கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 19,610 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 28-30அத்தியாயம் 31-33

அத்தியாயம் – 31

கால வித்தியாசம்

“பதின்மூன்று வருஷங்களுக்கு முன்னால், இதே தினத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில், பத்மாவதியம்மாள் தன் படுக்கையில் உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தார்கள். விருந்து முடிந்து ராணுவ அதிகாரிகள் எல்லாம் வெளியே போய்விட்டார்கள். முத்தையா முதலியார் தம் படிப்பறைக்குள் புகுந்து விட்டார். செந்தில்நாதர் அவரைப் பின் தொடர்ந்து சென்றார். அருளானந்த சாமியாரவர்களும் படுக்கப் போய் விட்டார்கள். வீட்டினுள்ளிருந்த விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு, இப்போதைப் போலவே அன்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது…?”

“ஆம், ஆம், அப்போது யுத்தகாலமல்லவா?” என்றார் டிப்டி சூப்பரிண்டு. 

“அப்போது, சாமியாரவர்களே!” என்று தொடர்ந்து பேசினார் கேசவன். “ஒரு புஸ்தகம் எடுத்து வருவதற்காகத் தாங்கள் கீழே இறங்கிப் போனீர்கள். மாடிப் படிக்கட்டின் பாதி வழியில் போகும் போது, முத்தையா முதலியாரின் படிப்பறையைத் திறந்து கொண்டு, செந்தில் நாதர் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தீர்கள்….”

“ஆம், அவர் என்னைத் தாண்டிச் சென்றார் மாடியை நோக்கி. அப்போது ஹால் கடிகாரத்தில் மணி பன்னிரண்டடித்து ஐந்து நிமிஷம் ஆகியிருந்தது!” என்றார் அருளானந்த சாமியார். 

“ரொம்பச் சரி, ஆனால் அன்றிரவு நடந்த அதே சம்பவத்தை, இன்றிரவு எனக்காக நீங்கள் நடித்துக் காட்ட வேண்டும். காலஞ் சென்ற முத்தையா முதலியாருக்கும் செந்தில் நாதருக்கும் பதிலாக, முறையே டிப்டி சூப்பரிண்டும் தினகரனும் நடிப்பார்கள். இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு, கீழே ஒரு பத்திரிகை நிருபர் காத்துக் கொண்டிருக்கிறார். வேண்டுமானால், செல்லையாவும் வந்து பார்க்கட்டும். மற்றவர்களெல்லாம் இந்த அறையிலேயே இருக்க வேண்டியது. சாமியாரவர்களே, இதற்கு அடுத்த அறையில் தானே அன்றிரவு தாங்கள் தங்கியிருந்தீர்கள்?” 

“ஆம்,” என்று தலையை அசைத்தார் சாமியார். 

“தயவு செய்து இப்போது அதே அறைக்குள் போயிருங்கள். என்னுடைய ஊதுகுழல் சப்தத்தைக் கேட்டவுடன், முத்தையா முதலியார் கொலையுண்ட இரவன்று எப்படிக் கீழே மாடிப் படிக்கட்டில் இறங்கி வந்தீர்களோ அப்படியே இப்போதும் இறங்கி வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!” என்றார் துப்பறியும் கேசவன். 

“என்னவோ இதெல்லாம் வெறும் வீண் பொழுது போக்காய்த்தான் முடியப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இதை நான் மறுக்காமல் ஒப்புக்கொள்கிறேன்,” என்று முணு முணுத்தார் அருளானந்த சாமியார். 

“ரொம்ப வந்தனம். அப்படியானால் வாருங்கள் நாம் போகலாம்,” என்று அவ்வறையை விட்டு வெளியே வந்தார் கேசவன். சாமியார் அந்த அறைக்குச் சென்றார். டிப்டி, தினகரன், செல்லையா மூவரும் கேசவனைப் பின் தொடர்ந்து கீழே யிறங்கினர். 

அவர்களெல்லாம் வெளியேறியதும், கோதண்டமும் மஞ்சுளாவும் ஏதோ பேசுவதற்கு வாயெடுத்தனர். 

“உஸ்!” என்று – உடனே அவர்களைச் சீறி யடக்கினான் கண்ணன். “அட அறிவுகெட்ட ஜன்மங்களே, நாமெல்லாம் ஒரு பொறியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். நம்மைச் சுற்றிலும் இரகசியமாக மைக்ரா போன்கள் வைக்கப்பட்டிருக்கலாம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை, அவர்கள் மறைந்திருந்து கவனிப்பார்கள். ஆகையால் வாயை அடக்கிக் கொண்டு மௌனமாயிருங்கள்!” என்றான் மிக ரகசியமான குரலில். அவன் சொல்வது நியாயந்தான் என்று உணர்ந்தவர்களாய், பதில் பேசாது உட்கார்ந்திருந்தனர் பத்மாவதி முதலியோர். 

கீழே ஹாலின் இருளை மிகைப்படுத்திக் காட்டுவதுபோலிருந்தது, அங்கு எரிந்து கொண்டிருந்த மங்கலான ஊதா விளக்கு. அதன் படிக்கட்டுக்கு எதிர்ப் புறத்தே தூரநின்றவாறு, தன் பிகிலை யெடுத்து ஊதினார் துப்பறியும் கேசவன். 

உடனே மாடியில் தாம் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்தார் அருளானந்த சாமியார். மாடிப்படிகளில் அவர் இறங்கத் தொடங்கியதும், கீழேயிருந்த படிப்பறையின் கதவைத் திறந்துகொண்டு செந்தில் நாதராக நடிக்கும் தினகரன் வெளியே வந்தான். அடுத்த க்ஷணமே அவ்வறையின் கதவு மூடப் பட்டது. எனினும் அதற்குள், அதனுள்ளிருந்து வெளிப்பட்ட ஓர் ஒளிக்கற்றையானது, அந்த ஹாலில் வீசியடித்து மறைந்தது. 

அறையிலிருந்து வெளிவந்த தினகரன், நேரே படிக்கட்டிலேறி சாமியாரைத் தாண்டிச் செல்லும் தருணம், “எல்லோரும் அப்படியே நில்லுங்கள்!” என்று இரைந்து கூறினார் துப்பறியும் கேசவன். 

உடனே நிசப்தம் நிலவியது. 

“சாமியாரவர்களே, தாங்கள் மேலேயிருந்து இறங்கி வரும் போது சுவரிலுள்ள கடிகாரத்தைப் பார்த்தீர்களா?” 

“ஆம்; பார்த்தேன்?” 

“அதில் மணியென்ன?” 

“பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிஷம்!” என்றார் சாமியார்.

“நிச்சயமாகச் சொல்லுவீர்களா?” 

“நிச்சயமாகத்தான் சொல்லுகிறேன்!” 

“அப்படியானால் சரி, தினகரா, கீழே படிப்பறையை விட்டு வெளிவரும்போது அதே சுவர்க் கடிகாரத்தை நீயும் கவனித்தாயா?” 

“ஆம்.” 

“அதில் நீ கண்ட மணி என்ன?” 

“பன்னிரண்டு அடிக்க ஐந்து நிமிஷம்!” 

“சரி. சாமியாரவர்களே, தயவு செய்து கொஞ்சம் வாருங்கள் கீழே. தினகரா, நீயும் வரலாம்!” என்றார் கேசவன். 

இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். ஹாலின் மத்தியிலிருந்த ஒரு பிரகாசமான மின்சார விளக்கு பளிச்சென்று எரியத் தொடங்கியது படிக்கட்டின் எதிர்ப்புறத்தே, வெகுதூரத்தில் செல்லையாவுக்கும் பத்திரிகை நிருபருக்கும் மத்தியில் நின்று கொண்டிருந்தார் துப்பறியும் கேசவன். முத்தையா முதலியாரின் ஸ்தானத்தில் தான் உட்கார்ந்திருந்த அறையை விட்டு வெளியே வந்தார் டிப்டி சூப்பரிண்டு. 

ஏககாலத்தில் எல்லோருடைய பார்வையும் நேரே சுவரிலுள்ள கடிகாரத்தை நோக்கிச் சென்றன. அதன் முட்களோ, பன்னிரண்டு அடிக்க ஐந்து நிமிஷத்தையே காட்டி நின்றன. 

“மணி இப்போது பதினொன்றரை தான் ஆகிறது. ஆனால் கடந்த இரண்டு மணி நேரமாக அந்தச் சுவர்க் கடிகாரத்தை ஓடாமலே பன்னிரண்டு அடிக்க ஐந்து நிமிஷத்திலே நான் நிறுத்தி வைத்திருக்கிறேன்!” என்றார் துப்பறியும் கேசவன். 

அந்தச் சுவர்க் கடிகாரத்தையும் துப்பறியும் கேசவனையும் மாறி மாறி ஏறிட்டுப் பார்த்தார் சாமியார். அவர் மூளை குழம்பியது. ஒரு கொடிய துன்பத்தின் சாயை அவர் முகத்தில் படர்ந்தது. 

“என்ன விபரீதம்? நான் எவ்வளவு முட்டாளாய் விட்டிருக்கிறேன்! அநியாயமாய் என் பொய்ச் சாட்சியத்தால் செந்தில் நாதரல்லவா தூக்கிலிடப்பட விருந்தார்! நல்லவேளை!” என்று தழுதழுத்த குரலில் புலம்பினார் அருளானந்த சாமியார். 

“நீங்கள் சொன்னது பொய்ச் சாட்சியமல்ல; தவறுதலான சாட்சியம்,” என்று திருத்தினார் கேசவன். 

“எனக்கொன்றுமே விளங்கவில்லையே?” என்று விழித்தார் டிப்டி. “கடிகாரம் சரியாய்த் தானிருக்கிறது. ஏனெனில், அந்த அறைக்குள் போய் உட்காரு முன்பே அதை நான் ஒரு தரம் கவனித்தேன். சாமியார் கண்களுக்கு மட்டும் அது வேறு விதமாகக் காட்சியளித்ததன் காரணம் என்ன?” 

“அதை நான் உங்களுக்குச் சுலபமாக விளக்க முடியும்”, என்று ஆரம்பித்தார் கேசவன். “முதலாவதாக, அருளானந்த சாமியாரவர்களுக்கு எப்பேதுமே கண்பார்வை கொஞ்ம் மங்கல். மேலும், இந்த வீட்டில் அவர் அதிகமாகப் பழகியவால்ல. பாதி ஜாமநேரத்தில், இருளடைந்த படிக்கட்டின் வழியே அவர் இறங்கி வந்தார். அப்போது அறையின் கதவு திறந்து மூடியதால், ஒரு வெளிச்சம் திடீரென்று தோன்றி மறைந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு கடிகாரத்தையும் அதன் முட்களின் நிலையையும் கண்ணுற்றதாக அவர் கருத்துக்குப் பட்டது. ஆனால் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முந்திய அன்றிரவும் சரி, இன்றிரவும் சரியே; அவர் பார்த்தது உண்மையான கடிகாரமல்ல. அதோ படிக்கட்டின் எதிரேயிருக்கும் அந்தப் பெரிய நிலைக்கண்ணாடியில், கடிகாரத்தின் பிரதி பிம்பத்தைத்தான் அவர் பார்த்தார். அந்தப் பிரதிபிம்பத்தை இப்போது நீங்கள் எல்லோருமே பாருங்கள்: பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிஷம் ஆனது போலவே அதன் முட்கள் காணப்படுகின்றன.” நிலைக் கண்ணாடியில் மாறிப் பிரதி பலிக்கும்போது, பன்னிரண்டுக்கு ஐந்து நிமிஷம் முன்னதாகவுள்ள முள் பன்னிரண்டைத் தாண்டி ஐந்து நிமிஷம் தள்ளியிருப்பதாக மாறு பிரதிபிம்பம் தோன்றுவதுண்டு! 

ஆம்; கேசவன் கூறியது சரியாகவே யிருந்தது. நிலைக் கண்ணாடியையும் சுவர்க் கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தார் டிப்டி சூப்பரிண்டு. அவர் முகத்தில் அசடு வழிந்தது. “அந்தக் கேஸ் நடக்கும் போது எங்களில் யாருக்குமே இது மூளையில் எட்டவில்லையே?” 

“அதற்குக் காரணம், சாமியாரவர்களின் சாட்சியத்தில் யாருக்குமே சந்தேகம் தட்டவில்லை. அதைத் திறமையாகப் பயன் படுத்திக்கொண்டாள் பத்மாவதி. அவள் ஒருத்திக்குத்தான் அப்போது உண்மை தெரியும். எனினும், செந்தில் நாதரைத் தூக்கு மேடைக்கு அனுப்பி விட்டால் முத்தையா முதலியாரின் சொத்துக்களைச் சுலபமாக அடைந்து விடலாம் என்ற துராசையால், உண்மையை மறைத்து அவள் பொய்ச்சாட்சியம் கூறத் துணிந்தாள்!” என்றார் கேசவன். 

அவர் கூறிய விளக்கத்தைக் கேட்டு, எல்லோரும் வியப்பே வடிவாய் நின்றார்கள். 


கேசவன், ஏற்பாடு செய்த நாடகம், ஐந்தே நிமிஷங்களுக்குள் நடந்து முடித்துவிட்டது. உடனே அனைவரும் ஹாலிலிருந்து மாடிக்குச் சென்றனர். 

கீழே நடந்த விஷயங்கள் எதுவுமே அறியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதி முதலியோர். கேசவன் திரும்பி வந்ததும், கோதண்டராமன் கோபத்தோடு பேசத் தொடங்கினான்! “இது என்ன வேடிக்கை? என்னை எதற்காக இங்கு அழைத்து வந்தீர்கள்? பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த முத்தையா முதலியார் கொலைக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? அவர் இறந்த போது நான் இந்த ஊரிலேயே இல்லையே? என்னை ஏன் அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று கேட்டான் கோதண்டம். 

“கொஞ்சம் பொறு, தம்பி!” யென்று கையமர்த்தினார் கேசவன். “பத்மாவதியம்மாளை உனக்கு எத்தனை நாளாகத் தெரியும்?”

“எனக்கு அந்த அம்மாளைத் தெரியவே தெரியாது!”

“அப்படியானால் ‘சிலோன் கிளப்’ என்ற மதுப்போத்தலை அவர்களுக்குக் கொடுத்தது யார்?” 

இதைக்கேட்டதும் திடுக்கிட்டான் கோதண்டம். எனினும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “அது எனக்கெப்படித் தெரியும்?” என்றான் அழுத்தமாக. 

“அது போகட்டும். பத்மாவதியம்மாளும் அவள் புருஷனும் யாழ்ப்பாணத்தில் தண்டிக்கப்பட்ட போது, அவர்களோடு கூட குருமூர்த்தியென்ற ஒருவனும் சிறைவாசம் செய்தானே, அவனை யாவது உனக்குத் தெரியுமா?” என்று சிரித்தார் கேசவன். 

இடியேறுண்ட நாகம்போல் ஸ்தம்பித்து நின்றான் கோதண்டம். கேசவன் சொன்னார்: 

“அந்தக் குருமூர்த்திதான் இப்போது கோதண்டராமனாக விளங்குகிறாய் என்பதை, நான் குறிப்பிட்ட மது போத்தலிலுள்ள உன் கை ரேகைகளே எனக்குக் காட்டிக் கொடுத்தன”. 

“அப்படியே இருக்கட்டுமே? அதில் என்ன தவறு? என் பேரை நான் மாற்றி வைத்துக் கொண்டது சட்டப்படி குற்றமா?” என்று கேட்டான் கோதண்டம். 

“அப்படி நான் சொல்லவில்லையே? ஆனால், உன்னிடம் ஒரே யொரு விஷயம் மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” 

“என்ன?” 

“பத்மாவதியம்மாள் சிறைவாசம் செய்ததை வெளியிடாம லிருப்பதற்குக் கைக்கூலியாக, அவர்களுக்குக் கிடைக்கும் சொத்தில் எவ்வளவு பாகத்தை உனக்குக் கொடுப்பதாக அவர்கள் வாக்களித்திருந்தார்கள்?” 

“இதெல்லாம் வெறும் கற்பனை, உம்மால் எதையுமே ருஜுப்படுத்த முடியாது!” 

“அட பைத்தியக்காரா!” என்று சற்று கடுமையான தொனியில் ஆரம்பித்தார் கேசவன். “செல்லையாவையும் பழனியப்பனையும் கொல்வதற்கு நீ செய்த சதியின் முழு விவரமும் எனக்குத் தெரியும். இருளப்பனும் மாயாண்டியும் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்…”

“அயோக்யப் பயல்கள்! உண்மையில் அந்தப் படகு விபத்தே இருளப்பனுடைய சூழ்ச்சிதான்……” என்று கோதண்டம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,- 

“என்னடா முட்டாள், உளறுகிறாய்?” என்று அதட்டினான் கண்ணன். அடுத்த கணமே தன் தவறை உணர்ந்தவனாய் உதட்டைக் கடித்துக் கொண்டான் கோதண்டம். 

“இவர்கள் இரண்டு பேருமே அதில் சம்பந்தப் பட்டவர்கள் தான்”, என எழுந்து நின்றாள் மஞ்சுளா. “செல்லையாவைக் கொன்று விட்டு, என்னையும் அம்மாளையும் மிரட்டிப் பணம் பறிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அந்தத் திட்டத்தின் விவரம் எதுவுமே எங்களுக்குத் தெரியாது. இவர்களுடைய சதியில் எங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லை…” 

“சீ நாயே! மூடுவாயை!” என்று அதட்டியவாறு, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துப் பிடித்தான் கோதண்டம். “எல்லோரும் அப்படியே கைகளை மேலே தூக்குங்கள். யாரேனும் அசைந்தீர்களோ சுட்டு விடுவேன்,” என்று அவ்வறையின் வாசற்படியை நோக்கி அவன் பின் செல்லலானான். அதே சமயத்தில், கீழே டெலிபோன் மணி கணகண வென்றொலித்தது. 

துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்திக் கொண்டே தப்பி ஓட நினைக்கும் கோதண்டராமனோ ராட்சஸனைப் போல நின்றான். அறையிலிருந்த எல்லோருமே பயந்து அசைவற்று நின்றனர். ஆனால் கேசவன் மட்டும் சிரித்துக் கொண்டே கோதண்டத்தின் துப்பாக்கிக் குறியை நோக்கி நெருங்கினார். 

“ஓய் நில்லும்! நில்லும்!! சுட்டுவிடப் போகிறான்!” என்று கத்தினார் டிப்டி சூப்பிரண்டு. 

அடுத்த க்ஷணத்தில், குபீரென்று வேட்டை நாய்போல் கோதண்டத்தின் மீது தாவிப் பாய்ந்தான் செல்லையா. 

அவனைப் பின்பற்றி, டிப்டியும் கேசவனும் சேர்ந்து பாய்ந்தனர்.  

“படார்!” என்று அவ்வறையே அதிருமாறு ஒரு வெடிச்சப்தம் கேட்டது. அடுத்த விநாடியே, கோதண்டத்தின் கையிலிருந்த அத்துப்பாக்கியைத் திருகிப்பறித்தான் தினகரன். “யாருக்கேனும் காயம்பட்டதா?” என்று கேட்டுக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தார் டிப்டி சூப்பிரண்டு. 

“ஒருவருக்கும் ஒன்றுமில்லை. நீங்கள் முதலில் இவன்கையில் விலங்கை மாட்டுங்கள்,” என்றார் துப்பறியும் கேசவன். “தினகரா, நீ கீழேபோய் டெலிபோனைக் கவனித்து விட்டுவா.” 

அடுத்தபடியாகக் கண்ணனின் கரங்களிலும் விலங்கு மாட்டப்பட்டது. 

“ஓய்! மிஸ்டர் கேசவன்! நீர் அசகாயப் புலிதான்! ஆனால் கோதண்டத்தின் துப்பாக்கிக் குறிக்கு நேராக ஏனய்யா மார்பைக் காட்டிக் கொண்டு போனீர்? அவன் சுட்டுத் தள்ளியிருந்தால் நிம்மதியாய் துப்பறியும் தொழிலைத் தலைமுழுகிவிடலாம் என்றா?” என்று கேட்டார் டிப்டி சூப்பிரண்டு. 

“அந்தக் கோதண்டம் துப்பாக்கி இல்லாமல் இங்கே வரமாட் டான் என்பது எனக்குத் தெரியும்! அதனால் அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போய் அவனுக்குத் தெரியாமல் துப்பாக்கி மருந்தை வெறும் வேட்டு மருந்தாக மாற்றி விட்டு வந்தேன்! இல்லா விட்டால் அப்படி உயிருக்குத் துணிவேனா? நான் அவ்வளவு முட்டாளல்ல!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன். 

டெலிபோன் அறையிலிருந்து ஓடோடியும் வந்தான் தினகரன்.  

அத்தியாயம் – 32

பேயும் துப்பும்!

“ஆஸ்பத்திரியிலிருந்து தப்பியோடப் பார்த்தானாம் இந்த வெறியன் கனகப்பன். அதில் தடுமாறி, மாடியிலிருந்து கீழே வீழ்ந்து விட்டானாம். அவன் சீக்கிரம் இறந்து விடுவானென்று கூறுகிறார்கள்!” என்று டெலிபோன் தகவலைக் கூறினான் தினகரன். 

டிப்டியும் கேசவனும் ஆஸ்பத்திரிபோய்ச் சேருவதற்குள் கனகப்பன் இறந்து விட்டான். அங்கே அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தார், பிரபல மனோதத்வ நிபுணரான டாக்டர் ராமானுஜம். 

“இறப்பதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பு தான் அவனுக்குப் பிரக்ஞை வந்தது. அவனைப் பிடித்திருந்த பைத்தியமும் தெளிந்தது. தான் இறக்கப்போவதும் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.. ‘இனியாருக்கு நான் பயப்படவேண்டும்?’ என்ற துணிவில், அவன் உண்மையைக் கூறிவிட்டான்!” என்றார் டாக்டர் ராமானுஜம். 

“என்ன உண்மை?” என்று கேட்டார் டிப்டி. 

“நீங்கள் இங்கே அமர்த்தியிருக்கும் துப்பறியும் போலீஸ் அதிகாரி, அவன் கூறியதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரையே கேளுங்கள்!” 

“முத்தையா முதலியாரைத் தானே கொன்றதாகக் கனகப்பன் ஒப்புக் கொண்டான்!” என்று அவன் வாக்குமூலத்தை வாசித்துக் காட்டினார் அந்த அதிகாரி. 

டிப்டியின் உள்ளத்தில் தோன்றிய ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. “அப்படியானால் மைக்கேல் பிள்ளை ஊகித்தது சரியா யிற்று. முத்தையா முதலியாரை அவருடைய தம்பி செந்தில் நாத முதலியார் கொலை செய்யவில்லை யென்றால், அவருடைய சமயல்காரன் தான் கொலை செய்திருக்க வேண்டும்! ஆமாம்!…… கனகப்பனே தான் பித்தவெறி பிடித்து முத்தையா முதலியாரைக் கொன்றிருக்கிறான்!” 

“அதுதான் இல்லை!” என்று சிரித்தார் கேசவன். “அவரைக் கொன்ற பிறகுதான் அவனுக்கு வெறி பிடித்திருக்கிறது.”

“அது எப்படி?” 

“அது ஒரு நுணுக்கமான மனோதத்துவ விஷயம்” என்று குறுக்கிட்டார் ராமானுஜம். “முத்தையா முதலியார் இயற்கையிலேயே முன்கோபி. அன்றிரவு அவர் வேறு ஏதோ சிலகாரணங்களால் மகா ரௌத்ராகாரமாக இருந்திருக்கிறார். அப்போது, அவருக்கு ஏதேனும் வேண்டுமாவென்று கேட்கப் படிப்பறைக்குள் போன கனகப்பனை அவர் அகாரணமாகத் திட்டி அடித்திருக்கிறார். அவன் மீது வெறி நாய் போல் சீறி விழுந்தார். பல நாள் பொறுத்திருந்த கனகப்பனுக்கும், அன்று விதிவசத்தால் தன்னை மறந்த சீற்றம் வந்து விட்டது. அன்று எஜமானர் வாய்க்கு வந்தபடி திட்டும் போது. ‘அட, தேவடியாள் மகனே! போடா அப்பால்’ என்று உச்சரித்து விட்டார். தன்னை எஜமானர் அடித்துக் கொன்றாலும் பொறுத்துக் கொள்ளக் கூடிய கனகப்பனுக்குத் தன் தாயைத் தேவடியாள் என்று திட்டியதை மட்டும் பொறுக்க முடியவில்லை! ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே, பக்கத்தில் கிடந்த பேப்பர் அறுக்கும் கத்தியை யெடுத்து அவரைக் குத்திவிட்டான். குத்திய பிறகே, தான் செய்த காரியத்தின் பயங்கரம் அவனுக்குப் புலப்பட்டது. தான் அப்படிச் செய்தோமா என்பதை நம்பக்கூட அவனுடைய இருதய ஓட்டம் நடுங்கியது. அதை நம்பவும் மனது மறுத்து விட்டது. அந்த மன அதிர்ச்சி தாங்காமல் அவன் மூர்ச்சையுற்று வீழ்ந்தான். அந்த அதிர்ச்சியின் காரணமாகவே அவன் அது முதற் கொண்டு பைத்தியமாகி விட்டான். 

“அப்படியானால், செந்தில் நாதர் மீது அவனுக்கு ஏன் அவ்வளவு வன்கண்மை பிறக்க வேண்டும்?” என்றார் டிப்டி சூப்ப ரிண்டு. 

“ஒரு கொலைப் பித்தனின் சித்தம் வேலை செய்யும் விதமே அப்படித்தான். பயத்தின் காரணமாகவே பெரும்பாலான பைத் தியங்கள் தோன்றுகின்றன. ஒருவன் தான் நினைத்துப் பார்ப் பதற்கே சகிக்க வியலாத சம்பவமொன்று நிகழ்ந்து விடும்போது அவன் பைத்தியமாகிறான். அந்தச் சம்பவமானது, அவனுடைய உள்ளத்தின் பாதாளக் குகைக்குள் தள்ளப்படுகிறது. அதை அவன் மறந்துவிட விரும்பி, மனதோடு போராடிப் பித்துப் பிடித்து அதை மறந்தும் விடுகிறான். எனினும் தன்னையறியாமலே ஒரு குற்ற உணர்ச்சி அவனின் உள்ளுணர்வைத் துன்புறுத்து கிறது. அதனிடமிருந்து தப்புவதற்காக, அந்தக் குற்றத்தை வேறு யார் மீதாவது அவன் ஆரோகித்து விடுகிறான். தன் மீது வரும் கோபத்தை வேறு யார்மீதோ காட்டுகிறோம் அல்லவா, அது போலத்தான்! தான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லையென் றால் இன்னொருவர் செய்ததாக நம்ப முயல்கிறான். அதனால் உரு வெளித் தோற்றங்களும், பிரமைகளும் உண்டாகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் அது செந்தில் நாதர் தலையில் வீழ்ந்தது. அதனால் தான் செந்தில் நாதரே கொலைகாரன் என்று பைத்திய வெறியில் உளறிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பழக்க வாசனை காரண மாக எஜமான விசுவாசம் உண்டாகையால் செந்தில் நாதரைப் பழிவாங்க வேண்டுமெனவும் துடித்துக் கொண்டிருந்தான். இப் போது சாகப்போகிறோம் என்ற உணர்ச்சி மேலோங்கிப் பைத்தி யம் தெளியும்போது, தான் தான் எஜமானரைக் கொன்றோம் என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. அதனால் இருதயம் சட்டென அதிர்ச்சியுற்று விட்டது.” என்றார் மனோதத்துவநிபுணர். 

“ஓஹோ! அதனால்தான் கனகப்பன் அடிக்கடி முத்தையா முதலியாரின் ஆவியைச் சந்திப்பதாகக் கூறினான் போலும்!” என்று தன் தாடையைத் தடவினார் டிப்டி சூப்பிரண்டு. 

“ஆம். பைத்தியமானது உண்மையை இருதயத்தின் உள்ளே தள்ளிப் புதைத்து விடுகிறது. எனினும், அதையும் மீறிச் சில சமயங்களில் கனவு, ஆவிக்காட்சி போன்ற வடிவங்களில் உண் மையானது வெளிப்பட முயல்கிறது. வெள்ளை மாளிகையில் முத்தையா முதலியாரின் ஆவியைக் காண்பதாகக் கனகப்பன் சொன்னது எனக்கு அதிசயமாகத் தோன்றியது. மனச்சாட்சி யில் ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தாலொழிய பேய்களை என்றும் காண்பதில்லை. அதனால்தான் பேய்களிடமிருந்து பல வற்றை நாம் துப்பறிய முடியுமென முன்பொரு தடவை உம்மிடம் சொன்னேன்.” 

அத்தியாயம் – 33

வெள்ளை மாளிகையின் முடிவு

மறுநாளே இருளப்பனும், மாயாண்டியும் பிடிபட்டார்கள். பின்னர் நடந்த வழக்கு விசாரணையில் அவர்களும் கோதண்ட மும் தலைக்குப் பத்து வருஷம் சிறைத்தண்டனை பெற்றார்கள். கண்ணனுக்கு நாலு வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது. அவர்களைத் தண்டிக்கும் வழக்கில் பத்மாவதியும் மஞ்சுளாவும் அப்ரூவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மன்னிப்படைந்தாலும், கேஸ் முடிந்தவுடன் அவர்கள் ஊரும், உலகமும் சிரிக்க அந்த ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். கடைசிவரையில் அவர்களின் துராசைக் கோட்டைகள் தரை மட்டமாகப் போனதே அவர்களுக் குப் பெரும் தண்டனையாக விளங்கின! 

செல்லையாவின் ஆருயிர் நண்பன் பழைய தண்டனையை அனுபவிக்கச் சிறைக்கு அனுப்பப்பட்டாலும், அவனுடைய பிற் கால நன்னடக்கையைக் கருதி தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு சீக்கிரம் வெளியே வருவான் என்று தெரிந்தது. 

பலவிதமான குற்றங்களுக்கும் காரணமாகிச் சிறைப்பட்டிருக் கும் வெள்ளை மாளிகையில் வசிப்பதற்கே செல்லையாவிற்குப் பிடிக்கவில்லை. அந்தப் பிரும்மாண்டமான மாளிகையைத் தமிழ் வளர்ச்சிச் சங்கத்திற்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டான். தாய்மொழித் தொண்டு ஒன்றுதான் வெள்ளை மாளிகையின் கறையைக் கழுவி அதைத் தூய்மைப் படுத்தும் என்று நம்பினான். பண ஆசைதான் சகலவிதமான தீமைகளுக்கும் மூலவேர் என்பதை உணர்ந்த அவன் தன் திரண்ட செல்வங்களையெல்லாம் தமிழ்ப் பணிக்குக் கொடுத்து விட்டு, தன் கையாலே உழைத்துச் சேர்க்கும் சொத்துதான் உண்மையான சொத்து என எண்ணிக் கிராமந்திரத்திற்குப் போய்விட்டான். அவனுடன் பவானியும் புறப்படத் தயாரானாள். உண்மையான காதலுடன் புன்னகை மொட்டாக விளங்கும் அவளை வாழ்கைத் துணைவியாகப் பெற்று, அவளுடன் ஒன்றாகச் சிறு வீட்டில் வசித்தாலும் அதுவே அவனுக் குப் பெரிய இன்ப உலகமாகத் தோன்றியது. அவ்விருவரையும் வழியனுப்ப வந்த துப்பறியும் கேசவனும் லலிதாவும், ஒருவரை யொருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள். அப் போது அந்த நால்வரின் முகங்களில் பொங்கித் ததும்பிய உணர்ச் சிகளை ஓவியர் கிருஷ்ணமூர்த்தியால் தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியவில்லை: அவற்றை ஓர் ஓவியத்தில் உருவாக்க கடைசிவரை முடிய வில்லை என்றும் கேள்வி ! 

(முற்றிற்று)

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *