கால ஓட்டம்
கதையாசிரியர்: சாரல் நாடன்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 6,334
(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆகா……. நெஞ்சில் இனிக்கும் நினைவுகள் என்று யாரோ ஒரு தமிழ்க் கவிஞன் பாடியிருக்கிறானாமே, அந்தக் கற்பனை இதே போன்ற சூழ்நிலையில்தான் அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனக்கு மட்டும் கவிதா ரசனை இருந்தால் அவனைப் போன்று ஒரு பாடல் என்ன….? ஒரு காவியமே இயற்றி விடுவேன்!
பெண்களின் விம்மிப் புடைத்த மார்பகங்களின் மீது பச்சை நிறச் சேலையைப் போர்த்ததைப் போலக் காட்சி யளித்தது அந்தத் தேயிலைத் தோட்டம்.
எத்தனை உயர்ந்த மலைகள்? அந்த உயர்வில் வளர்ந்து நிற்கும் கணக்கற்ற மரங்கள்; மரங்களின் கீழ் ஆர்த்து நிற்கும் இளந்தளிர்ச் செடிகள்…
எல்லாம் ஒரே பசுமை.
ஆமாம் மலை நாடெங்கணும் ஒரே பசுமை – அங்கு உள்ளவர்களின் வாழ்வைத் தவிர்த்து.
தினந்தோறும் வான மளந்து நிற்கும் இம்மலைகளில் ஏறி இறங்குவதென்றால் நினைக்கவே மலைப்பாகவும் பயமாகவும் தானிருக்கிறது; இமயத்தில் கொடி கட்டியவர்கள் இவர்களின் முன்னோர் என்பது வெறும் கற்பனை யாக இருக்க முடியாது! தமிழர் வீரம் இன்னும் செத்து விட வில்லை. நவநாகரிக எட்டாத இந்தத் தோட்ட சமூகத்தின் நாளாந்த வாழ்க்கையில் இது இன்னும் உயிர் வாழ்கிறது- கால அரக்கனின் ஜீரண சக்திக்கு உட்பட்டு அழியாது.
ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த இடத்தைப் பார்க்கும்போது பசுமரத்தாணிப் போல பதிந் திருக்கும் பால்ய நினைவுகள் தோன்றுகின்றன. அந்த நினைவுகளில் உயிர் பெறும் நிகழ்ச்சிகள்…
அப்போது நான் சிறுவன். ஐந்தாம் வகுப்பு வரை இதே தோட்டத்துப் பள்ளிக்கூடத்தில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நடந்த சம்பவங்கள் எதை யுமே விகற்பமாக எண்ணவும், எண்ணியதை மறைக்கவும் தெரியாத வயது சிறுமிகளோடு ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஓடி விளையாடுவதும், ஒளிந்து கண்டு பிடிப்பதுமாக இந்தத் தேயிலைத் தோட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கி விடுவேன். விடுவேன் என்றா சொன்னேன்? தவறு… விடுவோம் நானும் என் நண்பன் துரைசாமியும்.
துரைசாமியின் தந்தை அத்தோட்டத்து நூற்றுக் கணக்கான தொழிலாள “மந்தை”களில் ஒருவர். என் தந்தை மந்தைகளின் மேய்ப்பன்……. கண்டக்டர். ஆனால் இந்த வித்தியாசத்தையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்ளும் பெரிய மனுஷத் தன்மைக்கு உட்படாது, விளையாட்டொன் றையே முன் வைத்து உறவு பார்க்கும் சிறுபிள்ளைத்தன மான நாட்கள். அப்படி அமைந்த உறவு முறையில் தான் எத்தனை சண்டையும் சச்சரவும்? பெரிய மனுஷத் தோரணையில் குடும்பம் நடத்த முனைந்த குடும்ப விளை யாட்டுக்கள் தான் எத்தனை? இப்போது நினைத்தாலும் அவைகள் இனிப்பதற்குக் காரணம் என் துரைசாமிதான்.
கண்ணாமூச்சி விளையாடுவதிலிருந்து கல்லெறிந்து கொய்யாப்பழம் திருடுவதுவரை அவன்தான் எனது வலது –கரம். காலத்துக்கு இதயமில்லை. இல்லாவிட்டால் அந்த விளையாட்டுப் பருவத்தை. மனித வாழ்க்கையில் ஒரு குறுகிய எல்லைக்குள் முடித்து விட்டிருக்குமா?
பள்ளிக்கூடத்தில் மட்டுமென்ன? நானொன்றும் படிப்பில் அவ்வளவு சிறந்தவன் இல்லை. சாதாரணம்தான். துரைசாமியோ மகா கெட்டிக்காரன். இதை எங்கள் சுந்தர மூர்த்தி வாத்தியார் அடிக்கடி குறிப்பிடுவாரே!
எனக்குத் தெரியாததையெல்லாம் தெளிவுபடுத்தி படிக்க வேண்டும் என்ற ஆசையை-என் மரமண்டையில் புகுத் தியது அவன் தந்த சம்பளமில்லாத”டியூஷன்” தான்.
சுந்தரமூர்த்தி வாத்தியாரின் கொடிப் பிரம்புக்கும் ஏச்சுக் கும் மசியாத என் மூளை அவனது நட்புக்கு மசிந்து கொடுத்தது. “வீட்டில் தின்னுபுட்டு சும்மா கெடக்க வேண்டியதுகளும், சொரண்டிய தூக்கிக்கிட்டு புல்லுவெட்டப் போக வேண்டியதுகளும் இங்கு வந்து நம்ம உசிர வாங்கு குதுகள்” என்ற அவரது வயிற்றெரிச்சலில் வெளிப்படும் சாபத்துக்கு இல்லாத சக்தி “என்ன நல்லா? பாரு! யோசித்துப்பாரு! அன்னிக்குக்கூட சரியா சொன்னியே இப்ப மாட்டேங்கிறியே” என்ற துரைசாமியின் இதயத்தை நெகிழ்த்தும் சொற்களுக்கு நிறைய உண்டு.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுந்தரமூர்த்தி வாத்தியார் வாரத்துக்கு இரண்டு முறை ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பெரிய பிள்ளைகளாகப் பார்த்து விறகு கொண்டு வரும்படி கூறுவார். மற்ற வகுப்பு மாணவர்கள் அந்த நேரத்தில் பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் அவரது தோட்டத்தில் “தோட்ட வேலை” செய்வார்கள்.
ஆசிரியருக்கு மாணவர்கள் தங்களின் குருதட்சணையை அதன் மூலம் செலுத்தி வருவது தோட்டத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் தழும்பேறிப்போன பாரம்பரியம். காலத்தின் கொடுமைக்குள் சிக்கிச் சிதையாது இன்னும் உயி ரோடு பேணப்படும் மலைநாட்டு வழக்கங்களில் அதுவு மொன்று.
அங்கேயும் – விறகு வெட்டும் போதும் மிலாறு பொறுக்கும் போதும் – அவன் காட்டும் விரைவு….அப்பப்பா….!
எனக்கும் சேர்த்தே அவன் விறகு சேகரிப்பான். அதைத் தூக்கிக்கொண்டு வருவதொன்றே நான் செய்யவேண்டிய வேலை. அப்போதும் சுமை தெரியாமலிருப்பதற்காக அவன் சொல்லும் கதை – சொல்லும் முறைதான் எவ்வளவு கவர்ச்சியானது.
அல்லியரசாணிமாலை, விக்கிரமாதித்தன், மயிலி ராவணன், நல்லதங்காள் ஆகிய பல கதைகளையும் அந்த சின்ன வயதிலேயே நான் தெரிந்து வைத்திருந்தமைக்கு அவன்தான் காரணம் என்பேன்.
அந்த சின்ன வயதிலேயே அதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறானே! எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
ஒருநாள் அவனிடம் கேட்டேன்.
“துரை இவ்வளவு நல்லா கதை சொல்றியே! யாருக் கிட்டேயடா கத்துக்கிட்டே!”
“எங்க அப்பா ராத்திரி படுக்கிறப்போ தூக்கம் வர்ர வரைக்கும் இப்படி ஏதாவது படிக்கச் சொல்லி கேட்பாரு. விளங்காத இடத்தில் எனக்குத் தெரிஞ்ச மட்டும் விளங்கப் படுத்துவேன். அப்படி செய்ததால் அவைகளெல்லாம் எனக்கு மனப்பாடமாயிடுச்சி. அதிலும் இந்த நல்ல தங்காள் கதையிருக்கே! அம்மாவுக்கு உசிரு! திரும்பத் திரும்ப படிக்கச் சொல்லி கேட்பாங்க….”
“இந்த புத்தகம் உங்க வீட்டுல இருக்குதா?”
“மூணு நாலு கெடக்குது. அட்டலில் தேடிப் பார்த்தா இன்னும் கெடைச்சாலும் கெடைக்கும். இந்த பெரிய எழுத்து புராண வரிசைகளும், நவரச, ஒப்பாரி வரிசைகளும் தான் எங்களது தாத்தாவும், அம்மாயும் எங்களுக்கு விட்டுப் போன சொத்து”
இதைச் சொல்லும் போதே அவனது முகத்தில் இனம் தெரியாதவொரு மலர்ச்சி பரிணமித்தது. போக்கில் இழைந்தோடி நிலைத்து நிற்கும் பாரம்பரியத்துக்கு அது காலம் அவன் காட்டிய மரியாதை.
இதைக் கேட்டதும் நானும் ஒரு தொழிலாளியின் குடும் பத்தில் பிறந்திருச்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. இது போன்ற எத்தனை கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும்?
என் எண்ணப் போக்கை உணர்ந்தவன் போல துரை சாமி பேசினான்.
“என்ன நல்லா! உங்க வீட்டுலே இந்தக் கதை புத்தகங் களெல்லாம் இல்லையா? உங்க வீட்டுல யாருக்கும் இந்த கதையெல்லாம் தெரியாதா?”
தமிழர் பாரம்பரியத்தோடு ஒன்றியைந்து வளர்ந்த புராதன கலைகள் பழைய கர்நாடக முறையில் வாழ்பவர்கள் இடையேதான் இன்னும் உயிரோடு வாழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத வயது என்னுடையது. அதனால் அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தேன்.
மௌனத்துக்கு அவன் எப்படி அர்த்தம் கற்பித்துக் கொண்டானோ தெரியவில்லை.
சிறிது நேரம் அமைதி நிலவிற்று. நான் அவனைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்தான் என்ற நிலைமை. பின் நான்தான் பேச ஆரம்பித்தேன் –
“உங்க வீட்டுல வேற ஒண்ணும் வாங்க மாட்டாங்களா துரை?”
“வேற ஒண்ணும்னா…”
“ஆனந்தவிகடன், கல்கி, குமுதம்…?”
“ஆமாண்டா! நல்லா! அதெல்லாம் வாசிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஒரே ஆசைதான். ஆனால் யாரு வாங்கித் தருவா….?” ஏக்கத்தோடு கேட்டான்.
“அதைப்பத்தி ஒனக்கு ஏதாச்சும் தெரியுமாடா?”
“ரொம்ப கதைகளிருக்கும்டா….! ஒரு நாள் நம்ம வாத்தியார் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பழைய புத்தகம் கிடந்திச்சி. படிச்சிப் பார்த்தேன். ரொம்ப நல்ல கதைகள் இருந்திச்சுடா!”
“அதெல்லாம் படிச்சியினா இன்னும் ரொம்ப கதைகள் சொல்லுவ இல்லையா?”
“நெசந்தாண்டா? ஆமாம் உங்க வீட்டுல அதெல்லாம் வாங்குகிறீங்களா?” ஏக்கத்தோடு ஆசையும் இழைத்து அவன் பேசினான்.
“ஆமாம்டா என்னென்னமோ புத்தகங்க வாங்குறாங்க! ஆனா யாரு படிக்கிறா! அவசரத்துக்கு அடுப்பு பத்தவைக்கத் தான் உதவும்.”
இதைக் கேட்டதும் அவனது கண்கள் வியப்பால் விரிந்தன் என்னை ஏதோ ஒரு நூதனப் பிராணியைப் பார்ப்பதைப் போல பார்த்தான்.
“வேணும்னா ஒனக்கு கொண்டாந்து தாறன். வாசிச் சிட்டுத் தா. நான் வாசிச்சேன்னா பாடங்கள் படிக்காம கெட்டுப் போறேன்னு அப்பா ஏசுவாரு.”
“சரிடா.” அவன் நன்றி கலந்த பார்வையொன்றை என்மீது வீசினான்.
அதன் பின்னர் அவன் எனக்குப் பிடித்த புதிய கதை களைச் சொன்னான். கேட்பதற்கு அவைகளெல்லாம் ரசமாயிருந்ததால் நானும் அவைகளைப் படிக்கத் தொடங் கினேன். காலம் காட்டாறு போல வேகமாக ஓடியது. அதன் போக்கில் எத்தனையோ மாறுதல்கள்.
நான் நாவலப்பிட்டியிலும், பின் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து படித்தேன். பன்னிரெண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இப்போது நானொரு பட்டதாரி. கல்லூரி ஒன்றில் ஆசிரியர். கால ஓட்டம் என்னை எவ்வளவு உயர்த்தியது? துரைசாமியை….?
படிக்கும் காலத்தில் வீட்டில் தங்கி வானம் அளந்து நிற்கும் மலைகளின் அழகையெல்லாம் இரசிக்காத குறையை இந்த விடுமுறையிலாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடுதான் வந்திருக்கிறேன்.
கால ஓட்டத்தில் நான் மாறியதைப் போல அவ்வளவாக இல்லாவிட்டாலும் இந்தத் தோட்டமும் மாறித்தானிருக்கிறது.
முன்பு நாங்கள் பிள்ளையார் பந்து விளையாடிய பொட்டலில் புதிய லயன்கள் பல கட்டியிருக்கிறார்கள். பார்க்க நன்றாய்த்தானிருக்கின்றன. முன்பு மாதிரி குனிந்து சென்றால் இடிக்கும் மாட்டுப்பட்டி, “கதவு” மாதிரி இல்லாமல் புதிய முறையில் சமையலறை எல்லாம் வைத்துக் கட்டியிருந்தார்கள்…. “பரவாயில்லையே நத்தை வேகத் திலேயாயினும் தோட்டத்தில் மாறுதல் தெரிகிறதே.’
காற்று மெதுவாக வீசி உடலை இதப்படுத்தியது. காணும் காட்சிகள் உள்ளத்தை இதப்படுத்தின.
அதோ அந்தப் பள்ளத்தில் நிற்கிறதே ஒரு சவுக்கு மரம். அதைக்கூட காலம் விட்டு வைக்கவில்லை. முன்பு செழித்து வடர்ந்திருந்த அந்த மரம் இப்போது பட்டுப் போகும் தறுவாயிலிருந்தது. இலைகளெல்லாம் கொட்டிவிட்டிருந்தன. அதற்கு பட்டை வெட்டி விட்டிருந்தார்கள்.
அந்த மரத்தில் வளர்ந்து விட்டிருக்கும் கிளை ஒன்றிருக் கிறதே! அதிலுள்ள பொந்து ஒன்றில்தான் “மைனா” கூடு கட்டியிருந்தது. அது இறக்கை விரித்து இன்பமாக பறந்து திரிவதை புரிந்து கொள்ள முடியாத சிறு “பிராயம் அதைப் பிடித்து நாக்கை அராவிப் பேச வைத்து பார்க்க வேண்டும் என்ற சிறு பிள்ளை ஆசை.
இதைத் துரைசாமியி!. ம் சொல்லிய போது, “இன்னிக்கு. அந்திக்குப் பார்ப்போம்” என்றான்.
அன்று மாலை.
இருவரும் அந்த மரத்தருகே சென்றோம். அவன் இரண்டு ஏணிகளை ஒன்றாக இணைத்து உயரமாகக் கட்டி மரத்தின் மீது சாய்த்து நிறுத்தினான். ஏணியின் இரு ஓரங் களுக்கும் நடுவில் மரம் நின்றிருக்குமாறு சாத்திவிட்டிருந். தான். ஏணியை இப்படியும் அப்படியும் நகர்த்திப் பார்த் தான். நகரவில்லை. அவனது செய்கைகளைப் பார்த்துக் கொண்டே, நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன்.
“நல்லா இதை எதுக்கும் இறுக்கமாகப் புடிச்சுக்க” என்று சொல்லி ஏணியை காட்டிவிட்டு, அதன் மீது ஏறத் தொடங்கினான். அவனது கையில் சல்லடை கம்பியிலான ஒரு சிறிய கூடு வைத்து இருந்தான்.
துரைசாமி இரண்டு குஞ்சுகளையும் பிடித்து கூண்டுக்குள் போட்டுக் கொண்டு கீழிறங்கத் தொடங்கினான். அப்போது தான் அது நடந்தது.
அதன் தாய்ப்பறவை திரும்பி வந்து கூண்டில் குஞ்சுகள் இல்லாததையும், என் நண்பன் பிடித்திருந்த கூண்டினுள் அவை சிறைவைக்கப்பட்டிருப்பதையும் கண்டது. அவ்வளவு தான். கீச், மூச் என்று ஒரே சத்தம். தம் இறக்கைகளை வயிற்றில் அடித்துக் கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றி பறந்தது. தாய்ப் பறவையின் வியப்பைக் கண்டதும் குஞ்சு களும் கூண்டின் சந்துகளிடையே தலையை நீட்டிக் கொண்டு கத்தத் தொடங்கின.
தன்னிரு கைகளாலும் துரைசாமி தாய்ப் பறவைகளை விரட்ட முயன்றான். ஆனால் அந்த அற்ப மருட்டலுக்குப் பணிந்து விடுவதா தாய்ப்பாசம்!
நண்பன் ஏணியில் நின்றபடி பரிதாபமாக என்னையும் கூண்டையும், தாய்ப் பறவையையும் மாறிமாறிப் பார்த்தான். நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
சிறிது நேரம் சென்று நிமிர்ந்து பார்த்த போது நண்பன் குஞ்சுகளை கூட்டுக்குள் திருப்பி வைத்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தான்.
கீழே இறங்கியதும் அவன் முகத்தை ஏறிட்டும் பார்த் தேன். அவன் கண்கள் கலங்கியிருந்தன.
நல்லா- என் மீது கோபமா?” பரிதாபமாய் இருந்தது. அவன் கேள்வி,
“இல்லை துரை! உன் மீது எனக்கேன் கோபம். நீ இவ்வளவு இளகிய சிந்தையுள்ளவன் என்பதை இப்போது தான் கண்டு கொண்டேன். நான் செய்ய இருந்த பாவத்தை தடுத்து நிறுத்திட்டியே!”
“அப்படியா நல்லா! சுந்தரமூர்த்தி வாத்தியார் ஒரு நாள் “ஜீவகாருண்யம் பற்றிப் படித்துக் கொடுத்தாரே! நினைவிருக்கிறதா? அன்றிலிருந்தே நானிப்படித்தான். இன்னைக்குக்கூட உன் ஆசையைக் கெடுக்கப்படாதுன்னு தான்…133
“உங்க வீட்டிலே ஏதேனும்…”
“அப்படி ஒன்னும் கஷ்டமாயில்ல. பெரும்பாலான வீட்டுல ஜீவகாருண்ணியம் கடைப்பிடிக்கப்படுவதற்கு, அவர்கள் வீட்டில் நிலவும் வறுமைதான் காரணம். அந்த வறுமை எனக்கும் உதவுகிறது.”
என்னைப் போல் வசதியில்லாத வாழ்க்கையிலும் அவனு டைய அறிவு முதிர்ச்சியும், தெளிவும் அவனிடத்தில் எனக்கு ஒருவித மதிப்பேற்படுத்தியது. இன்றும் அது நின்று நிலவுகிறது.
குறி தவறாது கல் எறிவதில் அவன் சமர்த்தன். என் சக மாணவர்களில் இந்த விஷயத்தில் அவனிடம் பொறாமை கொண்டு ஒரு முறை “ஏன் பீத்திக்கிற. முடியும்னா அந்தக் குருவியை அடித்து விழுத்து, விழுத்த முடியுதான்னு பார்ப்போம்” என்று மாமரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்த குருவி ஒன்றைக் காட்டி சவால் விட்டனர்.
சவாலுக்கு எதிர்ச்சவால் விடும் அந்தப் பயமறியாத இளம் கன்றுப் பருவத்திலும் நிதானமாக, “ஏன் இந்த விளையாட்டுக் கெட்டித்தனத்தைக் காட்டிட இந்தக் குருவி தானா கிடைச்சது?” என்று கேட்டுவிட்டு அருகிலிருந்த தவிட்டுக் கொய்யா மரம் ஒன்றின் உச்சியிலிருந்து சில பழங்களை அடித்து வீழ்த்தித் தன் திறமையை அப்போது மெய்ப்படுத்திக் கொண்டான்.
தனது திறனை வெளிப்படுத்துவதற்குக்கூட பிற உயிர் களைத் துன்புறுத்த நினையாத அவனது காருண்ய மனம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
ஊ….ஊ…. ஊ ஆலைச் சங்கின் ஒலி என் நினை வோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தொழிலாளர் வேலையினின்றும் வீட்டுக்குத் திரும்பலாம் என்பதற்கான அடையாளம் அது.
நாள் முழுவதும் உடலில் ஏற்றிக்கொண்ட சோர்வை மட்டுமல்லாது கூடையில் நிறைத்துக்கொண்ட சுமையையும் இறக்கி வைப்பதற்காக மடுவத்தை நோக்கித் தொழிலாளர் கள் திரும்பிக்கொண்டிப்பதுகூட அழகாகத்தான் இருக்கிறது.
ஓர் ஓரத்தில் நின்றபடி அவர்களில் ஒருவன் என் துரை சாமியாக இருக்கக்கூடாதா? என்று கவனிக்கிறேன். ஒவ் வொரு ஆண் தொழிலாளியையும் உற்று உற்றுப் பார்க்கிறேன்.
கறுத்த வியர்த்த முகம்; வதங்கி சுருங்கிய நெற்றி, குழி விழுந்தகன்னம், காவிபடிந்தபற்கள். இத்தனையும் நிறைந்த அந்த தொழிலாளர்களிடையே, “ஜீவகாருண்யமும் அறிவும் மிக்க என் துரைசாமியைத் தேடிப் பார்க்கிறேன்.
இன்னும் ஐந்தாறு தொழிலாளர்கள் தான் எஞ்சியிருக் கின்றனர். அவர்களுள்ளும் இல்லையே……. அவனைக் காணோமே…!
ஏமாற்றத்தோடு திரும்ப முனைகையில் துரைசாமி என்ற பெயர் அவர்கள் சம்பாஷணையில் கேட்கவே நின்று உற்றுக் கேட்கிறேன். சபலம் விடுகிறதா? என்ன?
“இப்ப முன்ன மாதிரியில்ல. காலம் மாறிப்போயிடுச்சு. இல்லாட்டி துரைசாமி அப்படி நடந்துக்குவானா….!” என்றான் ஒருவன்.
“அது தானே! பாருங்களேன்” என்றான் மற்றவன்.
“சிறிதா இருந்தப்போ எப்படி சாதுவா இருந்தான் துரை” என்றான் வேறொருவன்.
என் மனம் படபடத்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு காதைத் தீட்டியவண்ணம் கேட்டுக் கொண்டிருந்தேன். “தன்னோட “ஸ்ரைட்க்”கில் சேராமே வேலைக்குப் போயிட்டான் என்பதற்காக தன் சித்தப்பன் மகனையே வெட்டிப்போட்டானே! கொலைகாரப்பாவி….!!! என்றான் மூன்றாமவன்.
எனக்குப் “பகீர்” என்றது, தலையைச் சுற்றியது. செவிகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டிருந்தன.
காருண்யத்தையும் கருணையையும் சூழ்நிலையின் உதவியுடன் உட்கிரகித்து சீரணித்துவிடும் கால ஓட்டம் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தது.
– கதைக் கனிகள், முதலாவது போட்டி, பரிசு பெற்ற மலையகச் சிறுகதைகள், தொகுப்பு: எஸ்.எம்.கார்மேகம், முதற் பதிப்பு: 1971, இளவழகன் பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026