கெடுவான் கேடு நினைப்பான்…!






(கதைப் பாடல்)
அழகு நகராம் ஹேமலின்
அங்கு இருந்த எலிகளோ
வாழும் மக்கள் யாவர்க்கும்
வருத்தம் கொடுத்து வந்ததாம்!
எலிகள் தொல்லை நீக்கிட
எந்த வழியும் இன்றியே
வருத்தம் கொண்டு யாவரும்
வருந்தி வாழ்ந்து வந்தனர்.
அந்த ஊரின் அதிபரை
அண்டி ஒருவர் சென்றுமே
துன்பம் கொடுக்கும் எலிகளை
தூர ஓட்டி விடுகிறேன்.
கேட்ட துட்டு கொடுக்கணும்
என்று கேட்டுக் கொண்டனன்
ஊரிலுள்ள யாவரும்
ஒப்புக் கொண்ட தாலவன்
ஊது குழல் ஒன்றினை
ஊத எலிகள் யாவுமே
ஒன்று சேர்ந்து யாவுமே
ஊர்வலம் போலச் சென்றன!
குட்டி மட்டி எலிகளும்
குண்டுக் கட்டை எலிகளும்
யாவும் அவனைத் தொடர்ந்தன
எல்லாம் சேர்ந்து போயின!
எலிகள் தம்மை ஓடிடும்
வலிய ஆற்றின் வேகத்தில்
இறங்க வைத்து விட்டதால்
இறந்து போயின எலிகளே!
ஊரின் அதிபர் தம்மையே
‘ஊதியத்தைக் கொடு!’என
உரிமையோடு கேட்டுமே
ஊரார் கொடுக்க வில்லையாம்!
தம்மை ஏய்த்த மக்களின்
தவறை உணர்த்த விரும்பியே
ஊது குழலில் வேறொரு
ஒலியை இசைத்து நடந்தனன்.
சின்னஞ் சிறிய பிள்ளைகள்
சேர்ந்து அவனின் அடியொற்றி
சென்று குகையில் மறைந்தனர்
பின்னர் திரும்ப வில்லையாம்!
ஊரிலுள்ளோர் அழுதனர்
ஒன்று கூடிக் கதறினர்
கெடுவான் கேடு நினைப்பானெனக்
கேட்டில் வாடி வதங்கினர்.
ஏய்த்தல் என்றும் தவறென
எண்ணம் தன்னில் கொள்ளுவீர்
வாக்குக் கொடுத்து ஏய்த்திடாது
வாழும் வாழ்வை வெல்லுவீர்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |