கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 2,871 
 
 

“முடியாது, முடியாது, முடியவே முடியாது. கல்யாணத்துலயே எனக்கு விருப்பம் இல்லை. அதையும், இதையும் சொல்லி கட்டாயப்படுத்தி பண்ணி வெச்சுட்டீங்க. கணவனோட சுகத்துக்காக ஒன்னா வாழவே ஒத்துகிட்டேன். அதனால இப்ப குழந்தைய பெத்துகிட்டேன். இனி என்னை கடமையை முடிக்க விட்டிடுங்க….ப்ளீஸ்…..” கதறாத குறையாக தன் தாயிடம் கெஞ்சி அழுதாள் பிரபல நடிகை மகிளா.

“பாவம்டி… எத்தன ஜென்மம் எடுத்தாலும் தீராது. எத்தனை கோவிலுக்குப்போனாலும் பாவம் போகாது. உனக்கு நான் கொடுக்காம இருந்திருந்தா நீ இப்படி நோயில்லாம, திடகாத்திரமா இருந்திருப்பியா? புகழ், புகழ், பணம், பணம்னு பேயா அலையாதே…. ஹாயா உட்கார்ந்து சாப்பிட்டாலும் நாலு தலை முறைக்கு நீ இது வரைக்கும் சம்பாதிச்ச சொத்து தாட்டும். உன்னைக்கட்டினவருக்கும் கொட்டிக்கிடக்குது. வாழ்க்கைல இதுவும் முக்கியம். இல்லே இதுதான் ரொம்ப முக்கியம். பொண்ணா பொறந்த ஒவ்வொருத்தரோட கடமை. பயன்படுத்தாம  இருக்கறதுனால நல்லா இருக்கும்னு நினைக்காத. எதுவும் வயசானா அதோட தன்மை மாறிப்போகும்.  இந்த பிரபஞ்சத்துக்கு நாம செய்யற உபகாரம் இதுதான். இது நம்ம கடமை. மொழி தெரியாம, ஆடையில்லாம மிருகம் போல வாழ்ந்த போது நம்ம முன்னோர்கள் இதச்செய்யாம இருந்திருந்தா நீயும் நானும் இங்கே, இப்போ பேசிட்டிருக்க முடியுமான்னு ஒரு நிமிசம் நினைச்சுப்பாரு. பெத்த குழந்தை கிட்ட மனம் இரக்கமில்லாத அரக்கி மாதிரி நடந்துக்காதே….” அழாத குறையாக கெஞ்சிய தாயை ஒதுக்கி, உதாசீனம் செய்து விட்டு சொகுசு காரில் படப்பிடிப்பிற்கு கிளம்பினாள்.

சில காதல் காட்சிகளை தனியாகவும், கதாநாயகனுடனும் படம் பிடித்தனர். பாடல் காட்சிகளில் இளமை ததும்ப இயக்குனரின் விருப்பப்படி நடித்தாள். தயாரிப்பாளரின் முகம் பிரகாசமானது. படத்திற்கு பூஜை போட்டு இரண்டு வருடங்களான நிலையில் மகிளாவின் திருமணத்தால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடுமையான மன உளச்சளுக்கு ஆளாகி, ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்த பின் உயிர் பிழைத்திருந்தார் தயாரிப்பாளர் ராகவன். ஆனால் அவளது திருமண ரகசியத்தை வெளியிடாமல் பாதுகாத்து வந்தார்.

மகிளாவும் போட்ட ஒப்பந்தங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் திருமணத்தை நடத்திட கெஞ்சிக்கேட்டும் அவளது தாயும், மாப்பிள்ளை வீட்டினரும் ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் தங்கச்சுரங்கம் வைத்திருக்கும் பெரிய சம்மந்தம். மகிளாவின் அழகில் மயங்கியதால் மாப்பிள்ளை பல கோடி சொத்துக்களை திருமணத்துக்கு முன்பே அவள் பெயரில் எழுதியும் வைத்து விட்டார். 

‘நூறு படம் நூறு நாட்கள் ஓடினாலும் இந்த வசதியில் வாழ முடியாது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணத்தை நடத்தி விடலாம். ஒப்பந்தம்போட்ட படப்பிடிப்பு முடிந்து இந்தியாவில் ஒரு முறை திருமணம் செய்து கொள்ளலாம்’ என தாய் பிடிவாதமாகக்கூறியதால் வேறு வழியின்றி ஒத்துக்கொட்டாள்.

அமெரிக்காவில் திருமணம் நடந்ததும் ஒரு மாதம் சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் சென்றதில் குழந்தை உருவாகி விட, அதைக்கலைக்க மனமின்றி அமெரிக்காவிலேயே தங்கி குழந்தையைப்பெற்றெடுத்தவள் இந்தியா வந்ததும் குழந்தையை தாயிடம் விட்டு விட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டவளுக்கு இன்றுடன் படப்பிடிப்பு முடிந்திருந்தது.

படப்பிடிப்பு முடிந்ததும் அதற்கான கொண்டாட்டமும், விருந்து ஏற்பாடும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கவிருப்பதாக மகிளாவுக்கு படப்பிடிப்பு குழு அழைப்பு விடுத்த போது மறுத்தவள் வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

குழந்தை இருக்கும் அறைக்குச்சென்றதும் தொட்டிலில் பால் டியூப் வாயில் வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தாவி எடுத்தவள் கட்டிலில் அமர்ந்து மடியில் கிடத்தி தாய் பால் கொடுத்த போது ஏற்பட்ட பூரிப்பை அவள் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. குடித்து முடித்த குழந்தை அவளது முகத்தைப்பார்த்து ஊ…ஊ….என பேச முயன்ற மழலை மொழியையும் ரசித்து மகிழ்ந்ததை அருகில் வந்து கவனித்த அவளது தாய் வசந்தியும் தன் மகள் குழந்தையாக இருந்த போது இதே போல் தான் நடந்து கொண்டு பூரித்ததை நினைவு படுத்திக்கொண்டாள்.

எந்தப்பெண்ணும் தன் அழகுக்காக, பணத்துக்காக தன் குழந்தையை பட்டினி போட விருப்பமாட்டாள். போட்ட ஒப்பந்தப்படி தயாரிப்பாளர் தன்னால் பாதித்து விடக்கூடாது என்பதற்காகவும், முன் பாதிப்படத்தில் இருந்த அழகு இம்மியளவும் மறு பாதியில் குறைந்து படம் ஓடுவதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்க்காகவும் சில விசயங்களை அதீத விருப்பம் இருந்தும் தாயின் சொல்லை மீறி‌ மறுத்தாளே தவிர சூழ்நிலைக்கைதியாகி விட்டதால் கடமைக்கும் பாசத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டு, இரவில் உறக்கமின்றி தவித்தது மகிளாவைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *