ஞானச் செருக்கும் மேனிச் சுருக்கும்!





(பழைய கதை புதிய பாடல்)

மணலாய்க் குவிந்த மண்மேடு
மண்டையைப் பிளக்கும் வெயில்சூடு
தணலாய்க் கொதிக்கும் தரைவழியே
தள்ளாடி நடந்தாள் ஒருகிழவி!
கிழவி மெத்தப் படித்தவளாம்.
மேனி சுருக்கம் மிக்கவளாம்!
கவ்வி இழுக்கும் பசியாலே
களைத்து மரத்தடி அமர்ந்தாளாம்!
மணலின் மேட்டில் நாவல்மரம்
மரத்தில் பழுத்த நாவல்பழம்
|மாடு மேய்க்கும் ஓர்சிறுவன்
மரத்திலமர்ந்து இருந்தானாம்!
பாட்டி பசிக்கு உணவளிக்க
பரிவு கொண்ட அச்சிறுவன்
“பறித்துத் தரவா?’ பழமென்றான்
பாட்டி, ‘பழம்சில போடெ’ன்றாள்
சுட்ட பழமோ? சுடாதபழமோ
இஷ்டம் சொல்லென அவன்கேட்க
அதிர்ந்து போனாள் அக்கிழவி
அகத்துள் நினைத்துக் கொண்டாளாம்!
பனம்பழம் சுட்டுத் தின்பார்கள்!
முந்திரி சுட்டு உண்பார்கள்!
நாவல் சுட்டுத் தின்றதனை
நாளிது வரைநான் கேட்டதில்லை
என்று ஒருகணம் அவள்தவித்து
ஞானச் செருக்கில் பரிதவித்து
சுட்ட பழமே போடென்றாள்
சுருங்கிப் போன அக்கிழவி!
உதிர்த்தான் ஊதா நிறப்பழங்கள்!
உருண்டு விழுந்தன மணல்மீது!
குனிந்து எடுத்து மணல்நீக்க
குவித்து ‘ஃபூ’வென ஊதினளாம்.
ஒட்டிய மணலும் உதிர்ந்துவிழ
குட்டிச் சிறுவன் குதித்துநின்று
‘பாட்டி பழம்மிகச் சுடுகிறதோ?’
பகரென்றான் அப்படுசுட்டி!
ஒன்றும் பேச முடியாமல்
ஊமை ராணியாய் அவள்நிற்க
குன்று தோறும் குடியிருக்கும்
குமரன் அவளை வாழ்த்தினனாம்!
ஞாலப் பசிக்கு தமிழளித்த
ஞானி அவ்வைப் பாட்டிக்கு
ஞான முதல்வன் சோதரனோ
நாவல் தந்தான் கைமாறாய்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |