தவிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 1,438 
 
 

 மணி மதியம் பன்னிரெண்டை தொட்டுக் கொண்டிருந்தது.

ஊளை சத்தம் எந்த பக்கம் என்று தெரியவில்லை. பெல் சத்தம் கேட்க வேண்டிய இடத்தில் ஊளை சத்தம்.

பரிட்சை ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிறது.

இப்பொழுது என்ன ஊளை சத்தம் என்று நினைத்தபடி வாசலை அடைந்தேன்.

வாசலின் இடது பக்கம் பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஒட்டி சாக்கடை போகும் வாய்க்கால். அதன் அருகே நல்ல தண்ணீர் திறந்து விடும் கேட்வால் இருக்கும் இடம். கேட்வால் மேலே திறந்து மூடும் படியான ஒரு பலகை மூடி. அதன் அருகே முக்கால் அடி உயரமும் ஒரு அடி நீளமும் ஐந்திலிருந்து ஆறு சென்டிமீட்டர் பருமனும் கொண்ட ஒரு குட்டி நாய்.

செம்மறியாடு போல கொஞ்சம் காப்பி நிறத்தில், பல நாள் குளிக்காததால் அழுக்கு படிந்த தேகம்.

நிறைய சாப்பிட்டாலும் எப்பொழுதும் நிறையாத வயிறு. ஆனால் இன்றோ எதுவும் சாப்பிடாததால் வெறுமனே மெலிந்து கிடந்த வயிறு.உடலில் ஒரு உதறல். பள்ளி திசையை பார்த்து அதுவும் வாசலை பார்த்து ஒரு ஊளை சத்தம்.

நான் கூட ஒரு நிமிடம் பயந்து போனேன். அது என்னை பார்த்து ஊளை இடுவதாக நினைத்தேன். வீட்டில் இல்லாத பிரச்சனையா. யாருக்கு என்ன ஆகுமோ என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

ஒருவேளை இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் யாருக்காவது ஏதாவது ஆகுமோ.

ஏனென்றால் எமன் வருவது நாய்களின் கண்களுக்கு தெரியுமாம். பொதுவாக எமனை பார்க்கின்ற போது நாய்கள் ஊளையிடும். அல்லது இன்னும் ஓரிரு நாளில் இறக்கப் போகின்றவர்களை பார்த்து, அவர்களது வீட்டை பார்த்து நாய் ஊளையிடுவதாக சொல்வார்கள்.

அப்படிப் பார்த்தால் இன்று கூட காலை பரீட்சை எழுத வந்த பையன் ஒருவன் காலை சாப்பிடாமல் வந்தது மட்டுமல்லாமல். மாத்திரை எதுவும் போடவில்லை. உடல் அனலாக கொதிக்கிறது என்ன செய்யலாம் என்று ஒரு ஆசிரியர் கேட்க,

இன்னும் ஐந்து நிமிடத்தில் தேர்வு தொடங்கப் போகிறது இந்த நேரத்தில் யாரிடம் சொல்லி அந்தப் பையனுக்கு ஏதாவது வாங்கி வரச் சொல்வது என்று குழம்பி போய், ஒரு வழியாக அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டு அந்த மாணவனுக்கு ஏதாவது உணவு வாங்கி வரச் சொல்லி தகவல் தந்தோம். அவரும் உடனடியாக நண்பர் ஒருவரை டீயும் பன்னும் வாங்கி வரச் சொல்லி உள்ளே கொடுத்து அனுப்பினார்.

அந்த மாணவரிடம் கொடுத்து சாப்பிட சொல்லி. அதன் பின் காய்ச்சலுக்கான மாத்திரையும் கொடுத்து பரீட்சை எழுத சொன்னோம். ஒருவேளை அந்த மாணவன் ஏதாவது பிரச்சனையில் சிக்குவானோ. அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று மனது பரிதவித்து நின்றது .

இது இப்படி இருக்கையில்,

மீண்டும் ஒரு ஊளை சத்தம் அதே நாயிடம் இருந்து. இந்த முறை அந்த நாய் கொஞ்சம் வாசல் பக்கம் வருவதும் நான் நிற்கும் இடத்தை பார்த்து ஊளை இடுவதுமாக இருந்தது.

நாய் ஊளையிடுவதை பார்த்தால் நமக்குத் தான் பிரச்சனை போல் தெரிகிறதே என்று ஒரு சிறு சலனம் மனதில் தோன்றி மறைந்தது.

சே! சே ! நமக்கு அப்படி ஒன்றும் இருக்காது.

இப்போதெல்லாம் 40 வயது காரர்கள் அதிகம் மாரடைப்பின் காரணமாக இறப்பது சகஜம் ஆகிவிட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டது, உடல் உழைப்பு இல்லை, எக்ஸர்சைஸ் பண்ணுவது கிடையாது என்று பல காரணங்கள் அடுக்கப்படுகிறது. கடலை எண்ணெய் சாப்பிடுங்கள் என்று ஒரு குழுவிலும். மற்றொரு குழுவில் கடலை எண்ணெயில் ஊற போட்ட புரோட்டா சாப்பிட்டதால் இளம் வயது நபர் இறந்ததாகவும் தகவல் வருகிறது.

இன்னும் சில ஹாஸ்பிடல் முழு உடல் செக்கப் மிக குறைந்த தொகையில் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்கின்றன.

தலைசிறந்த மருத்துவர்களை கொண்ட மருத்துவமனைகளே இவ்வாறு விளம்பரத்தின் மூலம் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குறைபாடுடைய மனிதர்களை கண்டறிந்து உதவுவதாக சொல்கின்றன.

இதையெல்லாம் பார்த்து என் மனைவி நாற்பதை கடந்த எனக்கு சென்ற வாரம் தான் சர்க்கரையும் கொலஸ்ட்ராலும் சோதித்து அறிய சொன்னாள். நல்லவேளை எதுவும் அளவு அதிகமாக இல்லை குறைவாகவும் இல்லை என்று முடிவு வந்த பிறகு தான் அவள் நிம்மதியாக தூங்கினாள்.

அப்படி இருக்க, நாய் என் மேலே வந்து ஏறி நின்று ஊளையிட்டாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் என் ரிப்போர்ட் கிளியரா இருக்கு என்று நினைத்த போது,

‘சார் ‘ என்று ஒரு பழைய எக்செல் வண்டியில் வந்த நபர் வண்டியில் அமர்ந்தபடி கூப்பிட. வண்டி கேரியரை முழுவதும் அடைத்திருந்த அந்த ஊதா டிரம் கயிற்றால் கேரியரோடு நன்றாக இழுத்து கட்டப்பட்டு இருந்தது. அதில் திட்டு திட்டாக இருந்த அழுக்கு சொல்லியது அந்த டிரம் கழிவு சாப்பாடு, மிஞ்சிய சாப்பாடு எடுக்கும் பாத்திரம் என்று.

“என்ன அண்ணா” என்றேன்.

“இல்ல சார். மிஞ்சுன சாப்பாடு எடுப்பேன். உள்ள போலாமா?”

அப்படி சொன்னபடி அவர் கை காண்பித்த இடத்தை பார்த்ததும் புரிந்தது. மதியம் சத்துணவு செய்து தரும் சத்துணவு கூடத்தில் மிஞ்சிய அல்லது மாணவர்கள் சரியாக சாப்பிடாமல் கொட்டும் சாப்பாட்டை எடுக்க வந்தவர் என்று.

“பரிட்சை நடக்குது அண்ணா. சாப்பாடு எதுவும் எடுக்க முடியாது” என்று நான் சொல்ல.

“பரிட்சை எப்ப முடியும் சொல்லு சார், அப்ப வந்து எடுத்துக்கிறேன்” என்றார்.

அப்போது தான், நான் தவறாக தகவல் தந்தது எனக்கு புரிந்தது.

“அண்ணா, காலையில் இருந்து பரிட்சை நடக்குது. எப்பெல்லாம் பரீட்சை இருக்கோ அப்ப எல்லாம் சாப்பாடு செய்ய மாட்டாங்க. அதனால சாப்பாடு செய்யவில்லை. நீங்க பரீட்சை நடக்கும் நாள்களில் வராதீங்க. சாப்பாடு இருக்காது” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

‘சரி சார்.தாங்க்ஸ் சார்’ என்று கிளம்பினார்.

அவர் போன பின்பு வாசலுக்கு அந்தப் பக்கம் நின்ற நாயை தேடிப் பார்த்தேன், காணவில்லை.

ஒரு நாள் இப்படித்தான் நானும் ஆசிரியர் நண்பர் ஒருவரும் அமர்ந்திருக்கும் அறையில் திடீரென ஒரு நாய் வாயில் ரத்தம் ஒழுக வந்து குளு குளு என்று இருந்த பேன் காற்றின் கீழ் படுத்து இருப்பதாக நண்பர் ஃபோனில் தகவல் தந்தார்.

நான் பக்கத்தில் இருந்த வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததால் பாடத்தை முடித்து விட்டு வருகிறேன் என சொன்னேன்.

சற்று நேரம் கழித்து பாடமெல்லாம் முடித்துவிட்டு ஓய்வு அறைக்கு சென்ற பொழுது ஒரே ரத்தமாக கிடந்தது. அதை ஆசிரியர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

‘என்ன சார். ஒரே ரத்தம் ‘என்ற என்னிடம்.

“சார் அது ஒரு முரட்டு நாய். வாயெல்லாம் ரத்தம். எங்கேயோ எதையோ கடித்து தின்று இருக்கிறது.

இங்கு வந்து சொகுசா படுக்க பார்த்தது. அந்த சொகுசு உணர்ந்துவிட்டால் போகவே போகாது. அதனால் தான் அதை விரட்டுறதுக்கு உங்கள கூப்பிட்டேன். நீங்க கிளாஸ்ல இருந்ததுனால நானும் பசங்க நாலஞ்சு பேரும் சேர்ந்து வெரட்டி விட்டுட்டோம்” என மூச்சு விடாமல் சொல்லி முடிக்க.

‘ஏதாவது எலி ,வேற ஏதாவது சின்ன மிருகத்தை அந்த நாய் கடிச்சிருக்கும் சார். அந்த ரத்தத்தோட இங்க வந்து இருக்கும்’ என்று நான் சொல்லவும்.

“ஆமா ஆமா.அப்படித்தான் இருக்கும்” என்று அவர் சொல்ல. அப்படியே அந்த நிகழ்வை மறந்து பள்ளி வேலைகளை தொடர்ந்தோம்.

மறுநாள் காலை பள்ளி வருகின்ற பொழுது பஸ் ஸ்டாண்ட் அருகில் “நகராட்சியை வன்மையாக கண்டிக்கிறோம். குழந்தைகளையும் பெரியவர்களையும் விரட்டி கடிக்கும் தெரு நாய்களை உடனடியாகப் பிடித்து அழித்து ஒழிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்” – இப்படிக்கு ஊர் பொதுமக்கள் என்ற விளம்பரப் பலகையை பார்த்ததும். என்ன சொல்வதென்று தெரியாமல். வேகமாக போனை எடுத்து ஆசிரிய நண்பரை தொடர்பு கொண்டேன்.

‘சார். என்ன நீங்க நேற்று பெரிய சாகசமே பண்ணிருப்பீங்க போல தெரியுது. நீங்க துரத்துனது தெரு நாய் இல்ல. கொலைகார நாயா இருந்து இருக்குது. நல்ல வேலை அது யாரையும் தொந்தரவு பண்ணாம ஓடிருச்சு’ என்று நான் முடிக்க.

“எல்லாம் இறைவன் செயல் சார் ” என்றவர், “நேத்து நம்ம ரூமுக்கு வந்தது வெறி பிடிச்ச நாய். அது ஊருக்குள்ள நிறைய பேர கடிச்சிருக்கு. நேத்து கூட அஞ்சு வயசு சின்னப் பிள்ளையை அங்க அங்க கடிச்சு அந்த ரத்தத்தோட தான் இங்க வந்திருக்கு. யார் செஞ்ச புண்ணியமோ நம்மளையும் நம்ம பசங்களையும் தொந்தரவு பண்ணாம விட்டுடுச்சு”என்று அவர் சொல்லி முடித்த போது தான் ஏன் நகராட்சியை கண்டித்து விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது என்பது எனக்கு மெல்ல மெல்ல புரிந்தது.

அந்த நினைவு என்னுள் எழுந்து உடலில் ஒரு வித நடுக்கத்தை உண்டாக்கியது. அதே நேரம் இப்போது உள்ளே போன நாய் எங்கே போய் இருக்கும் என்று நினைத்து தேடி கொண்டு இருந்த போது, 

எனக்குப் பின்பக்கமாக பள்ளியின் சத்துணவுக் கூடத்தின் அருகில் இருந்து வருவது தெரிந்தது.

அப்பாடா ஒரு வழியா குட்டி நாய் யாரையும் கடிக்காமல் வெளியே வந்து விட்டது என்ற எனது நினைவை சீர்குலைக்கும் வகையில் ஒரு ஓலம் மீண்டும் நாயிடம் இருந்து.

மாணவர்கள் விளையாட்டுத்தனத்தில் ஏதாவது ஒன்றை செய்ய போக நாய்கள் கடித்து விட கூடும் என்பதால் பொதுவாக நாய்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிப்பது கிடையாது.

எப்படியோ வந்த நாய் சென்று விட்டது என அந்த நிகழ்வை அத்தோடு மறந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை காலை மீன் விற்பவர் வண்டி வீட்டருகே வந்து நிற்கவும்.

எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ஒரு பூனை குட்டி “மியாவ், மியாவ்” என்று கத்திக் கொண்டு அவரை சுற்றி சுற்றி வந்தது.

அவரும் மற்றவர்களும் முடிந்த வரை பூனையை துரத்தி விட முயற்சி செய்தனர். பூனையோ அவர்களுக்கு போக்கு காட்டி விட்டு மீண்டும் மீண்டும் மீன் விற்பவரின் காலையே சுற்றி சுற்றி வந்தது.

கொஞ்ச நேரம் மீனுக்கும் மீன்காரருக்கும் போட்டி நடந்தாலும் இறுதியில் வென்றது பூனை தான்.

மீன்காரர் சுற்றி சுற்றி வந்த பூனைக்கு மீன் கூடையிலிருந்து இரண்டு சிறிய மீன்களை தூக்கி போட்ட பிறகு தான் பூனை சத்தமிடுவதை நிறுத்தி மீன்களை தூக்கிக்கொண்டு சந்தோசமாக நகர்ந்தது.

அதேபோல கொஞ்ச நேரம் கழித்து இடியாப்பம் விற்பவர் வர, தெருவில் புதிதாக யாரும் வந்தால் குலைத்து விரட்டும் நாய்களின் சத்தம் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் ஒரு நாய் மட்டும் வித்தியாசமாக அவர் வண்டியின் பின்னே ஊளை இட்டபடி மெதுவாக கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது. மீன்காரர் போல இடியாப்ப காரரும் இடியாப்ப சிக்கலில் மாட்டியிருப்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. இரண்டு இடியாப்பத்தை எடுத்து கோழி சால்னா கலந்து தனியாக நாய்க்கு வைத்த போது தான் அதன் ஓலம் அடங்கியது. அந்த நொடி தான் குட்டி நாயின் தவிப்பு எனக்கு புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *