவுசர்ல இருந்த ஓட்டைய கருப்பு துணி வெச்சு அடைச்சதப்பாத்துத்தாஞ்சிரிக்கறாங்க. பேசாம ஓட்டையா இருந்தா கூட தெரியாம இருந்திருக்கும்” காட்டிற்குள் ஆடுகளை மேய்த்துக்கொண்டே கற்களைப்பொறுக்கி கூடையில் போட்டு வரப்பில் கொட்டிக்கொண்டிருந்த தாய் அருக்காணியிடம் கண்களில் நீர் வடிய அழுதபடி கூறினான்.

“நா என்ன சாமி பண்ணட்டும்? மழையில்லாம இந்த வருசம் வெதச்சு மொளைச்ச கம்பு பயிறு கருகிப்போச்சு. மாட்டுக்கு தீவணம் இல்லே. ஆடு மேயற புள்ளு, பூடும் காஞ்சு கெடக்குது. கெணத்துல கருப்பராயம் புண்ணியத்துல குடிக்க தெனத்துக்கும் ஒரு கொடந்தண்ணி மட்டுலும் ஊத்தம்புடிக்குது. அதையும் உருளைல கவத்தப்போட்டுச்சேந்த முடியாம ஒடைஞ்சு கெடக்குது. அதைய ஆசாரியக்கூப்புட்டு செரிபண்ண என்ற கிட்ட ரெண்டு பணமில்ல. படியில்லாத கெணத்துல வாரத்துக்கொருக்கா கயித்தக்கட்டி ஒருத்தீமே உள்ளெறங்கி டப்பாவுல மோந்து கொடத்துல ஊத்தி மேல வந்து கவுத்துல இழுத்து பானைல ஊத்தி வெச்சு சோறாக்கறதுக்கும், குடிக்கிறதுக்கும் வெச்சுக்கறேன். கொடம் உருளைல மேல வந்தா நடுக்கொணத்துல வர்றதுனால செவுத்துல அடிக்காம வந்துரும். செவுத்துல கவுத்தப்போட்டு சேந்துனா வெங்கலக்கொடம் கண்ட மேனிக்கு அடிப்பட்டுப்போகுது. அப்பறம் ஒடுக்கெடுக்கறவங்கிட்டக்கொண்டு போனா அதுக்கொரு செலவு…. நீ ஒன்னு பண்ணு எல்லாருக்கும் முன்னால போனாத்தானே பின்னால டவுசர்ல பத்து வெச்சதப்பாப்பாங்க. நீ ஒன்னி மேல எல்லாருக்கும் பின்னால போயிக்க…‌ கடைசீல உக்காந்துக்க. என்ன நாஞ் சொல்லறது….?” தாயின் இந்த ஆலோசனையைப்பின்பற்றி வேறு வழியின்றி பள்ளிக்குச்சென்றான் சிறுவன் சங்கரன்.

தந்தை ஒரு முறை படி இல்லாத தோட்டத்துக்கிணற்றில் குடிக்க தண்ணீர் எடுக்க கயிறு கட்டி இறங்கி, பின் ஏறிய போது கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட, தாய் தனியாக உழைத்து ஆடு, மாடு வளர்த்து, விவசாயம் செய்து வாழும் வறுமையின் உச்ச நிலை புரிந்ததால் கேட்டது கிடைக்காத போது அழுது ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாகி விடுவான். 

தற்போது தந்தையைப்போலவே தாயும் அதே படி இல்லாத கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஏறுவதற்குள் பத்து வயது சங்கரனுக்கு உயிர் போய் உயிர்வரும். தாயும் போய் விட்டால் யாருமற்ற அனாதையாக நேரும் என நினைத்து பயந்தான். தானே இறங்கி தண்ணீர் இறைத்து தருவதாக கூறும்போது தாய் சம்மதிக்க மாட்டாள். 

படித்து வேலைக்கு சென்று வாங்கும் முதல் மாத சம்பளத்தில் கிணற்றுக்கு மோட்டார் வாங்கி பொறுத்தி, தாயின் சிரமத்தை போக்க வேண்டும் என அடிக்கடி தாயிடம் கூறும் போது தாய் அவனை வாரி அணைத்து உச்சி முகர்வாள்.

வறட்சி மற்றவர்களை பாதிப்பதை விட விவசாயிகளை அதிகமாக பாதிக்கிறது. மற்றவர்கள் ஒரு ஊரில் வறட்சி, பஞ்சம் எனும்போது இன்னொரு ஊருக்குச்சென்று ஏதாவதொரு வேலை செய்து பிழைக்க வழிதேடிக்கொள்கிறார்கள். விவசாயிகள் மீண்டும் மழை பெய்தால் காடு உழுது விதைப்பதை நினைத்தும், ஆடு மாடுகளை விட்டுச்செல்ல மனமில்லாமலும் வறுமையை வாழ்க்கையென ஏற்றுக்கொள்ளப்பழகி விடுகின்றனர். தாங்கள் பசியோடு இருந்தாலும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை பட்டினி போடாமல் பாது காக்கின்றனர்.

“ஏம்மா…. ஆடுகளையும், மாட்டையும் வித்துட்டு நாம டவுனுக்கு போயிரலாமா?” பக்கத்து நகரத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த சில நாட்களில் வந்த யோசனையில் சொன்னான் சங்கரன்.

“ஒரு செடிய புடுங்கி வேற எடத்துல நட்டுனா அது தளைஞ்சு காச்சுப்போடும். நா மரஞ்சாமி‌. புடுங்கி வேறபக்கம் நெட்டுனா தளையாது. என்னையக்கொண்டு போயி டவுன்ல உட்டீனா சீக்கிரமா செத்துப்போயிருவேன். சொதந்திரமா காட்டுக்குள்ள வாழ்ந்து போட்டு டவுன்ல எச்ச வட்டல் கழுவற வேலைக்கு என்றனால போ முடியாது. மூணு வேளைக்கு ஒரு வேள பழைய சோறு குடிச்சாலும் பரவால்ல. ஆறும் வேல சொல்லறபடி எத்தன காச கொடுத்தாலும் வரமாட்டேன். நீ வேணும்னா டவுனுக்கு போ. படிக்கிறே. உனக்கு கௌரவமா எழுதற வேல கெடைக்கும். நா இந்தக்காட்டுல பொறந்தவ இந்தக்காட்லயே கட்ட மடியற வெரைக்கும் வாழ்ந்து போடறேன். வாரத்துக்கொருக்கா பெத்தவள வந்து பாத்துப்போட்டு போயிறு. வார போது தேங்காப்பண்ணு மட்டும் மறக்காம வாங்கீட்டு வந்துரு..‌‌” தாயின் பிடிவாதத்தை தெரிந்த பின் தான் மட்டுமே நகரத்தில் விடுதியில் தங்கி படித்தான்‌

மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு சென்று வர அனுமதி கிடைத்தது. தாயை வந்து பார்க்கச்சொல்லலாம் என்றால் எழுதப்படிக்கத்தெரியாது. முகவரி கண்டு பிடிப்பது கடினம் என தானே வந்து செல்வான். 

பள்ளிப்படிப்பு முடித்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்ததில் வேலை கிடைத்தது. நண்பர்களும், பள்ளி ஆசிரியரும் கல்லூரிக்கு சென்று படிக்க வற்புறுத்தியும் போக மறுத்து விட்டான். வறுமையைப்போக்க உடனே பணம் வேண்டும் என நினைத்தே வேலையில் சேர்ந்தான்.

முதல் மாதம் சம்பளம் வாங்கியவன் மனதில் முன்னால் வந்து நின்றது கிணத்து மோட்டார் தான். கடையில் சென்று விலை கேட்டான்.

“தம்பி மோட்டார் வாங்கிறது சரி. உங்க தோட்டத்துல மொதல்ல கரண்ட் சர்வீஸ் வாங்கோணும். அப்புறம்தான் மோட்டார் வெச்சு தண்ணிய மேல கொண்டு வர முடியும். அது கேட்டதும் கெடைக்காது. கரண்ட் ஆபீஸ்ல போயி பணங்கட்டி எழுதிக்கொடுத்தீங்கன்னா நாலு வருசத்துல தோட்டத்து கெணத்துக்கு சீனியாரிட்டில கொடுப்பாங்க. அப்புறம் வா. மோட்டாரு நானே ஆளனுப்பி மாட்டி உடறேன். பணத்தக்கூட மெதுவாக்கொடு…” எனக்கூறியதைக்கேட்ட போது தான் பள்ளியில் படித்தாலும் அடிப்படைத்தேவைக்கான அறிவு படிக்காமல் அனுபவம் பெற்றவர்கள் அளவிற்கு தனக்கு இல்லையென்பதைப்புரிந்து கொண்டான்.

‘மோட்டார் உடனே வைக்காவிட்டாலும் உடைந்து போன உருளையையாவது கிணற்றுக்குள் இறங்காமல் அம்மா தண்ணீர் இறைக்க ஆசாரியை கூட்டிச்சென்று சரி செய்ய சம்பளப்பணம் போதுமானது என நினைத்தவன், தேங்கா பன்னும், ஒரு சேலையும் வாங்கிக்கொண்டு , ஊருக்குள் பட்டறைக்கு சென்று ஆசாரியை அழைத்துக்கொண்டு தோட்டத்து சாளைக்குச்சென்றான். 

சாளை எனும் ஓலை வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஆடு, மாடுகள் கட்டித்தரையில் கட்டிய படியே கிடந்தன. சங்கரனைக்கண்டவுடன் நாய் ஓடி வந்து தொற்றிக்கொண்டது. கையிலிருந்த தேங்காய் பன்னை பிடுங்கிக்கொண்டு ஓடியது. ஆடு, மாடுகள் பசியில் சத்தமிட்டன.காட்டிற்குள் சென்று எங்கு தேடியும் தாய் அருக்காணியைக்காணவில்லை.

உருளையைச்சரி செய்ய கிணற்றுப்பக்கம் சென்ற ஆசாரி சத்தமிட்டு சங்கரனை அழைத்தார். ஓடிச்சென்று உள்ளே பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். 

தாய் அருக்காணி கிணற்றிலிருந்த தண்ணீரில் இறந்து பிணமாகக்கிடந்தாள். துர் நாற்றம் வீசியது. கதறினான், கலங்கினான், கத்தினான்.

ஆசாரி உருளையை கண்ணீர் சிந்தியபடி சரி செய்தார். அந்த உருளையில் கயிறு விட்டு தண்ணீர் இறைக்க வேண்டிய தாயை கூடையில் கயிறு கட்டி மேலே கண்ணீர் சிந்தியபடி எடுத்தான் சங்கரன்.

“அப்பா..‌‌..” என கத்தியபடி கண்களில் கண்ணீரின்றி அழுதான் சங்கரனின் மகன் சரண். தாயின் நினைவுகளோடு உயிர் பிரிந்தது. மூடிய கண்களிலிருந்து கண்ணீர் தெரித்து விழுந்தது. கண்களின் வழியே உயிர் பிரிந்ததாக பக்கத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டது சங்கரனின் காதுகளுக்கு கேட்கவில்லை. 

அப்போது இறந்த தனது தாயை நினைத்த வேதனையில் இப்போது கண்ணீர் சிந்தியது அவரது ஆத்மாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *