சத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,350 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

ஆலமரத்தடி. கிராமப் பஞ்சாயத்து.

“எலேய் சொடலை! நீ ஓயாம குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போறது மட்டுமில்லாம, குடும்பத்தயும் கவனிக்க மாட்டேங்குறேன்னு உம் பொஞ்சாதி போன மாசம் வந்து பிராது பண்ணுனதுனாலதான், இதே பஞ்சாயத்துல ஊர்ப் பெரிய மனுசங்க முன்னாடி, ‘இனிமே குடிக்கிறதில்லே’னு பால் சொம்பு மேல உங்கிட்ட சத்தியம் வாங்கினேன். ஆனா, சத்தியத்தை மீறி மறுபடி நீ குடிக்கிறியாமில்ல..? என்னடா நினைச்சுட்டிருக்க உம் மனசுல!” – கர்ஜித்தார் ஊர்ப் பண்ணை மாடசாமி.

“ஐயா, நா சத்தியத்தை மீறலீங்களே! கொடுத்த சத்தியத்தை மீறினா என் கண்ணு ரெண்டும் அவிஞ்சு பூடாதுங்களா?” – அப்பாவியாகச் சொன்னான் சுடலை.

“என்னம்மா, குடிக்கலேன்னு சொல்றானே உம் புருசன்?”

“ஐயா, அவரு பொய் சொல்றாருங்க!” என்றாள் அஞ்சலை.

“எலேய் சொடலை, ஒழுங்கு மரியாதையா உண்மையச் சொல்லு! நீ இப்பெல்லாம் சாராயக் கடைக்குப் போறது உண்டா, இல்லையா?”

“ஐயா, உண்டுங்க! நா அத இல்லேன்னு சொல்லலீங்களே! அன்னிக்கு நா உங்க எல்லார் முன்னாடியும் ‘இனிமே குடிக்க மாட்டேன்’னு பால் சொம்பு மேல சத்தியம் பண்ணுனதுனால, அன்னியிலேர்ந்து சத்தியமா பால் குடிக்கிறதையே விட்டுட்டேங்க!”

– 10th அக்டோபர் 2007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *