தில்லி To ஆக்ரா
“என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
“அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ….மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?” கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
“நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க ”
“அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?”
“என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க” அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம்.
“”சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்” சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
“எம்மாம் பெருசுங்க…என்னால நம்பவே முடியலை … சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?” ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
“வழிவிடுங்கள்…ஓரம்போங்கள்” என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்று கொண்டிருந்தார் ஷாஜஹான்
– Thursday, September 20, 2007
![]() |
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க... |