சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை?
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 202
(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுந்தர். வயது முப்பது, வசீகரமான தோற்றம். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான். கை நிறைய சம்பளம். வேலை நிமித்தமாக உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வலம் வருபவன்.
சுந்தர் வேலையில் சேர்ந்தவுடனேயே அவ லுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணைவியைப் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். குடும்பம் செல்வச் செழிப்பில் மிதந்து கொண்டிருந்தது. தந்தையின் பெயர் கார்த்திக. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் தெரியும்.
சுந்தரின் நண்பர்கள் சொல்வதுண்டு.
“சுந்தர், உனக்கென்ன குறை? பார்க்க நன்றாக இருக்கிறாய். நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். உன் தந்தையோ ஊரறிந்த மனிதர். நீ செல்வந்தரின் ஒரே மகன். உனக்குப் பெண் கொடுக்க போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.”
ஆனால், மூன்று, நான்கு வருடங்களாகப் பெண் பார்க்க ஆரம்பித்தும், அவனுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.
திருமண மையங்களில் சுந்தரின் தாயார் அவனுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தாள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும் முயற்சி செய்து வந்தார்கள்.
“நம் மகளின் விவரங்களைப் பார்த்தவுடன் வரன் கேட்டு நிறைய மனிதர்கள் வருவார்கள்” என்பது தாயாரின் எதிர்பார்ப்பு. “என் பெயரும் போட்டிருக்கிறாய் அல்லவா? அதைப் பார்த்தவுடன் நம் குடும்பத்தின் சம்பந்தம் விரும்பி ஆவலுடன் வருவார்கள்” என்றார் கார்த்திக். ஆனால், எதிர்பார்த்த அளவு வரன்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை.
ஜாதகம் பொருந்திய சில பெண்களுடன் சுந்தர் பேசினான். தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கும், அந்தப் பெண்களின் சிந்தனைக்கும் ஒத்துப் போகவில்லை என்று ஒதுக்கினான்.
கடைசியில் ஒரு பெண்ணுடன் இரண்டு. மூன்று முறை பேசிய பிறகு, கருத்தொற்றுமை இருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது. அந்தப் பெண் தன் பெற்றோரிடம் சொல்லி, மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடிவு செய்யலாம் என்றாள்.
‘எனக்கு ஏற்றத் துணையைக் கண்டு பிடித்து விட்டேன்’ என்ற மகிழ்ச்சியில் அம்மாவிடம் நல்ல செய்தி சொன்னான். ஆனால், இரு நாட்களுக்குள் பெண்ணின் அம்மா கைபேசியில் கூப்பிட்டு, “பெண்ணிற்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை” என்று கூறி விட்டாள். ஜாதகத்தில் தோஷம், பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதைச் செய்தார்கள். நாக தோஷம் விலக காளஹஸ்தி, குலதெய்வ வழிபாடு. திருமணஞ்சேரியில் வழிபாடு என்று தட்டாமல் செய்தார்கள். பலன் எதுவும் கிடைக்கவில்லை.
சுந்தரை விட குறைவாகப் படித்த நண்பர்கள் எல்லாம் மணம் முடிந்து வாழ்க்கையில் நிலைத்து விட்டார்கள். பாவம் சுந்தர். அவனுக்கும் காரணம் தெரியவில்லை.
கார்த்திக் தன் நெருங்கிய நண்பரிடம் தன் மகனின் கல்யாணம் ஏன் கை கூடி வருவதில்லை என்று வருத்தப்பட்டார்.
நண்பர் “என்னுடைய நண்பர் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் ரகசியமாக இதைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறேன், உனக்கு விருப்பமிருந்தால்” என்றார்.
கார்த்திக், காரணம் தெரிந்து கொள்வது, மன நிம்மதிக்கு அவசியம் என்று உணர்ந்தார். சொன்னதைப் போலவே கார்த்திக் நண்பர் துப்பறிவாளர் மூலம் விசாரித்து விவரத்தைச் சொல்ல வீட்டிற்கு வந்தார்.
“என் மகனின் திருமணத் தடைக்கான காரணம் தெரிந்ததா?” என்று ஆவலுடன் கேட்டார் கார்த்திக்.
“உன் மகனின் திருமணத் தடையின் மூல காரணம் நீ தான்” என்றார் நண்பர்.
“நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்” ஆச்சரியப்பட்டார் கார்த்திக்.
“உன்னுடைய தொழில் என்ன?”.
“தொலைக் காட்சிக்குத் தொடர்கள் எழுதி இயக்கியும் வருகிறேன்.”
“அதுதான் காரணம். உன் தொலைக்காட்சித் தொடர்கள் பெரும் பாலும் குடும்பக் கதைகள். மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார். தவறு செய்கிறாள் என்று தெரிந்தும் அவளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத மாமனார். அம்மாவைக் கண்டு பயப்படும் மகன், இப்படி உன் தொடரில் உள்ளது போல உன் வீட்டிலும் நிலைமை இருக்குமோ என்று பயந்து பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள்.”
திகைத்து நின்றார் சுந்தரின் தந்தை கார்த்திக்.
– நவம்பர்-2023, அமுதசுரபி 165.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
