பசித்திருக்கிறவர்கள்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 91
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்டிக்கு சுந்தரலிங்கம் வந்து மூன்று வாரங்கள் ஆகி விட்டன இப்போது மணி ஐந்து முப்பது. கண்டி வாவிக்கு அருகே, எதற்காகவோ காத்திருப்பவன் போல நிற்கின்றான் அவன். கூடு போகும் குருவிகளின் இரைச்சல், வாகனங்களின் இரைச்சல், மனிதச் சிரிப்புக்கள், கலகலத்த ஒலிகள். மறு புறத்தில் சிற்றலை மிதக்கும் கண்டி வாவி. மீன்களுக்குப் பொரியெறியும் உல்லாசிகள். நகரம், மாலைப்போதின் ஆரவார வலையினுள் விழுந்து கொண்டிருக்கின்றது.
இன்று மட்டுமல்ல, இன்றுபோலவே கடந்த மூன்று வாரங்களாகவும் இப்படித்தான். கண்டியின் பூங்காக்களிலும் சனந்ததும்பும் பொது இடங்களிலும் மாலைப் பொழுதின் மங்கிய வேளைகளில், தனிமையில் எதற்காகவோ காத்திருப் பவன் போல நின்றிருந்தான் சுந்தரலிங்கம். அந்த நிமிஷங் களிலே மனம் அர்த்தமேயற்றுப் பரபரக்கும். முப்பத்தினாலு வயதான அவன், வாழ்வின் சுமைகள் தலையேறப் பெற்ற நிலையிலே ஓய்வான மனப்பாங்கோடு கண்டியில் வாழ முடியுமென்று நினைத்துத்தான் வலிந்து இடமாற்றம் பெற்று இரு நூறு மைல்கள் தாண்டி இங்கே வந்தான். அரசாங்க லிகிதர் சேவையிலே சேர்ந்து பதினொரு வருஷங்கள் கழிந்து போய்விட்டன. மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலே கடமையாற்றிவிட்டு, இப்போது விரும்பிக் கேட்ட இடமாற்றம் சித்தித்து விடக் கண்டிக்கு வந்த சுந்தரலிங்கத்திற்கு கண்டிக்கு வந்த மூன்றாம் நாளே அளவு மீறிய பயம் ஏற்பட்டு விட்டது. – வாழ்க்கைச் செலவுகள் தான் எப்படி உயர்ந்து போய்விட்டன. திட்டமிட்டு பணத்தினைச் செலவழிக்கின்ற அவனே போட்ட கணக்கினை மீறிச் செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி நெடுமூச்செறிந்தான்.
தகப்பனார், நித்திய நோயாளியாகிவிட்ட தாய், திருமண வயதினை மீறிப்பெருமூச்செறியும் இருசகோதரிகள், ஜி.சி.ஈ சித்தியெய்தி விட்டு நேர்முகத் தேர்வுகளுக்காய் அலைந்து கொண்டிருக்கும் கெட்டிக்கார தம்பி, சிறிய வீடும் வளவும். ஒரு வயற் காணி, மூன்று மாடும் கன்று களும் இவைகள்தான் இப்போதும் சுந்தரலிங்கத்திற்குச் சொந்தமும் சொத்துக்களுமாயுமுள்ளன.
சிறு வயதிலிருந்தே மிகத் துடிப்பானவனாயிருந்த சுந்தரலிங்கம் நெஞ்சினுள் அடைகாத்து வளர்த்த ஆசைகள் எதுவுமே நிறைவேறவில்லை. எல்லாமே கூழ்முட்டையாகிய விருப்பங்கள். எத்தனைக் கனவுகள் அவனுக்கிருந்தன. அவன் வகுப்பிலே முதல் பிள்ளை. அதனை வைத்துக்கொண்டு அவன் வாழ்விலே சகல துறைகளிலும் முன்னணியில் திகழ்வான் என்று பலருஞ் சொன்னார்கள். கடைசியில் அவன் அளப்பரிய பிரயத்தனங்களின் பின்னர் அரசாங்க விகிதனாக நியமனம் பெற்றான்.
அவனுடைய இளமைப் பருவத்துத் தோழர்களையெல் லாம் அவன் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. ஏற்றமும் இறக்கமுமான நண்பர்கள் ஆயினும் அவர்களிலே பலர், கடன்கள் என்ற நுகத்தடியிலிருந்து விடுபட்டு இன்று குழந்தை குட்டிகள் சகிதம் வாழ்ந்து வருகின்றார்கள்* வாழ்வைக் களித்து வருகின்றார்கள்.
‘நான்? நானோ என் இறப்புநாள் வரையும் என் குடும் பத்திற்காகவே உழைத்து மாயவேணும். அப்பிடி அளவில் லாமல் கஷ்டப்பட்டாலும் என்ரை குடும்பத்துக்கு விமோ சனம் எப்போ வரப்போகுது?’
சுந்தரலிங்கத்தின் மனம் அலுத்துக்கொண்டது. அலுத்த படி நின்ற அவனை அந்தச் சிரிப்புச்சத்தம் சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. களுக்கென்ற மோகனமான சிரிப்பு. சிரித்த அவளைக் கண்கள் விரிய அவன் நோக்கினான்.
இனக் கவர்ச்சியான பெண்ணை ஓவியமாக வரைய நினைப்பவனுக்கு அவளுடைய தோற்றம் மிக உன்னத மானது. கணங்களிலேதான் சுந்தரலிங்கம் அவளைப் பார்த் தானாயினும், அந்த அழகியின் வசீகரம் அவன் மனந்தனிலே சித்திரமெனப் பதிந்து விட்டது.
அவள் அங்கிருந்து நடந்தாள். அவள் போகும் வழி தனிலே அவனது கண்கள் அடிபதித்தன. திமிறும் உடல். குலுங்கி,கைகளை ஒரு மாதிரி வீசி நடந்தாள், அந்த றோஸ் நிறச் சேலைக்காரி. போய்க் கொண்டிருந்தவள் திடீரென நின்று அவனைப் பார்த்துவிட்டு வீதியிற் பெருகிக் கொண் டிருந்த சனக் கூட்டத்தினுள்ளே கரைந்து போனாள்.
சுந்தரலிங்கத்திற்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
2
அடுத்தநாள், வியாழக்கிழமை மாலை சந்தோரில் வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். வீட்டு வறுமையினைத் தம்பி கடிதத்தில் விளக்கமாக வேதனை கசிய எழுதியிருந்தான். வேதனையினால் நெஞ்சிலிருந்து இரத்தம் கசியுமாயின் சுந்தரலிங்கம் எப்போதோ இரத்தமில்லாமற் செத்துப் போயிருப்பான். மனதினையும் தன் தனி ஆசை களையும் பிரச்சினை நிறைந்த வீட்டின் பார நினைவுகள் கொடூரமாக அமுக்கி அழுத்தும் போதெல்லாம் நடந்து தன்னையே மறந்து பித்தனொருவன் போல அவன், செல்வான். இன்றும் அப்படித்தான்; வாழ்க்கையையே வெறுக்க வைக்கும் மன விரக்தி.
கார் ஒன்று காதுச் சவ்வுகள் அதிரும்படி கோர்ண் அடித்தது. திடுக்கிட்டவன் போல சுந்தரலிங்கம் பக்கமாய் ஒதுங்கினான். சரியவிருந்த அவனது தோளை யாரோ பிடித்தது போலிருந்தது, ஆச்சரியத்தோடு திரும்பினான், பார்த்தான். அதிசயமாய் இருந்தது. அவள், அவளே தான். அதே புன்னகை. குளிர்ந்த முகம், தளதளத்து நின்றாள். அவன் பார்த்த கணத்திலேயே நாணமுற்றவள் போல கண் வலிந்து களை இமையினுள் மறைத்து குறுஞ்சிரிப்போடு முகம் குனிந்தாள். அவர்களுக்கு நேர் எதிரேயிருந்த பெட்டிக்கடை யொன்றிலிருந்தவன் அவ்வேளையில் ‘ஸ்ஸ்ஸ்!’ என்று மெதுவாக விசிலடித்தான்.
சுந்தரலிங்கத்திற்கு உடலோடு சேர்ந்து உள்ளமும் கட கடத்தது. அவளையே அசடு வழியப் பார்த்துக் கொண்டு “தாங்ஸ்” என்றான்.
அவள் மீண்டும் புன்னகையோடு” இதற்காகவா?” என்று மதுரமான குரலில் சிங்களத்திலே கேட்டாள். சுந்தரலிங் கம் நன்றாகச் சிங்களம் பேசுவானாதலால் அந்த சொல்லின் நளினத்தைக் காதாரப் பருகினான். அந்தக் குரல் காதினிற் கிணுகிணுக்கும் மனப்பிரமை.
சுந்தரலிங்கம் சிறிது தூரம் நடந்து போனவன், தோளில் தடவியபடி தன்னையறியாது திரும்பிப்பார்த்தான். அவனுக்காகவே காத்திருந்தவள் போல அந்தச் சிங்களப் பெண் அவனைப் பார்த்து மோகனமான புன்னகை சிந்தினாள் பின்னாலே வந்தபடி.
அவளுக்கு முகம்தான் வயது சொல்லமுடியாத இளமை யின் பூரிப்பான முகம். தள தளக்கும் கவர்ச்சியான உடலை வைத்து இருபத்தைந்து வயது மதிப்பிடலாம். கண்ணைக் குத்தும் உடல் வனப்புத்தான் அவள் பிறரைக் கவரும் ரகசியம். நேற்றுப் போலவே இன்றும் றோஸ் நிறச் சேலை யையே உடுத்திருந்தாள். குலுங்கும் நடை.
அவனது இடது தோளில் இன்னமும் மெத்தென்றிருந் தது. இனிமையான சுகானுபவம் தருகின்ற ஸ்பரிஸம், மனஞ் செய்த கற்பனைகள் அந்த இனிமையை மிகைப்பட வைத்தன.
சுந்தரலிங்கம் அழகனல்லாவிடினும் அவலட்சணமான வனல்லன். சிவந்த மெலிந்த தேகம். அடர்ந்து கெம்பிய கேசம். ஆனால் முகத்திலே ஏக்கமும், யோசனைகளும் பொருமிக் கிடந்தன. இருபத்தைந்து வயது வரை அவன் தன்னை வசீகரமாக்கித் திரிந்தான். பிறகு உடுப்பு விஷயத் திலே அவன் கூடிய கவனம் செலுத்திய போதிலும், அவ னது முகமும், அவனோடு இடைப்பட்டு வந்த சோம்பலும் அவனை மேலும் முதுமைப்படுத்திக் காட்டின.
சுந்தரலிங்கம் பல வேளைகளிலும் இளமைக்கேயுரிய ஆசைகளுக்குட்பட்டிருக்கின்றான். பெண்களையும், மனோர ரதியமான சினிமாப் படங்களையும், காதல் நவீனங்களையும் பார்த்து விட்டு இரவிலும் பகலிலும் கனவுகளாய்க் கண்டு சொப்பன சுகமடைந்திருக்கின்றான். காதலிக்க விரும்பியிருக் கின்றான். வீட்டை நினைத்து, அந்தப் பூங்கனவுகளையெல் லாம் மனத்திலிருந்து பலாத்காரமாக உரித்தெறிந்திருக்கின் றான். பெருமூச்சுக்கள். மனத்தாலும் உடலாலும் தனக்குத் தானே கற்பிதஞ் செய்து கொண்ட இன்பங்களை நினைத்து அவனே தன்னுள்ளே கூனிக்குறுகிக் கழிவிரக்கப்பட்டான். சித்தத்தை அடக்கிச் சிவனே யென்று வாழ்வதற்காய்யோகா சனம் பழகினான். கடைசியாகச் சென்ற வருஷந்தான் மகாத்மாகாந்தி எழுதிய இல்லறமும் பிரமச்சரியமும் என்ற புத்தகத்தைத் தன்னுடைய வேத நூலாக ஏற்றுப் பிரமச்சரிய விரதம் நோற்று வருகின்றான். அதுவும் சில வேளைகளில் அவனுக்கு தான் மேற் கொள்ளும் சமாத்கார மான நழுவுதலாக மனந்தனிலே படுவதாயினும் தோன்றிய நிமிஷத்திலேயே அந்த யோசனையின கழுத்தைத் திருகி அவன் தூர எறிந்துவிடுவான்.
நடந்து போய்க்கொண்டிருந்தபடியே நிர்த்தாட்சண்யமே யற்ற நினைவுகளிலே ஆழ்ந்திருந்த அவன், தன் பின்னாலே வந்த அந்தச் சுந்தரியை மறக்கவில்லை. இப்போதும் அவ ளைப்பற்றிய நினைவுகளும் வினாக்களுந்தான் எல்லா யோசனை களிலும் மேலோங்கியிருந்தன. அவன் சற்றுத் தரித்து நின்று திரும்பிப் பார்த்தான்.
அவள், மணிக்கூட்டுக் கோபுரத்தின் பக்கமாக நின்று, தலையை ஒரு மாதிரியாகச் சாய்த்து அவனையே பார்த்தபடி நின்றாள்.
சுந்தரலிங்கம் சுற்று முற்றும் பார்த்தான். தன்னையும் அவளையும் அங்கே அலைபுரண்டு கொண்டிருக்கும் சனத் திரளே அவதானித்து வாய்க்குள்ளே நமுட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு மனத் தினுள்ளே விஸ்வரூபமெடுத்தது.
மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழே நின்ற அவள் எதை நினைத்துக் கொண்டாளோ சடக்கென்று அங்கிருந்து பஸ் நிலையத்தை நோக்கி நடந்தாள்.
சுந்தரலிங்கத்திற்கு மிகுந்த ஏமாற்றமாகப் போய் விட் டது. மனதினுள்ளிருந்த எதையோ பறிகொடுத்தவன் போலச் சேர்ந்த நடையோடு தனது அறையினை நோக்கி நடந்தான்.
3
அந்தக் குச்சறையில் அவனோடு இன்னொருவன். சுந்தர லிங்கம் அறையினுள் போனபோது அவனது அறை நண்பன் ஆடியபாதம் கிழிந்த ஷேர்ட் ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்தான். அவனும் சுந்தரலிங்கத்தின் அச்சுத்தான். பிரச்சினைகள் நிறைந்த கீழ்த்தட்டு மத்தியதர வர்க்கத்தின் செல்வக் குழந்தை.
கைகால் முகம் கழுவிவிட்டு, அந்தச் சிறிய பாதரசம் மங்கிய கண்ணாடி முன்பாக நின்று தலைவாரி லோன்றி உடுப்புக்களை அணிந்து சுந்தரலிங்கம் புறப்பட ஆயத்தமான போது, கட்டிலில் ஷேட்டைப் போட்டுவிட்டு ஆடியபாதம் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
“என்ன இண்டைக்கு ரிப்ரொப்பாக எங்கையோ வெளிக்கிடுகிறீர்? என்ன விசேஷமோ?”
சுந்தரலிங்கம் வாய்க்குள்ளே சிரிப்பை நசித்தான்.
“அப்பிடி ஒண்டு மில்லையே…இதையாதல் அனுபவிப் பம்” மீண்டும் சுந்தரலிங்கம் தன்முகத்தினைக் கண்ணாடி யிற் பார்த்துக் கொண்டு நெற்றியைத் துடைத்தான். லேசாகக் கண்ணாடிக்குப் புன்னகை செய்தான். அவளின் முகம் கண்ணாடியில் நிழலாடினாற்போல் மனம் கற்பனை பண்ணிற்று.
கட்டுக்கலைப் பிள்ளையார் கோயிலை அவன் தாண்டிச் சென்றபோது அவள் புகையிரத நிலையப் பக்கமாக நடந்து செல்வது தெரிந்தது. றோஸ் நிறச் சேலை. குலுங்கும் பின் புறம், கைவீச்சு, பின்தொடரச் சொல்லும் நளின நடை, அவள் போகும் வழியில் செல்லலாமா எனச் சுந்தரலிங்கம் நினைத்தான். பிறகு மனதினுள்ளே ஏதோ தடுத்தது. அவள் ஒருமுறை திரும்பிப் பார்க்க மாட்டாளா என்ற நப்பாசையில் அங்கேயே நின்றான். தோல்வி. அவள் போய் விட்டு மறையும் வரையிலும் அவ்விடத்திலேயே நின்று மீண்டும் நூல் நிலையத்தை நோக்கி நடந்தான்.
நூல் நிலையத்திலே மனம் ஈடுபடவில்லை. தேனீர் குடித்துவிட்டுக் கண்டி வாவிப்பக்கமாக நடந்தான். சாய்வு வெய்யிலுள் மழைத்துமிகள் தடவினாற்போலச் சிந்தின. அதினுள் நடப்பது இனிய சுகம். அவளை நினைவிலே பின்னிக் கொண்டு, அவளது நினைவே வியாபித்தவனாய் அவன் நடந்து சென்றான். மனதின் அடிவாரத்திலே இதமான ஆசைகள் சுரந்து கொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் ஊற்றுக்கால் அவள், அவள்தான்; மறைந்திருத்த இளமை ஆசைகள், காலந்தாழ்த்திய வேளையிலும் தலைதூக்கி அவன் மனதினை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.
அவன் எதிராகப் பலர், இளம்பூக்கள், தேனீக்கள், சிரிப் புகள், நிறங்கள், இளமையின் களிப்புகள், முதிர்ந்தவர் களின் மனது நிறைந்த முகங்கள், மௌனமாகவும் போகும் நிறைவுகள். சுந்தரலிங்கமோ தனியன். வாழ்வை அனுப வியாதவன். மூன்றாமாள் வந்தால் பாய்விரித்துப் படுக்க இடமில்லாத குச்சறையில் வாழ்வினைப் போக்குபவன். அவனுக்காய்ச் சிரிக்கத் துணையில்லா வெறும் மனிதன்.
எதிரே நடந்து சென்ற இளைஞன், தன்னருகே ஒடுங்கி வந்த காதலியின் காதினுள் எதையோ சொல்லிவிட்டுக் கிக்கிளு மூட்டினான். அவள் குலுங்காமற் சிரித்த சிரிப்பிலே அவன் சொன்ன ரகசியம் புரிகின்றது. அந்த வேளை சுந்தர லிங்கம் அந்த றோஸ் நிறச் சேலைக்காரியை நினைத்தான். தன்னை நாடி வருகின்ற அவளைத் தானே மடத்தனமாக இழந்து போனதாக நினைத்தான். இனிமேல் அவளைக் கண்டால் எப்படியும் கதைத்துத் தன் மனதின் ஆசையைச் சொல்வது எனத் திடசங்கற்பம் செய்து கொண்டான். பிறகு அவளைக் கண்டால் எப்படியெல்லாம் கதைப்பது என மனம் ஒத்திகை செய்து கொண்டது.
சுந்தரலிங்கம் தன்னுடைய வாழ்க்கையிலே எதிர்பார்த் திருந்த பல விஷயங்கள் இதுவரையும் நடந்ததில்லை. இப்போது அழியுமுன்னரே நிஜமாகிவிட்டது.
அவள் வந்து கொண்டிருந்தாள். நடக்கும் கண்டிய ஓவியம். எல்லா ஒத்திகைகளும் நெஞ்சினுள் ஒழுங்கு மாறு கின்றன. உடம்பில் லேசான நடுக்கம் துளிர்க்கிறது.
அவள் அவன் முன்னே வந்துநின்றாள்,களைத்தவள்போல. சுந்தரலிங்கம் நெஞ்சுபடபடக்க அவளைப் பார்த்துச் சிரித் தான். அவளும் புன்னகையால் பதிலளித்தாள்.
அவள் கண்கள் சிமிட்டின. உதடுகளை நாவினாற் தடவி விட்டு மார்புக் குவட்டிலேயிலிருந்த லேஞ்சியை எடுத்து கீழுதட்டின் கீழே லேசாகத் துடைத்தாள். மீண்டும் நெஞ்சக் குவடினுள் லேஞ்சி புதைந்தது. இருவரும் சில கணங்களை மௌனத்தினுள் மூழ்கடித்தனர்.
அவளே மௌனத்தைக் குலைத்தாள்.
“நடந்து கொண்டே பேசலாம், வாருங்கள்”
சிங்களத்தில் சம்பாஷணை தொடங்கித் தொடர்ந்தது:
“நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்!'”
சுந்தரலிங்கம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “கச்சேரியிலை.”
“ஓ…அரசாங்க சேவையாளன்! நல்ல சம்பளம் கிடைக்குமே”
சுந்தரலிங்கம் புன்னகை பூத்தான்.
“நீங்கள் சிரிக்கும்போது நல்ல அழகாயிருக்கிறீர்கள்”
சுந்தரலிங்கத்தின் முகம் குப்பென்று சிவந்தது. அந்த உணர்வின் நிமிஷத்தில் அவன் வயதில் பத்து ஆண்டுகள் குறைந்தாற்போல மனதினில் இளமை கனிந்தது. ஒன்றும் பேசவில்லை அவன். அவள் அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.
“நீங்கள் கலியாணம் ஆகாதவர்தானே?”
முந்திக்கொண்டு பதில் சொன்னான் சுந்தரலிங்கம். ”கலியாணம் ஆகாதவன்”
அவள் நளினமாக உடலை நெளித்துச் சரிந்தாள்.
“நல்லதுதான்”
அவளும் அவனும் சோடியாக நடந்தார்கள். இடையில் அவனது தோள் தனில்இவள் தடவினாற்போல அணைந்தாள். சுந்தரலிங்கம் நினைத்தான். ‘இது போலவே நான்என் மனைவி யோடு கைகோர்த்துக் கொண்டு உலாவி மகிழ்வோடு நாட்களைக் கழிக்க வேண்டுமென்று எத்தனையோ ஆண்டுகள் கனவு கண்டேன்; அது நடக்கவேயில்லை. அப்படி வாழ்வு, இது போல சோடியாகத் திரியும்வாழ்வு எனக்கு ஏற்படுமா?’ நினைவுகள், ஏக்கமான நினைவுகள்.
கபே சூரியாவிற்கு கிட்ட வந்ததும் அவள் சுந்தரலிங்கத் தைப் பார்த்துவிட்டு தோளிலே கை வைத்தாள்.
“டீ குடித்துவிட்டுப் போகலாம்”
சுந்தரலிங்கத்தால் ஒப்பவும் முடியவில்லை. மீறவும் முடியவில்லை. முன்னால்சென்ற அவளைப் பின்தொடர்ந்தான்.
கபேயின் மூலைப்புறத்தில் வசதியாக அவளின் முன்னே அவன் இருந்தான். மேனாட்டுச் சங்கீதம் வானொலியிலிருந்து மெதுவாய் கேட்டது. வண்ணச்சுவர்கள், விசிறிகள். திக் குத்திக்காய் கதிரைகளில் ஆட்கள். சுவரின் முன்புறம் சிகிரியா ஓவியப் பெண் அங்குமிங்கும் தட்டுக்களோடு ஹோட்டல் பரிசாரகர்கள்.
இப்போதுதான் இருவரும் ஒருவரையொருவர் நேர்நேராகப் பார்க்கின்றார்கள். அவளை-மேசையிலே ஒரு கையை மடித்து, அதிலே தலையைச் சரித்துச் சாய்ந்திருப்பவளை சுந்தரலிங்கம் மிக்க ஆசையோடு நோக்கினான். அவள் கன்னத்தில் கிள்ள ஆசை வந்தது. கைகளோ பயத்தோடு அசைவற்றிருந்தன. அனுபவமற்ற கைகள்.
“உங்கள் பெயர் என்ன?”
“சுவர்ணா…சுவர்ணா மல்லவாராச்சி. நல்ல பெயரா?”
அவள் கேட்டுவிட்டுக்கீழு தட்டை நாவினால் நனைத்தாள். அவனுக்குக் கரைபுரண்ட உற்சாகம், “சுவீற் நேம்” என்றான்.
பிறகு சுந்தரலிங்கம் தயக்கத்தோடு கேட்டான்.
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?*’
அவள் திடீரென்று நிமிர்ந்து உட்கார்ந்தபடி அப்போது தான் வாசற்புறத்திலிருந்து வந்த பரிசாரகனை ஆட்காட்டி விரல் வளைத்துக்காட்டி ‘ஸ்ஸ்’ அடித்துக் கூப்பிட்டாள். அவன் வந்ததும் மட்டன் றோலிற்கும், கேக்கிற்கும் ஓடர் கொடுத்தாள். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவள் போலச் சொன்னாள்.
“உங்களுக்குச் சொன்னால் என்ன? நான் காலையிலிருந்து பட்டினி பாணும் எடுக்கப்போறன். சாப்பிட்டபிறகு நான் டீ குடிக்கிறன். இப்ப நீங்கள் டீ குடியுங்கோ. உங்களுக்கு ஆட்சேபணை இல்லை தானே?” அவள் சொன்னதைக் கேட்டதும் சுந்தரலிங்கத்திற்குத் திக்கென்றது. காலையி லிருந்து… இப்போது மாலை ஆறுமணிக்குக் கிட்டியிருக்கும். இப்போது வரை இவள் பட்டினியாயிருக்கிறாள் என சுந்தரலிங்கத்தின் நினைத்தபோது நெஞ்சினுள் ஈரங் கசிந்தது. அவளின் முகத்தை ஏறிட்டான். புன்னகையின் பின்னால் பசித்த முகப் பின்னணி. அவளில் பரிதாபமேற் பட்டது அவனுக்கு.
“நீங்கள் விரும்பியபடி சாப்பிடுங்கள் எனக்கு ஆட்சேபணை இல்லை.” அப்போது அவர்களைக் கடந்துபோன ஒருவன் அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு போனதைச் சுந்தரலிங்கம் அவதானிக்கவில்லை.
அவள் மிகவும் அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் தண்ணீரைப் பருகிவிட்டு நெஞ்சுச் சட்டைக்குள்ளிருந்து கைலேஞ்சியை எடுத்து வாயைத் தடவினாற்போல ஒத்தி எடுத்தாள். மார்புச்சேலை வழுதியபடி விலகிக் கிடந்தது. சுந்தரலிங்கம் தலையைக் குனிந்து மேசைக்குக் கீழே பார்த் தான். ஓரத்தில் புழுதி படிந்த சதைக் கால்.
“என்ன குனிந்திருக்கிறீர்கள்?”
அவள் அவனது தலையை நிமிர்த்தினாள். கால் லேசாக உராய்ந்து அவனுடலைச் சிலிர்க்கச் செய்தது. பரிசாரகன் பில்லைக் கொண்டுவந்து அவனுக்கு முன்னே வைத்தான். “அடடே உங்களுக்கு ரீக்குச் சொல்லவேயில்லை. இரண்டு ரீ, இரண்டு கண்டோஸ் சொக்கிளேற் பிறகு எல்லாம் சேர்த்துப் பில்லைத் தரலாம்” அவள் தன்னை கவனியாமலே சாப்பிட்டது சுந்தரலிங்கத்தின் மனதினை என்னவோ செய்ததாயினும் பேசாமல் அதனை நெஞ்சினுள் அடக்கிக் கொண்டான். ‘பாவம் நல்ல பசி இவளுக்கு?’
புதிய பில் வந்தது. சுந்தரலிங்கம் பில்லைப் பார்த்தான், எல்லாமாகச் சேர்த்து நாலு ரூபா பதினைந்து சதம். பில்லை ஆஸ்டிரேக்குக் கீழே நகர்த்தி வைத்துவிட்டு சட்டைப்பை யுள்ளிருந்து ஐந்து ரூபாவை அவன் வெளியே எடுத்தான். மனம் நினைத்தது. ‘இதே பணத்தோடு நல்ல வடையும் ரீயும் கணேஷ் சாப்பாட்டுக் கிளப்பில் பதினைந்து நாட்களுக்குச் சாப்பிடலாமே’ மறுமனம் நினைத்தது;
‘பிச்சைக் காரப் புத்தியே, நெடுகவா இப்படிச் சாப்பிடப் போகிறாய்? வாழ்வில் ஒரு நாளைக்கு அழகிய பெண்ணுடன் கழியும் வேளை தனிலும் தரித்திர யோசனையா? வாழ்வில் ஒருநாள். அதைப் பிரமாதமாக அனுபவித்து ஆனந்தப்படு!’
“டீயைக் குடியுங்கோ”
சுந்தரலிங்கம் தேநீர்க் கோப்பையை எடுத்தான்.
“றன்உஞ்சில்ல சிங்களப் படம் பார்க்கப் போவமா? பேர்ள்குறே நல்லா நடிச்சிருக்கிறாள். முந்தின அழகுராணி. வடிவான உடம்பு. என்னைப் பாருங்கோ. பேர்ள் குறேயைப் போல நானும் வடிவுதானே?” அவள் இன்னும் மார்புச் சேலையைச் சரி செய்யாமல் தோளைக் குலுக்கினாள். அவளைச் சுந்தரலிங்கம் பார்த்தான். பேர்ள் குறேயை அவன் அறிந்த தில்லை. றோஸ்நிறச் சேலைக்காரி அழகியேதான்.
“படம் பார்த்த பிறகு உங்கள் வீட்டிற்குப் போகலாம்” அவளின் குரல் கொஞ்சிற்று. அந்த நிலையிலும் அவன் விரக்தியோடு சிரித்தான். மூன்றாவது நபர் வந்தால் படுக்கப் பாய் விரிக்கக்கூட இடமில்லாத குச்சறை கண்முன்னே வந்து நகைத்தது.
“நாங்கள் இரண்டுபேர் ஒரே அறையில் குடியிருக்கிறோம்” தன்னை மீறிப் பெருமூச் செறிந்தான் சுந்தரலிங்கம். அவள் அவனையே பார்த்துவிட்டு மார்புச்சீலையை இழுத்துச் சரி செய்தாள்.
“நீங்களும் அப்ப என்னைப் போலத்தான்”
அவன் கூனிக்குறுகி மௌனமாயிருந்தான். எல்லாமே கசந்துவிட்டது போல மனம் தவித்தது. உலகையே நொந்தான்.
“இந்தாங்கோ சொக்ளெற்”
உரித்த சொக்ளெற்றை அவனது உள்ளங்கையிலே வைத்து மெதுவாக ஆறுதற்படுத்துபவள் போல வருடினாள்.
“உங்களுக்கு விருப்பமிருந்தால் படத்தைப் பார்த்து விட்டு ஒரு ஹோட்டலுக்குப் போய் இரவு தங்கலாம். உங்களுக்கு என்னில் ஆசையிருந்தால் சம்மதிப்பீர்கள்”
சுந்தரலிங்கத்தின் இதயம் ஓவென்று அழுதது. அவனது சட்டைப் பையினுள் ஒரு வாரச் செலவுக்குப் போதுமான இருபத்தைந்து ரூபா மட்டும்தான் இருந்தது. அதில் ஐந்து ரூபா ஹோட்டல் பில்லுக்குப் போய்விட்டது.
அவனுக்கு ஆசைதான். ஆனால் பையுள்ளிருக்கும் பணம்? அந்த வேளையில் அவனது மனதில் அவனது குடும்பம் வந்து நின்றது. எல்லோரது முகத்திலும் சோகம், அழுகை, ஏக்கம். இறுதியாகப் பந்தய ஓட்டத்தில் ஓடிக்களைத்து விழுந்தாற் போல நெஞ்சு சோர்ந்து விழுந்தது.
அவளை அவன் நிமிர்ந்து பார்த்தான். பசிக் களை தீர்ந்த பார்வை.
“படம் பார்க்கப் போவோமா?”
அவள் கைகளை பின்புறம் பின்னி உடல் நெளித்துக் கொண்டு கொஞ்சும் பாவனையில் கேட்டாள்…மீண்டும் மயங்கிக் கேட்டாள்.
சுந்தரலிங்கம் எழுந்தபடி எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.
“இன்றைக்கு வேண்டாம், இன்னொரு நாளைக்குப் போவோம்”
– 1969
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரத்தத்தில் இல்லையே
இரா.துரைமாணிக்கம்
August 19, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 19, 2026
இரட்டைப் பின்னல் இந்திரா
இரா.கலைச்செல்வி
August 19, 2026
