சந்தேகக் கைதிகள்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

களுத்துறைச் சிறைச்சாலை…
தூக்கமற்ற இரவு.
இமைகள் திறந்தபடி.
அதன் அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி,
“ஒக்கம லேஸ்த்தி வென்ட அத நடுவட்ட யண்ட வோனே!”
சிறைக் காவலனின் குரல்.
தூங்க மறந்ததால் கனத்துப்போன இமைகளுக்குள் ஈட்டியாகிவிட்ட கண்கள் சிறைச் சுவரில் குத்திட்டு நிற்க கண்மணிகளில் ஓர் ஆனந்தச் சலனம்.
சட்டென இடுப்பை நிமிர்த்தி எழுந்து முழங்காலை மடித்து உட்கார்ந்து கொண்டான்.
‘அம்மா, மகன், மனைவி ரஞ்சனி அனைவரையும் இன்று பார்க்கலாம்’
மன நதியில் இன்னும் அந்த நீரோட்டம்தான்.
சிறை அறைக்குள் பரபரப்பு.
எல்லோரும் எழுந்துவிட்டார்கள். சில நிமிடங்களில் நீதிமன்றத்தில் நிற்கவேண்டும்.
‘அப்பப்பா இன்றாவது விசாரணை நடைபெறட்டும். வழக்கு விசாரணையில் தன்னை குற்றவாளி அல்ல என நிரூபிப்பதற்கு ரஞ்சனி ஆதாரங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருப்பாள். வக்கீல் துரைசாமி ஐயாவும் இலேசாகச் சமாளிக்க முடியாதவர். எப்படியோ பெரும் தொகை பணத்தை ரஞ்சனி புரட்டி அவரிடம் கொடுத்து விட்டாள். நிச்சயம் எனக்குச் சார்பாகத் தீர்ப்பு கிடைத்துவிடும்…’
சுதனின் நினைவுகள் முறிபடாத நாணலாக நெளிந்தும் வளைந்தும் சுற்றிச் சுற்றி ஒரேவிதமாகச் சுழன்று சுழன்று நிமிர்ந்தன.
“என்ன சுதன் ஆனந்தம் கொப்பளிக்குது?”
“இல்ல நிருபன் ரெண்டு நாளைக்கு முந்தி வைப்பின்ட லெட்டர் வந்துதல்லோ அவ இருந்த நகை நட்டையெல்லாம் வித்துப்போட்டு துரைசாமி ஐயாவைப் பிடிச்சி வழக்கை இந்த முறை ஒரு கை பார்க்கிறேன் என்று எழுதியிருக்கிறாள். இந்த சந்தோஸம்தான் மச்சான்.”
நிருபனின் கண்களில் நீர்மணிகள் துளிர்த்தன. ஏதோ யோசனையில் லயித்துவிட்ட அவனிடமிருந்து பெருமூச்சொன்றும் புறப்பட்டது.
“என்ன நிருபன்?”
சுதன் கேட்டான்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
சிறைச்சாலைச் சுவரின் உயரத்தில் இருக்கும் ஜன்னலில் கண்கள் பதிந்து வெளியுலகில் லயித்தன.
நிருபன் இப்படித்தான் இரண்டொரு வார்த்தைகள்தான் பேசுவான். அதன்பிறகு அமைதியாகிவிடுவான். அந்த ஜன்னலுக்கு வெளியில் அவனுடைய யோசனை மிகுந்த அகலமான கண்கள் வெறித்த நிலையில் லயித்துவிடும்.
“நிருபன், என்ன முகத்திலே சந்தோசத்தைக் காணல்ல! பயப்பிடாத. இன்றைக்கு எப்படியும் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே கிடக்கு. எல்லோரும் அப்படித்தான் சொல்லினம்…”
நிருபனின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. அதில் சோகத்தின் நிழல் படர்ந்திருக்கிறது.
“சுதன்! நீ சிறைக்குள்ளே வந்து ஒரு வருஸம்தான ஆகுது. நான் இதுக்குள்ளே வந்து ஐந்து வருஸமாகுது…”
“நீ வந்தது யுத்தகாலம். இப்ப சமாதானம். எங்கேயும் குண்டுவெடிப்பு. அது இது அசம்பாவிதம் இல்லேதானே! சீக்கிரம் வழக்க முடிச்சுப் போடுவாங்க. அதைத்தான் சொல்றனான்.”
‘எனக்கு நம்பிக்கை இல்லே.’ என்பதுபோல் தலையை ஆட்டினான்.
சுதன் புன்னகை செய்தான். ‘எனக்கு இருக்கு’ என்பது அந்தப் புன்னகையின் பொருள்.
“ஏன்?”
“போராளிகளையே விடுதலை செய்யிறாங்க. நாங்கள் வெறுமனே சந்தேகக்காரர்தானே!”
நிருபனின் உதடுகளில் மறுபடியும் புன்னகை தோன்றியது.
“உண்மைதான்.”
அவன் முணுமுணுத்துக் கொண்டான்.
“அரி அரி கதாவ எதி லேஸ்தி வெண்ட.”
“போதும் போதும்! தயாராகுங்கள்” சிறைக்காவலனின் குரல் அதட்டலாகப் பறந்து வருகிறது.
க்விக், க்விக், க்விக், க்விக்.
ஜன்னலில் ஒரு சிட்டுக் குருவி.
அதன் கீச்சுக் குரல். அதன் பின்புறமாகவிருந்து வெளிச்சம் படர்ந்ததால் குருவி சின்னதொரு கறு நிற திடலாகத் தெரிகிறது.
க்விக் க்விக் க்விக் க்விக்.
அதென்ன சுதந்திர உலகைத் துறந்து இந்தச் சிறைக்குள் அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கிறது.
சுவரில் சின்னதொரு மண்சட்டி அதில் ஒரு துவாரம். அதுதான் அதன் உலகம்.
இந்த மாபெரும் உலகம் ஏன் இப்படி தனித்தனியாக குறுக்கப்பட்டிருக்கிறது.
‘யுத்த நிறுத்தம். புரிந்துணர்வு உடன்படிக்கை. சமாதான பேச்சுவார்த்தைகள். எங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துவிடும்.’
சிறைச்சாலைக்குள் மங்கலான வெளிச்சம்.
ஒரு மேடை. அதன்மீது நின்றுகொண்டு ஓர் அரசியல்வாதி ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.
அந்தக் கனவை சிறைக்காவலனின் கடூரமான குரல் கலைத்துவிடுகிறது.
காலிமுக நெடுஞ்சாலை.
பொலிஸ் வாகனம் விரைகிறது.
திருடர்கள், போதைப் பொருள் பாவனையாளர்கள், சண்டியர்கள், பிட்பொக்கட்காரர்கள், கொலைகாரர்கள், சந்தேக நபர்கள் ஏழுபேர்.
வாகனத்துள் மூச்சுவிட சிரமம். அவ்வளவு நெருக்கடி. சந்தேக நபர்கள் ஜன்னலருகில் இருந்தார்கள். அவர்கள் கரங்களில் கை விலங்கு.
சுதனும் நிருபனும் ஒன்றாகவே உட்கார்ந்து இருந்தார்கள். நிருபனின் கழுத்து மடிந்து நாடியுடன் ஒட்டியிருந்தது. கண்ணிமைகள் இறுகிக் கிடக்கின்றன.
அது நித்திரை அல்ல; அவநம்பிக்கையின்போது அவன் கண்கள் இப்படித்தான் மூடுண்டு நாடி கீழிறங்கும். நம்பிக்கையற்ற யோசனைகளில் ஆழ்ந்துவிட்டிருப்பான்.
சன நெருக்கடியான இந்த வாகன போக்குவரத்து மிகுந்த நெரிசலான பாதையில் எத்தனை முறை அவனை ஏற்றிக்கொண்டு இந்த பொலிஸ் வாகனம் ஓடியிருக்கும்.
அது நம்பிக்கை நிறைந்த கால ஓட்டம். பொலிஸ் வாகனத்தின் சின்ன ஜன்னலினூடே அவன் கண்கள் வீதியில் மொய்த்துக் கிடக்கும். தெரிந்த முகங்கள் பல வீதியில் நடமாடிக்கொண்டிருக்கும்.
அடடா, எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆவல் கொப்பளிக்கப் பார்ப்பான். நெஞ்சு தகிக்கும்; தவிக்கும். வண்டியிலிருந்து குதித்து அந்த மக்களோடு மக்களாக நடந்துசெல்ல மனம் பதறித் துடிக்கும்.
சுதந்திரம் எவ்வளவு பெறுமதியானது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர்…..
அம்மா கொடுத்த பணத்தை மிகவும் பத்திரமாக எடுத்துக்கொண்டு கொழும்பு வந்தான். ஜெர்மன் போவதே இலட்சியம். வெள்ளவத்தையில் ஏஜன்சிக்காரரைக் கண்டு பணத்தைக் கொடுக்க வேண்டும்.
அவன் வெள்ளவத்தைக்கு வந்தபோது லேசாக வானம் கறுத்துக்கொண்டு வருகிறது.
மழைத்தூறல் வருஷிக்கின்றது. பாதை நனைந்து லேசாக ஆவி வெளிக்கிளம்பி மண் மணம் கமழ்கிறது.
“இந்த ஏஜன்சிக்காரர் ஆபீஸ் எங்கே இருக்கு?” அவன் கண்கள் அங்குமிங்கும் தேடின.
சனக் கூட்டத்தில் தட்டுத்தடுமாறியே நடந்து கொண்டிருந்தான். பஸ் நிலையத்தைத் தாண்டியபோது…
“அலோ…”
யார்? தலை உயர்ந்தது. கண்கள் முன்னால் பொலிஸ் ஜீப். அதற்குள் நாலைந்து பேர் உட்கார்ந்து இருப்பது நிழல்களின் தரிசனமாக கதவு திற்பட ஒருவன் கீழிறங்கினான்.
“மே எனவா!” (” இங்கே வா”)
வண்டிக்குள் அவனை ஏற்றிவிட்டார்கள். அவன் கையிலிருந்த பொலித்தீன் பை சோதனைக்குள்ளாகிறது. கட்டுக் கட்டாக பணம் அந்த பைக்குள்தான் பத்திரமாக வைத்திருந்தான். அவனைக் கீழிறக்காமலே ஜீப் முன்னால் நகர்கிறது. வாகனம் வெகுதூரம் சென்று மறையும்வரை அதன் சிவப்பு வெளிச்சத்தை வீதியில் நின்ற சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து வருடங்கள் எவ்வளவு வேகமாகப் பறந்து விட்டன.
சுதன் பெருமூச்சுவிட்டான். கண்கள் பனித்து விட்டிருக்கின்றன…
பொலிஸ் வாகனம் நீதிமன்ற வாயிலில் நிற்கின்றது. ஜன்னலினூடாக வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கும் சுதனின் கண்களில் ஆனந்தப் பிரவாகம். வீதியின் மறுபக்கம் ஜடாமுனியென கிளை விரித்துக்கொண்டிருக்கும் அரச மரத்தடியில் லயித்த கருமணிகளில் நிரஞ்சனி மகள் அருணியை இடுப்பில் சுமந்துகொண்டிருக்க அருகில் அம்மா, அப்பா, சட்டத்தரணி துரைசாமி அனைவரினதும் கண்கள் வாகனத்தின் மீது ஆவலுடன் மொய்த்துக் கிடக்கின்றன.
வாகனத்திலிருந்து வரிசையாக இறங்கினார்கள்.
சட்டென வீதிக்குத் தாவி அதனைக் கடந்து நிரஞ்சனியைக் கட்டியணைத்து மகள் அருணியை முகர்ந்திட மனத்தில் பேரலை பொங்கிப் பிரவாகித்து சீறலுடன் நிமிர்கின்றது.
சுதனின் கைகளில் விலங்கு பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் நிரஞ்சனி விக்கித்துப் போகிறாள். மளமளவென நீர்மணிகள் முத்துக்களாக உதிர்கின்றன.
“மொகத சுதன் பாஞ்சுபோவ பாக்கிறதா சுருக்க முன்னுக்குப் போ போ.” பொலிஸ்காரன் ஏதோ விசயம் தெரிந்தவன் போல் தமிழிலும் சிங்களத்திலும் பேசினான்.
நீதிமன்றத்தினுள்…..
பயங்கரவாத சந்தேக கைதிகள் அனைவரும் தனியாக ஒரு பகுதியில் இருத்தப்பட்டார்கள்.
நிரஞ்சனி எங்கே…?
பார்வையாளர் பகுதியில் அவள் தலைக்கறுப்பையும் காணவில்லை. ஆமாம்; சந்தேக நபர்களைத் தவிர மற்றைய கைதிகள் எங்கே? உறவினர்களுடன் உறவாடப் போய்விட்டார்கள்.
அதிர்ஷ்டசாலிகள் அவர்களுக்கு மட்டும் உறவினர்களுடன் உறவாட அனுமதி.
நீதிமன்ற கடிகாரம் அதன் சிறிய முள் பல இலக்கங்களைக் கடந்து மறைந்து விட்டது.
அனைவரினதும் பெயர்கள் அழைக்கப்பட்டன.
சந்தேக நபர்களின் பெயர்கள் அழைக்கப்படவில்லை. பொலிஸ் வாகனம் கைதிகளைத் தன் வயிற்றுக்குள் நிறைத்துக்கொண்டு மறுபடியும் காலிமுக வீதியில் விரைந்தது.
சுதனின் கழுத்து மடிந்துவிட்டது.
நிருபனைப் போலவே அவன் கண்களும் வெளிறிப் போயின.
ஆமாம் வழக்கு விசாரணை மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு விட்டது.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
                ![]()  | 
                                கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... | 
 கதையாசிரியர்: 
 கதைத்தொகுப்பு: 
                                    
 கதைப்பதிவு: August 11, 2025
 பார்வையிட்டோர்: 352  
                                    
                    