சாமிக்கெதுக்கு ‘சம்திங்?’





அந்த சாமியார் சொன்னது காதில் மணியொலியாய் ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘நல்லா நியாபகம் வச்சுக்கோ, உன்னால டிகிரி முடிக்க முடியாது. உன்தலை எழுத்து அவ்வளவுதான். என் ஜோசியம் தோத்துப் போனதா சரித்திரமே கிடையாது!’
மறுபடியும் மறுபடியும் மனசு அதையே திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுப் பிறாண்டியது. . ‘என்ன, என்னால டிகிரி முடிக்க முடியாதா?’
நான் தோற்றுத்தான் போயிடுவேனா? கூடாது!

வென்றே ஆகவேண்டும். என்ன செய்யலாம்? யோசித்தான்.
சட்டென நினைவுக்கு வந்தது அந்த சர்ச். அதுக்கு வேண்டிக்கலாம்.
சக்தி வாய்ந்தது என்று எல்லாருமே சொல்லி இருக்காங்க…!
ஒரு ஐம்பது ரூபா பொருத்தனை வேண்டிக் கொண்டான்.
மறு நிமிடமே மனசு வேறுமாதிரி சிந்தித்தது…
‘சாமிக்கு எதுக்கு சம்திங்??!!’
‘சரி வேண்டாம் ! காணிக்கை போட வேண்டாம். வேற என்ன செய்யலாம்?’
மீண்டும் ஜோசிய பிசாசு சோதிக்க ஆரம்பித்தது.
‘இத பாரு, அவரு உறுதியாத் தன்ஜோசியம் பொய்க்காதுங்கறார்… !
ஐம்பது ரூபாதானே போட்டுத்தான் பார்ப்போமே..!
சாமி ஜெயிக்குதா ஜோசியம் ஜெயிக்குதா மறுபடியும் மனப் போராட்டம்.
பகுத்தறிவு வழிகாட்ட ஒருவழியாய் ஒருமுடிவுக்கு வந்தவன் கைக்காசை எண்ணிப் பார்த்து ‘டாஸ்மாக்’ கடைக்குள் பிரவேசித்தான். குடியில் குளித்து மிதந்து தெளிந்த போது விடிந்திருந்து. அவனுக்கல்ல.. அன்றைய பொழுது!
இவன் இன்னும் போதை மயக்கத்திலிருந்து தெளியவே இல்லை.
மறுநாள் காலேஜுக்குக் கட்ட வேண்டிய காசுமுழுதும் இரவு சாராயக்கடையில் சமாதியாக,
ஜோசியர் ஜெயித்தார்.
இவன் தோற்றுப் போனான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |