நரியும் சேவலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 28 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் ஒரு நரி தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு சேவற்கோழியைக் கண்டது. தான் ஓடிப் பிடிப்பதற்குள் சேவல் ஓடிவிடும் என்று அதற்குத் தெரியும். ஆகவே சூழ்ச்சியால் கோழியைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அது கோழியினிடம், “தம்பி சேவலே, செய்தி தெரியுமா உனக்கு?” என்றது. 

சேவல், பறந்து தப்ப இடமிருக்கிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே, “என்ன செய்தி, பொல்லாத நரியண்ணரே!” என்றது. 

“இனி நமக்கிடையே எத்தகைய பொல்லாங் கும் இல்லை. விலங்குகள் எல்லாம் சேர்ந்து ‘இனி ஒருவரை ஒருவர் கொல்லவோ தின்னவோ கூடாது. எல்லாரும் சைவமாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்,’ என்று தீர்மானித்தன. அதனைக் கொண்டாட எல்லாரும் விழா அயர்கின்றனர். நாமும் விழாக் கொண்டாடலாம், வா,” என்றது. 

சேவலுக்கு நரியின் சூழ்ச்சி விளங்கி விட்டது. ஆகவே அது, “அப்படியா, மிகவும் மகிழ்ச்சியே. ஆனால் நமது விருந்திற்கு இன்னொரு பங்காளியும் வருகிறான். அதோ நாயண்ணா வருகிறான் பார்,” என்றது. உடனே நரி ஓடத்தொடங்கிற்று. 

‘அண்ணா, முன்பு விலங்குகளுக்குள் பொல் லாங்கு எல்லாம் தீர்ந்துவிட்டது என்றீர்கள்; இப்போது நீங்களே ஓடுகின்றீர்களே; அஃது ஏன்?’ என்று கேட்டுச் சேவல் ஏளனம் செய்தது. 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *