நினைவு அலைகள்
கதையாசிரியர்: ஸ்ரீவத்ஸன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 147
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சித்தி சித்தி! என்னைப் பாருங்கோ!”
பாகீரதி கண்களை விழித்து மிரள மிரளப் பார்த்தாள்.
“என்ன சித்தி, என்னைத் தெரியல்லியா? அப்படிப் பார்க்கிறேளே? உங்க பொண்ணு ருக்கு இல்லையா நான்? நீங்க என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்கலே சித்தி,” என்றாள் ருக்கு.
பாகீரதியின் கண்களில் நீர் அருவியாகக் கொட்டியது. “யாரது, ருக்குவா?” என்றாள் பாகீரதி மறுபடி நினைவிழந்தாள்.
“ருக்கு அதற்குள் பேச்சுக் கொடுக்காதே. நன்றாக மயக்கம் தெளியட்டும்.” என்று சொன்னான் அவள் கணவன் கோபாலன்.
2
அரை மணி நேரம் சென்ற பின் பாகீரதிக்கு மயக்கம் தெளிந்தது.
“ஏன்னா என் சித்திக்கு ஒன்றுமில்லையே, பிழைத்து விடுவாங்களல்லவா…?”
“ஒண்ணும் அபாயமில்லை ருக்கு. அவளைப் பிழைக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. இதோ பார். உன் சித்தி கண்ணைத் திறக்கிறாள். இனி பயமில்லை.”
”சித்தி, சித்தி! இப்போ எப்படியிருக்கு?”
“…ஆ, நான் எப்படி இங்கே வந்தேன்?”
“என் அதிர்ஷ்டம்தான் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. சித்தி, இதுதான் உங்க பேத்தி பூமா. அசாத்திய விஷமம். இவன்தான் பேரன் குமார். பூமா பூமிக்கு நெருப்பை வச்சா, குமார் ஆகாசத்துக்கு நெருப்பு வச்சுடுவான். அவ்வளவு பரம சாதுக்கள்!”
பாகீரதி ஆச்சரியத்தால் கண்களை மூடி மூடித் திறந்தாள்.
ருக்கு காப்பி கொண்டுவர உள்ளே போனாள்.
3
“இதோ பார், பாகீரதி. இவ தான் உன் மூத்தாள் பெண் ருக்கு. இனிமே நீதான் இவளைக் கவனிச்சுக்கணும். ருக்கு. இதோ பார் உன் சித்தி. எங்கே சித்திக்கு நமஸ்காரம் பண்ணு.”
இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இப்படித்தான் சுந்தரேசய்யர் தன் மூத்தாள் பெண் ருக்குவைத் தன் இளையாளுக்கு அறிமுகப் படுத்தினார் – பாகீரதிக்கு ஞாபகம் வந்தது.
அப்போது ருக்குவுக்கு இரண்டு வயது. யார் அவளைப் பார்த்தாலும் அள்ளி அணைத்து அப்படியே முத்தமிடுவார்கள். அவ்வளவு அழகு.
பாகீரதியும் ருக்குவிடம் அன்பாய்த்தான் இருந்தாள். அடுத்த வருஷம் பாகீரதிக்கு சாந்தா பிறந்தாள். அதன் பிறகு பாகீரதியின் போக்கு மாறி விட்டது. அதுவுமல்லாமல். சாந்தா கன்னங்கரே லென்று மண்டை பெரியதாகப் பெரிய கண்களுடன் பார்க்க மிக விகாரமாய் இருந்தாள். தன் பெண் தன் மூத்தாள் பெண்ணைவிட அழகில் ரொம்பவும் மட்டம் என்ற விஷயம் அவளுக்கு ருக்குவிடம் ஒரு வித அசூயையையும் பொறாமையையும் உண்டு பண்ணியது.
ருக்குவைக் காரணமில்லாது கோபித்து வந்தாள். அவள் ஏதாவது செய்தால் ‘ஏன் செய்தாய்’ என்றும்; செய்யாமல் இருந்தால் ‘ஏன் செய்யாமல் இருக்கிறாய்’ என்றும் பாகீரதி சொல்லுவாள்.
4
“சித்தி, இந்தக் காப்பியைக் கொஞ்சம் சாப்பிடுங்கோ. இந்தக் குழந்தைகள் என்னைப் படுத்தற பாடும் ஒரு நாள் போறதும் எனக்கு யுகமாயிருக்கு,” என்று சொல்லிக் காப்பியைக் கொடுத்தாள் ருக்கு.
பாகீரதி படுத்தபடியே காப்பியை வாங்கிச் சாப்பிட்டாள்.
‘இதுகள் என்னைப் படுத்தரபாடு ஒரு நாள் போறது ஒரு யுகமாய் யிருக்கு’ என்று ருக்கு சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.
5
மூத்தாள் குழந்தையை இளையாள் படுத்துவது உலகத்திலே புதிது இல்லைதான். ஆனால் அவள் ருக்குவைப் படுத்தியது கொஞ்சம் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
இவ்வளவு தூரம் படுத்தியும் ருக்கு வாய் திறப்பதில்லை. ‘சித்தி, சித்தி’ என்று ஒட்டியபடியே இருந்தாள். சாந்தா ருக்குவைச் சதா படாத பாடு படுத்திவந்தாள். அப்போது கூட வாய் திறப்பதில்லை. நல்ல சோறு, நல்ல பாவாடை கிடையாது. ஓர் ஆறுதலான பேச்சும் கிடையாது. சுந்தரேசய்யருக்கு இதையெல்லாம் கவனிக்கப் பொழுது இருந்தால் தானே? இவ்விதம் சித்தியிடம் அவஸ்தைப்பட்டும் கூட புன்முறுவலுடன் ருக்கு இருக்கும் போது அவர்தான் எப்படி பாகீரதியைத் தப்பாக எண்ண முடியும்…?
6
வேலையை யெல்லாம் முடித்துக் கொண்டு ருக்கு பாகீரதியிடம் வந்து உட்கார்ந்து கொண்டு, “சித்தி, உடம்பைப் பிடிக்கட்டுமா?” என்று ஆரம்பித்தாள்.
‘இந்தப் படுபாவி ருக்குவை துன்பத்திற்குள்ளாக்கியதற்கு என் உடம்பைப் பிடித்து விடறாளாமே? சிறுவயசில் இவள் மென்னியையே பிடித்து வந்த என்னை இவள் ஏன் இப்படி நேசிக்கிறாள்?’
“என்ன சித்தி. நீங்கள் ஒரு காரியம் செய்து விட்டு எனக்கு தெரியாது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் ருக்கு. பாகீரதி திடுக்கிட்டாள். ‘அப்படியானால் தான் செய்த காரியம் இவளுக்குத் தெரிந்து விட்டதா? அப்படியிருந்துமா என்னை நேசிக்கிறாள்?’ -பாகீரதியின் மனச்சாட்சி குத்தியது.
“நீ என்ன சொல்றே, ருக்கு? நான் என்ன செய்தேன்?”
“சொல்லட்டுமா?”
“சொல்லேன்”. பாகீரதியின் குரல் படபட வென நடுங்கியது.
“வயத்திலே பொறந்த பெண் மாதிரி நாடகம் நடிக்கிறா. என்ன ஆனாலும் பெற்ற பெண் ஆகமாட்டாள். ரொம்ப கரிசனப்பட்டவ மாதிரி நடிக்கிறதைப் பார். மகாகள்ளி’ என்று நீங்கள் என்னைத் தப்பாக நினைக்கிறீர்கள். இப்படி நினைக்கிறதுதான் நீங்கள் செய்த காரியம்…. நான் சொல்றது சரி தானே?”
பாகீரதிக்குப் பெருமூச்சு வந்தது. அது அவளுக்கு ஆறுதல் மூச்சு – நல்லவேளை, நான் செய்தது அவளுக்குத் தெரியவில்லை.
7
அவள் ருக்குவுக்குச் செய்த பெரிய அநீதியல்லவா அது? அதை அப்போது எப்படிச் செய்தாள் என்பதை இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
“இதோ பார் பாகீரதி, இப்பவும் என் ஆபீஸிலே ஒரு புது மானேஜர் வந்திருக்கார். நல்ல சுபாவம். நம்ம ருக்குவோட அழகைப்பற்றி கேள்விப்பட்டு எதிர்ஜாமீன் கூட வேண்டாம்னு சொல்லி ருக்குவை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்,” என்றார் சுந்தரேசய்யர். அப்போது ருக்கு கலியாணப் பருவத்தில் வளைய வந்து கொண்டிருந்தாள்.
“சம்பளம் மாதம் இருநூறு ரூபாய். அவர் நல்ல சிவப்பு நிறம். தாயார் தகப்பனாருக்கு ஊரில் நிறைய நிலம் இருக்கு. ஒரே பிள்ளை. வர வர சம்பளம் உயர்ந்து ஐநூறு ரூபாய் கூடப் போகும். பத்தாயிரம் ரூபாய் எதிர் ஜாமீன் கொடுத்துக்கூட யார் யாரோ வந்தார்களாம். அவர் நம் ருக்குவுக்குக் கிடைப்பது ருக்குவின் அதிர்ஷ்டம்.” என்றார்.
அவர்கள் ருக்குவைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய பணக்கார தோரணையும் நல்ல சுபாவமும் மாப்பிள்ளையினுடைய அழகு – படிப்பு முதலியனவும் சேர்ந்து பாகீரதியின் மனத்தில் ஒருவித அசூயைய உண்டு பண்ணி விட்டது.
‘ருக்குவுக்கா இவ்வளவு பணக்கார இடமும் கண் நிறைந்த கணவனும்? என் பெண் சாந்தாவுக்கு இந்த வரன் கிடைக்குமா? கிடைக்காது தான். என் பெண்ணுக்குக் கிடைக்கா விட்டாலும் ருக்குவுக்கு அந்த வரன் குதிரக் கூடாது!’ – அவள் மனம் பொறாமைத் தீயால் மூட்டப் பட்டது. அநேகமாக எல்லாம் முடிவாகும் தருவாயில் திடீரென்று கலியாணம் நின்று விட்டது.
“எந்தப் பேயோ, என்னுடைய குழந்தை தலையில் மண்ணை வாரிப் போட்டு விட்டாள். நல்ல வரன் தட்டி விட்டது. என் பெண் ருக்குவுக்கு சித்தஸ்வாதீனம் சரியில்லை என்றும் அடிக்கடி காக்கை வலிப்பு வருவதாகவும் அவள் அழகுக்காக ஆசைப்பட்டு மோசம் போக வேண்டாம் என்றும் எந்தப் படுபாதகியோ சம்பந்திக்கு எழுதிப் போட்டுக் கலைத்து விட்டாள். அது து சுத்தப்பொய் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இப்படி மொட்டைக் கடிதம் எழுதியவள் உருப்படாமல் போவதுடன் அவள் பெண்ணுக்கும் இதே கதி நடக்க வேண்டும்.” என்று சாபமிட்டார் சுந்தரேசய்யர்.
எப்படியோ ருக்குவுக்கும் ஏழை கம்பவுண்டர் கோபாலனுக்கும் திருமணம் நடந்தது.
சாந்தா பெரிய இடத்து மாட்டுப்பெண் ஆனாள்.
8
“அப்பா செத்துப் போன போது, உங்களைப் பார்த்தது; நான் போட்ட கடிதங்களுக்குப் பதில்கூடப் போடவில்லையே சித்தி….?” என்று ஓர் ஆரஞ்சை உரித்துக் கொடுத்தாள் ருக்கு.
‘ஆமாம், பாகீரதி பதில் போட வில்லைதான். அப்பா செத்துப் போயாச்சு, இன்னும் என்ன சித்தி உறவு? நாளைக்குப் பிரசவம் என்று சொல்லி இங்கே வரவா? என்னிக்கு அவர் செத்துப் போனாரோ அன்றே உறவு விட்டு விட்டது’ என்று எண்ணினாள் பாகீரதி.
“என்னமோ போலே இருக்கு ருக்கு. அப்புறம் நிறையப் பேசுவோம். சித்த தூங்கறேன்,” என்றாள் பாகீரதி.
தூக்கம் வரவில்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டாள் பாகீரதி.
9
ஐந்து ஆண்டுகளிலே எவ்வளவு சம்பவங்கள்! – கணவன் இறந்த பிறகு வீடு வாசலை விற்று விட்டு சாந்தாவிடமே போய் விட்டாள் பாகீரதி. வீடு விற்ற பணத்தைத் தன் மகள் சாந்தாவிடமே கொடுத்து விட்டாள்.
ஒரு வருட காலம் சென்றது. சாந்தாவும் அவள் கணவனும் டாம்பீகமாக வாழ்ந்து வந்தார்கள். பாகீரதி வீட்டில் இருந்தது பிடிக்க வில்லை அவளுக்கு. அவளைச் சமையற்காரியாக நடத்தினார்கள்.
அவர்கள் அவளை வெறுத்தது மல்லாமல் வீட்டை விட்டே துரத்தும் அளவுக்கு வந்துவிட்ட நிலமையைக் கண்டு அங்கிருந்து புறப்பட்டாள் பாகீரதி. பெண்ணாவது மண் ணாங்கட்டியாவது என்று வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விட்டது.
அதன் பிறகு அவள் கிராமத்தில் தன்னுடைய தாயார் வீட்டுக்குப் போய் விட்டாள். அங்கு மூன்று வருஷங்கள் இருந்தாள். அவள் தாயாரும் இறந்து விட்டாள். இவளும் படுத்த படுக்கையானாள். அப்பொழுது கூட சாந்தா வரவில்லை. அவள் கணவனுக்கு மேலைநாட்டில் ஆறு மாதம் பயிற்சி; அவனுடன் அவளும் போய் விட்டாள்.
சென்ற ஒரு வாரமாகவே பாகீரதியின் மனத்தில் ஒரு சபலம். ருக்குவுக்கு தான் இழைத்த கொடுமைக்குத்தான் கடவுள் தன்னை இப்படி தண்டிக்கிறார் என்று நினைத்தாள். அவள் மனம் அவளைச் சுட்டது. எப்படியும் ருக்குவிடம் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்து அவள் விலாசத்தைக் கண்டு பிடித்து அங்கு போனாள். அவள் கணவன் மறுபடி வைத்தியக் கல்லூரியில் படித்து டாக்டராகி யிருப்பதாகத் தெரிந்து கொண்டாள்.
அன்று அவள் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து வாசற்படி அருகில் போனபோது திடீரென்று. மயக்கம் போட்டு விழுந்தாள். யாரோ நோயாளி என்று நினைத்து ருக்குவின் கணவன் அவளை உள்ளே கொண்டு போய்ச் சேர்த்தான். அதே சமயம் அங்கு வந்த ருக்கு அவளைத் தன் சித்தி எனக் கண்டு கொண்டாள்.
10
“ருக்கு, நீ தெய்வப் பெண். நான் செய்த கொடுமைக்கு நீ என்னிடம் காட்டும் அன்பு கடவுளுக்கே பொறுக்காது!” அழாக்குறையாகச் சொன்னாள் பாகீரதி.
“பேசாமல் இருங்கோ, சித்தி. இன்றைக்கு நான் நன்றாயிருப்பது உங்களால்தானே? தாயாரில்லாத என்னை இரண்டு வயது முதல் பதினெட்டு வயது வரை ஆளாக்கியது நீங்கள்தானே…? என்னை நீங்கள் கொடுமையாக நடத்தியதாக நீங்கள் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள்? நீங்கள் என்னைக் கண்டிப்பாக நடத்தியதால் தான் நான் இன்று வாழ்க்கையில் வெற்றி காண்கிறேன். உங்களை நான் நினைக்காத நாளே இல்லை. ஆனால் நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள்”. என்றாள் ருக்கு. அவள் கண்களில் நீர் துளித்தது
”உனக்கு நான் செய்த கொடுமைக்கு சிகரம் வைத்தாற் போல் நான் செய்த ஒரு காரியம் உனக்குத் தெரிந்தால், உன் மனம் என்ன பாடுபடும். தெரியுமா? நான் மட்டும் அந்தக் காரியம் செய்யாதிருந்தால் இன்று நீ ஆயிரம் ரூபாய் சம்பள உத்தியோகஸ்தர் மனைவியாய் பங்களா – கார் வைத்துக் கொண்டு உன்னத ஸ்திதியில் இருந்திருப்பாய்! உனக்கு வர விருந்த கணவனுக்கு உன்னைப் பற்றி மொட்டைக் கடிதம் எழுதியது இந்தப் பாவிதான். இப்படியும் செய்திருப்பேனா என்று நினைக்காதே. மூத்தாள் பெண் என்ற அசூயை என்னை அப்படிச் செய்யத் தூண்டியது,” என்றாள் பாகீரதி.
“சித்தி, இதன் மூலம் நீங்கள் எனக்குச் செய்திருக்கும் உதவிக்கு நான் எவ்வளவு ஜென்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் ஈடாகாது. ஆம்; அது உங்களுடைய உதவிதான். என்னை ஏழையாகப் பார்த்தாலும் சுமங்கலியாகப் பார்க்க முடிகிறது. தாங்கள் மட் டும் அப்படிப்பட்ட காரியம் செய்யாதிருந்தால், இன்று என் நிலைமை சொல்லவேவாய் கூசுகிறதே….!” என்றாள் ருக்கு.
“நீ என்ன சொல்றே ருக்கு?” என்று பரபரப்புடன் கேட்டாள் பாகீரதி.
“எனக்கு முதன் முதல் பார்த்த வரன் நாலு வருஷம் முந்தி ஆபீஸ் சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு ஆகாய விமானத்திலே போன போது விபத்தில் உயர் துறந்து விட்டார். நீங்க கேள்விப்பட வில்லையா?” என்றாள் ருக்கு.
‘தெய்வமே, நான் ருக்குவுக்குச் செய்த தீவினை கடைசியில் நல்ல உதவியாகவே வாய்த்து விட்டது. எல்லாம் உன் கருணை!’ என்று சொல்லியவாறு ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள் ருக்குவின் சித்தி பாகீரதி.
– ஜூலை 1957, உமா இதழ்.
தொடர்புள்ள சிறுகதைகள்
எத்தித் திருடுமந்தக் காக்கை!
மா.சித்திவினாயகம்
May 31, 2026
வேண்டுதல்
ஜெயந்தி சங்கர்
May 31, 2026
இவருக்குப் பதிலாக இவர்
எஸ்.மதுரகவி
May 31, 2026