சிறைக் கதவுகள் திறந்து கிடக்கின்றன
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாரி காலத்தில் வானத்தில் திரண்டு நிற்கும் கருமேகக் கூட்டங்கள் போல் அந்த பரந்த வெளியில் வியாபித்து நிற்கும் சிறைச்சாலைக் கட்டடங்களை அவன் பார்க்கின்றான்…
இன்று நேற்று அல்ல எத்தனை தடவைகள் அந்தக் கட்டடங்களை அவன் பார்த்து விட்டான். இருந்தாலும் இப்போது புதிதாக ஒன்றை பார்ப்பது போல் அவன் பார்க்கின்றான்.
“உள்ளத்தில் மேலோங்கி நிற்கும் எண்ணங்களைப் பொறுத்தே, பார்வைகளும், ஆய்வுகளும் நிகழ்கின்றன…” என்று கூறுபவர்களே அதுதானே என்னவோ
தினசரி கால் வலிக்க சைக்கிள் ஓடி விசேஷ செய்திகள் உள்ள இடங்கள் எல்லாம் தரித்து அந்தச் செய்திகளை மையொட்டுத் தாள் போல் உறிஞ்சி அவற்றை அழகு படுத்தி பத்திரிகைக்கு ஊட்டுகின்ற தொழில்.
ஆம் அவன் ஒரு பத்திரிகை நிருபர்: பெயர் ஆபிரகாம்
இன்று…!
சிறைவாழ்வை முடித்து திரும்புகின்ற ஒரு பெண்ணைப் பேட்டி காண்பதற்காக சிறைச்சாலை வாசல் அருகே வேப்பமர நிழலில் சீமெந்து ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றான்.
சுமார் பத்து மணி இருக்கும். பத்து மணிக்குத்தான் அந்த பெண் விடுதலை செய்யப்படவிருக்கின்றாள் என்ற செய்தி அவன் முன்னரே கேள்விப்பட்டிருந்தான்.
அவள் தான் கனகம்!
அவள் ஒன்பது தடவைகள் சிறைக்குச் சென்றவள். இது ஒன்பதாவது முறை. அவளை பேட்டி காண்பதற்குத்தான் ஆபிரகாம் காத்திருக்கின்றான்.
தனிமையில் இருந்த ஆபிரகாமின் சிந்தனை சிறைச்சாலைக் கட்டடங்கள் மேல் தவழ்ந்து, அதிலிருந்து வழுவி சிறைச்சாலை வாழ்வு பற்றிய எண்ணக் குவியலில் நங்கூரமிட்டு நிற்கின்றது.
ஆபிரகாமிற்கு சிறைவாழ்வு பற்றி நேரடியான அனுபவம் இல்லை. எனினும் பத்திரிகை நிருபர் என்ற முறையில் கேள்வி அனுபவம் நிறைய உண்டு.
வெளியுலகத் தொடர்பற்ற ஒரு தனியுலகம் ஒரு நிமிடம் கூட வாழ முடியாத அந்த உலகத்தில் வருடக் கணக்கில் எப்படி வாழ்கின்றனரோ….!
ஒரு முறை குற்றம் செய்து அங்கு செல்பவர்கள் திரும்பவும் எப்படித்தான் மனம் வந்து குற்றம் செய்கிறார்களோ?
அவள் கனகம், ஒன்பது தடவைகள் திரும்பத் திரும்ப அதே சிறை வாழ்வை அனுபவிக்க துணிந்தவள். அதிலும் ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்?
அசோக வனத்தில் சீதையை காவல் புரிந்த அரக்கியர் போலத்தான் இருக்க வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத கனகத்தை பற்றிய சாயல் அவன் மனதில் படர்கின்றது.
தார் றோட்டில் ஓடுகின்ற வாகனம் திடீர் என்று நிறுத்தப்படும் போது வாகனத்தில் சில்லுகள் தார் றோட்டில் தேய்பட்டு ஏற்படுகின்ற ‘கிறீச்” ஒலி
இரும்பிலான பாரிய சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன.
ஒருத்தி வருகிறாள். நீங்கள் கேட்ட கனகம் இவள் தான் கனகத்தோடு வந்த காவலன் கனகத்தை ஆபிரகாமிற்கு அறிமுகம் செய்து விட்டு,
“கனகம்….இவர் உன்னைத்தான் காண வந்திருக்கிறார். அவர் கேக்கிற கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லி விட்டுப் போ…” இப்படி கனகத்தை எச்சரிக்கை செய்து விட்டுப் போகின்றான் அவன்.
காவலனின் எச்சரிக்கையோடு சில விநாடிகள் ஆபிரகாமைப் பார்த்த கனகம் திடீரென்று அதிலிருந்து விடுபட்டு வானத்தை நிமிர்ந்து பார்க்கின்றாள்…! அவள் கண்கள் சுழன்று வானத்தை நோக்குகின்றன.
அந்தப் பார்வையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உணர்வு பளிச்சிடுகின்றது.
சிறையிலிருந்து திரும்பிய அவள் வானத்திலிருந்து எதை எதிர்பார்க்கின்றாள்…
ஆபிரகாமினால் அவள் எதிர்பார்ப்பதை கணிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை.
அசோக வனத்தில் சீதையை காவல் செய்த அரக்கி இப்படித் தான் இருந்திருப்பாளே? அவன் அப்படித்தான் கற்பனை செய்து கொண்டான்.
இப்போது அவதானமாக கனகத்தை பார்க்கின்றான்.
கனகம் –
கரு நிறம், கழுத்திலும் ஒரு கறுத்தக் கயிறு கணக்கான ஆனால் கூன் விழுந்த தோற்றம் இடையிடையே நரைத்த அடர்த்தியான கூந்தல் காவி படிந்த பற்கள் உட்குவிந்து பிதுங்கிய கண்கள்
அந்தக் கண்களில் உள்ள பார்வை தண்ணீர் குடம் தளம்புதல் போன்ற உணர்வு
அரக்கியின் உருவம்
அவளைப் பற்றிய ஆபிரகாமின் எண்ணக்கரு சிதைகிறது.
சிறையிலிருந்து திரும்புகின்ற மகிழ்ச்சியோ, சிறை சென்றவளின் வெட்கமோ அவள் முகத்திலில்லை.
ஆபிரகாமின் மனதில் கனகத்தைப் பற்றிய சிந்தனை அலைகள் தோன்றி மறைகின்றன. கனகம் வானத்தைப் பார்த்த படி நிற்கின்றாள்.
அவள் வானத்திலிருந்து எதை எதிர்பார்க்கின்றாள்?
ஆபிரகாமினால் தீர்மானிக்க முடியவில்லை.
“இப்பிடி இருங்கோ கனகம்.” ஆபிரகாம் மரியாதையாகவே பேச்சை ஆரம்பிக்கின்றான். தனது பார்வையிலிருந்து விடுபட்ட கனகம் அந்தச் சீமெந்து ஆசனத்தில் அமர்கின்றாள்.
இப்போது அவள் ஆபிரகாமைப் பார்க்கின்றாள்.
“என்னைத் தெரியுமா…”
“தெரியாது…”
“நான் ஒரு பத்திரிகை நிருபர்…”
“அப்படியென்றால்…”
”உங்களைப் பற்றி பேப்பிலை போடப் போறேன்…”
“பேப்பரிலை போடவா…”
“ஓம்…”
“ஏன்…?”
“நீங்கள் ஒன்பது தடவை சிறைக்குப் போயிருக்கிறியளாமே” கனகம் பதில் ஏதும் கூறாமல் சிரிக்கின்றாள். அர்த்தபுஷ்டியான சிரிப்பு!
“என்ன சிரிக்கிறியள்…”
”இல்லை…என்ரை நிலை உங்களுக்குப் புதினமாய் இருக்கு. அந்தப் புதினத்தை பத்திரிகையில் போட்டுப் பார்க்கிறியள்”
“சேவல் கோழியை அடிபட விட்டு புதினம் பார்க்கிறது போல… சேவலின்ரை வேதனை அதை யாரும் யோசிக்கிறதில்லை…”
கனகம் நிதானமாகக் கூறுகின்றாள்.
“நீங்கள் ஒன்பது முறை சிறைக்குப் போனது உண்மைதானே…?” ஆபிரகாம் பேட்டியை ஆரம்பிக்கின்றான்.
“ஓம்…”
“இந்த ஒன்பது தடவைகளும் நீங்கள் செய்த குற்றங்களை வரிசைப்படுத்திக் கூற முடியுமா…”
“ஒன்பது முறையும் ஒரே குற்றத்தைத்தான் செய்திருக்கிறன்..”
“அப்படியா…”
“ஓம்…”
”என்ன குற்றம்…”
“கஞ்சா வித்தது…” கனகம் சர்வ சாதாரணமாகக் கூறுகின்றாள்.
“செய்யிறது சட்ட விரோதமெண்டு தெரிஞ்சும்… திரும்பத் திரும்ப அதைத்தானே செய்திருக்கிறியள்…”
“ஓம்…”
“ஏன்…?”
கனகம் வைத்த கண் வாங்காமல் ஆபிரகாமைப் பார்க்கின்றாள். அந்தப் பார்வையில் பல்வேறு உணர்ச்சிகளின் வர்ண ஜாலங்கள் சில விநாடிகள் பார்த்தவள். அந்தப் பார்வையிலிருந்து விடுப்பட்டுத் திரும்பவும் வானத்தைப் பார்க்கின்றாள்…
அவள் எதை எதிர்பார்த்து ஏங்குகிகின்றாள்?
ஆபிரகாமினால் தீர்மானிக்க முடியவில்லை!
ஆவன் அந்தக் கேள்வியை நிறுத்திக் கொண்டு பேட்டியைப் தொடர்கிறான்.
“உங்கடை புருஷன் எங்கே…?
“அவர் செத்துப் பல வருஷமாய்ப் போச்சு…”
“பிள்ளையள்…?”
“ஒரு மகள்…”
“மகளிப்ப எங்கே…?” ஆபிரகாம் இதைக் கேட்டதும் அவள் விம்மி விம்மி அழுகின்றாள்.
மகளோடு தொடர்புபட்ட ஏதோவொரு சோகச்சம்பவம் இருப்பதை ஆபிரகாம் உணர்கின்றான்.
அந்தக் கேள்வியையும் அவனால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. அவன் மெளனமாக இருக்கின்றான்.
‘தில்லைவனம்’ கனகத்தின் சொந்தக் கிராமம் அதுதான். அவளது பிறப்பு வளர்ப்பு சொந்தம் பந்தம் எதுவுமே தெரியாது. அதைப் பற்றி யாரும் விசாரித்ததுமில்லை.
சில வருடங்களுக்கு முன் நிலமற்றவர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட குடியேற்றக் கிராமம். அதன் தெற்குகெல்லை அடர்ந்த காடாகவே இன்றும் இருக்கின்றது.
எங்கிருந்தோ வந்த கனகம் குடும்பத்தினர் அந்தக் காட்டுக்கரையில் ஒரு கொட்டிலை அமைத்துக் கொண்டனர்.
கனத்தின் குடும்பத்தில் கனகம், கனகத்தின் புருஷசன், ஒரே மகள், ஆக மொத்தம் மூவர் மட்டுந்தான்.
தினசரி மூவரும் காட்டுக்குச் செல்வார்கள். விறகு வெட்டுவார்கள். அதைக் கொண்டு வந்து விற்பது, அதில் கிடைக்கின்ற வருமானத்தில் ஏதோ அரைகுறை வயிற்றை நிரப்பிக் கொள்வது.
ஒரு நாள், காட்டில் விறகு வெட்டிக் கொண்டு நிற்கும் போது, பட்ட மரமொன்று முறிந்து கனகத்தின் புருஷனின் தலையில் விழுந்தது. பாவம்! அந்த இடத்திலேயே அவன் இறந்து போனான்.
கனகத்தின் புருஷன் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன் கனகத்திற்கோ, அவளது மகளுக்கோ முன் பின் தெரியாத கஞ்சா மரத்தைக் காட்டி, அதன் சிறப்பையும், அது சட்ட விரோதமாகக் கணிக்கப்படும் செடி என்பதையும் அறிமுகப்படுத்தியிருந்தான்.
அந்தக் காட்டில் கஞ்சாக் செடி தன்னிச்சையாக வளர்ந்திருந்தது.
“கடவுள் தந்த கை காலிருக்கு, பிறகேன் கள்ளச் சீவியம் செய்வான்… நேர்மையாய் உழைச்சுச் சீவிப்பம்.” அப்போது கனகம் இப்படித்தான் கூறிக் கொண்டாள்.
கனகம் மனச்சாட்சிக்குப் பயந்தவள். காக்கிச் சடைக்காரரென்றால் அவளுக்குக் குலை நடுக்கம்.
கனகத்தின் புருஷன் இறந்து போக தாயும் மகளும் விறகு வெட்டினார்களே! ஆப்போது கூட அந்தக் கஞ்சாச் செடிகள் அங்கு தான் நின்றன.
“ஏனம்மா… ஐயா சொன்ன மாதிரி… இந்தக் கஞ்சாச் செடிகளைக் கொண்டு போய் வித்தால் என்ன…?” இப்படி அவள் மகள் கேட்டதற்கு
”புள்ளை என்னைப் பார்… எலும்புந் தோலுமாய்ப் போனன்… எண்டாலும் உழைச்சு சீவிக்க வேணுமெண்டு எவ்வளவு கஷ்டப்படுகின்றன். உனக்கேன் இந்த எண்ணம்?”
”அம்மா… உன்னாலையும்,யும் என்னாலையும் எத்தினை நாளைக்குத் தான் இந்தத் தொழிலைச் செய்ய முடியும்.”
“எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்துக்கு செய்வம்.”
”முடியாமல் போனால் பிறகு அதைப் பற்றி யோசிப்பம்…” இப்படித்தான் கனகம் கூறி முடித்தாள்.
சில தினங்களுக்குப் பின்னர் “அரசாங்க உத்தரவின்றிக் காட்டில் மரம் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ இடி விழுந்தது போல இப்படியொரு செய்தி பிரகடனப்படுத்தப்பட்டது.
காட்டில் மரம் வெட்ட அனுமதி கோரி கனகம் அரசாங்கக் கந்தோருக்கு பல தடவைகள் போனாள்.
ஒரே ஏமாற்றம்.
என்ன வேலையென்றாலும் கனகமும் மகளும் செய்யத் தயாராக இருந்தனர். வேலை வேண்டுமே!
மாதத்தில் ஐந்தோ ஆறு நாட்கள் தான் வேலை கிடைக்கும். பசி அவர்களை வாட்டியது.
“அம்மா… ஐயா காட்டின அந்தக் கஞ்சாச் செடி…?” மகள் கேட்டுவிட்டாள்.
கனகம் யோசிக்கிறாள்… மனச்சாட்சி… சட்டம்…!
“கடவுள் தந்த உடம்பிருக்கு, பழுதில்லாமல் கை காலிருக்கு. பிறகேன் கள்ளத்தனமான சீவியம்…” என்றோ ஒரு நாள் அவள் தன் மகளிடம் சொன்னது. இப்போது அவளது மனத்தில் ஊறிக் காய்கின்றது!
இப்போது அதே வாக்கியங்களை உச்சரிக்க அவள் நாக்கு மறுக்கின்றது!
சோற்றுப் பருக்கையில் சுவையை மறந்து போன நாக்கால், மனச்சாட்சி, சட்டம் இவைகளைப் பற்றிப் பேச முடியுமா?
“ஆறடி” உடம்பின் இயக்கம் ஒரு சாண் வயிற்றில்.
பசியின் விஸ்வரூபம், சகல உணர்வுகளையும் சங்காரம் செய்து விட கனகம் கஞ்சா வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டாள். பிறகென்ன?
பொலீஸாரின் வலை விரிப்பு! விசாரணை! ஏதிர்ப்பு! சிறை! இப்படியே எட்டுத் தடவைகள் சிறை சென்று, இன்று ஒன்பதாவது தடவையாகச் சிறைக்குச் சென்று திரும்பியிருக்கின்றாள்.
கனகம் மௌனமாக இருக்கின்றாள். ஆபிரகாம் தன் பேட்டியைத் தொடர்கின்றான்.
“ஏன் கனகம்?
“என்னங்க…”
“உங்கடை மகள்…”
“அவள் சிறைக்குள்ளைதான் இருக்கின்றாள்…”
“ஏன்…?”
“இதுக்கு முந்தின முறையெல்லாம் பொலிசுக்காரர் என்னைத் தான் பிடிச்சவை. இந்தமுறை மகளையும் சேர்த்துப் புடிச்சுப் போட்டினம்… என்னை விட அவளுக்கு இரண்டு மாதம் கூட”
“கலியாணம் செய்து, குடியும் குடித்தனமுமாக வாழ வேண்டிய வயது. ஆவளை இனி ஆர் கலியாணம் கட்டப் போகினம்… நானும் இன்னும் எத்தனை நாளுக்கு.” கனகத்தின் கண்கள் பனிக்கின்றன.
“ஏன் கனகம்… சட்ட விரோதமானதெண்டு தெரிஞ்சும்… திரும்பத் திரும்ப குற்றத்தை ஏன் செய்யிறியள் என்று கேட்டதற்கு நீங்கள் ஒண்டுஞ் சொல்லவில்லையே. அந்தக் காரணத்தைக் கூற முடியுமா…?
ஆபிரகாம் முன்பு கேட்ட கேள்வியைக் கேட்டு விட்டான். அவன் முன்பு கேட்டபோது கனகம் அவனைப் பார்த்தாளே அதே பார்வை தான்!
அர்த்த புஷ்டியான பார்வை!
“நான் இந்தச் சட்ட விரோதமான வேலையை விடுகிறன். ஏனக்கொரு வேலை தேடித் தாறீங்களா…?” சர்வ சாதாரணமாகக் கேட்கின்றாள் கனகம்.
இந்த நிருபர் வேலைக்காக ஆபிராகம் பட்டபாடு.
அவனால் கனகத்துக்கு வேலை வாங்கித் தர முடியுமா!
“என்னாலை முடியாது கனகம்…” அவன் நேரடியாகக் கூறுகின்றான்.
“நான் ஒன்பது தடவை புடிபட்ட போதும், இதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கும் படியாய்க் கேட்டி :ருக்கிறன். ஆனால் ஆரும் இதுக்குப் பதில் சொல்லயில்லை…”
தலையைத் தாழ்த்தியிருந்த கனகம் இப்போது நிமிர்ந்து பார்க்கிறாள்.
“என்னங்க…”
“என்ன கனகம்…?”
“தண்டனை குடுக்கிறதின்ரை நோக்கமென்ன…?” அவள் கேட்கின்றாள்.
”குற்றம் செய்தவைக்குத் தண்டனை குடுக்கிறது… அவை அந்தக் குற்றத்தைத் திரும்பவும் செய்யாமல் இருக்கிறதுக்காக…”
“அப்பிடியெண்டால்….?”
“என்னைப் பொறுத்தவரை இந்தத் தண்டனை என்ன செய்திருக்கு? நான் மட்டுமா? ஏன்னைப் போல எத்தினை பேர் சிறைக்குள்ளை இருக்கினம்…”
ஆபிரகாமினால் பேச முடியவில்லை. குற்றவாளியான கனகத்தின் முன் குற்றமே செய்தாத ஆபிரகாம் தோற்றுப் போய் தலை தாழ்த்தி நிற்கின்றான்.
“என்ன பேசாமல் இருக்கிறியள். தண்டனையின்ரை நோக்கம் திருத்துவதெண்டால். அந்தத் திருத்தம் நடக்கிறதா…”
“நான் உதுக்கு என்னத்தைத் சொல்லுறது…?”
“நான் சொல்லட்டுமா…?”
“சொல்லு கனகம்..”
“கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் அவசியம் தான்… ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளும், தண்டனைகளும்… மலட்டுக் குடும்பம் மாதிரி இருக்கக் கூடாது. ஒண்டுக்குப் பத்தாய் விளைகிற நெல்லுமணி போலை இருக்க வேணும்…” சர்வ சாதாரணமாக அவள் கூறிவிட்டாள்.
ஆபிரகாம்…? ஆவனால் பேச முடியவில்லை!
சில வினாடிகள்.
“கனகம்! நான் போறன்… கடைசியாய் ஒரு கேள்வி…?”
“என்னங்க கேளுங்க…”
“சிறையிலிருந்து வந்த நேரந்துவக்கம் வானத்தைப் பாத்ததுப் பாத்து ஏங்குகிறாயே அது ஏன்?”
“நான் மறியலுக்குப் போக முன்னம் காட்டிலை கஞ்சாக் கொட்டை விதைச்சனான். இப்ப நல்லாய் முறைச்சிருக்கும். அதுக்கொரு மழையும் பெய்து குடுத்திதெண்டால் நல்லது. அதுதான் வானத்தைப் பார்க்கிறன்…”
இப்படிக் கூறிவிட்டு அவள் வானத்தைப் பார்க்கின்றாள்…!
கனகம்! திரும்பவும் அதே குற்றத்தைச் செய்யப் போகின்றாள். உருவமில்லாத உயிர். உருவமில்லாத பசி. உயிர் ஓயும் வரை பசி ஓயாது!
அப்படியென்றால்?
கனகத்தின் உயிர் ஒயும் வரை அந்தச் சிறைக் கதவுகள் அவளுக்காகத் திறந்திருக்கும்!
கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் மலட்டுக் குடும்பமாய் இருக்கக் கூடாது…” கனகம் கூறிய அந்த வார்த்தைகள் ஆபிரகாமின் மன வெளியில் சுழன்று கொண்டிருந்தன.
அவன் புறப்படுகிறான்.
– சிந்தாமணி, 15.10.1978.
– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |