ஜன்னலோரக் கவிதை!
கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்த வெயிடிங்க் லிஸ்ட் டிக்கட் … ‘கன்பார்ம் ஆகுமா? ஆகாதா?’ என்று தவித்துக் கொண்டிருந்ததுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்’

வண்டி புறப்பட இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கலாம். அவதி அவதியாய் உள்ளே நுழைந்தான் அந்தச் சிறுமியோடு லோகநாதன்.
லோகநாதனுக்கு கையிலிருக்கும் அந்த ஒரு மகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அவன் மனைவி கண்ணைமூடி ஒரு இரண்டாண்டு இருக்கும். பிரசவத்தில் இறந்தவள்.
இவனை, எல்லாரும் ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்!’ என்று அனுதினம் வற்புறுத்தினார்கள். அவன் தீர்மாணமாக மறுத்துவிட்டான்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! மறுமணம் என்றால், பெண் கிடைப்பதே பெரும்பாடு! அதிலும், ஒரு குழந்தை வேறு இருக்கிறது என்றால், யார் தான் சம்மதிப்பார்கள்?!. என்ன வசதி இருந்து என்ன பயன்?! வசதி வாய்ப்பெல்லாம் விட , மனசுதான் முக்கியம்! அதைக் கண்டுபிடிப்பது பெரிய அஷ்ட அவதான சாதனையாக அல்லவா இருக்கிறது?!
ஓரு பெண் சம்மதித்தாள்..! ஆனால், அவளுக்கொரு அண்ணன்! அவன் சொன்ன அந்த செய்திதான் மறுமணம்ங்கற ஆசையிலேயே மண்ணள்ளிப் போட்டுவிட்டது!. அன்று முடிவு பண்ணினவன்தான். மறுமண ஆசையையே வேண்டாம்னு இருக்கான்.
‘உனக்காக இல்லாட்டாலும், உனக்குப் பொறந்திருக்கிற இந்தப் பொண்ணை ஆளாக்கவாவது துணை வேண்டாமா?!’ என்று கேட்டார்கள் எல்லாரும்!. அதற்குத்தான் யோசித்துச் சரின்னான். ஆனால், அந்தப் பொண்ணோட அண்ணன்… ‘உங்க ரிட்டயர்டுமெண்ட் பெனிபிட்டெல்லாம் என் தங்கை பேருக்கு மாத்தணும்னான்!’. அங்கதான் ஒதைச்சது! நாளைக்கு, நாம இல்லாமப் போனா.. அந்தப்
பணத்தில் பாதியை வச்சாவது அனாதையான பெண் நல்லா இருக்கட்டும்னு, இருப்பான்னு நெனைச்சிருந்தா அதில குண்டைப் போடறானே..? நாளைக்கு மூத்தவ பெத்ததைக் கருத்தா வர்றவ காப்பாத்துவான்னு எப்படி நம்பறதாம்?!. நாமினியா ரெண்டுபேறையும் போடலாம்னா அதை மறுத்தான் அவள் அண்ணன். கடவுள் விட்ட வழி! இருக்கற வரை நாமே இருந்து நீச்சலடிச்சுப் பார்ப்போம்!னு முடிவு பண்ணி, மறு மணம் எண்ணைத்தை மூட்டை கட்டி மூடி வைத்து விட்டான்.
ஆச்சு! ‘கன்பார்ம் ஆச்சு டிக்கட்!’ வெயிட்டிங்க் லிஸ்ட் கன்பார்மானா அதென்ன விண்டோ சீட்டா கிடைக்கும்?!
ஆளுக்கொரு இடம்! குழந்தைக்கும் சேர்த்தே டிக்கட் போட்டிருந்தான் பணம் போனால் போகிறது வசதியா உக்காந்து தூங்கீட்டாவது வரட்டும்னு. விண்டோ சீட் கிடைக்கவில்லை மிடில்தான். ஆனால்….
அந்தக் கவிதை ஜன்னலோரம்தான் உக்கார்ந்திருந்தது.
அவளை நெருங்கி ‘எக்ஸ்கியூஸ்மீ!’ என்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்… மடியில் லேப்டாப்.
‘இந்தப் பெண்ணை மட்டும் கொஞ்சம் ஜன்னலோரம் உக்கார அனுமதிச்சா… சின்னக் கொழந்தை’ என்றான் கெஞ்சின படி.
அவள் நிமிர்ந்து பார்த்தவள்…’ நான் ஓர்க் பிரம் ஹோம்ல இருக்கேன்! விண்டோ சீட்னா, என் வேலையைப் பார்க்க, ஈனக்கு ஏதுவா இருக்கும்! குழந்தையை நெனைச்சா பாவமாத்தான் இருக்கு! ஒண்ணு பண்ணுங்க.. மிடில் சீட்டான எனக்கு மிடில் குடுத்திடுங்க… கடைசி சீட்டானா எந்திரிச்சு எந்திரிச்சு போனா.., வேலை தடைபடும்னாள்!. நியாயமாக இருந்தது. இவன் ஒப்புக்கொள்ள, ரயிலோடு பேச்சும் பயணிக்கத் தொடங்கியது.
பரஸ்பர விசாரிப்பில் குழந்தைக்குத் தாய் இல்லைங்கறதை அவள் அறிந்து கொண்ட போது, அனுசரணை கூடியது. அவள் குழந்தையிடம் கூடக் கொஞ்சம் நெருங்கினாள். அப்படியே… அவன் மனசிலும் இடம் பிடித்தாள்.
‘நீங்க?’ என்றான்.
‘ஒரு பஸ் ஆக்ஸிடெண்டில் கணவர் இறந்துட்டார். நான் தனிமரம் அவர் கவர்மெண்ட் ஸ்டாப் ஏ டி ஓ வா இருந்தார் டிரசரில.. ரிட்டயர் மெண்ட் பணமெல்லாம் வந்தது. வாரீசு இல்லை!.
‘ஏன், நீங்க இன்னொரு மேரேஜ் செஞ்ச்சுக்கக் கூடாது? செஞ்ச்சுக்கலை?’ இவன் கேட்க, அவள் இவனை அதிசயமாய்ப் பார்த்தாள்
என் இறந்த கணவர் மாதிரி இன்னொருத்தர் வராது. அவர் மனுஷரில் ஜெம்! என்றாள் பெருமூச்சு விட்டபடி.
எனக்கு வேலைக்குப் போகணும்னு இல்லை..! ஆனா, படிச்ச படிப்பும் இருக்கும் நேரமும் கழிய ஒரு வழி தேடித்தான் இதைச் செய்யறேன்னாள்.
அவள் இப்போ இவனைக் கேட்டாள்
நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை?
குழந்தை அவள் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தது. ஏதோ பலநாள் பழக்கம் போல!
நடந்ததைச் சொன்னான். ரிட்டயர்டு மெண்ட் பெனிபிட்டைக் பெண்ணின் அண்ணன் கேட்டதை… மறுத்து மறுமணம் வேண்டாம்னதை…!
ஏல்லாரையும் ஒரே தட்டில் நிறுக்கக் கூடாதுதானே?
கரெக்ட்தான் ஆனாலும் பயம்தான் காரணம்.!
பேண்ட்ரிக் காரிலிருந்து டிபன் வந்தது அவள் வாங்கிக் கொடுத்தாள். இவன் அதற்குப் பணம் கொடுக்க, மறுத்தாள்.
உலகத்துல பணம்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்., பணத்தை மறந்தா கொஞ்சம் பிரச்சனை இல்லாம இருக்கலாம். மனுஷன் மகத்தான சல்லிப்பயலில்லை., மலிவான சல்லிப்பயல்! அதற்குக் காரணம், அவன் கண்டுபிடிச்ச பணம்தான் சல்லித்தனமானது.
ஒத்த ஒத்த பைசாவையும் சல்லிக்காசுன்னுதானே ஆரம்பத்தில் சொல்லியிருக்கான்?! இப்ப சல்லிக்காசுங்கறது இல்லைனாலும் ரூபாய்தான் புழக்கத்தில் என்றாலும், அந்த சல்லித்தனம் சமான்யத்துல அவனைவிட்டுப் போகுமா?’ என்றான்.
சடக்கென எதுக்கோ பயந்த கொழந்தை அழ…, அவள், அவனுக்கும் முன்னதாகவே எக்கிக் குழந்தையை அணைத்து தட்டிக் கொடுக்க, அது தொடர்ந்து தூங்கியது!.
அவள் நறுமணம் அவன் நாசி நெருடியது!
அவன் எதோ ஒரு நிம்மதியில் கேட்டான்…’ உங்களுக்கு அண்ணன் யாருமில்லையே?!’
அவள் சிரித்தபடி… இருந்திருந்தா என் கணவர் பணத்தை எனக்கு வர விட்டிருப்பங்களா?! என்றாள் அர்த்த புன்னகையோடு!.
கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை…
அவள் மெல்ல லேப்டாப்பை மூடி உள்ளே வைத்துவிட்டுத் தூக்கம் வர, சீட்டை ரிக்லைன் செய்து சாய்ந்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவன் அவள் தோளருகே சாய்ந்தான். அவள் கரங்கள் இப்போது அவனை அன்போடு தட்டிக் கொடுத்தது குழந்தை என்று எண்ணில்ல! அவனைக் குழந்தையாகவே எண்ணி!…. அவன் நிம்மதிப் பெருமூச்சில் நித்திரை கொண்டான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |