துச்சாதனர்கள்: புலம்பெயர் காட்சிகள் மூன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 1,043 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழர் கலாசாரம்பற்றிய கலந்துரையாடல் அது. புலம்பெயர் நாடொன்றில் தமிழர் கலாசாரம்பற்றிய கலந்துரையாடல் காரசார மாக நடைபெற்றது. புலம்பெயர் எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்குபற்றினர். தமிழர் அடையாளம் பேணப் பட வேண்டுமானால் அவர்கள் மொழி, கலாசாரம் பேணப்பட வேண்டும் என்பதில் எல்லோரும் உடன்பட்டனர். ஆனால், தமிழர் கலாசாரம் என்பது எது? அதுதான் அங்கு முக்கியமாக எழுந்துநின்ற கேள்வி. அதற்குப் பதில்காண, பலர் பலவித கலாசார அல்லது பண்பாட்டுக் கூறுகளின் வழி நுழைந்தனர். 

அது ஒரு Strip கிளப். 

அங்கே ‘ஸ்ட்றிப்’ டான்ஸ் நடந்துகொண்டிருந்தது. 

அதாவது, பெண்கள் அரங்கில் தோன்றி, ஆடை களையும் நடனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

ஒவ்வொரு பெண்ணாக மேடையில் ஏறி, தன் உடலில் பெண்மை உறுப்புக்களை மறைத்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்தனர். 

உடலில் மெல்லிதாகத் துவண்டுகொண்டிருந்த மெல்லாடை முதலில் நழுவிற்று. 

மார்பை மறைத்த கச்சை கழன்றுபோயிற்று. பின்னர் குவிமுலைகளை ஒன்றுசேரக் குவித்தும் நெரித்தும் அபிநயம் நிகழ்ந்தது. ஈற்றில் யோனியை மறைத்த கச்சையும் கழன்றது. பின்னர் கால்களை அகல விரித்து இன்னோர் முத்திரை. சில பார்வையாளர்களிடமிருந்து ஆரவார வரவேற்பொலிகள் கிளம்பின. 

தமிழர் கலாசாரம் பேணப்பட வேண்டும் என்று காரசாரமாக விவாதித்த அவனும் அங்கே இருந்தான். அவன் லேசாக, தனக்கு பக்கவாட்டிலிருந்து ஆரவார ஒலிகள் கிளம்பிய பக்கமாக நோட்டம் விட்டான். ‘தமிழ்க்களை’ காட்டும் முகங்கள் பல அங்கே தெரிந்தன. காதில் வளையங்கள், ஒட்டவெட்டப்பட்ட தலைமயிர், சிலருக்கு சுற்றிவர மயிர்கள் மழிக்கப்பட்டு மேல்பகுதி மட்டும் பாத்திபோட்ட மேடுபோல் கருமை சிலிர்த்திருந்தது. அவர்களில் சிலரை எங்கோ கண்டதுபோல… எங்கே? எங்கே? ஞாபகம்வர சிறிது தாமதித்து பின்னர் திடீரெனப் பளிச்சிட்டது. அவ்வூர் ஆங்கிலப் பத்திரிகைகளில் அவர்கள் சிலரின் படங்கள் வெளியாகி யிருந்தது, அவன் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு றெஸ்ற்ரோறன்றுக்கு முன்னால் இடம்பெற்ற தெருச் சண்டையில் வாள்வெட்டு, எதிரியின் கைகளைத் துண்டாடியது என்ற குற்றச் செயல்களோடு சம்பந்தப்படுத்திய செய்திகளின் மத்தியில் அவர்கள் சிலரின் படங்கள் இருந்ததுபோல… 

மீண்டும் அரங்கில் ஒருத்தி ஆடிக்கொண்டிருந்தாள். 

ஆடைகள் ஒவ்வொன்றாகக் கழன்றுகொண்டிருந்தன. துரியோதனன் அவையில் திரௌபதையின் துகில் உரியத் துச்சாதனன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிகிறது. 

இங்கே அரங்கில் திரௌபதைகள் தோன்றி, தங்கள் உடைகளைத் தாங்களே உரிந்துகொண்டிருந்தனர். 

அவர்கள் உடைகளைக் களைய ஊக்குவிக்கும் துச்சாதனர்கள் யார்? 

அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். 

இன்னொரு அழகி அரங்கில் தோன்றுகிறாள். 

அவள் நெளிந்து வளைந்து ஆடை களையும் அபிநயிப்பில் ஈடுபடும்போது, “இவள்தான் அவள்” என்று பலமாகவே தமிழில் ஒலியெழுப்பிய அந்த ‘தமிழ்க்களை’ சிந்தும் முகங்கள் மத்தியில் ஒருவகை அதிர்வலைகள் எழுந்துகொண்டிருப்பது தெரிந்தது. 

அவன் மேடையில் ஆடும் அவளைப் பார்க்கிறான். 

அவள் வெள்ளைக்காரியல்ல. ஆபிரிக்க நீக்கிரோப் பெண்ணு மல்ல. தாய்லாந்து அல்லது சீன தேசத்தவளாயும் இருக்கவில்லை.

அவள் முகத்தில் யாழ்ப்பாண ‘தமிழ்க்களை’ தெரிந்தது. அதுதான் தமிழர் அடையாளமாய் அவனுக்குப்பட்டபோது, அவன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். 

அவள் ஆடைகள் கழன்றன. 

அவள் நிர்வாணமாய் ஆடிக்கொண்டிருந்தாள். ஒருவித ஆரவார அதிர்வுகளுக்கிடையே தமிழில் கொச்சை வார்த்தைகள் கீழிருந்து கிளம்பின. 

அவள் பிடித்த அபிநய முத்திரைகள் எதிலும் தமிழ் அடையாளம் எதுவும் இருந்ததாய் இல்லை. 

ஆனால், அவன் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.  

வெகு நேரத்திற்குப் பின் அவள் கிளப்பை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றாள். இவனும் வெளியே போக ஆயத்தமானான். திடீரென கிளப்புக்கு முன்னால் துவக்குச் சூடு கேட்டது. அவன் மனம் ஒரு கணம் அதிர்ந்தது. 

அரங்கில் ஆடிய ‘தமிழ்க்களை’ தெரிந்த அந்தப் பெண் சுடப்பட்டு அங்கே துவண்டு கிடந்தாள். 

கூட்டம் கூடுகிறது. 

தமிழ்க் கலாசாரம் பேணப்பட்டதான நினைவில் அவன் அங்கிருந்து அகன்றுகொண்டிருந்தான். 

2 

ஒரு பாடசாலைச் சிறுமியை பாலுறவுக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு அது. 

பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழ்ச் சிறுமியின் குடும்பத்தினர் தம் எதிரிக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். 

அவன் அந்த வழக்கின்போது, தமிழ்க் குடும்பத்தினர் சார்பில் மொழிபெயர்ப்பாளனாகச் சென்றிருந்ததான். 

பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவன் பாண்டித்தி யம் பெற்றிருந்தான். அதனால், அவன் இவ்வாறு புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களின் வழக்குகளுக்கு மொழிபெயர்ப்பாளனாகச் செல்வது வழக்கம். அறிஞர் பூகோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பல குற்றவாளிகளின் வழக்குகளை ஆய்வுக்குட்படுத்தி, எவ்வாறு சமூகத்தின் ஒவ்வொரு விதிமுறையும் ஒழுக்கமும் வன்முறை மிக்கதாக, அதிகாரம் மிக்கதாக இருக்கிறது என்பதைப் புட்டுக் காட்டியதுபோல், இவன் புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களின் வழக்குகளுக்கு முகங்கொடுத்து தமிழ்க் கலாசாரம், அதன் அடையாளம் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதை, தனக்குரிய அளவுக்கோல்களைக் கொண்டு கண்டறிந்திருக்கிறான். அதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறான். 

பஸ்ரிலியா பதினைந்து வயது நிரம்பிய அழகான தமிழ்ச் சிறுமி. பிரெஞ்சுப் புரட்சியின்போது உடைக்கப்பட்ட பஸ்ரில் சிறையிருந்த இடத்திற்கு அருகே அவர்கள் வசித்துவந்தபோது அவள் பிறந்ததால், அவளுக்குப் பெற்றோர் அந்தப் பெயரைச் சூட்டியிருந்தனர். 

அவள் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில் அவளுக்கும் பிரெஞ்சு படிப்பித்துக்கொண்டிருந்த ஆசிரியருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியர் மொறொக்கோவிலிருந்து வந்து குடியேறிய காப்பிரி இனத்தைச் சேர்ந்தவன். அவர்களுக்கிடையே ஏற்பட்ட தொடர்பு, காதலா அல்லது காமம் வயப்பட்டதா என்ற ஆராய்ச்சி அனாவசியமானது. 

மேற்குலகக் கலாசாரத்தில் காதலாகிக் கண்ணீர் மல்கி என்பதைவிட, காதலாகிக் கட்டியணைத்து முத்தமிட்டு உடலுறவு கொள்வதே வழமையானதும் சர்வசாதாரணமானதும் என்பது பஸ்ரிலியாவுக்கு தெரிந்திருக்காது என்றில்லாவிட்டாலும், அவளைப் பொறுத்தவரை எங்கே பிழைத்ததென்றால், பிரெஞ்சு ஆசிரியரை அவள் காதலித்து உடலுறவு கொண்டதன் விளைவாய், அவள் கர்ப்பவதியாகிப் போய்விட்டதே. 

உடலுறவு கொண்டதோடு மாத்திரம் நின்றிருந்தால் தமிழ்க் கலாசாரம் எப்படியாவது அதனை ஜீரணித்திருக்கும். ஆனால், இந்த விவகாரம் கனகாலமாக பஸ்ரிலியவால் தெரியாத்தனமாக மூடிமறைக்கப்பட்டு, எல்லாவித மாற்று நடவடிக்கைகளும் மேற் கொள்ளமுடியாதுபோன காலத்தில் அவளது பெற்றோர் இதுபற்றி அறியவந்தபோது, அவர்களுக்கு வேறு வழியொன்றும் இருக்க வில்லை; நீதிமன்றத்துக்குப் போவதைத் தவிர. 

பஸ்ரிலியாவின் பெற்றோர் வழக்குத் தொடுத்ததற்கான காரணங்கள் பல இருந்தன. 

பஸ்ரிலியா ஒரு சின்னப் பெண். அந்த அப்பாவிச் சின்னப் பெண்ணை அவளைவிடப் பத்து வயது கூடிய ஓர் ஆசிரியன் ஏமாற்றி அநியாயம் செய்துவிட்டான். அவனுக்குத் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். பஸ்ரிலியாவை அவன் மனைவியாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அவர்கள் தமக்குள் கறுவிக் கொண்டனர். பஸ்ரிலியாவின் பெற்றோருக்கே இவன் மொழி பெயர்ப்பாளனாக இயங்கினான். நீதிமன்றில் அவர்கள் வழக்கு எடுக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பஸ்ரிலியாவைக் கர்ப்பவதியாக் கிய ஆசிரியன் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டவனாகத் தெரிய வில்லை. இந்த நாட்டில் இது ஒரு சர்வசாதாரணமான விஷயம் என்பதுபோல் அவரது முகபாவனை இருந்தது. 

வழக்கின்போது குறிப்பிட்ட, பிரெஞ்சு கற்பித்த ஆசிரியர்தான் தம் மகளைக் கெடுத்தான் என்பதற்கான நிரூபணங்களை அந்தத் தமிழ்க் குடும்பத்தினரால் காட்ட முடியவில்லை. 

பிரெஞ்சு கற்பித்த ஆசிரியன் தனக்கு எதுவும் தெரியாதென அடித்துக் கூறினான். தீர்ப்பின் முடிவில் நீதிபதி பெற்றோரைப் பார்த்து, “உங்கள் பிள்ளைக்கு நீங்கள் பாலியல் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கவில்லைப் போல் தெரிகிறது” என்று கூறிவிட்டு, மேலும் அவர், “பாடசாலைக்குப் போகும்போது, கர்ப்பத்தடைக்கு ஏதுவான உறைகளை ஏன் கொடுத்து அனுப்புவதில்லை?” என்றும் கேட்டார். 

இவர்களோ தமிழ்க் குடும்பப் பண்பாட்டுக்குரியவர்கள். இது என்ன வெட்கங்கெட்ட கதை? 

அவர்கள் பேசாமல் நின்றனர். 

இனி அந்தப் பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்வதும் விடுவதும் அந்தப் பிரெஞ்சு ஆசிரியனின் மனதைப் பொறுத்தது என்பதுபோல் தீர்ப்பு இருந்தது. 

வழக்கு முடிந்து வீட்டுக்குப் போகும்போது பஸ்ரிலியா, மொழிபெயர்ப்பாளனாகச் சென்ற இவனோடு பிரெஞ்சில் பேசி, கதைத்துச் சிரித்துக்கொண்டு வந்தாள். அவன் பெற்றோருக்கு அவர்கள் பேசும் பிரெஞ்சு புரியவில்லை. 

அப்போது, அவனுக்குள் அந்தரங்கமாக ஒரு குணம் தலை காட்டிற்று. 

இவளோடு ரகசியமாகத் தொடர்பு வைத்துக்கொண்டால் என்ன? அந்த எண்ணமும் ஒரு தமிழ் அடையாளந்தான். 

மனைவி இருந்தால் என்ன? 

அவளுக்குத் தெரியாமல் ஒரு வைப்பாட்டி. 

வைப்பாட்டி முறை யாழ்ப்பாணக் கலாசாரத்தில் காலாகால மாகப் பயின்றுவரும் ஒன்றுதானே? 

தன் அந்தரங்க யோசனையை உரசிப்பார்க்க அவன் தயாரா னான், தமிழ் அடையாளத்திற்குப் பிறழ்வு நிகழாத வகையில். 

தமிழர் கலாசாரத்தைப் பேணுவதுபற்றி அக்கறைப்பட்ட அவன், ஒருமுறை இலங்கைக்குப் போய் யாழ்ப்பாணத்தையும் தரிசித்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டான். 

பன்னிரண்டு வருடகாலப் புலம்பெயர் வாழ்க்கைக்குப் பின்னர், அவன் விட்டுவந்த பிறந்த ஊரான யாழ்ப்பாணத்திலுள்ள உரும்பிராயைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் கனகாலமாகவே கருக்கூட்டிக் கொண்டிருந்தது. அதைச் செயல்படுத்தக் காலம் இப்போதுதான் கனிந்திருந்தது. 

அவன் வெளிநாடொன்றுக்குப் போய், தன் மனைவியையும் அங்கு அழைத்துக்கொண்டபோது, அவன் மூத்த மகளுக்கு இரண்டு வயதே ஆகியிருந்தது. அதன் பின் இரண்டு வருடங்களுக் குப் பின்னர் ஒரு மகனும் பிறந்தான். 

கைக்கடங்கலான குடும்பம். 

அவன் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்தான். அவன் மனைவியும் இன்னோர் அலுவலகத்தில் சிறிது நேர கிளீனிங் வேலை பார்த்துவந்தாள். இருவரும் கழுவுதல் துடைத்தல் போன்ற வேலைகளையே செய்துவந்தனர். என்றாலும் கைக்குக் காசு கிடைத்தது. பிள்ளைகள் தமிழ்ச் சூழல் கலவாத அந்நியச் சூழலில் கல்வி பயின்றார்கள். அவர்களுக்கு தமிழ் எழுதவாசிக்கத் தெரியா விட்டாலும் தமிழ் பேசக்கூடியவர்களாய் இருந்தார்கள். அந்த அளவுக்கு அவன் வீட்டில் தமிழ் அடையாளம் பேணப்பட்டதில் அவனுக்குத் திருப்தியே. 

அவன் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போய் இறங்கியபோது அவனுக்கு எல்லாமே ‘ஒருமாதிரி’யாக இருப்பதுபோலவே பட்டது. அவன் எதிர்பார்த்ததுபோல் எல்லா ருமே ஏன், எல்லாப் பொருள்களுமே அவனையே வியப்புடன் உற்றுப்பார்த்த வண்ணம் நிற்கும் என்ற அவன் நினைவு, கறையான் பிடித்த நம்மூர் வேலிகள்மாதிரி கலகலத்துப் போயிற்று. 

யாழ்ப்பாணம் போனதும் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தைச் சுற்றிக்காட்டினான். பண்ணைக்கருகே இருந்த கோட்டைபற்றியும் அது காணாமல்போனதன் காரணம்பற்றியும் வரலாற்று உணர் வோடு விளக்கினான். கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் மகத்துவம்பற்றிப் பேசினான். பனங்கள்ளு, கருப்பணி, பனாட்டு, புழுக்கொடியல், கூழ் என்பவைபற்றியெல்லாம் நிறையவே கூறி னான். இவையனைத்தும் தமிழ்க் கலாசாரத்தை ஏதோ வகையில் தக்கவைப்பவையாக அவன் விளக்கம் அமைந்தது. 

அவனைப் பார்க்க அவன் வீட்டைச் சுற்றியுள்ளவர்களும் அவன் உறவினர் சிலரும் வந்துபோயினர், அவன் கையை எதிர் பார்த்தபடி. தானமும் தாராள மனப்பான்மையும் தமிழர் கலாசா ரத்தின் மிகப் பலம்வாய்ந்த கூறுகள் என்பதை ஏனோ, இன்றைய அனேக யாழ்ப்பாணத்தார்போல், அவன் வசதியாகவே மறந்து விட்டிருந்தான். 

அவன் குடும்பத்துக்குக் குடிமை வேலை பார்த்தவர்களில் எஞ்சியிருந்த சிலர் வந்துபோயினர். 

அவனுடைய வீடு பழைய கல் வீடு. அவனுடைய வயதுபோன அம்மாவும் அப்பாவும் அங்கேதான் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு உதவியாகக் கட்டாடி சின்னானின் பேத்தி அவ்வப்போது வந்து உதவிசெய்துகொண்டிருந்தாள். இப்போ அவன் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கிநின்றதன் பின், அவள் உதவி அதிகம் தேவைப்பட்டதால் அவள் அடிக்கடி அங்கு வந்துபோய்க்கொண்டிருந்தாள். சமையலுக்கு உதவி, சந்தைக்குப்போய் வருதல், சலவை செய்தல் என்று அவள் வந்துபோய்க்கொண்டிருந்தாள். அவளோடு அவர் களது இரண்டு பிள்ளைகளும் “அன்ரி, அன்ரி” என்று அவளை வாய்நிறைய அழைத்தவாறு அவளுக்குப் பின்னால் திரிந்தனர். 

யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமைக்குப் பின்னர், ஒரு நாள் இரவு, அவர்களது பிள்ளைகள் இருவரும் படுக்கைக்குப் போகாது தமக்குள் விளையாடிச் சிரித்துக்கொண்டிருந்தபோது, “விளை யாடினது போதும் போய்ப் படுங்க” என்று அவர்கள் அம்மா கட்டளைபோட்டாள். 

அப்போதுதான் அவர்கள் ஏதோ நினைத்துக்கொண்டவர் களாய் அம்மாவிடம் ஓடிவந்து, “அம்மா நாளைக்கு நானும் தம்பியும் அன்றியோட மார்க்கட்டுக்கு போகப்போறோம்” என்று கூறிவிட்டு, ஆவலோடு அம்மாவின் முகத்தைப் பார்த்தனர். 

“ஆர் அன்ரி?” என்று தாயார் கேட்டார். 

அருகே கிடந்த கட்டிலில் கிடந்த அவன், பிள்ளைகளினதும் தாயாரதும் சம்பாஷணையை சுவாரஸ்யமாகக் கவனித்துக்கொண் டிருந்தான். 

“என்னம்மா தெரியாதா, எங்க வீட்டை வந்து வேலைசெய்யிறாவே அவதான் அன்ரி.” மகள் பதில் சொன்னாள். 

“சீ, அவா அன்ரி இல்ல. அவாவை அப்படிக் கூப்பிடாதேங்க.” தயார் எச்சரித்தாள். 

“ஏன் அம்மா?” 

“அவா எங்கட சாதியில்ல. அவை குறைந்த சாதியாக்கள். அதுதான், அவை எங்களுக்கு வந்து கழுவித்துடைச்சு, துணியெல்லாம் தோய்ச்சு தருயினம்…?” 

“நீங்களும் அங்க கழுவித்துடைக்கிற வேலைதானே செய்யிறேங்க…?” 

“நாங்க அங்க செய்தாலும் உயர்ந்த சாதியாக்கள். இவை குறைந்த சாதியள்.” 

“சாதி எண்டா என்னம்மா?” மகள் விடாமல் கேட்டாள். 

“சாதியெண்டா சாதிதான். நான் சொல்லியபடி செய்யுங்க. அவளை அன்ரி எண்டு சொல்லாதேங்க” என்று கூறிய அவள் எழுந்து படுக்கைக்குப் போனாள். 

ஆனால், அவளின் பிள்ளைகள் அவளை விடுவதாய் இல்லை. ‘அப்படியெண்டா அண்டைக்கு அப்பா அவவை மளைள பண்ணினேர்தானே அம்மா?” என்று அவர்கள் கேட்டபோது, “என்ன?” என்று தாயார் பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். 

தமிழர் கலாசாரம் பேணப்படுவதுபற்றி மிகுந்த அக்கறை காட்டிய அவன், இந்த எதிர்பாராத தாக்குதலால் அப்படியே தலையணைக்குள் தலையைப் புதைத்தான். 

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *