திரை
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 123
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பால்காரர் பிளாஸ்டிக் பால் பைகளை வீசி எறிந்து விட்டுச் சென்ற தருணம் வந்த சண்முகசுந்தரம், முதல் வட்டம் காபி அருந்தி, மீண்டும் காபி சாப்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிற நேரம் வரை, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருந்தார்.
அவர் பேச்சின் சாராம்சம் இதுதான். அவர் மகன், அரசாங்க ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன், நர்சாக உடன் இருக்கும் பெண்ணைக் காதலித்திருந்தான். சண்முக சுந்தரத்தின் ஆட்சேபணை, ஒரு டாக்டர், போயும் போயும் நர்சையா கட்டுவது என்பது..
டாக்டர் நர்சைக் கட்டுவதால் சூரியன் மேற்கில் தோன்றுமா? வங்கக் கடல் பொங்கி எழுமா? வானம் தடுக்கிக் கீழே விழுந்து விடுமா? தவிரவும், ஓர் ஆண், பெண்ணைக் கட்ட வேண்டியும் இருக்கத்தானே செய்கிறது. அந்த ஆண் டாக்டராக இருப்பதும், அந்தப் பெண் நர்சாக இருப்பதும் அசந்தர்ப்பம் தானே? ஆனால், சண்முகசுந்தரம் யதார்த்தத்தை ஒப்புக் கொள்வதாக இல்லை. அவர் சொன்னார்.
“சார்… அந்தப் பயலை டாக்டராக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருபது, இருபத்தைந்து வருஷமாக என்னைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள் நீங்கள், வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் போதாதிருக்கையில், அந்தப் பயலை படிக்க வைக்க நான் எவ்வளவு சிரமப்பட்டு விட்டேன். யாசகம் செய்து அவனைப் படிக்க வைத்தேன் சார், யாசகம்… ஊரில், நமக்குத் தூரத்து உறவிலேயே ஒரு பணக்காரப் பார்ட்டி அவனுக்குப் பெண் தரமுன் வந்திருக் கிறார்கள். நூறு பவுன் போட்டு, கார் வாங்கிக் கொடுத்து, டிஸ்பென்ஸரி வைக்கவும் பணம் கொடுத்து, கல்யாணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். இந்தக் கழுதை காதல் கத்திரிக்காய்னு திரியறானே, என்ன பண்ண?”
“சரி நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”
“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? அந்தப் பயலைக் கூப்பிட்டு, நாலு வச்சு, ‘கழுதைக்குப் பொறந்த பயலே, காதலாவது மண்ணாவது, உங்க அப்பன் சொல்ற பொண்ணைக் கட்டுடா’ அப்படின்னு நீங்க சொன்னா போதும். நீங்க சொன்னா கேப்பான். உங்க மேலே அவனுக்கு ஏராளமான மரியாதை இருக்கு. உங்க உதவி இல்லாமே அவனாலே படிச்சு இருக்க முடியாது… அடுப்பிலே உலையை ஏத்திட்டு, அரிசிக்கு உங்க கிட்ட வந்து நின்ன நாட்களை நானும் மறந்திடல. அந்தக் கழுதையும் மறந்திடல. நான் நாளைக்கே உங்களை வந்து பார்க்கச் சொல்றேன். மாமா வரச் சொன்னார்னா பறந்து கிட்டு வருவான். என் கவலையை உங்ககிட்ட இறக்கி வச்சுட்டேன். நிம்மதியாப் போறேன். இனி உங்க பொறுப்பு…”
சண்முகசுந்தரம் போவதாகச் சொன்னார். ஆனால் என் முன்னிலையில் மிகச் சரியாக அமர்ந்திருந்தார். உட்கார்ந்திருக் கையிலும் சில மனிதர்கள் ஆகிருதி உள்ளவர்களாகத் தோற்றம் அளிப்பார்கள். அவர்கள் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. அவருக்கும் பெருத்த மீசை, குண்டு முகம், ஒட்ட வெட்டிவிடப்பட்ட அமெரிக்கன் கிராப்பு. ரஷ்யக் கிராப்பு எப்படி இருக்கும்? உடம்பைப் பிடித்துக் கொண்டு, ஆச்சர்யம் தரும் பச்சை நிறச் சட்டை, நீல நிறத்தில் – அதுவும் பள்ளிப் பிள்ளைகள் யூனிஃபார்ம் நிறத்தில் பேண்ட். காதலர்களைப் பிரித்து அவர்களின் பாவத்தைக் கொட்டிக்கொள்ளவென்றே இறைவனால் படைக்கப்பட்டிருப்பவர் போல் எனக்கு அவர் தோன்றினார். அவர் என்னைச் செய்யுமாறு வேண்டிய காரியம், தலையில் கொம்பு முளைத்த சாத்தான் செய்ய வேண்டிய காரியமே அல்லவா? ஆகவே நான் சொன்னேன்.
“சண்முகசுந்தரம்… உங்கள் பையனுக்கும்- அவன் பெயர் என்ன – சந்திரன் ரைட்? சந்திரன், அந்த நர்சை உண்மையில் விரும்பியிருக்கும் பட்சம், நாம் அவர்களின் நேசத்தைப் பிரிப்பது ஒரு பெரும் பாவம் இல்லையா?”
“நேசம், நெய், நெல், வெங்காயம், வெள்ளைப் பூண்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். ஊரில் உங்களைப் பற்றிச் சொல்றதை நீங்களே உண்மையாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே. வயசுக் கோளாறில் சிறு பயல்கள் செய்கிறதை எல்லாம் பெரியவர்களாகிய நாம் சீரியஸாக எடுத்துக் கொண்டால் எப்படி? எழுதற வார்த்தைகளை எல்லாம் போட்டுப் பேசிக் கொண்டி ருக்காதீர்கள். பவுன் என்ன விலை என்று உங்களுக்குத் தெரியுமா? நேசமாமே நேசம். அந்த இரண்டு சின்னதுகளையும் கூப்பிட்டு நாலு டோஸ் விட்டுக் காரியத்தைப் பாருங்க…”
இந்த நாற்பது வயதுக்காரர்கள், பகல் வேளைகளில் பட்டாக் கத்தியைத் தீட்டிக் கொண்டு, காதலைக் கொன்று குழியில் போட்டு மூடி அதன் மேல் மாஞ்செடி வைக்கிறார்களே, அது ஏன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இன்னொன்றும் என் மனசுக்குத் தோன்றியது. இந்தக் காரியத்தை- காதலுக்குக் குழிவெட்டும் காரியத்தை நான் எடுத்துக்கொள்ள மறுத்தால் சண்முக சுந்தரம் அமைதி அடைந்து விடுவாரா? மாட்டார். என்னைப் போலவே இன்னொருத்தனைப் பிடிப்பார். அவன் ஏதாவது தகிடு தித்தங்கள் செய்து அந்தக் காதலர்களைப் பிரிக்கக் கூடும். ஆகவே, இந்த இடத்தில் நான் செய்யும் பணி என்னவாய் இருக்க வேண்டும்? சாத்தியப்படும் அளவுக்குக் காதலுக்குத் துணை போவது. அதுவே மனுஷத் தனம், அந்தக் காதலர்களை அழைத்துப் பேசி, முடிந்த உதவிகளையெல்லாம் செய்து அவர்கள் வாழ்க்கை அமைத்துக் கொள்ளத் துணை புரிய வேண்டும். ஆனால், நான் செய்வதை சண்முக சுந்தரம் அறியக் கூடாது. அவருக்குத் துணை செய்வது போல் நடித்து, அந்தக் காதலர்க்குத் துணை செய்யவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டேன். என்சாமர்த்தியம் எனக்கே மகிழ்ச்சியைத் தந்தது.
“சரி… சண்முக சுந்தரம், சந்திரனையும் அந்தப் பெண்ணையும் நான் சந்திக்கிறேன். எப்படியும் அவர்களைப் பிரித்துவிட முயற்சிக் கிறேன். இவ்வளவு வயசும், படிப்பும், அனுபவமும் இந்தக் காதலர் களைப் பிரிப்பதற்குப் பயன்படாவிடில், இவைதான் இருந்தென்ன.”
சண்முகசுந்தரம் என்னை மெய்யன்போடு பார்ப்பது எனக்கு விளங்கியது. சக மனிதர்களுக்குத் துன்பம் தந்து அவர்கள் தவிப்ப தைப் பார்ப்பது மனிதர்களின் தலையாய சந்தோஷம் போலும்.
“அது சரி… ஊரில் என்னைப் பற்றி ஒரு மாதிரியாகப் பேசுவதாகச் சொன்னீர்களே, என்ன மாதிரி பேசுகிறார்கள்?”
“அதுவா? ஊர் நாலு விதமாகத்தான் பேசும். அது பற்றி யெல்லாம் கவலைப் பட்டுக் கட்டுபடியாகுமா?”
“கவலைப்பட வேணாம். என்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா?”
“தெரிந்து என்ன ஆகப் போகிறது? இந்த நாட்டில் நல்லவர்கள், யோக்கியர்கள், மகான்கள், அசல் ஞானிகள் எல்லோரையும் நம் மக்கள் பைத்தியம் என்று தானே சொல்வார்கள்….”
சண்முக சுந்தரம் திருப்தியுடன் எழுந்து போனார்.
ஒருநாள் மதியம் சந்திரன் என்னைப் பார்க்க வந்திருந்தான். சண்முகசுந்தரம் வந்துபோன அதே வாரம் அவன் வந்தான். அது ஒரு மே மாதப் பகல். வெயிலோ, ஊர் பற்றி எரிவது போல் காய்ந்து கொண்டிருந்தது. வீட்டுச் சுவரும், மேஜை, நாற்காலிகள், கட்டில், மெத்தை அனைத்தும் வெந்நீரில் வேக வைத்தது மாதிரி சூடாக இருந்தது. புழுக்கம், நசநசப்பு, வியர்வை ஆகிய அவஸ்தைகளில் நான் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்த போது, பகல் இரண்டு மணி அளவில் சந்திரன் என்னைப் பார்க்க வந்திருந்தான். இந்த மாதிரி நேரத்தில் ஒரு மனிதனைப் பார்க்கப் போவது? அவனைக் கௌரவப் படுத்துவதாகாது என்பது என் அபிப்பிராயம். ஒன்பது மணிக்கு முந்திய காலை வேளைகளும், அதுக்குப் பிந்திய மாலை களுமே உகந்த நேரங்கள். ஆக, சந்திரன் அந்த நேரத்தில் வந்தது எனக்கு எரிச்சலைத் தந்தது உண்மை. எனினும், நான் எடுத்துக் கொண்ட காரியத்தின் மகத்துவம் கருதி அவனை என் வீட்டு முன் அறையில் வைத்து சந்தித்தேன்.
“என்ன மாமா, என்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களாமே… அப்பா சொன்னார்…”
அவன் முகத்தை நான் ஆராய்ந்தேன். பையனின் முகம் பளபளப்பாக இருந்தது. இளமை, துள்ளல், உற்சாகம் அனைத்துக்கும் இது இடமாகத் திழ்கந்தது. எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
காதலின் தன்மை அப்படி. திருவல்லிக்கேணி மூத்திரச் சந்தில் ஒண்டுக்குடித்தனம் பண்ணுகிறவனுக்குக் கூட ராஜகளையை அது தரும். அது அமுதம். அதைக் குடித்தவர்க்கு உடம்பில் பொன் ஊறும். உற்சாகம் கொப்பளிக்கும். அவர்களின் மூச்சுக் காற்றில் எஃகு இளகும்.
“உட்கார்”
அவன் அமர்ந்தான்.
“உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்…”
எனக்கே ஏனோ வெட்கம் வந்துவிட்டது.
“என்ன மாமா?”
“ஒன்றுமில்லை. அதாவது…”
“சும்மா சொல்லுங்கள்.”
“ஊம்….அப்பா சொன்னார். நீ யாரையோ நேசிக்கிறாயாமே… உன்னுடன் பணியாற்றும் யாரோ ஒரு நர்சைக் காதலிக்கிறாயாம்… அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை என்று சொன்னார். இரு.. இரு… அவசரப்படாதே. நான் காதலை வெறுக்கிறவன் இல்லை. உண்மை யில் காதலை, மிகவும் தீவிரமாக ஆதரிப்பவன். என் பார்வைக்கு வந்த எந்தக் காதலர்களையும் நான் வாழ்த்தாமல் இருந்தது இல்லை. அவர்கள் வேண்டுகையில் உதவாமல் இருந்தது இல்லை. ஆகவே, நான் உன் பக்கம் தான். உன் அப்பா பக்கம் இல்லை. நீ யாரைக் காதலிக்கிறாயோ அவளையே கல்யாணம் செய்துகொள். நீ கவலைப்படாதே. உன் அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. அந்த ஆள் ஏதோ சொத்து, பணம், சீர், வரிசையோடு பெண் பார்த்துக்கொண்டு அலைகிறது. அசடு. வரதட்சணைக்கு ஆசைப்படும் ஈனப் பிறவியா நீ? ஆகவே உன் அப்பனிடம் பேசி நான் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறேன். சரி. அந்தப் பெண்ணின் பெயர் என்ன?”
“எந்தப் பெண்ணின் பெயர் மாமா?”
“என்ன இப்படிக் கேக்கறே. நீ காதலிக்கிற அந்த நர்ஸ்…”
“அவளா? அவ பெயர் சஞ்சலா.”
“என்ன பெயர், விசித்திரமானப் பெயர். பெயரில் என்ன இருக்கிறது. ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், ரோஜா ரோஜாதானே?”
“நீங்க வேற மாமா. அவளைப் போய் ரோஜா ரோஜான்னு கிட்டு…”
“என்னப்பா இப்படிச் சொல்றே..”
“அது சரி மாமா. அப்பா ஏதோ சொத்தோட பொண்ணு தர்ற இடமா சொன்னாருன்னு சொன்னீங்களே. எந்த இடம் அது? அந்தப் பொண்ணு பேரு என்னவாம்?”
“ஏதோ தூரத்துச் சொந்தம்னார். ஏதோ உனக்குப் பணம்தான் பெரிசு, நேசிச்ச பொண்ணோட மனசு முக்கியமில்லைன்னு உன் அப்பா உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கார்… சஞ்சலா வீட்டுல பிரச்சினை ஒண்ணும் இருக்காதே…”
“அன்னக்காவடி குடும்பம் மாமா அது. என்னை மாதிரி ஒரு டாக்டருக்குப் பொண்ணு குடுக்கக் கசக்குமா. என்ன? ஆமா, அப்பா சொன்ன பொண்ணு படிச்சிருக்கா?”
“அதைப் பற்றி உனக்கென்ன? சஞ்சலா…”
அவன் என்னை வெட்டிக் கொண்டு சொன்னான். “கட்டிக்கப் போறவன் பொண்ணோட கல்வியைப் பற்றித் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“என்ன கட்டிக்கப் போறவனா? என்ன சொல்றே நீ… நீ… சஞ்சலாவைத் தானே கட்டிக்கப் போறே…?”
“எதுக்கு மீண்டும் மீண்டும் சஞ்சலாவைப் பற்றியே பேசறீங்க…”
“அப்படீன்னா?”
“அது ஜஸ்ட் டைம் பாஸிங் மாமா…”
“என்னப்பா சொல்றே…?”
“உங்ககிட்ட அதைப் பத்திப் பேசக் கூடாது. ஒரே இடத்திலே இருக்கிறோம், பார்க்கிறோம். பேசிக் கொள்றோம். காபி சாப்பிட வெளியே போறோம், அப்புறம் ஐஸ்கிரீம் சாப்பிட எதுவும் வேண்டி யிருக்கலை என்றாலும், சேர்ந்து போகிற சந்தோஷத்துக்காக வெளியே சேர்ந்து போறோம். நடக்கறோம். உட்கார்ந்திருக்கனும்னு தோணிச்சுன்னா, இருக்கிறோம். தொட்டுக்கனும்னு தோணும் தான்… அவ்வளவுதான்..அது லவ்வா? ஏதோ ஓர் இழவு. அது கிடக்கட்டும், அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்காம்?”
“…”
“என்ன மாமா உம்முனு இருக்கீங்க…?”
“ஒண்ணுமில்லைப்பா.”
அதற்கு மேலும் ஓர் அரை மணி இருந்துவிட்டுப் போனான் சந்திரன். முன் அறைக் காற்று நீலம் பாரித்தது மாதிரி இருந்ததாகப் பட்டது. அவன் அமர்ந்திருந்த நாற்காலியைப் பினாயில் ஊற்றிக் கழுவிவிட வேண்டும். துணி வெளுக்க சோப் உண்டு. மனம் வெளுக்க என்ன உண்டு? அழுகிய விரல்களுக்கிடையே இருக்கும் உணவு மாதிரி, இளைஞர்களுடைய மனசுக்குள் அழுக்கா அடைந்து கிடக்கிறது? எந்தக் கங்கையைக் கொண்டு இதைக் கழுவிச் சுத்தம் செய்வது? வானம் உடைந்து பெய்தது மாதிரி, எத்தனை நூல் மழைகள், சொல் சூறாவளிகள்? எதுவும் இந்தக் குப்பையை அசைத்து விடவில்லை எனில், என்ன தான் செய்யக்கூடும்.
அடுத்த இரண்டு நாட்களில் சண்முகசுந்தரம் வந்தார்.
“நடந்து வந்தீரா, பறந்து வந்தீரா?” என்றேன்.
“நடந்துதான். எனக்குச் சிறகுகள் ஏது?”
“இன்னேரம் வந்திருக்க வேண்டுமே, சிறகுகள்! சொத்தும் சுகமுமான இடத்தில், பிள்ளையைப் பெற்றவர்கள் பெண் எடுக்க விரும்புவது சகஜம். பிள்ளைகளே, பணக்கார இடமாகத் தேடத் தொடங்கினால், பருத்தி புடவையாகவும் காய்த்து கூடவே அட்டாச்டாக மேட்சிங் பிளவுசாகவும் காய்த்த மாதிரி தானே? விழுதல் என்று வந்து விட்டால், வாயில்படி தடுக்கி விழக்கூடாது. ஏவுகணை பழுதாகி வானத்திலிருந்து விழவேண்டும். பெட்டிக் கடையில் வாழைப்பழம் திருடுகிற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் எந்தக் காலத்திலும் சுகம் பெறுவதில்லை மாறாக, உலக அளவில் போதை மருந்துகளைக் கடத்துகிற மகனைப் பெற்ற பெற்றோர்களுக்கு இம்மையிலேயே மோட்சம் சித்தித்து விடுமே. உங்களுக்கு இறக்கை, இன்னேரம் முளைத்திக்க வேண்டுமே! இல்லையென்றால் நாளை முளைக்கும்.”
“அய்யா! இந்தப் பயல் இன்னும் பாதிக் கிணறுதானே தாண்டியிருக்கிறான். நூறு பவுன் போட்டு, கையில் ரொக்கம் தருகிற இடம்தான் வேண்டும் என்பதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. அந்த இடத்தில் நாங்கள் தத்துவ ரீதியாக ஒன்று படுகிறோம்.”
“தத்துவச் சிக்கல் இதில் எங்கே வருகிறது?”
“பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும். ஆனா, படிக்காத பெண்ணா இருக்க வேண்டும் என்கிறான் அவன். பணக்கார இடத்துப் பெண்கள் படிக்காமலும் இருப்பது அபூர்வம் தானே?”
“கண்கள் இல்லாமல் பெண்களா? இருட்டுக்குத் தாலி கட்டுவதில் என்ன இன்பம்?”
“படிக்காதவள், கல்லூரியில், பஸ்ஸில், பொது இடத்தில், அலுவலகத்தில் கண் எச்சில், கை எச்சில் பட்டிருக்க மாட்டாள்! ஆண்கள் பரிச்சயம் அவ்வளவாக இருக்க முடியாது. ஆகவே கூடுமானவரை ‘பிரஷ்ஷாக’ இருப்பாள் பெண்.”
“படித்த பெண்கள் கெட்டுப்போனவர்களா? சரி, கெட்டுப் போதல் என்றால் என்ன? மனிதர் கெட்டுப்போக முடியுமா?”
“கெட்டுப்போதல் என்றால், யாராவது ஓர் இளைஞனோடு திருமணத்துக்கு முன்பே ஊர்ல சுற்றி, படுத்துச் சுகித்து இருத்தல்.”
“அதனாலேயே, கெட்டுப்போதல் என்றாகுமா? சந்திரன், அந்த சஞ்சலாவுடன் அம்மாதிரி உறவு கொண்டிருப்பான். எனவே, சந்திரனும் கெட்டுப்போனவன் தானே?”
“அவன் ஆம்பிளை. எதுவும் செய்யலாம். பெண்களுக்கு உள்ளது போல கன்னித்திரை ஆண்களுக்கு இல்லையே?”
“ஆக, தனக்கு வரும் பெண் ஒரு சஞ்சலாவாக இருந்து விடக் கூடாது என்பதுதானே சந்திரனின் பிரச்சினை? தன் மனைவியைத் தொடும் முதல் ஆண் தானாகத்தான் இருக்க வேண்டும் என்பதே சந்திரனின், அவனைப் போன்றவர்களின் அவா. ஆக, கற்பு, ஒழுக்கம், என்பதெல்லாம், பெண்களின் கன்னித்திரை சமாசாரம் தானா?”
“மிக அழகாகச் சொல்கிறீர்கள்! நம் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் எல்லாமே அதில்தானே அடங்கியிருக்கிறது!”
“ரொம்ப சரி. ஆக, அந்த நர்ஸ் பெண்ணுடன் உங்கள் பையனின் காதல் விவகாரம் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டி ருந்தீர்களே, அது இல்லை என்று ஆகிவிட்டது அல்லவா?”
“அது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மறுபக்கம், தனக்கேற்ற மனைவியையும் தேடிக் கொண்டும் இருக்கிறான், என் மகன். ஒரேயடியாக அவளை விட்டுடொழித்தால் அல்லவா தேவலை அதுவும் முடியவில்லை அவனால். இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது அவனது இப் போதைய நிலைபாடு-”
“இரண்டு கண்கள் இரண்டு காட்சியைக் காண முடியுமா?”
“முடிந்தால், அது பெரிய விஷயம்தானே. சந்திரன் ஒரு குழப்ப நிலையில் இருக்கிறான். என்ன குழப்பம் என்றால், நர்சை, அவனுக்குப் பிடிக்கிறது. அவள் அணுக்கத்தை அவன் விரும்பு கிறான். ஆனால், தன் மனைவி அவளாக, அவளைப் போல இருந்து விடக் கூடாது என்று நினைக்கிறான். தனக்கு வாய்க்கும் மனைவி ஆடவன் விரலை அறியாதவளாக இருக்கவேண்டும். வீட்டுக்கு ஒரு கிரைண்டர், மிக்சர், வாஷிங்மிஷின் வாங்குகிறோம். நம் வீட்டுக்கு பழசையா வாங்குவார்கள்? புத்தம் புதிய மிஷினை அல்லவா வாங்க வேண்டும்… என்கிற தத்துவத்தை அவன் சார்ந்திருக்கிறான்.”
இருபத்து இரண்டாம் நூற்றாண்டுக்கே போய்விட்ட நம்மை, பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் போகச் சொல்கிறார்களே.
சண்முகசுந்தரம் மகிழ்ந்து சிரித்தார்.
என் கவலை வேறு. பந்தயம் கட்டிக் கெட்டுப் போகிறவர்களை, காசு கொடுத்துச் சூனியம் வைத்துக் கொல்கிறவர்களை, செத்துப் போவதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை யாரும் காப்பாற்றிவிட முடியாது. அந்தப் பெண்ணைப் பற்றித்தான் நான் மிகவும் கவலைப்பட்டேன். எத்தனை ஆயிரம் மலர்களைத் தன் மனசுக்குள் வளர்த்துக்கொண்டு வாழ்கிறாளோ அவள்? இந்தச் சந்திரன் அவளை மோசம் செய்வான் என்பதை அறிந்தால், அவள் எப்படி அதை எதிர்கொள்வாள்? அழுவாளா? துடிப்பாளா? வதைபடுவாளா? சுவரில் நெற்றியை வைத்து மோதிக் கொள்வாளா? என் மனம் அதிர்ந்தது. அவளை என்னிடம் அனுப்பி வைப்பதாக வும், அவளிடம் பேசி, சந்திரனை அவள் நீங்கிவிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளவேண்டும் என்றும் சண்முகசுந்தரம் என்னிடம் கூறி இருந்தார்.
கனத்த உள்ளத்துடன், சரியாக உணவு மற்றும் உறக்கம் கொள்ள முடியாத நிலையை நான் எய்தித்தான் விட்டேன். சஞ்சலா என்கிற அந்தப் பெண்ணைச் சந்திக்க எனக்கு உண்மையில் அச்சமாகக்கூட இருந்தது. ஆளுமையை, அழகை, பெருந்தன்மையை, மனித உணர்வுகளைச் சந்திக்கலாம். அற்பத்தனத்தை, அற்பத்தனத் தினால் பாதிக்கப்பட்டவரைச் சந்திக்கக் கூடத் தயக்கமாகத்தான் இருக்கிறது. எனினும் ஒருநாள் அந்தச் சந்திப்பு நிகழத்தான் செய்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவள் என் இல்லத்துக்கு வந்தி ருந்தாள். ஆரோக்கியமான உடம்பும், களையான முகமும், அழகிய கண்களும் உடையவளாக அவள் இருந்தாள். சுமாரான உயரம், கஷ்டப்படும் குடும்பத்துப் பெண்களுக்கே உரிய வறிய தன்மை அவளிடமும் தெரிந்தது. கமிஷன் ஏஜெண்ட் அப்பாவை, டீச்சர் அம்மாவை, போலியோவில் கால் சூதும்பிய தங்கையை, தன் மருத்துவமனையை, தன்னுடன் பணியாற்றும் நர்சுகளை, டாக்டர் களைப் பற்றியெல்லாம் அருவி மாதிரி அவள் ‘சல சல’வென்று பேசிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் சந்திரனைப் பற்றியும் அவள் குறிப்பிட்டாள், நான் கேட்டேன்.
“சந்திரன் உங்களை நேசிக்கிறாரா? நீங்கள் ஒருவரிடம் ஒருவர் ஈடுபாடு கொண்டவர்களா?”
“சந்திரன் என்னுடன் காதல் கொண்டவராகத்தான் காணப் படுகிறார். ஆஸ்பத்திரியில் எல்லோரும் நாங்கள் காதலர்கள் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் நினைக்க என்ன சார் இருக்கிறது. என்னுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அதிகாரபூர்வம் இல்லாத கணவன் மனைவியாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”
“சந்திரன், ஏதோ காரணம் பற்றி நாளை உங்களைக் கைவிட்டு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?”
அவளை என் கேள்வி மிகவும் தாக்குமோ என்று அஞ்சினேன். ஆனால் அவள் சொன்னாள்.
“நாளை என்ன சார். நேற்றே அவர், பெண் பார்க்கத் தொடங்கி இருக்கிறார். பணம், கன்னிப் பெண் இரண்டும்தான் அவருடைய இப்போதைய நோக்கம். ஆனால் கல்யாணம் அளவுக்கு அவர் போனால் நான் தகராறு செய்துதான் தீர வேண்டும்…”
“தகராறா?”
“பின் என்ன சார். என்னுடன் நெருங்கிப் பழகிவிட்டார். பெண்டாட்டி மாதிரியே இருக்கிறேன். ஆஸ்பத்திரி முழுக்கவும் எங்கள் உறவைப் பத்தித் தெரியும். என்னை வேறு யார் சட்டென்று கல்யாணம் பண்ணிக்குவார்கள்? இந்த அமளி அடங்க கொஞ்ச நாள் ஆகும். அப்புறம்தான் யாருடனாவது என்னால் சினேகம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதுக்காக…”
“அதுக்காக?”
“என் வாழ்க்கை கொஞ்சமாவது பாதிக்கப்படத்தானே செய்தது. அதுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கொடுத்துவிடச் சொல்லுங்கள்.”
“நஷ்ட ஈடா?’
“ஆமாம் சார்… எனக்கும் சந்திரனுக்கும் இருக்கும் விவகாரம் வெளியே தெரிஞ்சுதானே போய்விட்டது? இன்னோர் ஆம்பளை யோடு என்னைப் பொறுத்திக்கொள்ள அது தற்காலிகத் தடை தானே? அது எனக்கு நஷ்டம்தானே?”
“என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”
“இருபத்து ஐயாயிரம் கொடுக்கச் சொல்லுங்கள். சங்கடமாக இருந்தால், ஐந்தோ, பத்தோ குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். பதினைந்துக்கு நான் குறையமாட்டேன்.”
“நஷ்டம் பதினைஞ்சு ஆயிரம் மட்டும்தானா?”
“என்ன சார் பண்ண? அவருக்குத்தான் பணம் வரப் போகிறது – பணத்தோடு பொண்ணும் வரப்போகிறது. எதுவும் இல்லாமல் நிற்கப்போகிறவள் நான்தானே… கொடுத்தால் என்ன?” என்று சாதாரணமாகச் சொன்னவள், சிரித்துக்கொண்டே, “வேண்டு மென்றால், இந்தப் பணத்தையும் அவரோட வருஷங்கால மனைவியிடமிருந்து கவர்ந்து விடலாமே அவர்…?” என்றாள்.
அவளால் சிரிக்க முடிந்தது, எனக்கு இன்னும் ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது.
உன்னதமான விஷயங்கள் அனைத்தும் வெளுத்துச் சாயம் போய், சோகையோடு, வயிறு வீங்கிக் குடல் கட்டி வந்த குழந்தை மாதிரி, இருக்கிற காலகட்டத்தில் நான் வாழ நேர்ந்தது தான் எனக்கு வேதனை தருகிறது. அறிவு, ஞானம், ஒழுக்கம், நெறி, புரட்சி, அரசியல், தத்துவம், இலட்சியம் போன்ற ஆழ அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளோடு காதலும் இனி அருங்காட்சியகத்தில், முதுமக்கள் தாழியோடு இடம் பெற வேண்டிய ஒன்றுதானா? லைலா மஜ்னுவும், அம்பிகாபதி அமராவதியும், ரோமியோ ஜுலி யட்டும், கற்பனைப் பாத்திரங்களாகவே என்றும் உலவ வேண்டியது தானா? அல்லது. நான்தான் இன்னும் பத்தாம் பசலியாக இருக்கிறேனா?
சந்திரன் வசதியான டாக்டர் ஒருவருக்கு மருமகனாகி அவர் நர்சிங் ஹோமுக்கும் உரியவனாகி, மாமனார் வீட்டோடு ஐக்கிய மானான். சஞ்சலா, டாக்டர் சதீஷ் என்பவனுடன் தன்னை இணைத்துக் கொண்டாள். சண்முக சுந்தரம், மகனை சம்பந்திக்கு விற்ற அளவில் ஏதோ கொஞ்சம் பணம் பண்ணிக் கொண்டு சின்னதாக ஒரு வட்டிக் கடை வைத்துக் கொண்டார்.
நான் தான் இவற்றைக் காணச் சகியாமல், மனம் பொருமி, என் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதா மாதம் தவறாமல் பிளட் பிரஷரை சோதித்துக் கொள்ளும்படி டாக்டர் சொல்லிவிட்டார்.
– 1989
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ, நான், சுஜாதா…
ச.சிவபிரகாஷ்
August 7, 2026
நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியாது
பிரபஞ்சன்
August 2, 2026
ஒரு முழம்
சந்திரலோஷினி சேவியர்
July 26, 2026
