கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 152 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

1980 ஆம் ஆண்டு . திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் சதாசிவத்தின் மாளிகை போன்ற பெரிய வீடு.

சித்திரை மாதத்தின் புதன் கிழமை. முற்பகல் நேரம்.

வீட்டின் முற்றத்தில் ஒரு மிகப்பெரிய மர நாற்காலியில் பேராசிரியர் சதாசிவம் கையில் பனை விசிறியுடன் அமர்ந்து இருந்தார். முற்றத்தின் ஒரு மூலையில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த கட்டிளங்காளை இளைஞன் பணிவுடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய பெயர் முத்துக்கிருஷ்ணன். சதாசிவத்திற்குப் பின்னால், தூண் அருகே சதாசிவத்தின் பேத்தி, நீல நிற பாவாடை தாவணி அணிந்த ஒடிசலான , அழகான இளைஞி மலர்விழி நின்று கொண்டிருந்தாள்.

சதாசிவம் குரலில் கடுமையுடன் பேச ஆரம்பித்தார் –

“என்னப்பா தம்பி இது … என் மகனும் மருமகளும் என் பேத்தியை உனக்கு கொடுக்க முடிவு எடுத்தப்புறம் இப்ப வந்து சொல்றே … உன் தங்கையும் தங்கை புருசனும் அல்பாயுசல போய்ட்டாங்க… அவங்களுக்கு பொறந்த ரெட்டை பெண் குழந்தைங்கள நான்தான் பார்த்துகிட்டு வர்றேன்னு சொல்றே… உன் மருமகள்களை பார்த்து வளர்க்கிறதுக்கு என் பேத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்கனுமா? தாதி வேலையை பார்க்கறதுக்கு என் பேத்தியை ஒனக்கு கொடுக்க முடியாது… ஒங்க அப்பா அம்மா சொத்து சுகம் நிறைய வெச்சிட்டு போயிருக்காங்க இல்ல… ஆள் போட்டு பார்த்துக்க… என் பிள்ளைக்கும் மருமகளுக்கும் வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணுன்னு பேச தெரியாது… அதான் நான் பேசறேன். நீ மலரை மறந்திடு… நீ போகலாம்”

முத்துக்கிருஷ்ணனின் முக மாற்றத்தை மலர்விழி கவனித்தாள். அவள், முற்றத்தில் இறங்கி தாத்தா அருகில் வந்தாள்.

“தாத்தா – நான் அவரை குழந்தைங்களோட ஏத்துக்கறேன் தாத்தா…”

சன்னமான குரலில் பேசினாள் மலர்.

சதாசிவம் , கோபம் உந்தித் தள்ள எழுந்து நின்றார்.

“மலர் கண்ணு… நீ இவனைப் பார்த்து காதல் மயக்கத்துல பேசற… அப்புறம் காலத்துக்கும் வருந்திகிட்டு இருப்பம்மா…”

மலர் திடமான குரலில் பேசினாள் –

“பெரிய பாட்டி போனதும் உமா பாட்டி ஒங்களுக்கு ரெண்டாவதா வாழ்க்கைப்பட்டு அப்பா சித்தப்பா அத்தையை எல்லாம் வளர்த்து ஆளாக்கலையா தாத்தா… வாழ்க்கைத் துணை என்பவள் தாய்தானே கணவனுக்கும் சரி அவனுடன் உள்ளவர்களுக்கும் சரி…”

முத்துக்கிருஷ்ணனின் முகம் மலர்ந்தது. சதாசிவம், மலர்விழியை வியந்து பார்த்தார்.

– ட்வின்ஸ் கதைகள், இரண்டாம் பகுதி.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *