நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியாது
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 128
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நட்ராஜ், ரெடியா?”
“ரெடி சார்.”
“ஒரு முறை ஆர்க்கெஸ்ட்ராவோட சேர்ந்து பாடிடு, அடுத்து ‘டேக்’ தான்.”
“எஸ் சார்.”
“சண்முகம், ஒரு ‘பைனல்’ பார்த்துடுவமா?”
“பார்க்கலாம் சார்.”
“பென்னி, கிதார் சவுண்டே வரல்லேப்பா. கவனி.”
“கவனிக்கிறேன் சார்.”
“ரிதம்.”
“எஸ் சார்.”
“குமுக்கு முழுசா வரணும், முருகேஷ். ஏன் சிதறது? உங்க கவனம் இப்போல்லாம் இங்க இருக்கிறது இல்லை. நடிகரா யிட்டிங்க.”
“அப்படி இல்லே அண்ணே! நமக்கு முதல் உசுரு லயப் பொட்டிதான் அண்ணே. பாருங்க… சரியா.”
முருகேஷ் ஒரு குமுக்கா வைத்தார். ஓர் உருண்டைக் கூழாங்கல் மாதிரி அது முழுசாக வந்து விழுந்தது.
“குட்.”
“நட்ராஜ்.”
“சொல்லுங்கள் சார்.”
“பல்லவி கடைசியா, பமகக பாடறே இல்லையா? அதை சசரிகன்னு மாத்தி பாடிடுப்பா.”
“பாருங்க சார்…” என்று விட்டு பல்லவி தொடங்கி முடித்து, இதயராஜ் சொன்ன திருத்தத்தின் படி பாடி நிறுத்தினான் நட்ராஜ்.
“வெரிகுட்” என்றான் இதயராஜ்.
“ஓ.கே. ஒரு பைனல் போலாமா?”
“போலாம் சார்” என்றார் கண்டக்டர் சண்முகம். இசைக்குழுவினர் இருந்த அறைகளிலிருந்து அனாவசிய சத்தங்கள் இதயராஜுக்கு வந்தன.
முத்து, பாஸ்கரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“வரவர சாமிநாதன் சார் இப்பல்லாம் என்னைக் கூப்பிடறது இல்லை பாஸ்கர். இதயராஜ்கிட்டே வந்துட்டேன்னு அவரு கோபப்படறார். ‘பிஸி’யா இருக்கிறவங்களோடதானே நாம் சேர்ந்து இருக்க முடியும்? சாமிநாதன் பெரிய மியூசிக் டைரக்டர்தான். ஆனா, ‘டைம்’ இதயராஜுக்கு தானே நல்லா இருக்கு.”
முத்து, பாஸ்கரிடம் சொன்னது ‘ஒயர் வழியாக இதயராஜுக்கும் சென்று சேர்ந்தது.
இதயராஜின் மன ஒன்றிப்பை முத்துவின் பேச்சு சிதைத்தது. “யாரது சலசலன்னு பேசிக்கிட்டு இருக்கிறது?” என்றார் இதயராஜ்.
ஒரு அசாதாரண மௌனம் அங்கு நிலவியது.
“ஒரு பைனல்.”
பைனல் முடிந்து டேக்கும் முடிந்தது, இனிமையாக.
பல்லவியை மீண்டும் முணு முணுத்தான் நட்ராஜ்.
‘உன்னை நான் அறிந்த போது
என்னை நான் அறிந்தேன்
என்னை நான் அறிந்த பின்பு
மண்ணை நான் மறந்தேன்.
தேனில் விழுந்த ஈயானேன்
நானே எரிந்து தீயானேன்’
பல்லவி நன்றாக வந்திருப்பதாக நினைத்தான் அவன். வீர முத்துதான் எழுதியிருந்தார். ட்யூன், இன்னும் இந்தியாவுக்கு வந்திராத கேசட்டிலிருந்து உல்ட்டா பண்ணியது என்றாலும், இதயராஜ் அதில் மோகனத்தைக் கலந்து, கொஞ்சம் அடாணாவை யும் இணைத்துப் பிசைந்து கேட்கும் படியாகச் செய்து விட்டிருந்தார்.
பாட்டுக் கூலியை வாங்கிக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் தேவதாசு அவனையும் இதயராஜையும் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்.
“நட்ராஜ் ரொம்ப நல்லா பாடிட்டான் அண்ணே, அவன் டிராக் சிங்கர்னே நினைக்க முடியலை. அசல், கண்ணை மூடிக் கிட்டுக் கேட்டா, பாலு பாடறது மாதிரியே இருக்கு, இல்லீங்களா அண்ணே!”
இதயராஜ் அதிகம் பேசாதவர் என்று பெயர் வாங்கியிருந்தவர். சாமியார் என்றும் அவரைச் சொல்வார்கள். அவரே சொன்னார். “நட்ராஜ், நல்லா பாடிட்டே. பாலுவை இமிடேட் பண்ணறதை நீ விடனும். விட்டுறு. சீக்கிரமே நீ பாட நான் வாய்ப்பு தர்றேன்.”
“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றான் நட்ராஜ்.
“டுப் ஆர்டிஸ்ட் ரெடியா?”
“ரெடி சார்” என்றாள் கல்பனா.
கல்பனாவிடம் சொன்னார் டைரக்டர்.
“கல்பனா, அதோ சாக்பீஸில் மார்க் பண்ணியிருக்கு பார், அதான் உன் பொசிஷன். அங்கிருந்து நீ எகிறி அவனைக் காலால் உதைக்க வேணும். உதைத்து விட்டு அப்படியே கீழே விழறே. விழும் போது குப்புற விழணும். முகத்தைக் கேமரா பக்கம் திரும்பிடாதே…”
“சரி சார்.”
“லைட்ஸ்.”
“பர்னிங் சார்.”
“கேமரா.”
“ரன்னிங் சார்.”
‘ஆக்ஷன்.”
கல்பனா ஓடி வந்து எகிறிக் குதித்து, அவன் கன்னத்துக்குக் காலைக் கொண்டு வந்தாள். அவள் காலுக்குச் சரியாகக் கன்னத் தைக் கொடுக்க வேண்டிய ஸ்டண்ட் வரதன் தப்பு செய்துவிட்டான்.
“கட்” என்றார் டைரக்டர்.
“வரதா. இந்தப் படத்தை முப்பது ரூபாயில் முடிக்கணும்பா. இந்த மாதிரி ஒவ்வொரு ஷாட்டும் நாலு டேக் வாங்கினா, நாப்பது ஆயிடும்பா…”
‘சாரி சார்.”
“எகெய்ன் டேக்.”
இந்த முறை சரியாக வந்தது.
டைரக்டர் கல்பனாவின் முகத்தைப் பார்த்து ‘குட்’ என்றார். உதவி இயக்குநர் கல்யாணம், ‘ஒண்டர்ஃபுல்’ என்றான், அவளைப் பார்த்து அதீதமாகச் சிரித்துக் கொண்டே. ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் அவளைப் பாராட்டும் வகையில் கல்பனாவைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்திருப்பான். துரதிருஷ்டம் பிடித்த தமிழ் நாட்டில், எதையும் பகிரங்கமாகப் பகலில் பத்து பேர் அறியச் செய்ய முடிவதில்லையே! ஸ்டண்ட் மாஸ்டர் சுப்பராமன் சொன்னார். அவளைத் தனியாக அழைத்துப் போய்ச் சொன்னார்.
“கல்பனா, நீ ஒரு பிறவி நடிகைம்மா. பார்க்கவும் லட்சணமா இருக்கே. நல்லா டேன்ஸ் பண்றே. ஸ்டண்ட்டும் உனக்கு வருது. அதிர்ஷ்டக்கட்டையா இருக்கே. தைரியத்தை விட்டுடாதே. உனக்கும் ஒரு நல்ல டைம் வரும், நான் சொல்றேன், பார்.”
ஐந்தடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவளுக்கு இடப்பக்க விலா எழும்புகள் வலித்துக் கொண்டிருந்தன. இப்போ வலி மறைந்ததாகத் தோன்றியது.
தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் மேக்கப்புடன் அமர்ந்திருந்த நடிகை நடேஷா, தன்னைச் சுற்றி நடப்பது எதிலும் கவனம் செலுத்தாமல், கண்ணாடி பார்த்து தன் உதட்டை மேலும் இரத்தச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தாள்.
சேட்டுக் கடையில் அரைக் கிலோ முந்திரிப் பருப்பு பர்பி வாங்கினான் நட்ராஜ். கல்பனாவுக்கு இனிப்புகளிலேயே முந்திரிப் பருப்பு பர்பி தான் மிகவும் பிடித்த இனிப்பாக இருந்தது. அவளுக்குப் பிடித்தவை மூன்று இனிப்புக்கள் என்று கல்பனாவே சொல்வது வழக்கம். முதல் இனிப்பு நட்ராஜ். இரண்டாவது இனிப்பு அபாயகரமானது என்று பிறர் நினைக்கும் வேலைகளைத் துணிந்து ஏற்று டைரக்டர்களின் எதிர்பார்ப்பைப் பிசகாமல் செய்து விடுதல். மூன்றாவது முந்திரிப் பருப்பு பர்பி
ஒரு சார்மினார் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு மசூதித் தெருவை நோக்கி நடந்தான் நட்ராஜ். கல்பனாவைப் பார்க்க வேண்டும். அவளுடன் சற்று நேரம் பேச வேண்டும்.
“வா நட்ராஜ்” என்று வரவேற்றாள் கல்பனா.
கல்பனா அப்போதான் குளித்து விட்டிருந்தாள். தலை ஈரம் போக, கூந்தலை விரித்துப் போட்டு, கைவிரல்களாலும், பெரிய பல் சீப்பாலும் சிக்கெடுத்துக் கொண்டு, இருந்த ஒற்றை நாற்காலியில், காற்றைவிட அதிகம் சத்தம் வரும் ஃபேனின் கீழே அமர்ந்திருந்தாள் கல்பனா.
“உட்காரு” என்றபடி தன் நாற்காலியை விட்டு எழுந்து, அவன் உட்கார இடம் கொடுத்து விட்டுத் தரையில் அமர்ந்தாள் அவள்.
“இல்லை. இல்லை. நீ நாற்காலியில் தான் உட்காரணும். நான் தரையில் அமர்கிறேன். அதுதான் எனக்கு சௌகர்யம்” என்றபடி அவளை வற்புறுத்தி நாற்காலியில் அமர வைத்து விட்டுத் தான் அவளுக்கு நேர்கீழே சுவரில் சாய்ந்து கொண்டு அமர்ந்தான் நட்ராஜ்.
“இந்தா.”
“என்னது?”
“திறந்து பார்.”
“ஹ… ஹ… பர்பி.”
அவள் முகம் விளையாட்டுப் பொருளைப் பார்த்து மகிழும் குழந்தையுடையது மாதிரி மலர்ந்தது.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்தாள்.
“உம்… அந்த சேட்டுக் கடையுது தானே.”
“உம்.’
“அவன் கடை ருசியே தனிதான். இந்தா, நீயும் கொஞ்சம் எடுத்துக்கோ.”
அவள் டப்பாவை நீட்டினாள்.
“வேணாம்…”
“ஏன்…”
“நீயே எனக்கு முன்னால் இருக்கிறபோது, இன்னுமொரு இனிப்பு எனக்குத் தேவையா?” என்றான் நட்ராஜ் நாடக பாவனை யோடு.
அவள் சிரித்தாள். கல்பனாவின் சிரிப்பு கோயில் மணி போன்றது. ‘ணங்’ஙென்று ஒலித்து, படிப்படியாகக் கரைந்து ஓய்வது. மேல் வரிசையில், கடைசியாக ஒரு சிங்கப்பல் அவளுக்கு உண்டு. அவள் சிரிப்புக்கு, அது ஜீவன். ஒரு முட்டாள் டைரக்டர் அந்தப் பல்லை எடுக்க வேண்டும் என்றான். ரசனை கெட்ட ஜென்மங்கள்.
“என்ன. ரொமான்ட்டிக் மூடில் இருக்கையா?”
“நாம் சந்திச்சு பத்து நாளைக்கு மேலே ஆச்சு.”
அவள் மௌனமாகத் தலையைச் சிக்கெடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்ன. சந்தன சோப்பு போடறியா?”
“ஆமாம். மைசூர் சந்தன சோப்பு போட்டுக் குளிச்சாத்தான் குளிச்ச மாதிரி இருக்கு.”
ஒரு நிமிஷம் கழித்து கல்பனா சொன்னாள்.
“ஏதேனும் சாப்புடறயா? வாங்கியாரட்டுமா?”
“நானே போய் வந்துடறேன்…”
அவன் எழுந்து கிளம்பினான்.
“வேர்க்கடலை பகோடா வாங்க மறந்துடாதே…”
”சரி.”
அவன் என்.எஸ்.கே. சாலைக்கு வந்தான்.
வழக்கமாக வாங்கும் கடைக்கு வந்தான்.
“ஆஃபா, புல்லா சார்?”
“ஆஃப்.”
விஸ்கி பாட்டிலைப் பக்குவமாகக் கட்டிக் கொடுத்தார் தேவர்.
மறக்காமல் வேர்க்கடலை பகோடாவை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான் நட்ராஜ்.
தட்டி வைத்துத் தடுத்து, அடுப்பறை என்று வழங்கப்பட்ட பிரதேசத்திலிருந்து அவள் சொன்னாள்.
“நட்ராஜ். ஒரு அரை மணி இரு. குழம்பு கொதிச்சதும் வந்துடறேன். ஏதாவது பத்திரிகை பார்த்துகிட்டு இரு.”
சினிமாப் பத்திரிகைகள் இறைந்து கிடந்தன. ஒன்றை எடுத்துப் புரட்டிக் கொண்டு இருந்தான் நட்ராஜ. துவைத்து மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அவள் சேலைகள் அவன் கண்ணுக்குத் தெரிந்தன. அவற்றை எடுத்து வந்து மேசை மேல் போட்டான். இஸ்திரிப் பெட்டியை எடுத்து பிளக்கில் சொருகி, புடவையை ஒவ்வொன்றாக இஸ்திரி போடத் தொடங்கினான் நட்ராஜ்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கே…”
“அயர்ன் பண்றேன்…”
“எதை?”
“உன் புடவைகளை-“
“உனக்கு எதுக்கு அந்த வேலையெல்லாம்?”
“ஏன்? நான் செய்யக் கூடாதா? செஞ்சா குறைஞ்சு போயிடுவனா?”
“அதுக்கில்லை. என்னத்துக்குன்னுதான்.”
“சும்மா மூடிக்கிட்டு வேலையைப் பாரு.”
அவள் சிரிப்பது அவனுக்குக் கேட்டது. ஒரு மணியோசை.
“வர வர ரொம்ப மோசமாப் போயிட்டேப்பா” என்றாள் கல்பனா.
“எதில்?”
“ரொம்ப ‘வல்கரா’ பேசறே.”
‘அப்புறம்?”
“முன்னை மாதிரி அடிக்கடி வரமாட்டறே.”
“வேலை கொஞ்சம் அதிகம்.”
“ஆமா… பெரிய சிங்கர் ஆயிட்டே.”
சடக்கென்று அவன் போட்டுக் கொண்டிருந்த இஸ்திரிப் பெட்டி நின்றது.
“நீயும் என்னைக் கிண்டல் பண்றையா கல்பு?”
அவள் அடுத்த கணம் வந்துவிட்டாள்.
“சாரி..நட்ராஜ். ஏன் சதாகாலம் உன்னையே நீ நொந்துக்கறே… சரி… வா… சாப்பிடலாம்.”
அவள் பாயைக் கொண்டு வந்து விரித்தாள். உள்ளே சென்று இரண்டு தட்டில் இரண்டு மீன் துண்டங்களை எடுத்து வந்து வைத்தாள். தண்ணீர், பாட்டில், கிளாஸ்கள் சகிதம் அவர்கள் அமர்ந்தார்கள்.
“எனக்குக் கொஞ்சமா போடு” என்றாள் கல்பனா.
உண்ணத் தொடங்கினார்கள். அருந்தத் தொடங்கினார்கள். “பயங்கரமா கசக்குதுப்பா! கொஞ்சம் தண்ணி ஊத்து.” ஊற்றினான்.
“எனக்கு பீர்தான் புடிக்கும்.”
“சொல்லியிருக்கக் கூடாதா?”
“பரவாயில்லை. உன்னண்டை காசு இருக்குமோன்னு தான்.”
“இருக்கு.”
“வேலை இருந்துச்சா?”
“உம்! கல்பு. இன்னிக்கு ஒரு நல்ல பாட்டு பாடினேன். பாடட்டுமா?”
”பாடு.”
அவள் மோகனத்தை ஆலாபனம் செய்யத் தொடங்கினாள். கண்ணை மூடிப் பரவசமாகப் பாடி நிறுத்தினான்.
“தேனில் விழுந்த ஈயானேன்.
நானே எரிந்து தீயானேன்” என்று பாடிக் கொண்டிருந்தவன் அவள் கையைப் பற்றினான்.
“இரு. படுக்கையைத் தட்டிப் போட்டுடறேன். அதுக்கு முன்னால் ரெண்டுவாய் சோறுதின்னு. எப்பயுமே, நீ சோறு திங்க மாட்டறே, வெறும் தண்ணியைக் குடிச்சு, வயிறு வெந்துடப் போகுது.”
அவள் தட்டில் சோற்றைப் போட்டு மீன் குழம்பு ஊற்றிக் கொண்டு வந்து முன்னால் வைத்தாள்.
“பாட்டு எப்படின்னு சொல்லலையே?”
நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியாது = 659
“உன் பாட்டுக்கு என்ன! அருமையா பொழியறே… உன் பாவத்துக்குப் பாதி கூட பாலுவால் கொண்டுவர முடியாது…”
“நீதான் சொல்றே. பின், ஏன் என்னை யாருமே பாடகனாக அங்கீகாரம் செய்ய மாட்டறாங்க… நான் எத்தனைக் காலம் இப்படியே டிராக் சிங்கராவே இருந்துடறது?”
“அங்கீகாரம் வரும் நட்ராஜ். பொறு! உனக்கு மட்டும்தானா. எத்தனைக் கலைஞர்கள் இன்னும் திரை மறைவிலேயே இருக்காங்க… காலம் ஒருநாள் அவர்களை வெளிப்படுத்தும். நெருப்பைப் பொட் டலம் கட்ட முடியுமா?”
சிவந்த நிறத்தில் இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவள் அடங்கிய குரலில் சொன்னாள்.
“நட்ராஜ்…இடுப்புப் பக்கம் கையை வைக்காதே…”
“ஏன்?”
“ரொம்ப வலிக்கு.”
“அடி பட்டுடுத்தா?”
“ஆமா… லேசான அடிதான். அஞ்சு அடி உயரத்திலிருந்து குதிச்சேன்.”
“கீழே பாதுகாப்புக்கு மெத்தை, பஞ்சு மூட்டை வைக்கோல் எதுவும் போடலயா?”
“இல்லை.”
“கேட்க வேண்டியது தானே?”
“ரொம்ப நாள் கழிச்சு வந்த வாய்ப்பு. டைரக்டர் வேறே கொஞ்சம் முசுடு.”
“…”
“ஏய்… நட்ராஜ்….என்ன அழறியா?”
“…”
“ஏன்?”
“ஒன்றுமில்லை…”
“சொல்லுப்பா.”
“கல்பு! இன்னும் எத்தனை காலம் நீயும் நானும் இப்படி நிழல் உருவங்களா இருக்கப் போறோம்… நம் நிஜ உருவம் உலகத்துக்கு எப்போ தெரியும்?”
“கண்டிப்பா ஒருநாள் வரும். அப்போ தெரியும்.”
“எப்போ வரும். நாம் செத்த பிறகா?”
“சீ… ஏன் இப்படி அவசரப் படறே… பொறுமையாக இரு நட்ராஜ். இப்போ என்ன நமக்கு குறைஞ்சு போச்சு?”
“என்ன சொல்றே.. குறைஞ்சு போச்சா? இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு, எவளோ ஒரு மண்ணாங்கட்டி நடிகைக்கு டூப்தானே போடறே…”
“ஆமா.”
“அது குறைச்சல் இல்லையா?”
“இல்லை. நட்ராஜ் இல்லை. எதுவும் குறைச்சல் இல்லை. எனக்குத் திறமை இருக்கு. உண்மைதான். அதை வெளிக்காட்டவும் செய்யறேன். அது போதும். என் வேலை அதுதான். எவளோ ஒருத்திக்கு நான் உபயோகப்படறேன், இல்லையா? என் திறமைக்கு அர்த்தம் நான் அதை வெளிப்படுத்தி சந்தோஷப்படறது மட்டும் தான். அதை மத்தவங்க புரிஞ்சுக்கணும்னு எனக்குக் கட்டாயம் இல்லை.”
“எனக்கு ஒரு நல்ல காலம் வரட்டும். உன்னைக் கல்யாணம் பண்ணின பிறகு, அந்த மாதிரி வேலைக்கெல்லாம் உன்னை நான் அனுப்பவே மாட்டேன்.”
“அப்படின்னா, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்.”
“என்ன சொல்றே?”
“பின்னே? எனக்கு சந்தோஷமே, நான் அந்தத் தொழில் செய்யறதில்தான் அடங்கியிருக்கு. இப்போ நான் உன்கூட படுத்துக் கிட்டது எனக்காக இல்லை, நட்ராஜ். உனக்காக, உனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றுதான். உன் சந்தோஷத்துக்கு மட்டுமே நான் வாழ முடியுமா? எனக்குன்னு நான் எப்போ வாழறது? என் சந்தோஷத் துக்குக் கல்யாணம் குறுக்கே நிக்கும்னா, நான் கல்யாணத்தைப் புறக்கணிப்பேனே தவிர, தொழிலைப் புறக்கணிக்க மாட்டேன்… நட்ராஜ். ஆர்க்லைட்டுக்கு முன்னாலே நிக்கற போதுதான், நான் ஜீவிக்கிறதாக நினைக்கிறேன்.
தெருவில் கார் வந்து நிற்கிற சப்தம் கேட்டது.
“கல்பனா” என்னும் ஒரு அழைப்பு.
புரொடக்ஷன் மானேஜர் சீனுதான் அழைத்தார்.
“வந்துட்டேன் சார்” என்று கத்தினாள் கல்பனா.
“நட்ராஜ்! நான் கிளம்பணும். வேலை வந்திருக்கு. படம் பொங்கல், ரிலீஸ். இரவும் பகலுமா வேலை நடக்கு, நீ தூங்கு. நான் காலை ஏழு மணிக்கு வந்துடுவேன்.”
அவள் எழுந்து, பெட்டியில் இருந்து ஒரு சேலையை எடுத்து உடுத்திக் கொண்டாள். முகத்துக்குப் பவுடர் போட்டுக் கொண்டாள்.
கிளம்பினாள்.
செட்டில் காஸ்டியூமர் அப்துல்லா அவளைத் தேடி வந்தான்.
”அம்மா! நீங்க கேட்ட சிங்கப்பூர் ஷர்ட் வந்திருக்கு. வாங்கிக்கிறீங்களா?”
“பணம் எடுத்து வரல்லையே அப்துல்.”
“பணம் எங்கே போயிடும்? அப்புறமா வாங்கிக்கறேம்மா.”
ஷர்ட் பச்சையும் கறுப்பும் கலந்து மிக அழகாய் இருந்தது. நட்ராஜுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள் கல்பனா.
காலை ஏழு மணிக்குத்தான் வேலை முடிந்தது. கம்பெனி காரிலேயே வீடு வந்து இறங்கினாள்.
வீடு பூட்டியிருந்தது.
பக்கத்து வீட்டு சரோஜா சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சொன்னாள்.
“ராத்திரி நீ போன கையோட அந்த ஆளும் வீட்டைப் பூட்டி என்னண்டை சாவியைக் கொடுத்துட்டுப் போயிடுச்சு கல்பனா.”
“எப்போ வர்றேன்னு சொன்னார்?”
“நாளைக்கு வர்றேன்னு சொன்னார்.”
அதற்குப் பிறகு அவன் வரவேயில்லை.
– 1988
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ, நான், சுஜாதா…
ச.சிவபிரகாஷ்
August 7, 2026
ஒரு முழம்
சந்திரலோஷினி சேவியர்
July 26, 2026
