தெய்வசிகாமணி
கதையாசிரியர்: மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 96
(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-15 | அதிகாரம் 16-18
பதிமூன்றாம் அதிகாரம்

சத்திரத்துத் தாழ்வாரங்களிலும், உள்முற்ற வெளிகளிலும், ஜனங்கள் நிறையப் படுத்துத் தூங்குகிறார்கள். சிலர் தூங்கி விழுந்து கொண்டே தாம்பூலந் தரித்துட்கார்ந்திருக்கிறாகள். சிலர் கும்பலாகக் கூடிக்கொண்டு சீட்டாடுகிறார்கள். சிலர் கோர்ட்டு வழக்குகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குடு குடுப் பாண்டிகள், பாம்புக்காரர்கள், மரமணி வெண்கல மணிக்கார வீரசைவப் பண்டாரங்கள், தங்கள் தங்கள் ஜோல்னாவைத் தலைக்கு வைத்துக் கொண்டு வெளிப்பக்கத்தில் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை கூட்டங்களையுங் கடந்து காலியாயிருக்கும் ஓரறைக்குட் புகுந்து விளக்கு வெளிச்சத்தில் இரகஸ்யம் தீட்டிய, கவரையுடைத்துப் படித்துக் கொண்டு போகிறான். உதடு துடிக்கிறது, கண்ணிற்றண்ணீர் வடிகிறது, சரீரம் ஸ்தம்பிக்கிறது, பெரு மூச்செறிகிறது, திருப்பிப் படிக்க அவனுக்கு மனங்கூடவில்லை. இக்கடிதம் யாரால் எழுதியிருக்கலாம்.(கையொப்பத்தைக் கவனிக்கிறான்) வேறொருவ ரெழுத்துமல்ல. ஐயா கை அக்ஷரமே, சந்தேகமில்லை நான்கு தினமாக நாம் வீட்டுக் காரியங்களைக் கவனியாது திரிந்ததனால் இப்படி நம்மைக் கேவலப்படுத்தி நற்புத்தி புகட்ட நினைக்கிறார்களோ? இல்லை இல்லை.நாம் சொந்தப் பிள்ளையாயிருந்தால் வேணுவன லிங்கம்பிள்ளை இவ்வளவு வைரஞ் சாதிக்கக் காரணமில்லை. ஒச்சன், மருளாடி யென்னும் திருடர்கள் வசமிருந்து மீட்டினதற்குக் காரணம், யாதா யிருக்கலாம். அக்கள்ளர் ஜாதியிற் சேர்ந்த கன்னி அல்லது ஒரு விதவை, பெற்ற பிள்ளையா யிருப்பேனோ? சிசுக் கொலையால் வரும் பாதகத்தைப் பெரிதாய் நினையாத பேதையர், விதவை அல்லது கன்னி, பிரஸவித்த பிள்ளையால் ஜாதிக்கு நேரும் அவமானத்தைப் பொருளாக எண்ணுவரோ? அப்படியுமிராது. இரண்டொரு சோசியர்கள் ஐயா விடம் என் ஜாதகத்தைக் கேட்ட போது அதற்குச் சரியான முகாந்தரம் கூற வகையற்று, ‘காணவில்லை, தவறிவிட்டது’ என்று சொன்ன ஞாபகமிருக்கிறது. தம்பிள்ளையானால், ஜாதகமெழுதி வையா திருப்பார்களா? காணாமலும் போகுமா? நல்ல விந்தை! நல்ல விந்தை! ஏ, உடலே, உடலே உன் பெருமை குறைந்ததா. தாசில் பிள்ளையவாள் குமாரர் என்னுங்கெர்வஜன்னி தொலைந்ததா? ஐயோ, ஒரு ஆடு மாடாகப் பிறந்தாலும் இது-ஆட்டுச்சாதி அது மாட்டுச்சாதி யென்று குருடனுங் கூடத்தடவிப் பார்த்துத் தட்டில்லாமற் சொல்லி விடுவானே. அந்த யோக்யதையும் உனக்கில்லையே! ஆனால் நீ மனித ஜாதி யென்பதிற் குறையில்லை. அட கன்மமே உனக்குள்ள பலம், யாருக்குத்தான் உண்டு. உற்றார் பெற்றாரென்று சிலரைக் கூட்டம் போட வைப்பாய் கூடின் கூட்டத்தைக் கைநொடிப் பொழுதிற் கலைப்பாய், கேவலம் பிக்ஷைக்காரனைக் கிரீடாதிபதி யாக்குவாய். சக்ரவர்த்திகளைச் சந்திக்குச் சந்தி தண்ணீருங் கிடையாதலைய விடுவாய். உன் மகிமையை மகிமை யென்று பிரலாபித்துக் கொண்டே சுவரோடு சாய்ந்து மயங்கினான். அக்கடிதத்தின் செய்தியை இன்னதென அறிய வாசகர்கள் ஆவலுறுவராதலால் அதனையும் இங்கு குறிக்கிறோம். அக்கடிதம் இங்கிலீஷில் எழுதியிருந்தாலும், மொழி பெயர்த்து இங் கெழுதப்பட்டிருக்கிறது.
“என் அருமைச் செல்வமே, அடியிற்கண்ட விஷயங்களை யெழுதத்துணிந்த நான் பெரும்பாவி. நீ எங்களுக்குச் சொந்தப் பிள்ளையல்ல. 1826-ம் வருஷத்தில் மணிமங்கலத்திற்கு மேல்புற மிருக்கிற, லக்ஷூ லக்ஷூமிமால்த் திண்ணையில் ஒச்சன், மருளாடி என்ற இரண்டு கள்ளர்கள் கைக்குழந்தையாயிருந்த உன்னைக் கொல்லப் பிரயத்தனஞ் செய்து கொண்டிருந்த சமயம் நாம் கண்டு அவர்களில் ஒருவனை வதைத்து உன்னையெடுத்து வந்து இதுவரை வளர்த்தோம். எப்போதும் உன்னையே பிள்ளையாக வைத்துக் கொள்ளவும் எண்ணியிருந்தோம். என் மனைவிக்கும் பூரண சம்மதம். என் கஷ்டகாலம், என் மாமனால், உன்னைப் பிரிக்க நேரிட்டிருக்கிறது. அவர் எப்படியும் உன்னைச் சதி செய்ய எண்ணியிருக்கிறார் என்பது எனக்கு இரவு 9-மணிக்குத்தான் தெரிய வந்தது. நீ இன்ன வகுப்பைச் சேர்ந்தவனென்று அவர் தெரிந்து கொள்ளவில்லை தெரிந்தாலும் அவர் மிகக் கொடியரே. என் மரணச்சடங்கு முதலியவற்றை உன்னால் நடப்பிக்க அவருக்குச் சம்மதமில்லாமல் இப்போதே உன்னை வெளியேற்றி விட வழி தேடிக் கொண்டிருக்கிறார். ஆகையினாலே என் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானே! என்னுடைய மரண காலத்தில் கூடிய சுற்றத்தார் கண் முன்னிலையில் நீ அவமானப்படாம லிருக்கவும், உன் உண்மைப் பெற்றோர்களை அடையும் பருவம் வந்து விட்டமையாலும், உனக்கு ஒரு ஏற்பாடும் செய்து வைக்கு முன் திடீரென்று இவ்வியாதி எனக்குச் சம்பவித்திருப்பதாலும் உன்னைப் பிரித்து விடுவது உத்தமமென்று எனக்குத் தோன்றிற்று. இதனினும் விசேஷமாக உன் வரலாற்றைத் தெரிய வேண்டுமாயின் நமது மாசிலாமணியைக் கேள், உன் பூர்வீக சரித்திரத்திற் காதாரமான சில ரிக்கார்டுகள் இத்தோடு கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் எழுத என் கை சோர்ந்து போகிறது கண்ணீரும் கடிதத்தை நனைக்கிறது. என் உடம்பிருக்கிற மாதிரியில் மரணம் சமீபத்திலிருக்கு மென்றெண்ணுகிறேன்.
இங்ஙனம்
பசுத்தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல்
பாய்ந்த உன்போஷக பிதா,
நெல்லையப்பன்.
நெடுநேரங்கழித்து மயக்கம் நீங்கி யெழுந்த தெய்வசிகாமணி இரண்டாவது கவர்க்கடிதத்தைப் பிரித்தான். அதில், வர்த்தமானப் பத்திரிகை ஒன்று, மருளாடியின் சவத்தோரங் கிடந்த வெற்றிலை பாக்குப் பையிலிருந்த சின்னக்கடிதம் ஒன்று, கவிராயருந் தாசில்தாருஞ் சேர்ந்து சோமசுந்தரம்பிள்ளைக் கனுப்பின கடிதத்தைத் தங்கச்சாமிபிள்ளை கைவசப்படுத்திக் கொண்டு அதற்குச் சோமசுந்தரம்பிள்ளை பதிலெழுதியதாக தங்கச்சாமிபிள்ளையால், தாசில்தாருக்குத் தபால் மூலமாயனுப்பிய கற்பனைக் கடிதம் ஒன்று ஆகிய இவைகள் அடக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒச்சன் கடிதம்
“கணபதியால், உன்னிடம் ஒப்பிக்கப்படும் உருப்படியைக் கொலை செய்து விடு. ரூபா 500 தருகிறேன்.
தங்கச்சாமிபிள்ளை.”
எனவும், வர்த்தமானப் பத்திரிகை தமிழகம்.
“காணாமற் போன தெய்வசிகாமணி பாப்பையாபுரம் மிராசுதார் சோமசுந்தரம்பிள்ளையின் 2-வயதுள்ள ஆண் குழந்தை யொன்று திருச்செந்தூர் விசாகத் திருநாளன்று தவறிவிட்டது. கண்டு பிடித்து உடையவர்கள் வசம் சேர்ப்பவருக்கு 1000மும் அக்குழந்தையின் ஆபரணங்களும் இனாம். நிறம் செவப்பு வலது முன் கையில் தெ.எழுத்துப் பச்சை குத்தியிருக்கும்”
எனவும்
மற்றொரு கடிதம்
“மஹாகனம் பொருந்திய ஐயா தாசில் நெல்லையப்பபிள்ளை யவர்களுக்குத் தங்கள் சோமசுந்தாம் எழுதுவது. தாங்களும் மஹா யோக்கியரான சாமிநாதக்கவிராயரும் எழுதிய கடித்ம் வந்து சேர்ந்தது. தங்கள் வசமிருக்கும் குழந்தை நம்முடையதல்ல. அது காணாமற் போன வருஷத்திலேயே இறந்து போனதாக உண்மையுள்ள பெரிய மனுஷாள் மூலமாக அறிந்து கொண்டோம். எமது சகோதரன் தங்கச்சாமிபிள்ளைக்கும் கவிராயருக்கும் ஏற்பட்டிருக்கிற மனஸ்தாபத்தினால் எங்கேயாவது ஒரு பிள்ளையைத் தேடிக் கொண்டு வந்து உருட்டுப்புரட்டு ஒன்றுமறியாத பரம ஸாதுவான எமது சகோதரனிடமிருக்கிற மிராசைக் கைப்பற்ற நினைத்துத் தங்களை வஞ்சித்து நம்பும்படி செய்து ஏற்கனவே ஆதாரம் உண்டு பண்ணிக் கொண்டு திரிகிறார். எம்மிராசை எமது சகோதரனுக்கு மனப்பூர்வமாகக் கொடுத்து விட்டோம். நாம் 10, 12-வருஷங்களாகக் குடும்பத்தை விட்டு சன்னியாஸ ஆஸ்ரமத்திலிருக்கிறோம்.எமக்குப் பிள்ளையுமில்லை சொத்துக்களுமில்லை. யாவும் அகித்யம், ஸாதுவாகிய தங்கள் கடிதத்திற்கு மறுமொழி யெழுதாதிருப்பது மரியாதை யல்லவே பெண்றெண்ணி இதற்கு. மட்டும் பதிலெழுதலாயிற்று. உலக விவகாரத்திற்கும் நமக்கும் வெகுதூரம். கவிராயருக்கு எல்லாத் தொழிலுந் தளபாடம், சாக்ரதை! குருநாதன் துணை.
சோமசுந்தரம்” எனவும்.
எழுதியிருப்பவைகளைத் தெய்வசிகாமணி ஒரு முறைக்கிரு முறை படித்துப் பார்த்து ஆலோசிக்கலானான். வர்த்தமானப் பத்திரிகையிற் கண்ட விஷயம் வெகுகாலத்திற்கு முந்தினதாயும் கலப்பற்ற உண்மையுள்ளதாயுந் தெரிகிறது. ஆனால் சொற்பகாலத்திற்குள் சோமசுந்தரஸ்வாமிகள் எழுதிய நிருபம் அதற்கு மாறாக இருக்கின்றது. இக்கடிதத்திலும் ஒச்சன் கடிதத்திலும், தங்கச்சாமியிள்ளை யென்ற ஒருவரைப் பற்றிய பிரஸ்தாபம் வருகிறது. அவரும் சோமசுந்தரம்பிள்ளைக்குத் தம்பியென்றுந் தெரிகிறது. அதாவது கடைசிக் கடிதத்தினாலே, அதிலேயே “உருட்டுப் புரட்டு ஒன்று மறியாத பரம் ஸாது” என்று அவரைக் குறிக்கப்பட்டிருக்கிறது. அப்படியவர் பரமசாதுவாயிருந்தால் “கொலைசெய்துவிடு” என்று ஒச்சனுக்குச் சின்னக்கடிதம் எழுதியிருக்க மாட்டார். அவர் இன்னொரு தங்கச்சாமி பிள்ளையாயிருக்கக் கூடுமென்றாலோ கையெழுத்துக் களிரண்டும் சற்றேறக்குறைய ஒன்று போலவே யிருக்கின்றன. கடைசிக் கடிதத்தில் இன்னமொரு கவிராயரைப் புகழ்வது போல் இகழ்ந்திருக்கிறது. இவருக்குச் சோமசுந்தரம்பிள்ளை இன்னவித சம்பந்தமுடையவரென்று தெரிய இடமில்லை. கவிராயர் அன்னியராயிருந்தால் சோமசுந்தரம்பிள்ளைக்குக் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து சேர்க்க ஏன் பிரயாசைப்படுகிறார். கடைசிக் கடிதத்தில் விவரித்திருக்கிறபடி, மிராசை அபகரிக்கிறதற்காக என்று வைத்துக் கொள்ளலா மென்றால் அது கொஞ்சம் பொருந்தாமற்றெரிகிறது. எப்படி? ஊரூருக்கு ஆண்பிள்ளை களெல்லாம் வலது கை மணிக்கட்டில் பச்சை குத்திக் கொண்டவர்களாய் இருப்பார்களா? இருந்தாலும், தெ பச்சையாக இருக்குமா, இருந்தகப்பட்டாலும் பெற்றோர் கொடுப்பார்களா, கொடுத்தாலும் வயஸூ முதலியவைகள் சரியாக ஒத்திருக்குமா? இத்தனை இலக்கணத்தோடமைந்த அந்நியப்பிள்ளையைத் தேடிச் சீமை சீமை யெங்கும் ஒரு கல்விமான் திரிவானா? இது நடக்கக்கூடிய காரியமா? இல்லை. நிற்க ,கவிராயர் யாரெனிலோ நம்முடைய பாடசாலையில் வந்து உபந் நியாசம் பண்ணினவராகத்தான் இருக்கிறது. கடைசிக் கடிதத்திற் கூறுகிற பெயர் அவருடையதே. தவிரவும் அவர் மணிமங்கலத்திற்கு வந்த காலத்திற்கும் கொஞ்சம் பின்னாலே தான் இந்தக் கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. அவருடைய கல்வித்திறனும், ஒழுக்கமும்,பெருந்தகையும், தோற்றமும், சிறந்ததோர் உயர்குடிப் பிறப்பினரெனக் காட்டிற்று. அங்குள்ள பெரியோரும் பிரபுக்களும் உத்தியோகஸ்தரும் அவரை முன்னமே தெரிந்தவர்களாக் காணப்பட்டார்கள். அவருக்கு அவ்வூரார் செய்த மரியாதை ஒரு ராஜாவுக்குக்கூட நடந்திருக்க மாட்டாது ஒரு துராத்மாவுக்கு அவ்வளவு பூஜிதை நடக்குமா? அவர் உண்மையில்லாத காரியத்திற்ற லையிடுவாரா? மாட்டார்.
இந்தக் கடிதங்களிலிருந்து கிடைத்த ஆதரவுகளை வைத்துக் கொண்டு நாம் ஊகிக்க வேண்டியதென்ன. சோமசுந்தரம்பிள்ளையின் குழந்தை வர்த்தமானப் பத்திரிகையிற் சொல்லிய காலத்திற்றவறி யிருக்கிறது அது தவறிப்போனதிற்குக் காரணஸ்தன் தங்கச்சாமி பிள்ளையாகவே இருக்க வேண்டும். குழந்தையை மோசப்படுத்திவிட்டால் அவரிச்சித்த மிராசு சித்திக்கத் தடையுமிருந்திராது. அவருக்குதவியாகச் சில வஞ்சகர்களு மிருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியஸ்தன் கணபதி யென்பவனாயுந் தோன்றுகிறது. அவனாலே தான் குழந்தை ஒச்சன் வசம் ஒப்புவிக்கப்பட்டதாயிருக்கிறது. இதை எப்படியோ சாமிநாதக்கவிராயர் அறிந்திருக்கிறார். அவர் சோமசுந்தரம்பிள்ளைக்குச் சுபபந்துவாயிருக்கக் கூடும். அப்படி யுமில்லையென்றால், அக்ரமச் செய்கைகளைக் கண்டிருக்கிற ஒரு பெரிய மனுஷராகவா வதிருக்கவேண்டும். ஐயா அவர்கள் நமக்கெழுதிய கடிதத்தில் ஒச்சனிடமிருந்து மீட்டினே னென்பதற்கும், தங்கச்சாமிபிள்ளை ஒச்சனுக்கெழுதிய எழுத்திற்கும் நேரான சம்பந்த மிருக்கிறது. இவைகளிரண்டும் வர்த்தமானப் பத்திரிகையைப் பெலமாய் ஆதரிக்கின்றன. ஆகவே இந்தப் பெருங்கதைக்குக் கதாநாயகனாக விளங்குபவன் நிர்ப்பாக்கியனாகிய நானாகத் தானிருக்க வேண்டும். மாசிலாமணியிடத்தில் தெளிவாய் விசாரிக்கலாமென்றால், வைத்தியரை யழைக்கக் குற்றாலத்திற்குப் போனவன் இவடம் வர எத்தனை நாட் செல்லுமோ, தெரியவில்லை. இனி நான் செய்ய வேண்டிய காரியமென்ன, திரும்பி வீட்டுக்குப் போக எனக்குச் சம்மதமில்லை. ஐயா அவர்கள் உத்திரவும் அப்படியில்லை. இவ்வூரிலேயே வேறிடத்திலாவது இருக்கலா மென்றால், தாசில்தார் வேலை பார்த்த வூரில் தலையாரி வேலைக் கமைந்தது போல, தாசில் மகனாக இருந்து விட்டுத் தகப்பனில்லாப் பிள்ளையாயிருந்து அவமான மடைவது மஹா கேவலம். நம்முடைய சுய பூமிக்குச் செல்லலா மென்றால் வழியுந் தெரியாது. கொலை பாதகர் கூடியிருக்கும் ஊருக்குள்ளே தனியாகிப் போய் நான் சோமசுந்தரம்பிள்ளை மகனென்று நம்மை நாமே ருஜுப்படுத்திக் கொண்டு திரிவது மிகு மோசமாயு முடியும். மற்றொருவனைப் போலவாவது நடித்து அவ்வூரிலிருந்து காரியா காரியங்களைக் கவனிக்கலா மென்றால், கையிலிருக்கும் பச்சை கழுக்கரியுங் கத்தியாயிருக்கிறது. இத்தனை யிடையூறுகளைச் சஹித்துக் கொண்டு இவ்விடத்திலிருப்பதைக் காட்டிலும், கல்யாணசுந்தர மிருக்கிற வூருக்குப் போவது மேல் என்றால் செலவுக்குப் பணமில்லை. அம்மாளிடத்திற் சொல்லிக் கொண்டு வந்திருந்தால் ஏராளம் பணங் கொடுத் தனுப்பியிருப்பாள். அவள் உள் வீட்டிற்குள்ளே போயிருக்கும் போதே தெரியாமல் வந்து விட்டேன். எப்படியும் விடியுமுன் இவ்வூரை விட்டுப் போய் விட வேண்டும். ஐயா அவர்கள் இன்றோ அல்லது மறுதினமோ பரகதியடைந்து விடுவார்கள். அந்த விசேஷத்திற்குக் கூட இருப்பதற்குப் பாக்கியஞ் செய்யாத நான் இங்கு ஏன் தாமிதிக்க வேண்டும். ஒச்சன் கையாவிறந்து போகும் என்னை மறு ஜென்மம் போல பெற்று வளர்த்துப் பிரபு வீட்டுப்பிள்ளையாக்கி ராஜபாஷையும் படிக்க வைத்துப் பராமரித்த பரமதயாளுவாகிய ஐயா அவர்களுக்கு ஒரு கை மண்ணள்ளிப் போடத் தவஞ் செய்யாத பாதகனாப் விட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் என் அருமைத் தந்தையைப் பார்க்கப் போகிறேன். அவர்கள் செய்த உபகாரத்திற்குப் பதில் எப்போது செய்யப் போகிறேன். என் அருமைத் தாய்க்கு என்ன கைம்மாறு எக்காலத்தி யற்றப் போகிறேன் “கலப்புல்லுத்தின்றாலுங் காடை காட்டிலே” என்பது போல தின்னுகிற நாளெல்லாம் தின்று விட்டு ஓடிப்போய் விட்டானென்று ஊரார் சொல்லி யேசுவார்களே! ஐயா, அம்மை, முகத்தை நன்றாகக் கூடப்பார்த்து விட்டு வரவில்லையே. இனி எந்தக்காலம் பார்ப்பேன், ஐயா! ஐயா! “அம்மா, அம்மா! இந்தப்பாழ்ஞ் ஜென்மம் எடுத்ததற்கு ஒரு புற் பூடாப் பிறந்தாலும் கவலையிராதே, ஏ! பரமகருணாநிதே நெல்லை நாயகா! நான் எக்காலந் திரும்பி வந்து இங்குள்ளாரைக் களிப்பூட்டுவேன் எனக் கவலை நிறைந்த மனத்தை யுடையவனாய்க் கடிதங்களை மடக்கி யுறைகளி லடக்கினான்.
பதினான்காம் அதிகாரம்
ஒரு நாள் நாகபட்டனம் கடற்கரை யோரத்தில் நமது தெய்வசிகாமணி ஒரு புதிய மனிதனோடு பேசிக்கொண்டு நிற்கிறான். கரையோரங்களில் செம்படவர்கள் ஒ வேலா ஒ வேல் என்று வலை யிழுக்கும் சத்தமும் நாட்டுப்புறத்து ஜனங்கள் கப்பற் பிரயாணச் சீட்டைப்பறி கொடுத்து விட்டுப் பரிதபிக்கும் சத்தமும் சுமையாள், சுமையாள், என்றுகூலி ஜனங்கள் கூவுங் கூச்சலும், சாக்கு மூட்டைகளை யேற்றி இறக்கும் ஜனங்களிடும் இரைச்சலும், ஏழை மனிதர்களைப் புறதேசத்துக் கூலிகளாகச் சேர்த்தனுப்பும் கண்காணிகளின் சிறுகுரலும் கடபுலக்கடங்காது விரிந்த கருங் கடலின் போலைகள் கரையில் வந்து மோதும் பேராரவாரமும் நம் கதாநாயகனுக்கு கவலையைப் போக்கு வனவாயிருந்தன. “கப்பற் காட்சியைக் காண வேண்டு மென்றீர்களே வாருங்கள் போகலாம்” என அப்புதியவன் கூறினான். சரியென்றான் தெய்வசிகாமணி உடனே ஒரு தோணியிலேறி அவ்விருவரும் கப்பலை யடைந்தார்கள். அங்கு ஜனங்கள் ஜாதி வித்தியாசமின்றி யுட்காந்திருப்பதும் சக்கிலியும், பிராமணனும், சந்தடி பண்ணாமல் ஒரு தொட்டியில் தண்ணீரெடுத்துச் செல்வதும், மெத்தை விரித்துத் திண்டு தலையணையிட்டுச் சிலர் சாய்ந்திருப்பதும், முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு இடங்களில் சிற் சிலர் வீற்றிருப்பதும், மேல் நாட்டினர் ஜனங்களை மிதித்துக் கொண்டு திரிவதும், வேலாவலயத்தில் மீனினங்கள் துள்ளி வீழ்வதை வேடிக்கை பார்க்க வாலிபர்கள் விரைந்து செல்வதும், நடுக்கப்பிலில் நீராவியந்திரங்கள் திட்டுத் திட்டென்றடித்துச் செல்வதும் திசைகாட்டுங் கருவியைக் கையில் வைத்துக் கொண்டு மாலுமிகள் கவனமாயிருப்பதும் தெய்வசிகாமணிக்கு வெகு புதுமையாகக் காணப்பட்டது. மணியும் நாலரையாகி விட்டது. “பிரமாணச் சீட்டுப் பெறுபவர்கள் விரைவில் இறங்கிப்போய் விடவேண்டும் கப்பல் புறப்படப் போகிறது” என்று சொல்லி ஒருவன் மணியடித்தான். அவ்வோசை செவிப்படுதலும் தெய்வசிகாமணி, கண்ணுச்சாமீ என்று அப்புதியவனைக் கூவினான். காணவில்லை. நான்கு பக்கங்களிலும் பரபரப்புடன் தேடினான். கடைசியாக நெட்டாலுக்குப் போகும் கூலி ஜனங்கள் கூடியிருக்கு மிடத்தில் ஒரு பிரபுவோடு கண்ணுச்சாமியைக் கண்டான்.
தெய்வசிகாமணி:- கண்ணுச்சாமி நேரமாகிறது போட் டேறலாம் வா.
கண்ணுச்சாமி:- கம்பேனிக் காரியமாகப் பட்டணம் போய்த் திரும்ப வேண்டும் தாங்கள்.
தெய்வசிகாமணி: என்னால் முடியாது.
கண்ணுச்சாமி:- அப்படியானால் உங்களுக்காகச் செலவாகியிருக்கும் பணத்தைக் கொடுத்து விட்டுத் தங்களிஷ்டம் போல் நடக்கலாம்.
தெய்வசிகாமணி:- (தனக்குள்) மோசத்தில் அகப்பட்டுக் கொண்டோம் சந்தேகமே இல்லை. இவன் ஜனங்களை வஞ்சித்துத் தூர தேசங்களுக்குக் கூலிகளாகப் பிடித்தனுப்பும் கங்காணியே. இவனோடு நிற்கிற அந்தப் போலிப்பிரபுவும் இவனைச் சேர்ந்தவனே. திருநெல்வேலி சத்திரத்திலிருந்து இவ்வளவு தூரம் நம்மை ஏமாற்றிக் கொண்டு வந்தவனும் இவன் கூட்டாளியே ஐயமில்லை. இனி மேல் நாம் அயர்ந்து நின்றால் அந்நிய தேசம் போகாமல் தீராது. இருக்கட்டும் ஒரு போலீஸ்காரனையுங் காணோமே. இனி யென்ன செய்கிறது. இதோ இரண்டாவது மணியும் அடித்து விட்டானே! ஆகிலும் பார்ப்போம் “ஊக்கமது கைவிடேல்” என்ற மூதாட்டி மொழியைப் பின்பற்றுவோம். என்று மனந்துணிந்து மேற்றளத்திற்குத் திரும்பினான். கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் கண்ணுச்சாமி.
தெய்வ:- கையை விடுகிறாயா இல்லையா?
கண்:- துள்ளவேண்டாம்
கண்:- அடே இது இங்கிலீஷ் கவர்ன்மெண்டுஞாபக மிருக்கட்டும்.
கண்:- நெட்டாலும் அப்படியே,
தெய்வசிகாமணி கண்ணையுருட்டி விழித்து ஓங்கின கை மாறாமல் கண்ணுச்சாமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்தான். காதெங்கும் கம்மென்றடைத்துச் சோர்ந்து கையை விட்டு விட்டான். கண்ணுச்சாமி, ஓர் தாண்டில் மேற்றட்டுக்கு வந்து ஓர் பெரியவரைக் கண்டு ஐயா கப்பல் வேடிக்கை பார்க்க வந்த என்னைக் கண்ணுசாமிச் யென்ற ஒருவன் நெட்டாலுக்குப் போகும்படி கட்டாயப் படுத்துகிறான். நான் இவ்வூருக்குப் புதியவன். எனக்காகப் பரிந்து பேசுவார் ஒருவருமில்லாது தத்தளிக்கிறேன் என்றான் தெய்வ சிகாமணி. நாகை தேவஸ்தான தர்மகர்த்தரும் அக்கப்பலுக்குக் சொந்தக்காரருமாகிய, தியாராஜ செட்டியாரென்னும் அப்பெரியவர் ஒரு கனிஸ்டேபிலை விட்டுக் கண்ணுச்சாமியைப் பிடித்து வரும்படி செய்து விட்டு, தெய்வசிகாமணியைப் பார்த்து, தம்பி, என்னோடு வா, ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் எனக்கூறித் தமது அகத்திற்கழைத்துச் சென்றார். இரவு 8-மணிக்குத் தெய்வசிகாமனியைத் தனியாக வைத்துக் கொண்டு அவனுடைய சரித்திரத்தைச் சொல்லும்படி கேட்டார், செட்டியார். தெய்வசிகாமணி தன் சரித்திரத்தை ஒரு சிறிதும் தப்பின்றிக் கூறினான். கேட்ட அத்தனிகர், வியப்புற்று, தம்பி! உன் சரிதம் எளிதில் உலகம் நம்ப முடியாத சம்பவமாக இருக்கிறது. இருக்கட்டும். உன்னுடைய இரகஸ்ய, ரிக்கார்டுகளை எக்காரணத்தை முன்னிட்டும் எவரிடமும் காண்பிக்க வேண்டாம். நீ முதலில் என்னிடம் தெரிவித்தது போலவே, தாசில்தார் நெல்லையப்பபிள்ளை மகனென்றே சொல்லிக் கொண்டிரு. கூடிய விரைவில் நமக்கு வேண்டிய பெரிய மனிதர்கள் மூலமாக உனது பூர்வீக சாஸனக்கேஸ்களிற் பிரவேசிப்போம். அவைகளில் ஒன்றும் பயன் படவில்லை யெனினும் அதற்கும் நீ கவலைப்படாதே, இவ்வீட்டை உன் சொந்த வீடாக நினை, வித்தியாசமாக எண்ணாதே. உனது, தென்னாட்டிலிருக்கிற வல் நாட்டுச் செட்டிகள் எங்களுக்கு நெருங்கின கிளைஞர்களே. எங்களுக்குச் சோழபுரம் செட்டிகளென்று பெயர். உனக்கு எப்பொருள் இச்சையோ அதனைக் கேட்பதற்குக் கூசாதே. உன் படிப்பு விஷயத்தையும் கவனிக்கிறேன். இது வரை படித்துவிட்டு, B. A.பரீக்ஷைக்கும் போகாமலிருப்பது உசிதமல்ல. நிற்க. உன்னைத் திருநெல்வேலியிலிருந்து இவ்வூர் வரை பின்பற்றிச் சதி செய்ய வந்தவர்கள் இருவர் என்று நீ சொன்னதிலிருந்து அவரோடும் இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்றும் எண்ணுகிறேன். அவர்களும் உனக்கு வெகு தூரத்திலிருக்கிறதாக எண்ணுதல் கூடாது. ஒருவரும் அறியாது தாசில்தார் வீட்டிலிருந்த உன்னைக்கண்டு பிடித்தவர்களை ஏளனமாக மதித்தல் பிசகு. எக்காரியங்களிலும் கண்ணூன்றிச் செல்லுதல் வேண்டும். எது எப்படி ஆயினும் நீ இந்த இடத்தைவிட்டுப் போகவே கூடா து. திருநெல்வேலியிலிருக்கும் நம்மவர்களுக்கு எழுதி தாசில்தா ரவர்கள் நிலைமையை அறிந்து கொள்வோம் என்றார் தியாராஜ செட்டியார். அவர் மனைவி நீலலோசனியம்மாள் இதுதான் நலம் என்றாள். தெய்வசிகாமணிக்குக் கவலை சிறிது சாந்தமாயிற்று.
சில தினங்களுக்குப் பின்னர், கண்ணுச்சாமியைச் சார்ஜு பண்ணிய கேஸ் விசாரணை ஆயிற்று. அதில், தியாகராஜ செட்டியாரும், தெய்வசிகாமணியும் சாக்ஷியங்களாக விசாரிக்கப்பட்டு முடிந்ததன் மேல் கண்ணுச்சாமி இரண்டு வருஷக் காவல் தண்டனை விதிக்கப்பெற்றான்.
தெய்வசிகாமணிக்கு அயலார் வீட்டிலிருக்கிறோமே? என்ற கவலை இறையும் நேரிடாது நடந்து கொண்டார்கள் அவ்வீட்டார்கள். தெய்வசிகாமணியும், செட்டியார் பார்க்க வேண்டிய எழுத்து சம்பந்தமான வரவு செலவு கணக்குகள், தேவஸ்தான சம்பந்த வேலைகள் இவைகளை நாள் தோறும் பார்த்து முடிப்பான். செட்டியாரது சொந்தக் கிராமமாகிய வில்லி மங்கலத்திற்கு வாரத்திற்கு ஒரு தரம் போய் வியவசாய சம்பந்தமான வைகளையும் கவனித்து வருவான். செட்டியார் புதல்வி மங்களாம்பாளுக்கு ஒவ்வொரு தினமும் பாடம் சொல்லிக் கொண்டு வருவான். மங்களம், அவ்வூர்க் கல்லூரியில் ஏழாவது வகுப்பில் கலை பயின்று வந்தாள். அழகிலும் குணத்திலும் அவளுக்கு மிஞ்சின பெண்கள், உலகத்தில் இல்லை யென்றே சொல்லலாம். வித்வான்கள் பெண்களது கூந்தல், முகம், கண், வாய், தந்தம் இவைகளுக் கிணையாக இருள் செந்தாமரைப்பூ, கணை, ஆம்பற்பூ, முல்லை யரும்பு முதலிய பொருள்களை முறையே உவமை கூறி ஆநந்திப்பார்கள். மங்களாம்பாளது அவயவங்களுக்கு மேற்கூறிய அற்பப் பொருள்களை இணைகூறி இடர்ப்பட எனக்குப் பிரியமில்லை. கூறினும் ஒப்பாகாது. அக் கன்னி இங்கிலீஷிலும் நன்கு எழுதப்படிக்க பேசப் பழகியிருந்தாள். தெய்வசிகாமணி வந்து சேர்ந்தது அவளது படிப்பிற்கு மிக்க உதவியாக இருந்தது.. செட்டியார் அவ்வருஷத்திலேயே B. A. வகுப்பிற் சேர்ந்து வாசித்து வரும்படி தெய்வசிகாமணிக்குச் சொல்லிப் பரீக்ஷைப் பணமுங் கட்டியிருந்தார். ஊக்கமுடையவன் இருக்கு மிடத்திற்குச் செல்வம் வழி கேட்டுக்கொண்டு வந்தடையும் என்று பெரியார் சொல்வது போல, கல்விச் செல்வம் தெய்வசிகாமணியை வந்தடைந்தது. மறுவருஷத்தில் B.A.வகுப்பில் தேரினான்
பதினைந்தாம் அதிகாரம்
உருத்திராக்கத் தாழ்வடமும், விதிப்படி தரித்த தெய்வத் திருநீறும், விளக்கமாயழகு செய்யும் திருமேனி யினராய்ப் பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய வெண் பட்டுடையினராய். சிங்கப்பார்வை யாயினும் சாந்த நடையினராய், வில்வதளஞ் செருகிய சிரசினராய்க் கந்தமுங் குங்குமமுங் கலந்த திலதந்திகழும் நெற்றியினராய் சீரகதிற்குவிகத கையினராய், நடுவயதுள்ள ஒருவர், கடனாகைக் காரோண நாதர் திருச்சந்நிதியினின்று இருபயங்களினும் ஆநந்த பாஷ்பம் சொரிய நாத்தழு தழுப்ப உடல் புளகிப்ப, “எவ்வுடலெடுத் தேன் மேனாள் எண்ணிலாப் பிறவிதோறும், அவ்வுடலெல்லாம் பாவம், அறம் பொருட்டாகவன்றோ, தெவ்வுடல் பொடித்தாயுன்றன் சேவடிகடமை பூண்ட, இவ்வுடலொன்றேயன்றோ, எனக்குடலான தைபா” என்றுபடி உள்ளமுருகத்துதித்துத் தெரிசித்து நின்றார்.
பலரும் அவரை நெருங்கினர் அப்பக்தசிகாமணி திருவாலபத்தினோர் புறத்துள்ள மண்டபத்திற் போயுட்கார்ந்தார். தெரிசனார்கதமாய்ச் செட்டியாரோடு வந்த தெய்வசிகாமணி பெரியவரைக் கண்டதும் அச்சத்தோடு வணங்கி நின்றான். செட்டியாரும் அப்புதியவரை வணங்கி “ஐயா, அவர்கள் திவ்யக்ஷேத்திரம் எது?” என்றார். அவர் பாப்பையாபுரம் என்றார். செட்டியார் சோமசுந்தரம்பிள்ளையோ வென ஐயுற்று தங்கள் திருநாமம், என்றார். என் பெயர் சாமிநாதன் என்று பதிலளித்தார். தெய்வசிகாமணி கண்ணில் நீர்ததும்பிற்று, செட்டியார் “ஆங் காலமெய்வருந்த வேண்டாம்” என்பதைச் சிந்தித்தித்துக் கொண்டு பெரியவரை நோக்கிக் கவிராயரவர்களா, என்றார். ஆமென்றார் செட்டியார். அடியேனுடைய கிருஹத்திற்கு விஜயமாக வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறே யாகுகவென்று போய்ச் சேர்ந்தார். செட்டியாரும், தெய்வசிகாமணியும், தனித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு பழையவர்த்தமானப் பத்திரிகையைச் செட்டியார் விருந்தினரிடத்திற்றந்தார். சாமிகாதக் கவிராயர் படித்துக்கொண்டே தெய்வசிகாமணியை நன்றாய்க் கவனித்து அவன் வலது கையிலுள்ள அடையாளத்தையுங் கண்டு “குழந்தாய்! என்னை யுனக்குத் தெரிகிறதா” என்றார். தெய்வசிகாமணி மணி மங்கலத்திற்கு வந்திருந்த போது கண்ட ஞாபகத்தை நான் இன்னும் மறக்கவில்லை யென்றான். அப்படியா? இருக்கட்டும் மணிமங்கலதிலிருந்து காசியாத்திரையை விரும்பி நான் சென்ற பிற்பாடு நடந்த உன் விஷயத்தைத் தெளிவாகச் சொல் என்றார்.
தெய்வசிகாமணி தன் வரலாற்றினைக் கூறிக் கடைசியாக நாகைத்தாலுகாவில் சிரேஸ்த்தாராகத்தான் இருக்கிறதையும் சொன்னான்.
கவி:- நல்லது இப்போது தாசில்தார் ஸ்திதி யெவ்வித மிருக்கிறசென்று உனக்குத் தெரியாதே?
தெய்:- தெரியாது.
கவி:- இருக்கட்டும் கண்ணுச்சாமியைத் தண்டித்த கேஸ் நடைபடிகளுக்கு நகலெடுத்திருக்கிறீர்களா?
செட்டியார்:- ஆம்
தெய்:- அது மட்டுமா இன்னுஞ் சில ஆதரவுகளுமிருக்கின்றன, என்று இராமநாதபுரஞ் சத்திரத்திற் கண்ணுச்சாமி கொண்டு வந்து கொடுத்த கடிதத்தையும் தனது பூர்வ சாஸனக்கவரையுந் தந்தான். காகிதங்களைக் கவிராயர் நெடு நேரம் ஒவ்வொன்றாய் உய்த்து நோக்கித் தலையைப் பலமாயாட்டினார். அதற்குள்ளே செட்டியார் தாங்கள் மாத்திரம் வழிகாட்டிக் கொண்டிருங்கள் செலவுக்கு பணமோ, உதவிக்கு ஆளோ, எது வேண்டுமானாலும் சரமாரியாத் தொடுக்கிறேன் என்றார்.
கவி:- ஐயா, இப்பிள்ளை அந்நியனல்ல, இவனுடைய தாயைப் பெற்ற பாட்டனார் எனது சிறிய பிதா. எனக்கிவன் தங்கை பிள்ளை. இவன் சிறு குழந்தையா யிருக்கும் போது இவனது சிற்றப்பன் தங்கச்சாமிபிள்ளை இவனைக் கொலைஞர் வசம் ஒப்பித்துக் கொல்லச் செய்து விட்டான். தெய்வாதீனமாய்த் தாசில்தார் கண்டு காப்பாற்றி வைத்திருந்தார். சில வருஷங்களுக்கு முன் தங்கச்சாமிபிள்ளை கூட்டாளிகளாற் குழந்தை கொல்லப்பட வில்லையென்பதை ஒருவாறு தெரிந்து தேடுகிறதற் காரம்பித்துப் பலவூருமலைந்து திரிந்து மணி மங்கலந் தாசில்தார் வீட்டில் இவனைக் கண்டேன். உடனே யழைத்துக் கொண்டு போக எண்ணியும் இவன் படிப்புக் கிடையூறு நேரும் என்னுங்கருத்தை யுள்ளிட்டு விட்டுவிட்டு, வெளியேறினதோடு காசியாத்திரையையும் முடித்து விடுவோமென்று அங்கிருந்து புறப்பட்டுக், காசி, அயோத்யா, அரித்துவாரம், பதரிகாச்சமம் முதலிய புண்ணிபஸ்தலங்களுக்கு சென்று வர இவ்வளவு நாளாயிற்று. நான் காசிக்குப் போனதின் பின் தெய்வசிகாமணிக்கு நேர்ந்த இடைச் சம்பவங்கள் என்னால் நடந்தவைகள் என்று எண்ண வேண்டியிருக்கிறது. யாதினாலென்றால் நானும் தாசில்தாரும் பாப்பையாபுரத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தோம். அது இவனுடைய பிதாவுக்குக் கிடைக்கவில்லை யென்று தெரிகிறது. அக்கடிதம் இவன் சிற்றப்பனுக்குக் கிடைத்து இவன் இருக்குமிடத்தைத் தெரிந்து தான் இவ்வளவு வேலையுஞ் செய்திருக்கிறான். அக்கொடியவன் கையினின்று மீண்டதே நமது புண்ணியத்தின் மிகுதிப்பாட்டை யுணர்த்துகின்றது. இந்தக் கடிதங்களில், ஒச்சனுக்கு விலாசந் தீட்டியதைத் தாசில்தாரிடமிருந்து நான் பார்த்திருக்கிறேன். பழைய வர்த்தமானப் பத்திரிகை என்னால் தாசில்தாருக்குக் கொடுக்கப்பட்டதே மற்றையவை களெல்லாம் புதியன. இங்கிலீஷ் கடிதம் ஒன்று தவிர மற்ற மூன்றும் தங்கச்சாமி பிள்ளையாலேயே சிருஷ்டி செய்யப்பட்டனவே. சிறிதும் ஐயமில்லை, இவனை மணிமங்கலத்தில் கண்ட மட்டிலேயே அழைத்துக் கொண்டு பாப்பையாபுரம் போகாமற் காலஹரணம் பண்ணினதும் ஒரு வகைக்கு நன்மையே யாயிற்று. எப்படியெனில் இவனைக் சோமசுந்தர பிள்ளை மகனென்று மெய்ப்பிக்க அந்தச்சமயம் சிறிது கஷ்டப்பட வேண்டிதாயிருந்தது. இப்போதோ அப்படிப் பட்ட சங்கடங்கள் ஒன்றுமேயில்லை. அவன் கைப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே ரூபித்து விடலாம். அன்றியும் மூன்று மாஸத்துக்கு முன் நான் பம்பாய்ப் பட்டணத்திலிருக்கும் போது பாப்பையாபுரத்தி லிருந்து எனக்கு வந்த கடிதத்தால் ஊரிலுள்ளவர் களெல்லாம் தங்கச்சாமியை யெதிர்த்துக் கொண்டார்கள் என்றுந் தெரிகிறது. இதனால் நமக்கு ஊருதவியும் இப்போதேற் பட்டிருக்கிறது. இனியொரு க்ஷண நேரமும் தாமஸியாமல் இவனை ஊர்கொண்டு போய்ச்சேர்க்க முயற்சிக்கிறேன் என்றார்.
தாசில்தாரும், கவிராயரும் சாஸனங்களையுந் தன்னையும் பற்றிக் கலந்து கொண்ட செய்தி தெய்வசிகாமணிக்கு இப்போது தான் தெரிய வந்தது. நாதனற்ற ஏழைக்கு நல்லம்மான் கிட்டியதே என்ற கம்பூரித்தான். தியாகராஜ செட்டியார் கவிராயரைப் பார்த்து “ஐயா! இந்த பூர்வீக வரலாற்றை வெளிப்படுத்துங் காலத்தில் அநேகருக்குப் பெருந்தீங்கு நேரிடும் போலிருக்கிறதே. இவனொரு பிள்ளையாற் பலருக்கு என் துன்பம் நேர வேண்டும்? இந்த மட்டிலேயே இவிடத்தில் சொக்கியமாயிருக்கட்டுமே. என்னுடைய ஆஸ்தி முழுவதையும் இன்றைக்கே இவனுக்குச் சாஸனம் பண்ணி வைக்கிறேன். மற்றும் எல்லாக் காரியங்களையும் கவனிக்கிறேன் என்றார்.
கவி:- நீங்கள் நினைக்கிற படியெல்லாம் சந்தர்ப்பம் நோக்கிச்செய்து கொள்வோம். இத்தனை தீங்குஞ் செய்த பாவிகளைக் கண்டிக்காமல் விட்டு விட்டால் நமது மனசாக்ஷி நம்மைச் சிரிக்காதா? தெய்வந்தான் ஒப்புக் கொள்ளுமா? கடவுள் பாபிகளை எப்படித் தண்டிக்கிறார் நம்மைப் போன்ற மனிதர்களைக் கொண்டு தானே? அறிவாளிகளாகிய நாம் சிசுக்கொலை, மனித விற்பனை, ஆள் மாறாட்டம், பொய்ப்பத்திரம் பிறப்பித்தல், முதலிய பிரமாண்டமான குற்றத்தை மறைத்து விட நெஞ்சாலும் நினைக்கலாமா? அப்படி மறைத்தால் அந்தக் குற்றம் யாவையும் நாமே செய்ததாக வல்லவா எண்ணப்படும்? அதற்கு ராஜதண்டனையும் தெய்வ தண்டனையும் உறுதியா யடையவேண்டு மென்பதன்றோ நூற்றுணிபு. நாமெல்லாம் இத்தகைய விஷயங்களில் உபேக்ஷையாயிருந்து விட்டால் ஏழைகள் கதியென்னவாகும். யோசித்துப் பாருங்கள். நான் இப்படியே ராமேஸ்வரம் போய் இந்த கங்காஜலத்தை இராமநாதனுக் கபிஷேகம் பண்ணி விட்டு, என் யாத்திரையை முடித்துக் கொண்டு பாப்பையாபுரம் போய் அங்குள்ளவர்களுக்கு இந்த விஷயங்களை யெல்லாந் தெளிவாகச் சொல்லி அவர்களைக் கொண்டு இவனை யழைத்துப் போய்ப் பாப்பையாபுரத்து மிராசை வாங்கிக் கொடுத்து விடுகிறேன். அது என்னைச் சேர்ந்த கடமையாயிருக்கிறது. கண்ணுச்சாமியின் கைவசப்பட்டுத் தேசாந்தரம் போக விருந்த இவனை ரக்ஷித்து வைத்திருந்த பிதாவாகிய தாங்கள் மறுகின முதலிவனைப் பிள்ளையாகவோ வேறெவ் வகையாகவோ பாவித்துக் கொள்ளுங்கள். நானும் உங்கள் அபிப்பிராயத்திற்குடம் படுகிறேன். ஆனால் தாசில்தாரையும் யோசித்துக் கொள்ள வேண்டும் என்றார். செட்டியார் அதை மாத்திரந் தான் சொல்லக் கூடாது வேணுவனலிங்கம்பிள்ளை செத்தாலொழிய அந்தத் தேசத்திற்கே இவன் போகக் கூடாதென்றார். கவிராயர் சிரித்துக் கொண்டு தன் சாதியே உலகத்திலிருக்கிற எல்லாச் சாதிக்கும் உயர்ந்த தென்று நினைக்கிற பேர்வழிகளி லொருவன் வேணுவனலிங்கம் பிள்ளை. அவன் எனக்குத் தெரியாதவனா, சோமசுந்தரம் பிள்ளை மகனென்று இவனைத் தெரிந்தால் சொன்ன விடமெல்லாம் தோப்பிக்கரணம் போட மாட்டானா? என்றார்.
– தொடரும்…
– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
பின்னம்
நாஞ்சில்நாடன்
November 4, 2026
கை கொடுத்த தெய்வம்
இரா.துரைமாணிக்கம்
November 4, 2026
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
November 4, 2026