சூரியனாகிய சந்திரன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 1,783 
 
 
நாட்டை மறந்து, நாட்டு மக்களின் நலனை மறந்து, குடும்ப வாழ்வை துறந்து அனுதினமும் மது போதையில் மயங்கி, சுகபோக நாட்டங்களில் கவனம் செலுத்தி, பொறுப்பற்ற நிலையில் அனைவரும் வெறுக்கும் வகையில் மனம் போன போக்கில் வாழ்ந்து வரும் தனது கணவனும் கும்பதேசத்து அரசனுமான சந்திரவர்மனை எண்ணி தீராத கவலையில் எந்நேரமும் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் மகாராணி சந்தி தேவி.
அளவான எடையும், அன்னம் போன்ற நடையும், அழகிய சிற்றிடையும், பிரம்மன் அள்ளித்தந்த கொடையும் ஒரு சேரப்பெற்ற, தேவலோக இந்திரனே பிரமித்து விரும்பும் பேரெழில் கொண்ட கடக தேசத்து இளவரசிதான் தான் சந்தி தேவி.
“உடலைக்கெடுக்கும் மது போதையும், நேசம் கொள்ளாமல் வேசமே உருவான சூழ்ச்சி மாதர்களின் அரவணைப்பும் ஓர் அரசனான உமக்கு பொருத்தமாகுமா? நீ மணந்த மனைவி எனக்கு உமது இச்செயல் வருத்தமாகாதா?” சொல்லி அழுத மனைவியை புறந்தள்ளிச்சென்றான்.
எதிரி நாடான ரிசப நாட்டிலிருந்து ஒற்றன் கொண்டு வந்த ஓலையை கணவன் வாங்கியதும் படித்தும் கூடப்பார்க்காமல், மந்திரியை படிக்கச்சொல்லியும் கேட்காமல் தூக்கி தூர வீசியதை பணிப்பெண்ணை எடுத்து வரச்செய்து தானே பிரித்துப்படித்தாள் மகாராணி.
‘மதுவால் மதி மயங்கிக்கிடக்கும் கும்பதேசத்து மடையனே…. எனது முன்னோர்களிடமிருந்து அபகரித்த நாட்டை ஆளும் கடையனே… நாடாளும் தகுதி உமக்கு சிறிதும் இல்லாததால் எமது ரிசப நாட்டின் பெரும்படைகள் தொடுக்கும் போரில் வெற்றி எமக்கே. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதோடு சொர்கலோகத்து மங்கை, அவள் மீது எப்போது படப்போகிறது என் கை? எனும் நினைப்பில் அனுதினமும் எனது மனதை தூங்க விடாமல் ஏங்கவைத்துக்கொண்டிருக்கும் கடகதேசத்து இளவரசியையும் கவர்ந்து செல்ல சித்தம் கொண்டுள்ளேன்’ படிக்கப்படிக்க முகம் சிவந்தது மகாராணிக்கு.
‘தொடவே தகுதியற்ற உமக்கு கடக தேசத்து இளவரசியான தனது மகளை மணம் முடித்துக்கொடுத்தானே உம்மைப்போலவே ஆளத்தகுதியற்று மதுவில் மயங்கிக்கிடக்கும் அரசன் பூசன்… அவனது தேசத்தைப்பிடித்து அவனை சிறையிலடைத்துள்ளேன்’ இந்த வரிகளைப்படித்ததும் “டேய்…”எனக்கத்தினாள்.
சந்தி தேவியின் அழுத முகம் ஆக்ரோசமாக மாறியதைக்கண்டு அரண்மனையே நடுங்கியது. இப்படியொரு முகம் மகாராணி சந்திதேவிக்கு இருக்குமென்று கும்பதேசத்தினருக்கு இதுவரை தெரியவில்லை. படுக்கையிலிருந்த மகாராணியின் மாமியாரும், சந்திரவர்மனின் தாயாருமான ராஜ மாதா மருமகளின் ஆக்ரோசத்தாலான சத்தத்தைக்கண்டதும் எழுந்து அமர்ந்தது வைத்தியருக்கே வியப்பாக இருந்தது.
உடலுக்கு மனதாலும் மருந்து தர இயலுமென்பதை முதலாகக்கண்டார் வைத்தியர். ராஜ மாதாவுக்கு இருந்தது மனக்கவலை எனும் நோய் தான் எனப்புரிந்து கொண்டார். அரச கோபம் தனது கணவருக்குப்பின் மருமகள் மூலமாக முதலாவதாக அரண்மனையில் வெளிப்பட்டதைக்கண்டு போகவிருந்த தனது உயிர் சற்று நின்றதாக உணர்ந்தாள்.
“எனது புதல்வன் நாடாளத்தகுதியற்றவன் எனத்தெரிந்ததால் தான் ஒரு வீரப்பெண்மணியை அவனுக்கு மனைவியாக்கி நாட்டைக்காக்க சந்தி தேவியை மணம் முடித்து வைத்தேன். அவளது வீரம் கணவன் மீது வைத்த அதீத காதலால் கரைந்து அவளைக்கோழையாக்கி விட்டது. தன் மனம் கவர்ந்தவரிடம் தான் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதும் கண்ணாடி போல் கற்பனைகளும், எதிர்பார்ப்புகளும் உடைந்து சிதறியபோது வீரமும் சேர்ந்து உடைந்து சிதறிப்போயிருந்தது.
ஜனகனின் மகளைப்போல் மனதாலும் கணவரைத்தவிர வேறொருவரை நினைக்காமல் வாழும் தன்னை வேறொருவன் ராவணனனாக மாறி போர் தொடுக்க வருவதை தன் கணவன் ராமனைப்போல் போருக்கு சென்று தன்னை மீட்பான் எனும் நிலை இல்லாததால் மீண்டும் அவளுக்குள் வீரம் உயிர்த்தெழுந்தது.
‘மீண்டும் என்றால் இதற்கு முன் வீரத்தால் அவள் சாதித்ததென்ன?’ எனும் கேள்வி எழுந்தது.
கடக தேசத்து பேரரசனான பூசன் நேசத்திற்குரிய தனது மனைவியை தீர்க்க முடியாத நோய் பறித்துச்சென்ற பின் மனமுடைந்து வீரன் கோழையாகி மதுவுக்கு அடிமையாகி மனதைத்தேற்றி வாழ்ந்த போது பக்கத்தில் இருந்த ரிசப நாட்டு அரசன், கடக அரசரின் நிலையை வைத்து நாட்டை போரிட்டு அபகரித்து இளவரசியையும் தனது மகனுக்கு மனைவியாக்கிட சதித்திட்டம் தீட்டியதை அறிந்து தானே முன்னின்று எதிரிகளை தமது படையுடன் சென்று தோற்கடித்து பிறந்த தேசத்தையும், தன்னையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய வீரப்பெண்மணி தான் சந்தி தேவி என்பதை அறிந்து பலரும் வியந்தனர்.
அன்று தந்தையின் நாட்டைக்காத்தவள் தற்போது கணவனின் நாடான தனது நாட்டைக் காக்க திட்டமிட்டு தனது ஒரு வயது குழந்தையை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு போர்வாளை எடுத்து இடையில் அணிந்து லாவகமாக குதிரை மீது ஏறி படைகளுக்கு முன் தளபதியாகப்பறந்தாள்.
மதுவில் மயங்கிய அரசன், மனமுடைந்து கண்ணீரில் மிதக்கும் மகாராணி இவர்களை வெல்வது உறுதி என தவறான கணக்கு போட்ட ரிசப தேசத்து அரசன் கடம்பன், கும்ப தேசத்து மகாராணி சந்திதேவி குடகு தாண்டி வந்து விட்டதையும், போரை முன்னின்று வழிநடத்துவதையும் அறிந்து மனதில் பெரும் அச்சம் குடிபுக இடமளித்தான்.
கடலின் உருவாகும் பேரலை பெரும் காற்றுடன் புயலாக உருவெடுத்து பேரழிவை உண்டாக்குவது போல தன் நாட்டோடு தன்னையும் அபகரிக்க நினைத்தவனின் நினைவு தந்த அவனது சிரசைக்கொய்ய சித்தம் கொண்டு சீறிப்பாயச்செய்தாள் தனது கும்பப்படையை.
நிலைமை கைமீறிப்போய்விட்டது, தமது படையினர் பலர் கும்பபடையிடம் சிக்கி மாண்டு போனதையும் மாறு வேடத்தில் சென்று பார்த்து விட்ட ரிசப தேசத்து மன்னர் கடம்பன் முண்டுவதை விட கிண்டுவது வாசி என்பது போல சரணடைவதாக ஓலை அனுப்பினான் கும்ப மகாராணிக்கு.
“ஒரு பெண்மணியின் வீரம் ஆண் வர்கத்திற்கே‌ அவமானம். காலம் காலமாக நாம் கட்டிக்காத்து வந்த ‘அரசனே அதிகாரமிக்கவன், அரசி அன்பின் உருவம்’ எனும் சட்டத்தை இப்பெண்மணி மாற்றியிருக்கிறாள். அந்தப்புயலை எதிர்த்தால் மரம் போல் சாய்ந்து போகத்தான் நேரும். எனவே ஒதுங்குவதும், பதுங்குவதும் கேவலம் என நினைக்காமல் சரணடைந்து விடுவோம். அதன் பின் என்னிடம் பெரிய திட்டம் இருக்கிறது ” ரிசப அரசனின் பேச்சை அவனது படை வீரர்கள் எதிர்க்காமல் ஆமோதித்து சரணடைந்தனர்.
ரிசப தேசத்தை கும்ப தேசத்தோடு இணைப்பதாக ஓலை எழுதப்பட்டு சந்தி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரிசப அரண்மனை புதிய மகாராணியை வரவேற்க கலைகட்டியது. நடனங்களும், விருந்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தன.
‘எதிரி நண்பனானால் ஏற்கலாம் என்றாலும் எச்சரிக்கையுணர்வு மட்டும் என்றும் மனதில் இருக்க வேண்டும்’ என குல குரு சொல்லிக்கொடுத்ததை மறக்காமல் உதட்டில் புன்னகையுடனும், உள்ளத்தில் பகையுடனும் வலம் வந்தாள்.
விருந்து நிகழ்ச்சி முடிந்து இரவு ரிசப தேசத்து அரண்மணையில் மன்னரின் அறையை தனக்கு ஒதுக்கச்செய்து ஓய்வு எடுக்கச்சென்றாள். முடியிழந்த கடம்பனுக்கு வெளிப்புற உறவினர் அறை ஒதுக்கப்பட்டது.
நடு நிசி வேளை. தனது படையினர் கண் விழித்து காவல் காத்த போதிலும், தனது நாடாக ரிசப தேசம் அதிகாரத்தில் மாறிய போதிலும் அங்குள்ளவர்கள் தனக்கு தந்தை காலத்து எதிரிகள் என்பதையும், முன்பொரு முறை தன்னிடம் தோற்றதின் வன்மத்தை மனதில் கொண்டவர்கள் என்பதையும் மறக்காமல் இருந்ததால் தானும் கண் விழித்தே இரவைக்கடத்தினாள்.
விளக்கு நிறைந்த எண்ணையை உறிஞ்சிய தீபம் சுடர்விட்டு எரிந்து படுக்கை அறையை பகலாக மாற்றியிருந்தது. ஒரு வேளை உறக்கம் வராமலிருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைத்த போது காற்று வர விடப்பட்டிருந்து சிறிய துவாரம் வழியாக ஒரு கரிய பூனை ‘மியாவ்’ என கத்திய வேகத்தில் விளக்கின் மீது பாய, விளக்கு படுக்கையறையின் மீது கவிழ்ந்து அடுத்த விநாழிகை பஞ்சாலான படுக்கை எரியத்தொடங்கியது.
அயர்ந்து தூங்கும் இந்த நேரம் எதிரிகளின் திட்டமிட்ட சதி என்பதைப்புரிந்தவள் அடுத்த நொடி தனது வீரர்களையும் அழைத்துக்கொண்டு வேறொரு மாற்று அறைக்குள் நுழைந்தாள். அங்கே கண்ட காட்சி அவளை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.
ரிசப அரசனாக நேற்றுவரை இருந்த கடம்பனின் தலை வெட்டப்பட்டு தன் காலடியில் வந்து அப்போது விழுந்தது. வெட்டியது அவனது மனைவி மரோகை.
“சீதையைப்போல கற்புக்கரசியான உன்னை அடையவே நாட்டைப்பிடிக்கும் நாடகத்தை நடத்தினான் எனது கணவன். உனது கணவன் மதுவுக்கு அடிமையானது போல் இந்தப்பாவி பெண் பித்தனாக மாதுக்களுக்கு அடிமையாக இருந்தான். ஆயிரக்கணக்கணக்கான பெண்களின் வாழ்வைக்கெடுத்து அந்தப்புரத்தில் அடைத்து கொடுமைப்படுத்தியவன் இப்போது சதித்திட்டம் தீட்டி உன்னிடம் சரணடைவது போல் நடித்து, அவனது அறையிலிருந்து ரகசிய சுரங்கம் வழியாக உனது அறையில் புகுந்து மயக்கப்புகை ஏற்படுத்தும் விதமாக படுக்கை அமைத்து, பூனையை விளக்கில் மோதவிட்டு விளக்கு அணைந்ததும் உன்னை அணைக்க போட்ட திட்டத்தை ரகசியமாக நான் அறிந்ததால் இந்த செயலைத்தடுக்க எனது மாங்கல்யத்தையே இழக்கத்துணிந்தேன்” என கூறியதும், தான் நித்தமும் வழிபடும் காளிதேவியே அவளது மனதில் புகுந்து தன்னைக்காப்பாற்றியதாக நினைத்தவாறு மரோகையின் காலில் விழுந்து வணங்கினாள் பேரரசியாகிவிட்ட சந்தி தேவி.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *