சாயை
கதையாசிரியர்: க.செ.நடராசா
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 4,638
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதற் கோணம் –
“அதோ பார்த்தாயா சோமு. காற்றிலே புடவைத் தலைப்புப் படபடக்க, கம்பீரமாக நடந்து போகிறாளே….”
“அந்தப் ‘புலிவரிக் கோட்டுப் புடவைக்காரியா? அவள் யார்?”
“அவள் யாராயிருந்தாலென்ன புடவையைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது.”
“ஓ! இத்தகைய ‘ஞாபகங்கள்’ கேட்பதற்கு மிகவும் சுவையாயிருக்கும் சொல்லுங்கள்!”

”குமரைக் கரைசேர்த்தால் கோடி புண்ணியமுண்டு என்று எதற்காகச் சொல்லிக் கொள்ளுகிறார்களோ தெரியாது. ஆனால், ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு வருஷம் வருஷம் பத்து மாதங்களுக்கு. இல்லாத உபத்திர மெல்லாவற்றையும் அவளுக்கு உண்டு பண்ணச் செய்யும் கிரகஸ்தர்களிலும் பார்க்கப் பிரமச்சாரிகளே உண்மையாகப் பென்களின் நன்மைக்காக உழைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அதனால் நானும் பிரமச்சாரியாகவே இருந்துவிடுவதென்று தீர்மானித்தேன்.
பெண்களுக்காக ஏதோ பிரமாதமாக உழைத்துக் கொட்டி விடவேண்டும் என்பதல்ல…. ஒரு பெண்பிள்ளைக்கு ஒரு உதவியைச் செய்யும் போது, பாரதூரமான ஒரு காரியத்தைச் சாதித்து முடித்துவிட்டாற் போன்ற ஒரு இன்ப உணர்ச்சி -மனோ திருப்தி – ஏற்படத்தான் செய்கிறது… அடடா! இதல்ல நான் இப்பொழுது சொல்ல வேண்டியது; அது வேறு விஷயம்.
எவ்வளவோ சோதனைகளுக்கூடாக என் மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய கஷ்டம் தினந்தினம் வந்துகொண்டேயிருந்தது. பறந்து திரிவதற்கென்று பிறந்த ஒன்றைக் கட்டுப்படுத்தி வைப்பதென்றால், கட்டுப் படுத்துவதும் கட்டுப்படுத்தப்படுவதும் ஆகிய இரண்டிற்குமே வேதனைதான்.
ஊர்வசியோ, மேனகையோ என்று சந்தேகப்படும்படியாக ‘மேக்கப்’ எல்லாம் பண்ணிக் கொண்டு கண்களை ஒரு சுழற்றுச் சுழற்றி, வீதிவழியே அங்குமிங்குமாக இடித்தெறிந்து கொண்டு திரியும் முன்னேற்றக்காரிகள் எவன் பெண்ணாயிருந்தாலென்ன. யார்தான் பார்க்க மாட்டார்கள்? பார்த்து என்னென்னவெல்லாமோ ஏன் நினைக்கமாட்டார்கள்? தங்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பது தானே இந்த ஜோடினை போட்டுக் கொண்டு திரியும் சிங்காரிகளின் எண்ணமெல்லாம்! இல்லாவிட்டால், பெண்கள் முன்னேற்றத்திற்கும் இந்தத் தழுக்கு மினுக்குக்கும் என்ன சம்பந்தம்?
தீபாவளித் தினமென்றுதான் நினைக்கிறேன்; …… ஆமாம். தீபாவளிக்கு முதல் நாள்தான். தையற்காரனிடம் கொடுத்த துணியைச் சட்டையாகப் பெற்றுக் கொள்வதற்காகப் பெரியகடை வீதியாற் போய்க் கொண்டிருந்தேன். சமருக்கு ஆற்றாது தோற்று விழும் சண்டைக்கா]னைப் போலப் பொழுது மங்கி விழுந்து மண்ணைக் கவ்விற்று. அரம்பையர்களைப் போல அந்தரத்தில் நின்று மின்சார விளக்குகள் பல்லைக் காட்டத் தொடங்கின. நடமாடித் திரிந்த ஒரு புலிவரிக் கோட்டுப் புடவைக்குள் மறைந்திருந்த ஒயில் உருவமும் தன் பல்லைக் காட்டிக் கொண்டு. நான் சென்ற அதே தையற்காரனிடம் வந்து சேர்ந்தது.
‘நேரத்துக்குத் தைத்துத்தர முடியாதென்று வேளையோடு சொல்லி இருந்தால் நான் வேறெங்காவது கொடுத்துத் தைக்க ஒழுங்கு செய்து இருப்பேனே; இதென்ன இது. நாளைக்குத் தீபாவளியும் தினமாக……’ என்று அவனோடு சற்று உறைப்பாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
‘தைத்து முடிந்ததா?’ என்ற ஒரு மணிக் குரல் என்னையும் விலத்திக் கொண்டு தையற்காரனிடம் போய்ச் சேர்ந்தது. சாதாரணமாக நான் அந்தப்பக்கம் திரும்பிப் பார்த்திருக்கமாட்டேன்; அது என் கொள்கைக்குப் பிழையானது என்று எனக்குத் தெரியும். ஆனால். ‘இல்லையே’ என்ற குறிப்புப் படலைத் தையற்காரன் தன் முகத்தை ஏழ்மை தோன்றச் சுழித்துக் கொண்ட காட்சியைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாமற் போய்விட்டது. நான் அதை அவதானிக்காதது போலக் காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒருபுறமாகக் கண்களைத் திருப்ப வேண்டியிருந்தது. அதற்கிடையில் அந்த மணிக் குரலைத் தொடர்ந்து, அதை அனுப்பிய உருவமும் என் கண் பார்வை சென்ற பாதையை வெட்டிக்கொண்டு வந்தது.
புலிவரிக் கோட்டுப் புடவையொன்று நடமாடித் திரிகிறது, நமக்கென்ன என்று நான் அதைக் கவனியாமலே இருந்திருக்கலாம்; சந்தர்ப்பம் அதற்கு விட்டுக் கொடுக்கவில்லை. மேலும் ஒரு மணித்தியாலத்துக்கிடையில் எப்படியாவது அந்தத் தையற் பிரமாவிடமிருந்து என துணியைச் சட்டையாகப் படைப்பித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்மேற் கவிந்திருந்தது. அதை நான் அலட்சியம் செய்தால், அடுத்தநாள் வரவிருந்த தீபாவளியையே அலட்சியம் செய்ய வேண்டியதுதான்.
‘இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கிறது கடைசி பஸ்ஸுக்கு; அதற்கிடையில் எப்படியாவது என் சட்டையைத் தைத்துத்தான் தரவேண்டும். என்று கண்டிப்பாகச் சொன்னேன் தையற்காரனிடம், அந்தப் பெண்ணுருவம் வேறு பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்.
என் வார்த்தைகள் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், அதையெல்லாம் அவன் காதிற் போட்டுச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொண்டவன் என்பதை அவன் செய்கை பிரதிபலித்தது. அவசர அவசரமாக அவன் தைத்துக் கொண்டிருந்த பாதி உருப்பெற்ற சட்டையை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, என் கதர்த் துணியை எடுத்துக் கத்தரித்துக் கொண்டே, ‘ஐந்து நிமிஷத்தில் தந்துவிடுகிறேனே’ என்று ஆறுதல் கூறினான் எனக்கு.
அவன் கையில் கிடந்து விளையாடிய கத்தரிக்கோல், அக் கதர்த் துணியின் எத்தனையோ கோடி நூல்களைக் கறித்துக் கறித்துக் கணப் பொழுதிலேயே துணியைத் துண்டு துண்டாக்கி வைத்தது, சுதேச மக்களைப் பிரித்து வைக்கும் அந்நிய அதிகாரிகளின் செயலைப்போல.
அவள் முகத்தில் ஒரு அதிருப்திக் குறிப்பு அலைபாய்ந்தது. எதிரே தொங்கிக் கொண்டிருந்த ஒரு வெள்ளை நெஞ்சக் கண்ணாடி. அதையெல்லாம் சிறிதும் கவனியாதது போலிருந்த எனக்கு இரகசியமாக எடுத்துக் காட்டிற்று.
என் சட்டை….? என்று ஒரு வெறுப்பும் அதிகாரமும் கலந்த தொனியிற் கேட்டாள் அத் தையற்காரனைப் பார்த்து. அப்பொழுது நான் அங்கே இல்லாவிட்டால், இதோ ஐந்து நிமிஷத்தில் தந்து விடுகிறேனே’ என்று அவளுக்கு ஏதாவது ஆறுதல் செய்திருப்பான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் சாமர்த்தியம் எதுவும் அவளின் உதவிக்கு வர மறுத்துவிட்டது…
இதென்ன! மழை தூறுகிறதே! சோமு! ஓடிவா… ஓடிவா…. வீட்டுக்கு….”
“கதை….?”
“பிறகு”
இரண்டாம் கோணம்
“இவ்வளவு அந்தரங்கமான விஷயங்களையெல்லாம் உனக்குச் சொல்லாமல் வைத்திருக்கவே முடியவில்லை என்று சொல்லி உன்னையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லைப் பார் சுசீலா; அதை உனக்குச் சொல்வதனால் எனக்கே ஒரு திருப்தி ஒரு சந்தோஷம்.”
“நல்ல கதைதானடி; சொல்லு சொல்லு; என் கதையும்…”
“நான் சொல்லுவான் ஏன்? அந்தத் தையற்காரன் கடையிலே தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடியை நீ அப்பொழுது பார்த்திருக்க வேண்டும். என் சட்டை….?’ என்று நான் அந்தத் தையற்காரனைக் கோபித்துக் கேட்ட பொழுது, அந்தக் கண்ணாடிக்குள் ஆடிக்கொண்டிருந்த கண்களுக்கு எங்கிருந்துதான் அந்த இரக்கப் பார்வை வந்ததோ!
கண்ணாடி சொல்லிற்று. ‘அவர் பிரேமையில் ஆழ்ந்துவிட்டார் என்று அதை அந்தத் தையற் காரன் எப்படித்தான் தெரிந்து கொண்டானோ தெரியாது. முன்னரே வெட்டி வைத்திருந்த என்சட்டைத் துணியை எடுத்து ஒருதையல் தைத்தான்; மேலும் ஒன்று; பின்னும் பின்னும்
அவர் கண்களில் ஆசை வழிந்தது. தையற்காரனின் செயலைப் பார்த்துக் கொண்டே இருந்தார். கண்ணாடியிற் கண்கள் மௌனமாக….”
“என்ன வெட்கப்படுகிறாய் போலிருக்கிறதே! ஒரு சிநேகிதிக்குச் சிநேகிதி தன் கதையைச் சொல்வதில் என்ன வெட்கம்.? எல்லோருக்கும் என்ன உள்ளதுதானே… ம்…பிறகு?”
“பிறகென்ன, அவ்வளவுதான்; தையற்காரன் தன் தொழிலைச் செய்து கொண்டிருந்தான்; எங்கள் கண்களும் தங்கள் தொழிலை, கண்ணாடியின் உதவியை நாடாமலே செய்யத் தொடங்கின. நேரம் செல்லச் செல்ல உதடுகளும் கண்களைப் பின்பற்றத் தொடங்கும் போலிருந்தது. எங்கள் நாணமெல்லாம் எறும்பூர்ந்து கற்குழிந்த கதையாகிக் கொண்டே வந்தது. அந்தத் தையற்கார யமன், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது போல. என் சட்டையைத் தைத்து முடித்து நீட்டினான். பிறகு அங்கே நிற்க என்ன உரிமை உண்டு?”
“அவர்…?”
“நான் வெகுதூரம் போகும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தார், அந்தக் கடையிலிருந்து, நானும் பிடி கொடுக்காமல், வேறு எதையோ பார்ப்பது போலக் கடைக்கண்ணாற் கவனித்துக் கொண்டே…”
“ஸ் ஸ் அம்மா வாறா”
“இதிலே இந்த மாமரம் இல்லாவிட்டால். இந்த வெய்யிலுக்கும் ஒட்டு வெக்கைக்கும் இங்கே இருக்கவே முடியாதப்பா!”
“வேர்க்கிற வேர்வை!”
ஹிருதய பாகம்
‘மழை விட்டும் தூவானம் விடவில்லையே! அதற்குள்ளாக ஏன் இவ்வளவு அவசரப்பட்டு வந்துவிட்டாய் சோமு?“
“அப்போது சொன்னீர்களே அந்தத் தையற்கடைக் கதை. அதை….”
“கதைதான் கதை ….; பள்ளிக் கூடத்துக்குப் போவதென்றால் நேரே போய் நேரே வர வேண்டாமா வயது வந்த பிள்ளைகள்? ஒரு ஒழுக்கம். மட்டு.மரியாதை ஒன்றுமே கிடையாது; இதுகளுக்கெல்லாம் இன்னும் அடித்துக் கொண்டே இருப்பதென்றால்…? சிச்சிச்சீ…”
“என்ன, என்ன நடந்தது?’
“நாலு பேர் அறிந்தால் இவனைப்பற்றி என்ன சொல்லுவார்கள் தெரியுமா? ம்? கழுதைப்பயல்… மழைக்காக அந்தக் குறுக்கு வழியால் வந்தபடியாலல்லவோ கண்டேன்”
“யார்? உங்கள் தம்பியா?”
“தம்பி ; தம்பி; அவனை என் தம்பியென்று சொல்லக் கூட எனக்குப் பெரிய அவமானமாக இருக்கிறது. பாருங்காணும். அந்தச் சனப்புளக்கமான வழியில் நின்று உந்தச் சுப்பையரின் மகளை எட்டி எட்டிப் பார்த்து கொண்டு நிற்கிறானே! இவனை என்னதான் செய்யக் கூடாது. இந்த இந்த…மடைப்பயலை? ம்…டேய்!…. டேய்!….. வாடா இங்காலே!”
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.