சிமியாள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 220

இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தான் மங்கன். ‘நமக்கு வாழ்க்கைப்படக்கூடிய, நம்மை விரும்பக்கூடிய மாமன் மகள் சிமியாளை பெரியம்மா மகன் சிங்கன் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி சம்மதிக்கச்சொல்லி தடத்தில் சென்றவளைத்தடுத்து நிறுத்தி…’ நினைக்கவே கோபம் தலைக்கேறியது.
“முண்றதவிட கிண்டறது வாசி, சாச்சிக்காரங்கால்ல உளுகறதுக்கு பதுலா சண்டக்காரங்கால்ல உளுகுறதே மேல்னு நம்ம பாட்டனும், பூட்டனும் ஏஞ்சொல்லிப்போட்டு போனாங்கன்னு நெனைச்சுப்பாத்தீன்னு வெச்சுக்க, சிங்கங்கூட நீயி பிரச்சினை பண்ண மாட்டே….? நடந்தத மறந்து போட்டு நாசூக்கா உட்டுப்போடு. அவன் நல்லவனில்ல. உனக்கு வேற மாதர காலத்துக்கும் நாகபாம்பு கணக்கா தொந்தரவு குடுப்பான். நம்முளுக்குன்னு ஒரு பொண்ணு ஒலகத்துல தெக்காலயோ, வடக்காலயோ கெடைக்காமையா போகப்போகுது? சிமியாள அவனே கட்டி மாரடிக்குட்டு. வீம்புல பண்ணற கண்ணாலம் தேம்பி அழுக வெச்சிரும்பாங்க. நாஞ்சொல்லறதச்சொல்லிப்போட்டேன். ஒன்னி கேக்கறது, கேக்காதது உம்பட சவுரியம்” மகனிடம் சொல்லிச்சடைந்தாள் வசந்தா.
“இல்லீம்மா…. அவன் என்ற கண்ணு முன்னால சிமியாள கையப்புடிச்சு இழுத்திருக்கறான். மாடு கட்டற மொளக்குச்சிய புடுங்கி அடிக்கப்போனதுனால தான் அவன் உட்டுப்போட்டுப்போனான். இல்லீன்னா…. கெட்ட பேரு வர வெச்சுட்டா அவளைய ஆரும் கட்ட வரமாட்டாங்க. நம்முளுக்கு குடுத்துருவாங்கன்னு திட்டம் போட்டுத்தா தனியா போனவ குட்ட எல்ல மீறப்பாத்திருக்கறான் கசுமால…..எச்சக்கல நாயி…. நல்லவனா இருந்தாக்கூடப்பரவால்ல…. நாலூட்டுச்சோறு திங்கற நாயாச்சே….?” கோபத்தின் உச்சத்தில் பேசினான்.
“அவுளுக்கு அவனப்புடிச்சிருந்தா நானும் ஒதுங்கிப்போயிருவேன். இம்மியளவும் புடிக்காதவளோட போயி அம்மி முதிச்சு அருந்ததி பாக்கோணும்னு நெனைக்கிறது நடக்கற காரியமா? நாயமா? அந்தப்புள்ளயும் போராடி அவங்குட்டிருந்து தப்புச்சுப்பபோகப்பாத்தும் மப்போட தப்புப்பண்ண பாத்திருக்கறான். நம்ம பக்கத்தூட்டு ராமசாமி பையன் நோஞ்சா அவனோட செல்லுல என்னைய கூப்புட்டதால தான் நானும் சல்லுன்னு போனங்காட்டிக்கு புள்ள இன்னைக்கு தப்பிச்சிருக்குது. நோஞ்சானும் என்ற கூட சேந்து பாத்துட்டு தான் இருந்தான். அவனும் சாச்சி சொல்லுவான். அது தான் மரத்தடில நாளைக்கு நடக்கற கூட்டத்துல அவனை மாட்டி உடோணும்னு பாக்கறேன்” சொல்லி சினந்தான் மங்கன்.
ஒரு தோட்டத்தினருக்கு பஞ்சாயத்தில் பேசியபடி சொத்துக்களை அளந்து விட முழக்கயிறுடன் கம்பளி போர்வையை போர்த்திய படி தனது சவாரி வண்டியில் சென்ற பண்ணையார் சம்பையன் வண்டியை நிறுத்தி இறங்கி வந்தார்.
“என்ன வசந்தா மாடு, கண்ணெல்லாம் காட்டுக்குள்ள அவுத்துடாம கட்டித்தரைலியே கட்டிக்கெடக்குது? மார்கழி பனில பாயிலிருந்து எந்திரிக்கிறதுக்கு முடியலையாக்கும்? எங்க உன்ற மவன் மங்கனக்காணோம். மாமம்புள்ள சிமியாள பாக்கப்போயிட்டானாக்கும்? நேத்து ராத்திரி கட்டல்ல சிவனேன்னு படுத்த பின்னால வந்து தட்டி எழுப்பி உன்ற அக்கா பையன் சிங்கம்பேர்ல பிராது கொடுத்திருக்கறான். ஊருக்கெல்லாம் நாயஞ்சொன்ன குடும்பம் உங்க குடும்பம். இப்ப அந்தக்குடும்பமே மேடையேறுனா நல்லாவா இருக்கும்?” சொன்னவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்தார்.
“நானென்னுங்க மாமா பண்ணுட்டு…. இந்தக்கழுவாடுகள பெத்துப்போட்டுட்டு அக்காளும் நானும் சீரழிஞ்சு சின்னப்படறோம் போங்க. புடிக்கிலுன்னு சொல்லற பொம்பளப்புள்ளைய எதுக்குங்க கையப்புடிச்சு இழுக்கறான்? மாமம்புள்ளையா இருந்தாலும் மனசுக்கு புடிக்கிலீன்னா உட்டுப்போட்டு போறது தானுங்க மரியாதை. தூக்கீட்டு போயி தாலி கட்டிப்போடுவுன்னு மெரட்டறாணுங்களாமா….?”
“அதெல்லாம் பாட்டங்காலம். இப்பெல்லாம் புள்ளைக வெவரமாயிருச்சுக. கட்டுனா அவுத்து வீசீட்டு போயிருவாளுக. எப்புடியோ நீயும் பஞ்சாயத்துக்கு வந்துரு….” சொன்னவர் எழுந்தார்.
“என்ன மாமா வந்ததும் பொசுக்குன்னு எந்திருச்சு போட்டீங்க. காரங்காத்தால சாளைக்கு வந்துட்டு காப்பித்தண்ணி குடிக்காம போனா நல்லவா இருக்கும். இருங்க வெறகு குச்சிய முறிச்சு அடுப்ப பத்தவெச்சு காப்பித்தண்ணிய குடுக்கறேன். வறக்காப்பி போதுமா? எருமப்பாலு இத்தனை ஊத்தறதா?”
“பாலு வேண்டா…. நேத்துப்புடிச்சு நெஞ்சு கரிச்சமாதர இருக்குது”
“நெஞ்சு கரிச்சுதுனானா காத்தாளைக்கு இஞ்சிக்காப்பியும், மத்தியானம் சுக்கு காப்பியும், ராத்திரிக்கு கடுக்காய் காப்பியும் ஏழு நாளைக்கு குடிச்சுப்போட்டீங்கன்னு வெச்சுக்கங்க…. நெஞ்சு கரிப்பு நெஞ்சுலிருந்து பஞ்சாப்பறந்து போயிரும்முங்கோ….”
“என்ன வசந்தி உன்னைய பைத்திய காரின்னு உங்கொம்மா அடிக்கொருக்கா சொல்லுவா. ஆனா இப்ப நீயி பெரிய வைத்தியகாரியா ஆயிட்டியே…. இப்புடி புத்திசாலியா இருப்பீன்னு கண்டிருந்தா உன்னையவே கண்ணாலம் பண்ணீருப்பனே….” பண்ணையார் சம்பையன் சொன்னதைக்கேட்டு வெட்கப்பட்டவள், “அடப்போங்க மாமா… எப்பும்மே நீங்க தமாசாத்தாம் பேசுவீங்க. வயசு போன காலத்துல ஒன்னிப்போனதப்பேசி என்னத்தப்பண்ணறது…?” வசந்தாவின் கருத்த முகம் சற்று சிவந்தது.
ஊரே கூடியிருந்தது. சிங்கன் மங்கனைப்பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்.
“ஏண்டா சிமியாள கையப்புடிச்சு இழுத்தையா?” கூட்டத்தின் நடுவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பண்ணையார் சம்பையன் தனது மீசையை முறுக்கியபடி கோபமாகக்கேட்டார்.
“ஆமா. இழுத்தேன் …. அவ ஒன்னும் அடுத்தவம்பொண்டாட்டி கெடையாது… எனக்கு கட்டிக்கிற மொறையுள்ள மொறைப்பொண்ணு….” என்றான் நிமிர்ந்து நின்றபடி.
“அவ அடுத்தவன் பொண்டாட்டி இல்லேன்னாலும் அடுத்தவனுக்கு பொண்டாட்டியாகப்போறவ….” உறுதியாகச்சொன்னார் பண்ணையார்.
“எவனவன்….?” எனக்கூறியபடி ஏளனமாக அனைவரையும் பார்த்தான் சிங்கன்.
“மங்கன்தான்….” தைரியமாக கூட்டத்துக்குள் வந்து சொன்னாள் சிமியாள்.
” மங்கன் எனக்கு புருஷனாகப்போறவரு மட்டுமில்லே. புருசனே ஆயிட்டாரு” சிமியாள் பேசியதைக்கேட்டு மங்கன் உள்பட அனைவரும் அதிர்ந்து போயினர்.
“என்னடீ சொல்லறே….?” சிமியாளின் தாய் ராமி ஓடி வந்து தன் மகளின் முகத்தில் ஓங்கி அறைந்தாள்.
“அவரும் நானும் ரெண்டு மாசத்துக்கு முன்னால ஒரு நாள் புருசம்பொண்டாட்டியா இருந்துட்டோம். அதுலிருந்து தீட்டுப்படுலே. இப்ப என்ற வகுத்துல அவரோட கொழந்த வளருது. இப்ப சொல்லுங்க. அவரு எனக்கு புருசனா? இல்லியா? நான் மங்கம்பொண்டாட்டி தேனே…?” பெரிதாக இருந்த வயிறை தொட்டுக்காட்டி தைரியமாக கூட்டத்தைப்பார்த்துக்கேட்டாள். இதைக்கேட்ட ஊர் மக்கள் மீண்டும் அதிருந்து போக, சிமியாளின் தாயார் மயங்கிச்சரிந்தாள்.
சிங்கன் கோபத்துடன் கூட்டத்தை விட்டு சிமியாளைப்பார்த்து காறித்துப்பிய படி வெளியே சென்றான். மங்கன் பேச்சிழந்து நின்றான். கூட்டம் தானாக கலைந்தது. “காலம் கலிகாலம்” எனக்கூறியபடி துண்டை உதறி தோளில் போட்டபடி பண்ணையார் தனது சவாரி வண்டியிலேறி வீட்டிற்கு கிளம்பினார்.
மயக்கம் தெளிந்த சிமியாளின் தாய் தேம்பி அழுதாள். அப்பொழுது வயிற்றில் கட்டியிருந்த சிறிய தலையணையை லாவகமாக எடுத்து தாயிடம் கொடுத்தாள் சிமியாள். அதைக்கண்டதும் அழுகை நின்றது ராமிக்கு.
“முள்ள முள்ளால தான் எடுக்கோணும். சிங்கனுக்கு என்ற மேல இருக்கற வெறி போகோணும்னா எனக்கு இதத்தவிர வேற உபாயமே தெரியல. என்னை உசுரா நெனைக்கிற மங்கந்தான் என்ற புருசனுங்கிறது இப்ப மட்டுமில்ல, சின்ன வயசுல நாங்க ரெண்டு பேரும் ஐயனம்மா வெளையாட்டு வெளையாடற போது என்ற கழுத்துல ஊணாங்கொடிய எடுத்து தாலியாக்கட்டிப்போட்டாரு. அப்பவே என்ற மனசுல முடிவு பண்ணிப்போட்டேன். இல்லீன்னா ஊர் சனங்க முன்னால மானம் போனாலும் பரவால்லீன்னு இந்தப்பொய்யச்சொல்லியிருப்பனா?” இதைக்கேட்ட மங்கனின் தாய் வசந்தா, தனது அண்ணன் மகள் சிமியாளை, வருங்கால மருமகளை தன்னருகே இழுத்து மார்போடு அணைத்து, அவளது சிவந்த கன்னங்களில் மாறி, மாறி முத்தமழை பொழிந்தாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
