நானும் கங்காவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 148 
 
 

இந்த குளிர் காலத்தில் படுக்கையை விட்டு எழுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல..ஆனால் அன்றாட வாழ்க்கையை அதற்கான நிகழ்வோடு பயணிப்பதை தவிர்க்க இயலாது..அதனால் கொஞ்சம் சோம்பலை முறித்து என்னருகே உள்ள மேசை மீது இருந்த சிறிய கடிகாரத்தில் மணியை பார்க்கிறேன். விடியற்காலை ஐந்து மணி என்று காட்டியது.

இப்போது எழுந்தால் தான் இல்ல பணிகளை முடித்து விட்டு எனது அலுவலக பணிக்கு செல்ல சரியாக இருக்கும்… எப்போதும் வழக்கமாக அந்த விடியற் பொழுதை ஒரு சில நிமிடங்கள் வீட்டு புழக்கடையில் வந்து நின்று ரசிக்காமல் என் கடமையை நான் செய்தது இல்லை.. அப்படியே நான் வளர்த்து வரும் செடிகளை மெதுவாக நோட்டமிட்டேன்.. அங்கே சில ரோஜாக்கள் பூத்து மணம் வீசியது.. அது தலையசைத்து வா வா என்று உற்சாகமாக அழைத்தது.. அதனருகில் சென்று மெல்ல அதன் இதழ்களை வருடி விடும் போது அந்த இதழ்களில் இருந்து வழிந்த பனித்துளிகள் என் விரல்களின் வழியாக படர்ந்து ஓடியது..அதை அப்படியே சிறிது நேரம் ரசித்துக் கொண்டே என் காலை கடன்களை முடித்துக் கொண்டு தேநீர் தயாரிக்கும் பணிக்காக செல்கிறேன்…

அந்த தேநீர் கோப்பையை எடுத்து கொண்டு மீண்டும் புழக்கடை பக்கம் வருகிறேன்.. அங்கே ஓரிரு காக்கை குருவின் சத்தம் தற்போது கேட்கிறது.. மெல்ல மெல்ல மேலே சூரியன் எழ ஆயத்தமாகும் அறிகுறிகள் கிழக்கு வானம் சிவப்பதில் உணர்ந்து ரசிக்கிறேன்..

என்ன இருந்தாலும் இந்த இயற்கை தனது நியதியை மாற்றாமல் எப்படி பயணிக்கிறது என்று எப்போதும் போல ஆச்சரியம் கொண்டு பருகுகிறேன் என் கையில் உள்ள தேநீரை அதே ரசனை மாறாமல்..

பிறகு குளித்து முடித்து விட்டு என் நாளின் தொடக்கத்தௌ இனிமையாக்கும் வானொலி ஒலிபரப்பு சேவையை ரசித்துக் கொண்டே காலை உணவு தயாரிக்கும் பணிகளுக்கு இடையே அலுவலக பணிக்கான ஒத்திகையும் செல்கிறது ஒரு ஓரமாக மனதின் மூலையில்..

ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்தது…

அலுவலகம் செல்வதற்காக எனது அலுவலக பையை எடுத்துக்கொண்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்…கதவை பூட்டி விட்டு எனது இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு பயணிக்கும் போது தான் அந்த அசாதாரண நிகழ்வை கண்டேன்…

ஒரு இளம் பெண் அங்கே கண்ணீரோடு கதறி அழுதுக்கொண்டே சாலையின் இடது புறத்தில் அந்த பேக்கரி பக்கம் கிழிந்த உடையோடு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதை கவனித்து மீண்டும் எனது வாகனத்தை திருப்பி அவள் அருகில் வந்து அவளை தொட்டு திருப்புகிறேன்… நான் தொட்டதில் மீண்டும் பயந்து நடுங்கி மிரண்டு ஒதுங்கி போகிறாள்…

ஏன் இந்த அவஸ்தை அவளுக்கு என்று சொல்லாமலேயே புரிந்தது எனக்கு..

அவளை பார்வையாலேயே அமைதிப் படுத்தி விட்டு அங்கிருந்து அவளை நேராக எனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்…

வழி நெடுக அவளும் எதுவும் பேசவில்லை நானும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை..

இந்த சமுதாயத்தில் நிகழும் அற்பத்தனமான நிகழ்வில் இதுவும் ஒன்று தானே…

இங்கே இதை பற்றி நிறைய பேசுவார்கள் எழுதுவார்கள்.. ஆனால் செயல் என்று வந்து விட்டால் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நமக்கேன் வம்பு என்று ஓரமாக ஒதுங்கி போய் விடுவார்கள்.. இங்கே பல பெண்களுக்கு நிகழும் அநியாயம் எல்லாம் அவளுக்கு எதிராக அவள் மீது வேண்டும் என்றே பழி சுமத்தி பழக்கப்பட்ட சமுதாயத்திற்கு இந்த அலைகளின் வலியை எப்படி உணர்த்தினாலும் உணர போவதில்லை.. அப்படியே உணர்ந்தாலும் உணராதது போல கடந்து தான் செல்வார்கள்..

இது காலம் காலமாக அவள் நிகழ்த்தப்படும் ஒரு தீராத வன்முறை..

இப்படியே யோசித்துக் கொண்டே சாலையில் பயணித்து எனது வீட்டிற்கு வந்து விட்டேன்..

அந்த பெண் மெல்லமாக இறங்குகிறாள்..

அவளை வீட்டுக்கு அழைத்து சென்று குளியலறையை காட்டி குளிக்க சொல்கிறேன்.. அதற்கு முன் என்னிடம் உள்ள எனக்கு மிகவும் பிடித்த ஒரு பிங்க் கலர் சுடிதாரை அவளிடம் கொடுத்து குளித்து முடித்து விட்டு வா என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு அவளுக்காக சில உணவுகளை ஆர்டர் செய்கிறேன்.. பிறகு அவள் வந்தவுடன் இஞ்சி தட்டி போட்ட தேநீரை சூடாக அவளிடம் கொடுத்து பருகு என்கிறேன்..

அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்..

நான் அவளை அழக் கூடாது என்று சமாதானம் கண்களாலேயே சொல்லி விட்டு நகர்ந்து சென்று இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்கிறேன்.. எதிர் முனையில் எனது மேலதிகாரி கதிரவன் என் விடுப்பு தகவலை காதில் வாங்கியவுடன் ஏனம்மா என்னாச்சு இன்று தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் நிறைய உள்ளது.. எம் டி கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று கொஞ்சம் சலிப்போடு கேட்டார்…

நான் உங்களுக்கு என் விடுப்பு பற்றிய விபரங்களை நாளை அலுவலகம் வந்து சொல்கிறேன் சார்.தற்போது கொஞ்சம் எதிர் பாராத நிகழ்வு நேர்ந்து விட்டது புரிந்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சரிம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் பாருங்கள் என்று சொல்லி அலைபேசி இணைப்பை துண்டித்தார்…

நான் மீண்டும் அவளின் அருகில் சென்று சோபாவில் அமர்ந்தேன்.. அவள் கைகளுக்குள் முகத்தை புதைத்து கொண்டு தேம்பி தேம்பி அழுகிறாள்…

அவள் கொஞ்சம் அழட்டும் என்று விட்டு விட்டேன்..

அப்போது வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்டது..

கதவை திறந்தேன்.நான் ஆர்டர் செய்த உணவு வந்து இருந்தது..அதை வாங்கி டைனிங் ஹாலில் இருந்த மேசை மீது வைத்து விட்டு அவளிடம் வந்தேன்..

தற்போது அவள் அழகை கொஞ்சம் நின்று இருந்தது..

நான் அவளிடம் என்ன படித்து இருக்கிறாய் என்றேன்.. நான் பள்ளி படிப்பு மட்டுமே முடித்து இருக்கிறேன் அக்கா என்றாள்..

வேறு என்ன கைத் தொழில் தெரியும் என்று கேட்டேன்.. எனக்கு தையல் சமையல் மிகவும் அற்புதமாக செய்வேன் என்றாள்..

எப்படி இது நிகழ்ந்தது என்று கேட்டேன்.. நான் நினைத்தது போலவே தான் அவள் கதையும் இருந்தது.தன் காதலனே தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லும் போது மீண்டும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை..

அவன் படித்து பணியில் இருப்பதாகவும் தன்னை தவிர வேறு எவரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று காதல் மொழிகளால் அவளை கட்டி போட்டு இருப்பதையும் என்னிடம் சொல்லி சொல்லி அழுதாள்.. இங்கே இவள் மேல் பிழை இல்லை..

ஆனால் இந்த சமுதாயம் இப்படி நம்பிக்கையோடு தான் நேசித்தவன் கரம் பிடிப்பான் ஏமாற்ற மாட்டான் என்று தன்னை முழு காதலோடு ஒப்படைத்தவளை கேலி பேசி தூற்றும்.. என்ன அநியாயம் என்று நினைத்தேன்…

அவள் என்னிடம் நான் என்ன பிழை செய்தேன் அக்கா என்றாள்..

அவள் வயது பதினெட்டு தான் என்று அவள் சொன்னதில் தெரிந்து கொண்டேன்..

தற்போது பதினெட்டு வயது என்பது அறியாத பருவம் இல்லை என்றாலும் அவள் உணர்வுபூர்வமாக தோற்று இருக்கிறாள் என்பது தான் வேதனையான விஷயம்..

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..நீ பிழை இல்லை மா இந்த சமுதாயம் அவர்கள் கொண்ட பார்வை பல ஆண்களின் வக்கிர குணம் இது தான் பிழை என்று சொல்லி விட்டு அவளை சாப்பிட அழைத்தேன்..

இல்லை அக்கா வேண்டாம் ..நீங்கள் இந்தளவுக்கு என்னை பார்த்து கொண்டதே போதும்.. நான் வருகிறேன் என்று எழுந்தாள் கரம் கூப்பி கும்பிட்டு.. நான் அவள் கரம் மென்மையாக பற்றி  உட்கார வைத்தேன்..எங்கே செவ்வாய் என்று கேட்டேன்..

நான் ஒரு ஆதரவற்றவள்.. எங்கே என்று தெரியவில்லை.. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று அந்த நிலையிலும் தீர்க்கமாக சொன்னாள்..

எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது அவள் கூற்று..

அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்தேன்..

பிறகு நீ இங்கேயே இரு.. மாலையில் பேசலாம்.. எங்கேயும் தயவுசெய்து போய் விடாதே.. எனக்கு அவசர அலுவல் பணிகள் உள்ளது.. மாலையில் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.. தயவுசெய்து செய்து போய் விட மாட்டாய் தானே என்று அவளிடம் கேட்டேன்.. இல்லை இல்லை அக்கா போக மாட்டேன்.. தங்களது இந்த அன்பிற்கு நான் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் அல்லவா.. இங்கே என்னை போன்றவர்கள் வாழ்வது நரக வேதனை என்றால் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையில் நான் கூனி குறுகி போய் விடும் அளவுக்கு அணு அணுவாக சாகடிப்பார்கள்.. என் கதையை கேட்பவர்கள் என்றாள்.. அதெல்லாம் விடு..நீ உன் கதையை ஏன் தம்பட்டம் அடித்து சொல்கிறாய்.. அந்த நிகழ்வு பற்றிய நினைவுகளை அழி.. நான் உனக்கு இருக்கிறேன் என்று அவள் முகத்தை கையில் ஏந்தி சொல்லி விட்டு மீண்டும் அலைபேசி எடுத்து என் மேலதிகாரியிடம் சொன்னேன் நான் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறேன் என்று.. அவர் ஆச்சரியம் அடையாமல் வாங்கம்மா நீங்களாவது விடுப்பு எடுப்பதாவது என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே..

நான் அவளிடம் திரும்பி நான் வரட்டுமா என்று கேட்டுக் கொண்டே சில பல எளிய புத்தகங்கள் அவள் வாசிக்க ஏதுவாக வரவேற்பு அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு வானொலியை போட்டு விட்டு உனக்கு மதியம் சாப்பாடு ஆர்டர் செய்கிறேன் என்றேன்.. இல்லை அக்கா வேண்டாம்.. நான். தேநீர் வைத்து சில பிஸ்கட் எடுத்து கொள்கிறேன் என்றாள்.. அவள் ஏன் மறுக்கிறாள் என்று புரிந்தது.. சரி அங்கே சமையலறையில் ஏதாவது வேண்டும் என்றால் சமைத்து கொள் என்று சொல்லி விட்டு உன் பெயரை கேட்க மறந்து விட்டேனே என்றேன் சிறிது புன்னகைத்து..

என் பெயர் கங்கா என்றால் வறண்ட சிரிப்போடு..

உங்கள் பெயர் என்று அவசரமாக கேட்டாள்.. என் பெயர் நதி என்றேன்..

உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா என்று கேட்டாள் அவசரமாக.. நான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு லேசாக முறுவலித்து விடை பெற்று கொண்டு வெளியே வருகிறேன்.. என் முன் வாசலில்  தொட்டியில் உள்ள ரோஜாக்கள் அசைந்து என்னை கூப்பிட்டது.. நான் அதை அலுவலகம் செல்லும் அவசரத்தில் லேசாக வருட அதன் முட்களில் ஒன்று பதம் பார்த்தது..

நான் அது ஏற்படுத்திய வலியை பொறுத்து அதனிடம் உரிமையோடு மாலை வந்து கவனித்து கொள்கிறேன் உன்னை என்று சொல்லி விட்டு எனது வாகனத்தை எடுக்கும் போது எனது வீட்டில் உள்ள வானொலியில் காலம் மாறலாம் என் காதல் மாறுமா என்று மெல்லிய ஓசையில் கேட்டது.. அந்த பாடல் இங்கே எனக்கும் அந்த ரோஜாவுக்கும் உள்ளே உள்ள கங்காவுக்கும் பொருத்தமாக தான் இருக்கும் என்று தலையை இடம் வலம் அசைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக சாலையில் பயணிக்கிறேன்.. அலுவல் வேலைக்காகவா அல்லது வேறு கங்கா கண்களில் பட்டு விடக் கூடாது என்றா என்று என் ஆழ் மனம் என்னை கேள்வி கேட்டு கிண்டல் செய்வதை கொஞ்சம் புன்னகைத்து ரசித்தபடியே….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *