சிட்டுக்குருவிகள்…ராஜ்யத்திலே!
கதையாசிரியர்: கா.சங்கையா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,131
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது ஓர் சின்னஞ்சிறிய கிராமம்; பயிர் பச்சைகளுக்கு அங்கு பஞ்சமில்லை ஆறு… குளங்களுக்கு… பஞ்சமில்லை; மரம் செடி கொடிகளுக்கும் பஞ்சமில்லை பசுமை தவழும் ஓர் விவசாய பூமி அது! அங்கிருந்த குடியை ஓலைக் கூரைகளில் கூட்டைப் பின்னி குதூகலத்தோடு சிட்டுக் குருவிகள்! மனிதரை அண்டி வாழும் சிட்டுக்குருவிகள்தான் அந்தக் குடிசைகளின் கூரைகளில் குடில் கொண்டிருந்தன. எந்நாளும் பாட்டும் கூத்துமாய் பண்பாடி திரிந்து வந்த அந்த சின்னஞ்சிறிய சிட்டுகள் இன்று ‘ மெளனவிரதம்’ பூண்டு நிற்கின்றன. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒன்றுகூடி ‘அமர்ந்திருக்கின்றன. அவைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவை அங்கு… அந்த படர்ந்த ஆலமரத்தில்தான் ஒன்றுகூடும். அங்கு தலைவனால் அவைகளின் பிரச்னை சுமூகமாக தீர்த்து வைக்கப்படும். மனிதனைப் போலல்லாது தலைவன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தன, அச்சிட்டுக்குருவிகள். இன்று… அந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிகளின் முகங்களில் துயரம் அப்பி நிற்கிறது. துயரத்துக்கு வறுமையோ அல்லது பசியோ காரணமல்ல; இந்த சிட்டுக்குருவிகளை வாடவைத்து வேடிக்கைப் பார்ப்பது… பிரிவுதான்! அவைகளை நல்வழியில் வழி நடத்தி வந்த தலைவனை இன்று காணவில்லை! காணவில்லை என்றால்… தலைவன் ஒருவன் இருந்தால்தானே ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும்.’ தலைமை பதவி’ மனித இனத்தில் மட்டும்தான் உருவாகிறதா? இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரினத்திலும் தலைமைப் பதவி இருக்கவே செய்கிறது . ‘ மொட்டை வால் சிட்டு ‘ என்று அந்த கிராமத்து மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட….சிட்டுக்குருவிதான் அவை களின்… தலைவன்! அடுத்தடுத்த ஊர்களில் விளையும் பயிர்பச்சைகளை தானியங்களை… காய்கனிகளை கண்டறிந்து வர, வழக்கம் போல் அதிகாலையிலேயே கூட்டை விட்டு வெளியேறிய தலைவன் மாலைப் பொழுதாகியும் ஊர் வந்து சேரவில்லையே என்ற கவலை ஏக்கம் அவைகளுக்கு வழக்கமாக மாலை மலரும் முன்னே தனது ஊர் எல்லையில் கால் வைத்துவிடும் தலைவன் மாலை மலர்ந்து கருகத் தொடங்கியும் இன்று வந்து சேரவில்லை. தலைவனின் பிரிவு நிரந்தர பிரிவாகிவிடுமோ எனும் அச்சம் அவைகளுக்கு, கவலையால் அச்சத்தால் அவை வாய டைத்து நிற்கின்றன.
இப்படியே…இங்கேயே அமர்ந்துக்கொண்டிருந்தால் எப்படி? வீட்டிலே… இருக்கிற நம்ப பிள்ளைங்க நம்பளை காணாமல் பரிதவிக்க மாட்டாங்களா? சீக்கிரம் ஓர் முடிவுக்கு வாங்கு! எட்டுக் குஞ்சுகளுக்குத் தாயான அந்த இளம் சிட்டு… கூட்டத்தாரின் மெளனவிரதத்தை கலைக்கிறது.
“என்ன இதுங்க! மனிதக்குல பெண்களைப் போல முன் பின் யோசிக்காது இப்படி அவசரப்படுதுங்க! மனித இனத்திலேதான் பெண் புத்தி பின் புத்தியின்னா… நம்ப இனத்திலேயுமா?’ ‘ ஓர் வாலிபச்சிட்டு மெல்ல அலட்டிக் கொள்கிறது.
“பெண்களுக்கு, பெத்தவங்களுக்குத்தான் பிள்ளைங்களோட அருமை தெரியும்! ஆண் ஜென்மங்களுக்கு பிள்ளைங்களை கொடுக்த்தானே தெரியும். பெண் சிட்டுகளின் பக்கமிருந்துதான் வார்த்தைகள் தெறிக்கின்றன சற்றுமுன்பு அலட்டிக் கொண்ட அந்த இளம் ஆண் சிட்டுக்குருவியின் இதயத்தில் பலமான அடி நறுக்காய் நாலு வார்த்தைகளை அந்த வாலிப சிட்டின் முன் வீசிய அந்த பெண் சிட்டுகள் வாரி வரிந்துக் கொண்டு அந்த வாலிப சிட்டை எரித்து விடுவது போல் நோக்குகின்றன. அந்த வாலிப சிட்டை அவை இலேசில் விடுவதாக இல்லை! ‘கீச்….கீச்! கீச்’ என்று ஏகக்குரலில் அந்த வாலிபச் சிட்டை வசைப்பாட ஆரம்பிக்கின்றன. ‘அமைதி… அமைதி!’ ஏய்! பெண்டுகளா! ஏன் இப்படி மனிதரைப் போல சின்ன விஷயத்துக்கெல்லாம் கூச்சல் போடுறீங்க? நம்ப தலைவரை காணோமேன்னு நாமெல்லாம் கலங்கி போயிருக்கோம்; ஆனா நீங்க நிலைமை புரியமே இப்படி கூப்பாடு போடுறீங்க; உங்க கூச்சல் மனிதர் காதில் விழுந்தால் நம்பகதி என்னவாகும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்க! ‘ஓர் வயோதிக சிட்டு அறிவுரை கூற பெண் சிட்டுகள் தங்கள் வாயை மூடிக் கொள்கின்றன. அந்த கூட்டத்தில் இருந்த வயது முதிர்ந்த சிட்டுக்குருவியொன்று ஆலோசனை கூட்டத்துக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. இனியும்… இங்கே உட்கார்ந்திருக்கிட்டிருக் கிறதாலே புண்ணியமே… யில்லை! நாமே எல்லோரும் நல்லா சிந்திச்சு ஓர் நல்ல முடிவுக்கு வருவோம்! அந்த தாத்தா சிட்டு தன் தளர்ந்து உதிர்ந்துபோன சிறகுகளை மெல்ல மேலும் கீழும் அசைத்தப்படி கூற எல்லா சிட்டுகளும் தலையாட்டி பொம்மைகளாகின்றன.
அது மேலும் தாத்தா சிட்டுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த தன் சின்னஞ்சிறு கண்களால் கூட்டத்தை ஒருமுறை அலசி ஆராய்ந்துவிட்டு பின் மெல்ல பேச ஆரம்பிக்கிறது.
“எனக்கு தெரிந்த நாளிலிருந்து தலைவர் இவ்வளவு நேரம் கழித்து வீடு திரும்பியதே கிடையாது. இருள் தூற ஆரம்பிச்சிடுச்சு… தலைவர் வருவாருங்கற நம்பிக்கை எனக்கில்லை! போன இடத்துலே அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமுன்னு நினைக்கிறேன்!”
“ஆபத்தா? அது ஆசையிலே தொட்டில் கட்டி ஊஞ்சலாடுகிற மனித இனத்துக்கே சொந்தம்! எந்த சமயத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்தில்… பயத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேராசைமிக்க மனித வாழ்க்கை… ஆபத்து நிறைந்த வாழ்க்கை! ஆனால் நாம் போட்டி பொறாமையின்றி கிடைத்ததை உண்டு திருப்தியோடு வாழும் நம்மை எங்ஙனம் ஆபத்து சூழும்?” துடிப்போடு பேசிய வாலிபச் சிட்டின் பேச்சை தாத்தா சிட்டு புன்னகையோடு கிரகித்துக் கொள்கிறது.
“நீ சொல்லுறதுலே உண்மை இருக்கலாம் தம்பீ! ஆனா இல்வுலகிலே பிறந்த ஒவ்வொரு உயிரும் ஆபத்தையும் சுவாசித்துத்தான் வாழ வேண்டியிருக்கிறது. அப்படி தலைவருக்கு போன இடத்துலே ஆபத்து ஒன்றும் ஏற்படலே…ன்னு வைச்சுக்குவோம்… அப்படின்னா போன இடத்துலே… ஓர் சின்ன வீட்டை அவர் செட்டப் செஞ்சிருந்தால் அவரு… நிச்சயம் இனி இந்தப் பக்கம் வரமாட்டாரு…”தாத்தா சிட்டு சோகத்தோடு கூறுகிறது. சற்று முன்பு பெண் சிட்டுகளிடம் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்ட அந்த ஆண் சிட்டு மெல்ல குரலெழுப்புகிறது.
“மனிதன்தான் சின்ன வீட்டையும் பெரிய வீட்டையும் கட்டி… தனக்குள் இருக்கும் உயர்வு தாழ்வு எண்ணங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கிறான் ஆன… நாம் அப்படி… யில்லையே! கிளையோ கூரையோ ஏதாவது ஓர் இடத்தில் கூட்டைக்கட்டிக் கொண்டு சமத்துவமாக வாழறோம்; அப்படியிருக்கும்போது போன இடத்துலே தலைவர் சின்ன வீட்டை செட்டப் செய்திருப்பாருன்னு சொல்லுறீங்களே! ‘பெண் சிட்டுகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி மெல்லிய குரலில் வினா தொடுக்கிறது அந்த ஆண் சிட்டு, பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த ஆண் சி்ட்டை பரிதாபமாக நோக்குகிறது…. தாத்தா சிட்டு.
“தம்பீ, நீ நினைக்கிறமாதிரி சின்ன வீடு பெரிய வீடுங்கிறது குடியிருக்கிற வீடுல்லே.‘ஆசை நாயகி ‘வைப்பாட்டி, சக்களத்தி இதைத்தான் இந்த நவநாகரிக மனிதன் ‘ சின்ன வீடு’ என்று நாகரீகமாக மறைமுகமாக குறிப்பிடுகிறான். சின்ன வீட்டுக்கு தாத்தா சிட்டு விளக்கம் கொடுக்க அறியாத ஒன்றை அறிந்துக் கொண்ட மகிழ்ச்சியில் சிட்டுக்கள் ஒன்றை ஒன்று பார்த்து கண்சிமிட்டிக் கொள்கின்றன. தனது அறியாமையை எண்ணி அந்த ஆண் சிட்டு ஓர் கணம் வெட்கப்பட்டாலும்… மறுகணமே அது மீண்டும் வினா கொடுக்கிறது.
“நாங்க ஆறறிவு படைத்தவர்கள்… பகுத்தறிவாளர்கள்… இந்த உலகத்தை உயிர்களை ஆளப்பிறந்தவர்கள் என்று, இறுமாப்போடு கூறிக் கொள்ளும் மனித இனம் பகுத்தறிவோ பண்போடோ நடந்துக் கொள்கிறது? பகுத்தறிவில்லா உயிர்கள் செய்ய நாணும் செயல்களை இந்த பகுத்தறிவுள்ள மனித இனம் எவ்வளவு எளிதாக செய்கிறது! செய்த தவற்றையும் எவ்வளவு அழகாக மறைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி… ஒருத்திக்கு ஒருவன் என்று கூப்பாடு போடும் மனித இனம் ஒழுக்க… நெறியோடா நடந்து கொள்கிறது? வீட்டிற்குள் இருக்கும் வரை தான் கணவன் – மனைவி உறவு. வெளியில் சென்றுவிட்டால் அவன் யாரோ.. அவள் யாரோ? அன்றைய மனிதர்களால் போற்றி வளர்க்கப்பட்ட ஒழுக்கம்… இன்றைய நவநாகரிக மனிதர்களால் உருக்குலைந்து போய்விட்டது. ஆனால் அன்று தொட்டு இன்று வரை ஒழுக்க நெறியோடு வாழுற நம் இனம்தான். ஓர் துணையை தேர்ந்தெடுத்தால் உயிர் உள்ளவரை அத்துணையோடு சேர்ந்தே வாழ்கிறோம். காலதேவன் துணையை கவர்ந்து சென்றாலும் நாம் வேறு துணையை தேடுவதும் இல்லை! ஆனால் மனித இனத்தில் சொல்லவே” கூசுகிறது. சபலபுத்தி படைத்த மனிதனைப்போல் நம் தலைவரும்… பெண்ணாசையால் வழிதவறியிருப்பாருன்னு சொல்லுறதை ஏற்றுக்கொள்ள முடியாது! அந்த ஆண் சிட்டுதான் ஆவேசத்துடண் கூறுகிறது. அந்நேரம் பாரத்து ‘விர்’ரென்று பறந்து வந்த ஓர் சிட்டு அங்கே வந்து அமர்கிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிற்கும் அந்த சிட்டை எல்லா சிட்டுகளும் உற்று நோக்க மறுகணம் அங்கே பரபரப்பு; ஒரே ஆரவாரம்! ‘தொலைந்தான்’! இனி தலைவர் பதவி நமக்குத்தான் என்று எண்ணி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் பாவி! சாகாமால் உயிரோடு வந்து நிற்கிறானே! என்று எண்ணி மனதுக்குள் பொறுமும் மனிதனைப்போல் அல்லாது தலைவர் வந்துவிட்ட மகிழ்ச்சியில் தனது தளர்ந்த சிறகுகளை படபடவென்று அடித்துக் கொண்டு ‘தலைவர் வந்துவிட்டார்; நம் தலைவர் வந்துவிட்டார்!’ என்று மகிழ்ச்சியோடு தாத்தா சிட்டு குரல் எழுப்ப எல்லா சிட்டுகளும் குதூகலத்தோடு அந்த மொட்டைவால் சிட்டை சூழ்ந்து கொள்கின்றன.
‘தலைவரே| உங்க னக் க ண த ஏக்கத்தி ல் பய த்தி ல் எல்லோரும் ஊண் உறக்கத்தை மறந்து இ ங்கேயே அமர்ந்திருக்கிறார்கன்’ எண்று தாத்தா சிட்டு மெல்ல கூற, மொட்டை வால் சிட்டு தன் சின்னஞ்சிறு விழிகளை நாலாபுறமும் சுழலவிடுகிறது; முகத்திலே சோகத்தை அப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும் சிட்டுகளை பார்த்து அதன் விழிகளிலே பாசவுணர்வு பொங்குகிறது.
“எனதன்புக்குரிவர்களே! உங்களது ஆழமான அன்புதான் மீண்டும் என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எங்கே…. உங்களது அன்பு முகங்களை காணாது எனது வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று அஞ்சினேன். நல்லவேளை! கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார். உங்களோடு சேர்ந்து வாழும் வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிடைத்துவிட்டது!” என்று கூறியபடி ஓர் பெருமூச்சை வெளிப்படுத்துகிறது. அந்த மொட்டைவால் சிட்டு அங்கு குழுமியிருந்த சிட்டுகளிடையே ஒரே பரபரப்பு.
“அமைதி… அமைதி; எனதன்புக்குரியவர்களே! சற்று அமைதியாயிருங்கள்! நடந்தவற்றை உங்களுக்கு விளக்கமாய்ச் சொல்லுகிறேன்” என்று மொட்டைவால் சிட்டு கூற , அங்கு அமைதி தலைதூக்குகிறது.
“இங்கிருந்து பல மைல்களுக்கு அப்பால் ‘சிங்கப்பூர் என்றொரு ஊர் இருக்கிறது. அங்கு உணவுக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை என்று நமது காகா – மைனா – மணிப்புறா அண்ணன்மார்கள் அடிக்கடி சொல்லுவார்கள்! அங்கு சென்று பார்க்கலாமே என்றுதான் உங்களிடமெல்லாம் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டேன். நான் முதலில் சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்தபின் உங்கள் எல்லாரையும் அழைத்துச் செல்லலாம் என்ற முடிவோடு புறப்பட்டேன்! மொட்டைவால் சிட்டுவின் பேச்சு, மற்ற சிட்டுகளின் இதயங்களில் ‘ஐஸ் கட்டிகளை’ கொட்ட, ‘எங்கள் நலனில்தான் உங்களுக்கு எவ்வளவு அக்கரை! உங்களை தலைவராக அடைய நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று அந்த சிட்டுக்கள் குரலெழுப்ப மொட்டை வால் சிட்டுவின் உச்சி குளிர்கிறது.
அது பெருமிதத்தோடு தன் கதையை தொடர்கிறது: வானத்தை எட்டிப்பிடிக்க எத்தனைக்கும் கட்டிடங்கள்… வீடுகள். பளபளக்கும் சாலைகள்… அந்த சாலைகளில் தங்குதடையின்றி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்… வரிசைப் பிடித்து நிற்கும் பச்சை மரங்கள்… தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக நடமாடும் மனிதர்கள் சட்டத்திட்டங்கள் இப்படி அந்த நாட்டின் அழகை ஆரோக்கியத்தை சொல்லிக் கொண்டே போகலாம்..மொட்டைவால் சிட்டுவின் பேச்சு…. சிட்டுகளின் இதயத்தில் ஆவலை அலைபாய வைக்கிறது. ‘இந்த கிராமம் எங்களுக்கு கலித்துவிட்டது! எங்களை எப்போது அங்கு அழைத்துச் செல்ல போகிறீர்கள். சிட்டுக்கள்தான் ஆவலுடன் கேட்கின்றன. அவைகளை வேதனையோடு நோக்குகிறது மொட்டைவால் சிட்டு. ‘நான் நாணத்தின் ஒரு பக்கத்தைதான் காட்டினேன். மறுபக்கத்தை காட்டுவதற்குள் நீங்கள் பொறுமையில்லா… மனிதரைப்போல அவசரப்படுகிறீர்களே! பல இன மக்கள் பாதுகாப்பாக வாழும் ஓர் வளமான நாடுதான் சிங்கப்பூர். அங்கு சட்டமும் வலிமையானது; எதற்கும் வளைந்து கொடுக்காதது. தன் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறது அரசாங்கம். ஆனால்…ஆனால் என்று அது பீடிகை போட… எல்லா சிட்டுக்களின் விழிகளும் அதன் முகத்தை மொய்க்கின்றன. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கதையை அது தொடர்கிறது. அங்கே மனிதர்கள் நமக்கு எமனாக இருக்கிறார்கள்; அதாவது சுகாதாரம் நமக்கு மிரட்டலாக இருக்கிறது. அந்த நாட்டை அடைந்த நான் ஓர் தொழிற்சாலையின் பக்கத்தில் நெஞ்சுயர்த்தி நின்ற மரங்களின் கிளைகளில் காக்காக் கூட்டத்தினரைக் கண்டேண், எல்லோர் முகங்களிலும் சோகம் தாண்டவ மாடியது; கிராமப்புறத்திலிருந்து அந்நாட்டின் நிலையை அறிந்து போக வந்திருப்பதாகக் கூறினேன்; அவ்வளவுதான் கண்கலங்கியபடி காக்கா அண்ணன் பேச ஆரம்பித்தார். பறவைகளின் எச்சம் கார்களை துணிமணிகளை சுற்றுப்புற சுகாதாரத்தை பாதிப்பதாக சில மனிதர்கள் குரல் எழுப்ப … அரசாங்கமும் உடனடியாக நடிவடிக்கை எடுக்க, ஆயிரணக் கணக்கான மைனாக்கள்… புறாக்கள் கொல்லப்பட்டன. புறாக்கள் மைனாக்களுக்கு மட்டும் இந்த கதியல்ல; ஒற்றுமைக்கு உதாரணமாக அன்று எங்களை சுட்டிக்காட்டிய மனிதன்… அசுத்தங்களை அகற்றி சுற்றுப்புற சுகாதாரத்தை காக்கும் பறவையாக எங்களை போற்றிய மனிதன் இன்று தூய்மைக்கேட்டுக்கு நாங்களும் ஓர் காரண்ம் என்று கூறி துப்பாக்கியும் கையுமாய் எங்கள் இனத்தை வேட்டையாட கிளம்பிவிட்டான். நாள்தோறும் நூற்றுக்கணக்கான சகோதர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்” என்று அந்த காக்கா அண்ணன் கண்கலங்கி கூற; ‘டுமீல்’ என்று சத்தம் எங்களுக்கு மேலே உட்கார்ந்திருந்த ஒரு காக்கா அண்ணனின் உயிரற்ற உடல் ‘தொப்’ என்று கீழே விழ என் மூச்சே ஓர் கனம் நின்றுவிட்டது. துப்பாக்கியும் கையுமாக கீழே நின்று கொண்டிருந்த மூன்று மனிதர்களின் ஒருவன் தன் கையில் இருந்த பெரிய பினாஸ்டிக் பையில் காக்கா… அண்ணனின் உயிரற்ற உடலை அலட்சியமா எடுத்துப் போட மற்ற இருவரின் துப்பாக்கிகள் எங்களை குறிப்பார்க்க நான் செய்வதறியாது திகைத்து நிற்க… டுமில்…! டுமீல்! என்று மீண்டும் வெடிச்சத்தங்கள்! என்னோடு பேசிக் கொண்டிருந்த காக்கா அண்ணனும் அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த காக்கா அண்ணனும் பிணமாக கீழே விழ ‘கடவுளே! என்னை காப்பாற்று” என்று நான் ஓலமிட.. ஏதோ ஓர் சக்தி என்னை உயிரோடு மறுபடியும் மலேசிய திருநாட்டில் வந்து சேர்த்துவிட்டது! என்று மொட்டைவால் சிட்டு தான் பட்டு – வந்த அனுபவத்தை மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க சொல்லி முடிக்கிறது.
“தலைவரே! இங்கே நமக்கு ஒரு குறையும் இல்லை! இங்கு நாம் சுதந்திரமாக பறந்து திரிகிறோம்! விளைச்சல் மிக்க நம் நாட்டில் உணவுக்கும் பஞ்சமில்லை. நம் மக்களாலும் நமக்கு தொல்லை இல்லை. நம்மிடம் அவர்கள் அன்பு காட்டுகிறார்கள் இரக்கம் காட்டுகிறார்கள். வளமான நலமான நாட்டில் வாழும் நாம் ஏன் அயல்நட்டை நோக்க வேண்டும். அக்கரை பச்சை என்று எண்ணி அங்கு பேனால் புறாக்களுக்கும் மைனாக்களுக்கும் காக்காமார்களுக்கும் ஏற்பட்ட கதி நமக்கும் ஏற்படாதுங்கறது என்ன நிச்சயம். வேண்டாம் தலைவரே! நாம பிறந்து வளர்ந்த இந்த கிராமமே நமக்கு சொர்க்க பூமி. சாகும்வரை இங்கேயே நிற்போம்; சுதந்திரமாய் இந்த மலேசிய நாட்டிலேயே வாழ்வோம்!” என்று தாத்தா சிட்டு அறிவுரை கூற.. மொட்டை வால் சிட்டும் மற்ற சிட்டுகளும் மகிழ்ச்சியோடு அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்கின்றன; அதோ!எல்லா சிட்டுக்குருவிகளும் மனநிறைவோடு.. தங்கள் கூடுகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கின்றன!
– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்
| அமரர் கா.சங்கையா 1950இல் சிங்கப்பூரில் பிறந்தார். கலைமகள் பாடசாலையில் தனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அதன் பின்னர் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றார். மாணவ பருவத்திலேயே தம் தூவலைத் தூரிகையாக்கித் தாளில் தடம் பதித்தவர். 1965இலிருந்து வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய படைப்புகளுக்கு வரவேற்பு இருந்தன. சிறுவர் நிகழ்ச்சிகளிலும் சிறு வயதிலேயே சிறகடித்தவர். சிறுவர் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ் மலர், தமிழ்முரசு,…மேலும் படிக்க... |