தெய்வசிகாமணி
கதையாசிரியர்: மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 103
(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9
நான்காம் அதிகாரம்

மணிமங்கலம் கல்விச்சாலையில் நமது தெய்வசிகாமணி படித்துக் கொண்டு வருகிறான். அவனுக்கு இப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் அவன் வகுப்பில் படிக்கிற பிள்ளைகளுக்கெல்லாம் அவனே முதற் பையனாயிருப்பான். உபாத்தியாயர் கேட்கும் கேள்வியாகிய பெட்டகத்திற்கு மறுமொழியாகிய திறவுகோல், தெய்வசிகாமணி வாயிலிருந்தே கிடைக்கும். பாடம் ஒப்பிக்கவில்லை யென்றாவது, கணக்குச் செய்யவில்லையென்றாவது, ஒரு நாளும் கண்டிக்கப்பட்டிருக்கவே மாட்டான். பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கும் மிங்கும் பார்த்துக் கொண்டும், அடுத்த பிள்ளைகளோடு கலகம் விளைத்துக் கொண்டும் திரிகிற பையன் களிருக்கிற இடத்திலும் நிற்கமாட்டான். எறும்புகள் கொஞ்சநேரம் சோம்பேறித்தனமாய் நின்றாலும் நிற்கும், இவன் சோம்பலா யிருந்த நேரங் கிடையாது. ஒரு தினத்திற் சில நிமிஷமாவது வீணாகக் கழித்து போனால் விலையேறப் பெற்ற வயிரச்சன்னங்களை மண்ணிலுதிர்த்து விட்டவனைப் போல மனக்கவலைப் படுவான். நெருப்பிலிருந்து புழுக்களைக் கண்டெடுத்தாலும் அவன் வாயிலிருந்து ஒரு கெட்டவார்த்தையுங் கண்டு கொள்ள முடியாது. அவனுடைய. தேகமும் வஸ்திரமும் புஸ்தகழும் எந்த நேரமும் மெய்ஞ்ஞானிகளது இதயம் போல பரிசுத்தமாகவே இருக்கும். புஸ்தகத்தில் அபிமானமில்லாதவன் படிப்பிலும் அப்படியே யிருப்பான் என்று ஒரு நாள் உபாத்தியாயர் சொன்னதிலிருந்து அவைகளை நேத்திரம் போற் காத்து வருவான். ‘மகனறிவு தந்தையறிவு’ என்று ஊராரும் உபாத்தியாயரும் சொல்லிக்கொள்ளும்படி ஒழுக்கமாய் நடந்து கொள்வான். நியமித்த விளையாட்டு நேரத்தைத் தவிர விளையாடப் போயிருப்பானென்று விளையாட்டுக்குக் கூட ஒருவருஞ் சொல்ல மாட்டார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்தில் தாசில்தார் வீட்டுக்கும் பாடசாலைக்கும் ஒரு மாணிக்கத் தீபம் போல விளங்கினான்.
தெய்வசிகாமணிக்கு பள்ளிக் கூடத்துத் தோழன் ஒரு பையன் ஏற்பட்டிருந்தான். அவன் பெயர் கல்யாணசுந்தரம், அவனுடைய பிதா மணிமங்கலத்தில் ஒரு பெரிய வர்த்தகராயிருந்தவர். உப்பு முதற் கர்ப்பூரம் வரை எந்த நேரமும் எவ்வளவுவேண்டுமானாலும் அவர் கடையில் வாங்கலாம். நாட்டுப்புரங்களிலும் வெளியூர்களிலுமிருந்து அவரிடம் பற்று வரவு செய்கிற வியாபாரிகளுக்கு அளவு கிடையாது. சரக்கிலாவது விலையிலாவது தன்னுடைய காரியஸ்தர்கள் வித்தியாசஞ் செய்வதாகக் கண்டால் உடனே அவர்களைத் தக்கபடி கண்டிப்பார். காணி காணியாகத் தேடிக்கோடி கோடியாக நல்ல விஷயத்தில் செலவு செய்வார். கொடைவாங்கல் விஷயத்தில் மகா நாணயஸ்தரென்று அந்தப் பிரதேச மெல்லாம் பேசிக் கொள்வார்கள். அவருடைய வகை மனுஷன் போய்க் கேட்டாலும் எந்தப் பணகாரரும் யாதொரு ஆடங்கமுஞ் சொல்லாமலே கணக்கிற் பற்றெழுதிக் கொண்டு லக்ஷக்கணக்காக் கொடுப்பார்கள். தன் தகுதிக்குத் தக்க வண்ணம் தூத்துக்குடியிலிருந்து இரங்கூன் போய் வருகிற ஒரு கப்பல் வர்த்தகத்தில் பாதி பாகஸ்தராகப் பணம் போட்டு வியாபாரம் நடத்திக் கொண்டு வந்தார். கப்பலோடி ஆறுமுகஞ் செட்டியார் என்று சொன்னால் சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். அவர் இரண்டு வருஷத்திற்கு முந்தி மூர்ச்சை வாயுவினால் திடீரென்று இறந்து போய் விட்டார். அவருடைய சொத்துக்களைப் பற்றி யாதொரு ஏற்பாடும் செய்து வைக்கக்கூடாமற் போய்விட்டார். சில வியாபாரிகள் தங்களுடைய வர்த்தகத்தில் கஷ்ட நஷ்டங்கள் வருகிற காலத்தில் தமக்கும் பின் சந்ததிகளுக்கும் உதவியாயிருக்கும் பொருட்டுத் தங்கள் சொத்தில் சில பாகத்தை மறைத்து வைக்கிற வழக்கமுண்டு அதை கனவிலும் அவர் நினையாதவர். செட்டியார் இறந்து போய்விட்டதாக முழு மோசக்காரனான அவருடைய கூட்டாளிக்குத் தெரிந்து பொய்யான நஷ்டக்கணக் கேற்படுத்திக் கப்பலையும் அதைச் சேர்ந்த சொத்துக்களையும் மணிமங்கலத்திலுள்ள பூர்வீக ஆஸ்திகளையும் கடனாளிகள் எடுத்துக் கொள்ளும்படியான ஏற்பாடு செய்து விட்டுத் தானும் திரண்ட பணங்களை அபகரித்துக் கொண்டு கம்பி நீட்டி விட்டான். அது முதல் ஆறுமுகஞ்செட்டியார் குடும்பம் தரித்திர திசைக்கு வந்து விட்டது. அவருடைய மனைவியும் ஒரே பேறான கல்யாணசுந்தரமும் குடியிருக்க வீடு மில்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு இரங்காதார் ஒருவருமில்லை.
இவர்கள் இங்ஙனம் நிர்க்கதியாயிருப்பதைப் பலசாலும் தாசில்தார் கேள்விப்பட்டு வேளாள சங்கத்திலிருந்து ஒரு சிறு வீடு வாங்கிக் கொடுத்து அதிற் குடியிருந்து வரும்படி செய்து சாப்பாட்க்குங் கொடுத்துக் காப்பாற்றி வந்தார். கல்யாணசுந்தரத்திற்குப் படிக்கும் பருவம் வந்தவுடனே தன் மகனுடன் பள்ளிக்கூடம் போய்ப் படித்துவரும் படி திட்டஞ் செய்தார். தெய்வசிகாமணியும் கல்யாண சுந்தரமும், வயதிலும், வளர்ச்சியிலும், அழகிலும், குணத்திலும் நிறத்திலும், சமானமாகவே யிருந்தார்கள். தனித்தனி அவர்களைக் கண்டவர்கள் இருவரில் இவன் இன்னானென்று எளிதில் அடையாளங் கண்டு சொல்லிக் கொள்ள மாட்டார்கள். செல்வம், வறுமை, என்னும் பகுப்புத் தெரியாத இளம்பருவத்தினனாகிய கல்யாணசுந்தரம் தன் தாய் கற்ப்பிக்கிற சற்புத்தியை சூக்ஷமமாயறிந்து அதன் வழியே நடப்பான். தனக்கு ஒரு வேலையும் தெய்வசிகாமணி கொடாதிருந்தாலும் தானே வலுவிற் புகுந்து செய்வான். தெய்வசிகாமணி ஏதாவது ஒரு பண்டத்தைக் கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னால் அதை உயிரைப் போல காப்பாற்றி வைத்திருந்து கொடுப்பான். கல்யாணசுந்தரம் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் தெய்வசிகாமணி பார்த்து மகிழ்வான். ஏழையின் வீட்டுப்பிள்ளை யென்று எட்டுணையுந் தாழ்மையாக மதியான் காந்திமதியம்மாள் கொடுக்கிற பக்ஷணம் இருவருக்கும் சமமாயிருந்தாலும் தன் பங்கிலிருந்தும் கல்யாணசுந்தரத்திற்குக் கொடுப்பான். புஸ்தகம் வஸ்திர முதலானவைகளைத் தனக்கும் தன் தோழனுக்கும் ஒரே மாதிரி வாங்கித் தரும்படி தந்தையிடத்திற் சொல்வான். கல்யாணசுந்தரத்திற்குச் சாப்பா டெல்லாந் தாசில்தார் வீட்டிலேயே, யென்றாலும், ஏக தேசம் தன் தாயைப் பார்க்கத் தன் வீட்டுக்குப் போயிருந்தால் அவன் வரும் வரை தெய்வசிகாமணி சாப்பிடான். சிறுவர்களிருக்கிற நேசத்தைக் கண்டு தாசில்தார் இவ்வூரை விட்டு மாற்றிப்போகும் போது கூடவே கல்யாணத்தையும் அழைத்துக்கொண்டு தான் போய் விடுவாரென்று பலரும் பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் இரவு விளக்கின் முன்னிருந்து கல்யாணசுந்தரம் பாடம் படித்துக் கொண்டிருந்தான். தெய்வசிகாமணி வெளித் திண்ணையிலிருந்து மாசிலாமணியுடன் சந்திரகலை வளர்வதையும், குறைவதையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்தவன் கீழே கவிழ்த்திருந்த கொப்பறையில் மிதித்தேறி அலமாரியிலிருக்கிற புஸ்தகத்தை எடுக்கப் போனான். இவன் கைபட்டதிலிருந்து சுவரில் மாட்டியிருந்த விலைபெற்ற சரிகைச்சட்டை பொன்று எப்படியோ கீழே விழுந்து பக்கத்தில் எரிந்து கொண்டிருக்கிற விளக்கிற் பட்டுத் தீப்பற்றி எரிந்து போய்விட்டது. தாசில்தார் வந்தவுடனே தன்னை மிகவும் கண்டிப்பதோடு வீட்டை விட்டு வெளியேற்றியும் விடுவாரென்று நடு நடுங்கிக் கொண்டிருந்தான். அச்சமயம் வெளியிலிருந்த தெய்வசிகாமணி என்னடா! கல்யாணம்! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? துணிப்புகை மணக்கிறதே? யென்னக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் கல்யாணம் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். என்ன குற்றஞ்செய்திருந்த போதிலும் தன் பிதாவிடஞ் சொல்லி மன்னிப்பு வாங்கித் தருகிறேனென்று தெய்வசிகாமணி தேறுதல் சொன்னதன் பேரில் நடந்ததைச் சொன்னான். வெளியில் உலாவப் போயிருந்த தாசில்தாரும் வந்து விட்டார். உடனே தெய்வசிகாமணி தந்தையிடம் போய்த் தானும் கல்யாணசுந்ததரமும் படித்துக் கொண்டிருக்கும் போது சுவரில் தூக்கியிருந்த சரிகைச் சட்டையைப் பார்க்க வேண்டுமென்று தான் எட்டி எடுத்ததாகவும், அது கைதவறி விளக்கோரம் விழுந்து நெருப்புப் பற்றி பெரிந்து போய்விட்டதாகவும் தானே குற்றவாளி யென்றும் பயத்துடன் தெரியப்படுத்தினான். அவன் சொல்லுகிற மாதிரியிலிருந்து நடந்து உண்மையைத் தாசில்தார் நிதானித்துக் கொண்டு “மைந்தர் தமை செஞ்சில்’ என்ற முதுமொழிக்கிணங்க அவர்களது சிநேக ஒருமையைக் குறித்து மனத்துள் வியந்து இதைப் பார்க்கிலும் விலை பெற்ற பொருள்கள் எவையும் உன்னாலாவது, கல்யாணசுந்தரத்தாலாவது நஷ்டப்பட்டாலும் நான் விசனிக்க மாட்டேன் என்று உற்சாகப்படுத்திச் சொன்னார்.
ஐந்தாம் அதிகாரம்
சுகதுக்கங்கள் ஒருவனிடமும் நிலைத்திருப்பனவல்ல நதியானது, பிரவாகமற்று வறண்டிருக்கிற காலங்களிலும் சிற்சில பெரிய மடுக்களில் தண்ணீர் தங்கியிருப்பது போல, சிலர்களுக்கு சொற்ப காலம் இன்பதுன்பங்கள், நிலையாயிருந்தாலு மிருக்கும். புதுப் புனல் வரும் போது முன்னிருந்த ஜலத்தைத் தள்ளிவிட்டு அது தங்கிக் கொள்வது போல முதலிலிருந்த சந்தோஷத்தையோ, அல்லது சலிப்பையோ, நீக்கிவிட்டு அதற்கு மாறாக மற்றொன்று குடிபுகினும் புகும். பொதுவாக மனிதனென்று பிறந்தவனில் குபேரன் முதற் கோவணாண்டி வரை துக்கமில்லாதவனே உலகத்திற் கிடையாது. அவ்வரத்தையும் சப்பவத்திற்குத் தக்கவிதமாயிருக்கும். மாதா விறந்ததுக்கம், ஆறுமாஸத்திற்கும், பிதா பிரிந்த துக்கம் ஒரு வருஷத்திற்கும், மனைவி மரித்ததுக்கம் மயான மட்டுக்கும், புத்திரனைப் பிரிந்த துக்கம், ஆயுள் பரியந்தமும், ஒருவனைத் துன்புறச்செய்யுமென்பது முது மொழி. இனி இக்கடைசித் துன்பத்துள் ஆழ்ந்த சோமசுந்தரம்பிள்ளையினது கதியை விசாரிப்பாம். தன்னுடைய ஒரே குமாரன் தெய்வசிகாமணி தவரி ஐந்து வருடம் வரை இரவு பகல் நன்மை தீமை பெரிது சிறிது சுகந்தம் துர்க் கந்தம், என்னும் பேதமே தெரியாத உன்மத்தராயிருந்தார். சாமிநாதபிள்ளை செய்து வந்த பற்பல சிகிக்ஷைகளால் சிறிது சிறிது பித்தாதிக்கம் குறைபத்தலைப்பட்டது இத்தருணத்திற் சாமிாதபிள்ளை புகட்டிய உபதேச மொழிகளாலும், மெய்கண்ட சாஸ்திர விசாரணையாலும், மனோதுக்கம் நீங்கிபூரண சுகத்திற்கு வந்துவிட்டார்.
ஞானமாங் கனல் சுடும்போது புத்திர சோகமென்னும் புன் சருகு கருகாத்திருக்குமோ, தெருவிலே நடக்கிற ஜனங்கள் பேசிக் கொள்வதில், மகன், பிள்ளை,குழந்தை, சந்ததி என்னும் வார்த்தை கலந்திருந்தால், அது செவிப்படுமுன் வாய்விட்டுக் கண்ணீர் விட்டு மனம் விட்டுக் கதறியழுத சோமசுந்தரம் பிள்ளை இப்போது புதிய தன்மையுடையவராக மாறிவிட்டார். யாராவது உலக விவகார சம்பந்தமான பேச்சுக்களைப்பற்றித் தன்னிடம் வந்தால் அதைக்குறித்துப் பேசிக்கொள்ளச் சம்மதமில்லை யென்று கண்டிப்பாய்ச் சொல்லி விடுவார். மறுமைக்கான பேச்சானால் ஒரு நாளைக்கல்ல ஒரு மாஸத்திற்கானாலும் இடையறாது பேசப்பிரியப்படுவார். தமது பந்துக்களில் யாராவது இறந்து போனதாகக் கேள்விப்பட்டு மீனாட்சியம்மாள் வந்து சொன்னால் கண்ணுக்குப் புலமாகிற சர்வ ரூபங்களும் அழியுமானால் மனிதரூபமட்டும் அழியாதிருக்குமோ, மீனாக்ஷீ, “மாயுமனிதரை மாயாமல் வைக்கமருதில்லையே” என்பர். தமது பண்டைய நேசர்களிற் சாமிநாதபிள்ளையைத் தவிர வேறு யாராவது வந்து ஐயா, தங்களுடைய செல்வத்தையும் புத்திரனையுமிழந்து இவ்வாறு கஷ்டப்படும்படியும் நேர்ந்ததே என்று அநுதாபப்பட்டால் ‘குடை நிழற்கீழ்ச்சேனைத் தலைவராச் சென்றோரும், மனையாளை மாற்றார் கொள்வீழ்வர்’ என்பது. அறநூல் அவ்வாறின்றி நமக்கு மனையாள் மீந்திருப்பது விசேஷமல்லவா? என்பர். பிரதிதினமும் அதிகாலையிலெழுந்து நித்யகன்மங்களை முடித்துக்கொண்டு நடுப் பகல்வரையும் ஏகாந்தமான இடத்திலிருந்தும், அதன்மேல் மனை யாளாற் கொடுக்கப்படும் தினத்திற்கொருவேளை சத்துவகுண போசனத்திற் சிறிதே உண்டு மறுபடியும் ஜெபித்துக் கொண்டிருப்பதற்காக அவ்வூர் மஹா பலேசுரர் திருவாலயத்திற்குப் போய் விடுவார். கோவிலுக்கு வருகிற பெரியோர்களிடத்திற் றனக்கு சாஸ்திரங்களில் நேரிடும் சங்கைகளைக் கேட்டுத் தீர்வார்.
“தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணரா”க்குருட்டுச் சாமிகளும், பொய்ப் பொருண் மேல் இச்சையுற்று மெய்யடியார் வேடந்தாங்கி அயர்ந்தார் வாய்ப்பொருளை அபகரித்துத் திரியும் குருட்டுச்சாமிகளும், இல்லாச் சிரமத்தால், இல்லாச்சிரமத்தை விடுத்து மூவாசையுமற்றமுனிவர் போல நடித்துத் திரியும் போலிச்சாமிகளும், எப்போதும் ஒரே பக்குவத்துடன் மிளகு ரஸமும் வைக்கத் தெரியாது விழிப்பது மனித குணமாயிருக்கவும், இரும்பைத் தங்கமாக்கி விடுவேனென்று, ஏமாற்றித் திரியா நிற்கும் மோசச்சாமிகளும், பாற்சாமி, பாகற்பழச்சாமி, வெண்ணைச்சாமி, மிளகாய்ச் சாமி, நெருப்புச்சாமி, நெல்லிக் காய்ச்சாமி எனப்பல விசித்திரப் பெயரிட்டு உலகத்தை வஞ்சித்துத் திரியும் பல பக்காசாமிகளும் சோமசுந்தரம்பிள்ளை இருக்குமிடத்திற்கு வரவும் விதிர் விதிர்த் தொழிவர். விவேகிகளால் விரும்பப் படத்தக்க இவரது மேலான நல்லொழுக்கத்தைக் கேள்விப்பட்டு பற்பல பெரியோர்களும் ஸாதுக்களும் கும்பல் கும்பலாய் வந்து பார்த்துக் கொண்டு போகும் வழக்கம் உண்டாய் விட்டது. வரப்பட்ட பெரியோர்களைச் சாமிநாதபிள்ளை உபசரித்தனுப்புவார். இப்போது பாப்பையாபுரமும் அதைச்சேர்ந்த ஊர்களும் தங்கச்சாமிபிள்ளை அதிகாரத்திற்குட் பட்டிருக்கின்றன.
ஆறாம் அதிகாரம்
பாப்பையாபுரம் கிராம தேவதை செண்பகவல்லியம்மன் கோவிலுக்குக் கர்த்தாக்கள், அரசுரிமைக் காலத்தில் எண்பத்தேழு கோட்டை விரப்பாட்டு நன்செயும், தொண்ணூற்றாறு சங்கிலி புன் செயும் சர்வமான்யமாக விடப்பட்டிருந்தன. அந்த நிலங்களைக் குடிகள் வசம் பயிர் செய்ய விட்டு அதினின்றும் கிடைக்கிற வருமானங்களைக் கொண்டு கோவிற் பூஜை, உற்சவம் முதலியன வற்றை நடத்தி வரும் படி சோமசுந்தரம்பிள்ளையின் முன்னோர்களை, ஏற்படுத்தியிருந்தி ருக்கிறார்கள். அந்தக் கிரமப்படியே அம்மானிய நிலங்களுக்குரிய பட்டாப் பாத்தியமானது சோமசுந்தரம்பிள்ளைக்கு ஏற்பட்டு வந்து அப்பால் அவருடைய சகோதரர் தங்கச்சாமிபிள்ளை பேருக்கு என்ன நியாயத்தினாலேயோ பதிவு செய்யலாகி வருகிறது. அது அப்படி யிருக்க தனக்குச் செல்வாக்கு நடக்கிறதென்ற தைரியத்தைத் தங்கச்சாமிபிள்ளை எண்ணிக் கொண்டு அந்த நிலங்களின் மேலிருக்கிற குடிப்பாத்தியத்தை நீக்கிவிட்டுத்தானே அபகரித்துக் கொள்ளப் பல பிரபத்தனங்கள் செய்து வந்தார். அந்த நிலங்களை யுழுகிற குடியானவர்கள் அறிந்து சந்ததி பாரம்பரையாகத் தாங்களே, அந்த நிலங்களை யனுபவித்து வருவதாயும் அப்பூமிக்குரிய நிலவரியை வசூலிச்கும் சுதந்தரத்தைத் தவிர வேறு எவ்விதமான சொந்தமும் தங்கச்சாமிபிள்ளைக்காவது, அவர் முன்னோர்களுக்காவது இருந்திருப்பதில்லை யென்றும், கோவில் மான்யம் சத்திரமான்ய முதலிய பல மான்ய நிலங்கள் கிராமாந்தரங்களில் கிராமத்தலைவர்கள் பேருக்குப் பட்டாப் பாத்திய மட்டுந்தான் ஏற்பட்டதென்றும், அந்தப்பாத்தியத்தை வைத்துக் கொண்டு நிலங்களைக் கைப்பற்ற நினைப்பது பெரிய அக்கிரம மென்றும், வாகோபதரரான தங்கச்சாமிபிள்ளையால் தங்களுக்கு யாதொரு சங்கடமும் உண்டாகாமற் காப்பாற்ற வேண்டுமென்றும் துரைத்தனத்தாருக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டார்கள். இதனால் தங்கச்சாமிபிள்ளை நிலங்களில் அக்ரமப்பிரவேசம் செய்ய நினைத்ததை நிறுத்தி விட்டுக் கோர்ட்டில் வழக்கிட்டு எதிரிகளுக்கு அறிக்கைப் பத்திரமும் பிரப்பித்து விட்டார்.
நியாயஸ்தலங்களுக்கு வழக்குக் கொண்டு போக நினைக்கிறவர்கள் நியாயப் பிரமாணத்திற்கு ஒத்த வழக்குத்தானாவென்று முதலிற் கவனிக்க வேண்டும். ஏனெனில், பொய் பேசுவதையே சாதாரண வழக்கமாய்க் கொண்டவனுக் கூடப்பொய்ச்சாக்ஷி சொல்ல எளிதில் ஒப்பமாட்டானன்றோ. கிரமமான விவகாரமாயிருந்தாலும், நிபாயத்தலைவர்கள் கேட்கிற கேள்ளிகளுக்குத் தகுதியான முகாந்தரஞ் சொல்லத் தனக்கும், தனக்கு உப பலமாக வரப்பட்டவர்களுக்கும் சக்தியுண்டாவென்று ஆலோசிக்க வேண்டும். சொல்வன் மையில்லாமையினால் பொய்க்கு முன்னே மெய் நின்று தத்தளிக்கும் படி நேர்ந்தாலும் நேரும். மேலே காட்டிய இருவகைப்பலமும் ஒத்திருந்தாலும், தீர்ப்பின் முடிவில் ஏதாவது தனக்காதாயமிருக்கிற தாவென்று முக்கியமாக ஆராய்தல் வேண்டும். ‘பணத்துக்கு ஒரு அம்பு வாங்கி விருநக்கு வேட்டையாடினது போல’ நிஷ்லமான காரியத்திற்குப் போகக் கூடாது. சர்வ சௌகரியங்களும் அது குணாபிருந்தாலும், பணம் என்பதொன்றில்லா விட்டால் அனைத்தும் பாழாகும். “வழிச்செலவுக்கில்லர்தான் வழக்கிழந்தான்” என்பது போல பணமற்றாற் பலனற்றுப் போம். ஆகை யினாலே எல்லாவற்றிற்கு முதன்மையாகப் பணவரவையும் எதிர் பார்த்துக் கொள்ள வேண்டும், மற்றொருவர் கையிலிருக்கிற பணத்தை நம்பி வியாஜ்யஞ் செய்யத் தொடங்கினால் அது ஆபத்தாய் முடி யும். ஆரம்பத்திற் சொற்பத் தொகையைக் கொடுத்து நியாயஸ்தலத்திற் கனுப்பிவிடுவார்கள். அதை உறுதியாக வைத்துக்கொண்டு, வழக்கிட்டு விட்டு வந்து மேற்செலவுக்கு பணங்கேட்டால் வட்டியை வழக்கத்திற்கு மிஞ்சிக் கேட்பார்கள். அதற்குச் சம்மதித்தாலும் இரண்டு தக்க ஜாமீன்தார்கள் மேல் ஒப்பஞ் செய்ய வேண்டு மென்பார்கள். அங்ஙனமே எல்லா நிபந்தனைக்கும் கட்டுப்பட்டேழுதிக் கொடுத்தாலும், ஒரே மொத்தமாகப் பணத்தைக் கொடார்கள் “சுடுகாடு போன பிணமும் கோர்ட்டுக்குப் போன பணமும் திரும்பி வராதென்று” போலி நியாயங் கூறிப்போவார்கள். எல்லாம் சாதகமாகி வருகிற போது சிறிது பணக்குறை நேர்ந்தாலும் ஒட்டோடொழிந்து போம். இத்தனைவிதமான சங்கடப்பட்டு கக்ஷியை ஜெயித்துக் கொண்டாலும், தான் செலவழித்த பணத்தினளவு எதிரியாற் கொடுக்கும்படி யேற்படாது. சிறிதே தான் கிடைக்கும். அப்படி வந்ததும் வக்கீலுக்கும், குமாஸ்தாக்களுக்கும் சாக்ஷிகளுக்கும் சில்லரை வேலைக்காரர்களுக்கும் கோவில் பிரார்த்தனைக்கும் செலவிடக்காணாது. தோற்றவன் கதியைத் தான் சொல்ல வேண்டாமே. கோர்ட்டுக்குப் போய் வென்றாலும், தோற்றாலும் நஷ்டமே நஷ்டம்.
இவ்வாறு வழக்கிட்டுத் திரிவதைப் பார்க்கிலும் விவகாரந் தெரிந்த சில மத்தியஸ்தர்களைக் கொண்டு தங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொண்டால் எவ்வளவோ லாபமும் சுகமுமிருக்குமே! நியாயஸ்தலங்களுக்குப் போகாமல் தங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளும்படி குடிகளுக்குத் துரைத்தனத்தார் அநுமதியுங் கொடுத்திருக்கிறார்களே. பசியோடிருக்கிறவனைக் கருணையாளன் ஒருவன் கண்டு பாலோடன்னங் கொடுத்துபசரித்துண்ணும்படி சொன்னால், அதை வேண்டாமென்று வீசியெறிந்து விட்டு மண்ணைபள்ளி வாயிற் கொட்டிக் கொள்வது போல கோர்ட்டுக்குப் போகலாமா? ஆனால் நாட்டுப்பஞ்சாயத்திற் சிலர்களுக்கு லாபமே இருக்கிறதில்லை, அப்படிப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு அவசியம் போய்த் தீரவேண்டியதே. அவர்கள் சாக்ஷியம் அங்கே செலாவணியாகிக் கொண்டே யிருக்கும். அவர்கள் யார்? துர்வழக்காளிகள். சோமசுந்தாம்பிள்ளை உயிரோடிருக்கும் போது அவரனு மதியின்றி மான்ய நிலங்களைக் குறித்து வழக்குத் தொடரத் தங்கச்சாமி பிள்ளைக்கு அதிகாரமில்லையென்று குடிகளுக்குச் சார்பாய் நின்று வாதித்து ஜெயித்துக் கொடுக்கும் வல்லபமும் மனவுறுதியும் சாமிநாதபிள்ளைக்கு உண்டு என்றாலும், சோமசுந்தரம்பிள்ளை தற்காலமிருக்கிற நிலைமைக்குக் கோர்ட்டுக்குப் போவது உசிதமல்ல வென்று நின்று விட்டார்.
– தொடரும்…
– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026