காபூலிக் குழந்தைகள்




(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நல்ல உச்சி வெய்யில். ரஸ்தாவின் தார் உருகி ஈயம் போல் ஓடிற்று. தெப்பக்குளத்தினின்று சூடான காற்று குப் குப் என்று வந்தது. குளத்து நீரில் விழுந்த சூரிய கிரணங்கள் நீராழி மண்டபத்தின்மீது பாய்ந்து விளையா டிக்கொண்டிருந்தன. வெப்பம் தாங்காமல் காட்டுப் புறாக்கள் மண்டபத்தின் மாடங்களில் வாயைப் பிளந்து இறகைத் தொங்கவிட்டு நின்றன. தெருவில் நடமாட் டமே காணோம். ஆனால் ஒதியமரத்து நிழலில் சக்கிலி யன் ஒருவன் மட்டும் எதையோ ஓயாமல் தைத்துக் கொண்டிருந்தான்.

பொழுது போகாததால் இவ்வளவையும் கவனிக்க நேர்ந்தது. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் என் நண்பன் தையற்காரன்கூட அன்று ‘சிடுமூஞ்சி’யாய் இருந்தான்.
‘என்ன தம்பி! காலையில் பூனையைப் பார்த்தாயோ?’ என்று கிண்டல் செய்தேன்.
‘அது என்ன மூதேவியோ! காலணா இன்னிக்கு காணல்லே. நாளைச் சோறு எப்படியோ?’
‘சாமி போடுவாரப்பா’ என்று பேச்சு வழக்கத்தை ஒட்டி என் வாய் சொல்லிவிட்டது.
‘போதும்.உங்களுக்கொரு கும்பிடு; உங்க சாமிக்கு ஒரு கும்பிடு’ என்று கையைக் கூப்பினான்.
எனக்கு தையற்காரனைப் புண்படுத்தவேண்டு மென்ற எண்ணமே இல்லை. ஆனால் இப்பொழுது தெரி கிறது-எப்படி நம்முடைய பேச்சு வழக்கு அநேகமாய் பொருளும் உண்மையுமற்ற ஒரு ஒலிக்கூட்டமாகிற தென்று !
ஏனென்றால் உண்மையில் கடவுளிருந்தால் தையற் காரனை இவ்வளவு சோதனைக்குள்ளாக்க வேண்டிய தில்லை. இரண்டு மூன்று மாதத்திற்கு மேலாகவே அவ னுக்குத் தொழிலில் வரும்படி மிகமிகக் கம்மி. அதில் அவன் குடும்பத்தை நடத்திவரவேண்டும்- அதாவது பத்து வயதிலிருந்து ஆறுமாதம்வரையுள்ள ஆறு குழந் தைகளுக்கு சோறாவது போட்டாகவேண்டும்.
ஒரு நாளைக்கு அரை ரூபாய்கூட இல்லாமல் அவன் என்ன செய்யக்கூடும் ?
என் நம்பிக்கை அவனுக்குச் சோறாகுமா?
‘ஆமாம், போடுவாரு சாமி- கல்லைத்தூக்கி-செட் டிக்கு மூணு மாச வாடகை பாக்கி.. குழந்தைக்கு நாலு நாளாய்க் காய்ச்சல் . காலைச்சோறு மண்தான். என்னவோ கதை படிக்கிறீங்க…’
அவனுடைய ஆத்திரம் இன்னும் பொங்கியிருக்கும். அதற்குள் செட்டியாரே வந்துவிட்டார்.
‘என்னங்காணும் தையற்காரரே! கால் செருப்பு தேஞ்சுபோச்சு-வாடகைப் பாக்கி கேட்டு. என்னென்ன சால்ஜாப்! ஒரு பிராமிசரி நோட்டாவது எழுதிக்குடுத்து விட்டு அடுத்த வாரம் கடையைக் காலிசெய்யும். வட்டி நஷ்டம்தான்; நம்மாலாகாது.’
செட்டியார் அழுகைக்கு தையற்காரன் என்ன சமா தானம் சொல்லமுடியும்? உங்கள் காலில் செருப்பையே காணோமே என்று குத்தலாய்ப் பேசுவதால் வாடகைப் பணத்திற்கு வழிசெய்ததாகுமா? தவிரவும் அவன் அப்படி சொல்லக்கூடிய ஆளல்ல.
‘செட்டியாரே! தயவுசெய்யுங்க. இப்பொ போதாக் காலம். மூணுமாசமா முழுசா முப்பது ரூபா சம்பாதிக் கல்லே. நாளைப்போக மறுநாள் வரையில் வாய்தா குடுங்க……கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க – ஏழை மேலே.’
தையற்காரனுடைய கெஞ்சும் குரல் செட்டியைக் கூட அசைத்துவிட்டது, இருந்தாலும் தண்டல் முறை யின் பிகுவைக் குறைக்கலாமா?
‘அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைப் போக மறுநாள் பணம் குடுத்தால் போச்சு. இல் லாதபோனால் நானே கடை சாமானை வச்சு பூட்டிக் கொண்டு போய்விடுவேன். ஆமாம்.’
தையற்காரன் ‘தயவு’ என்று சொல்லிக் கும்பிட் டான். செட்டியார் போனவுடன் என் பக்கம் திரும்பினான்.
‘பாத்திங்களா என்பாட்டை-ஆத்திலே குளத் திலே விழுந்து சாகலாம். காசில்லாதவனுக்கு மானம் இருக்கப்படாது’ என்று நொந்து கொண்டிருந்தபொழுது அவன் மனைவி வந்து சேர்ந்தாள்.
தேங்கிய ஆத்திரத்திற்கு ஒரு திறப்புக் கண்டது போலாயிற்று.
‘கழுகு எங்கே வந்துச்சு?’ என்றான் தையற்காரன். அவள் கோபமின்றிக் குரல் குழையச் சொன்னாள். ‘இனாம் வைத்தியம் செய்யராங்களே பிரஞ்சு துரை சாணிங்க, அவுங்க தெருவோடே போனாங்க. கூப்பிட்டு வந்து குழந்தையைக் காண்பிச்சேன். குழந்தைக்குச் சுரம் முட்டிட்டுப் போச்சு, மாரில் சளி இருக்கு. மருந்து வாங்கிப் பூசுன்னு கடுதாசிலே எழுதித் தந்தாங்க. சோத் துக்கே காசில்லாமெ சாவறாமேன்னு அழுதேன். அவுங்க கிட்டெ இருந்த முக்கால் ரூபாயைக் கொடுத்தாங்க. இன்னும் அரை ரூபாய் இருந்தால் மருந்து வாங்கலாம்… புண்யவதிங்க…சாமிக்குக்கூட வேண்டிக்கிட்டேன் குழந்தை பொழைக்கணும்னுட்டு’
‘குழந்தையுமாச்சு குட்டியுமாச்சு. மருந்தில்லாமல் உன் சாமி காப்பாத்தட்டுமே. இங்கே நாகூர் சல்லிச் கூடக் கிடையாது, இப்பொத்தான் செட்டி கொத்தி விட்டுப் போரான். நீ வேறே வந்துட்டே.’
‘எங்கெயாவது பாருங்க ..போனால் வருமா?’ என்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.
‘ஏன் வராது? இப்பொ இருக்கறதைப்போல இன் னும் தானே வருது… காசும் சோறும்தான் சும்மா வராது…போ.. போ.’
அவள் தலையைச் சாய்த்துக்கொண்டு போய்விட் டாள். எனக்கு எதோ சமாதானம் சொல்ல விரும்பியது போல் அவன் முகத்தில் ஜாடை தெரிந்தது. ஆனால் அப்படி யாதொன்றும் சொல்லாமல் ‘கொஞ்சம் இருங்க …காபி வாங்கிக்கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டு கடையைவிட்டுப் போய்விட்டான்.
இரண்டு மூன்று நிமிஷங்களில் காபியுடன் திரும்பி வந்தான்.
‘என்னதான் காசுக்கு லாட்ரி அடிச்சாலும் காபி விடமாட்டே னென்குது, பார்த்தியா?’ என்று தத்துவம் பேச அரம்பித்தேன்.
‘காபி இல்லேன்னா குடிபிடிச்சிக்கும்…’
இன்னும் ஏதேனும் சொல்லியிருப்பான். ஆனால் கடைக்குள் இரண்டு காபூலி பிச்சைக்காரிகள் நுழைந் தது பேச்சுக்கு கட்டை போட்டுவிட்டது. ஆளுக் கொரு குழந்தை. பாவாடை விளும்பில் ஏறியிருந்த கப்பியே கரைக்கட்டான பழம் பாவாடையும், மெல்லிய சட்டையும், சிவப்புத் தலைத்துணியும் அப்பிச்சைக்காரி களுடைய உடலமைப்புக்கும் அழகிய தோற்றத்திற்கும் ரொம்ப ஏற்றதாயிருந்தன. ஒருத்தி காலில் ஒரு செருப் பிருந்தது. மற்றொருத்தி பழய சிலிப்பர் அணிந்திருந்தாள்.
குழந்தைகள் நல்ல சிவப்பு. அழகு என்று சொல் லத் தேவையில்லை.
‘பைஸா தோ மஹராஜ்.. ரெண்டு நாளா பட்னி… கொளந்தைக்கு கத்துது ..பைஸா தோ மஹராஜ்’என்று சேர்ந்தாப்போல யாசித்தார்கள்.
‘முதலாளி வெளியே போயிருக்கிறார், ஜா’ என்று சாதித்தான் நண்பன்.
இந்தப் பல்லவியை எவ்வளவு பெயர்களிடம் எவ் வளவு பிச்சைக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள்! அதிலும் காபூலிப் பிச்சைக்காரிகளா அசைவார்கள்?
அசையாத அவர்களை அசைத்தது குழந்தைகளின் சிணுங்கல். வெயிலில் அலைந்துவிட்டு நிழலில் வந்து நின்றதன் விளைவாக குழந்தைகள் வியர்த்தன. தோல் சீவிய கருணைக்கிழங்கைப்போன்ற நிறம் கொண் டது அவைகளின் முகம். எதையோ தேடுவதுபோல் ஒருத்தி சுற்று முற்றும் பார்த்தாள், அடுத்த ஷர்பத் கடை வாசலிலேயே குழாயிருப்பதைப் பார்த்ததும் ஒருவாறு சமாதானம் அடைந்தாள்.
என்ன தேவையோ என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுதே ஒருத்தி கூசாமல் ஒரு குழந் தையை இறக்கி கடையில் விட்டாள். பின் இருவரு மாக மற்றொரு குழந்தையுடன் எங்கோ சென்றனர்.
நாங்கள் முதலில் திகைத்துப் போய்விட்டோம். தையற்காரன் தலையைச் சொறிந்துகொண்டே ஆற வைத்த காபியை ருசிபார்த்துச் சாப்பிடத் தொடங் கினான். அதற்குள் அந்தக் குழந்தை கடை முழுதும் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்தது. மூலையிலிருந்த துணித்துண்டை இழுத்தது, கத்தரிக்கோலைத் தூக் கிற்று. நூல்கண்டை பிரித்துவிட்டுச் சிரித்தது. தையற் காரனுடைய திகைப்பு, ஏழ்மை, ஆத்திரம் அவ்வள வும் எங்கோ பறந்துபோயிற்று. குழந்தைக்குக் கொஞ்சம் காபி கொடுத்தான்.
போனவர்கள் திரும்பி வந்தார்கள். தலைக்கொரு சோப்புக்கட்டி. ஓஹோ! ஷாப்பில் போய் சோப் யாசகம்!
ஒருத்தி குழாயடிக்குப் போய் குழந்தை இடுப் பைத் தன் முழங்காலில் இடுக்கிக்கொண்டு குழாயைத் திருகிவிட்டாள். குழந்தையின் தலையில் ஜலம் விழுந்த பிறகு தலையில் சோப்பைப் போட்டுத் தேய்த்தாள். அப்பால் உடம்புக்கு. கடைசியாக குழாயின் கீழ் உட் கார்த்தி வைத்து குளிர ஸ்நானம் செய்வித்தாள்.
தையற்காரன் மனம் என்ன வாதனைப்பட்டுக் கொண்டிருந்ததோ?
கடையிலிருந்த குழந்தையை எடுத்துப்போக ஒருத்தி வந்தபொழுதுதான் தையற்காரன் தன்னுணர்ச்சியை முழுதும் அடைந்தான்.
இந்தக் குழந்தைக்கும் சோப்புத் தேய்த்து நீராட் டிய பிறகு இரண்டு குழந்தைகளையும் கூசாமல் கடை யில் விட்டுவிட்டு, அதே சோப்பால் சட்டைகளைச் சுத்தப் படுத்தப் போய்விட்டார்கள். குழந்தைகள் புதிதாய் மலர்ந்த ரோஜாவைப்போல் ஆயின.
தையற்காரன் குழந்தைகளோடு விளையாட அரம் பித்தான். இரண்டு மூன்று நிமிஷங்களுக்கும் பிறகு தடார் என்று கண்ணாடி டம்ளர் ஒன்று கீழே விழுந்து சுக்காயிற்று. அது குழந்தையின் விளையாட்டு!
இந்த சத்தத்தைக் கேட்டு பிச்சைக்காரிகள் திரும்பி வந்தார்கள். கண்ணாடி உடைந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு ‘பைஸா வாண்டாம், மஹராஜ். கஷ்டம் வந்துச்சு’ என்று சொல்லிவிட்டு குழந்தைகளை எடுத்துக் கொண்டார்கள்.
‘குழந்தை என்னத்தைக் கண்டுது? நான் கவ னிக்கவில்லை ‘ என்று பிசகைத் தன்மீதேற்றிக்கொண்டு பெட்டியிலிருந்து காலணா எடுத்துக் கொடுத்தனுப் பினான். பிள்ளைகுட்டி நல்லாயிருக்கணும்’ என்று அவர்கள் வாழ்த்தியது அவனைக் கிளறிவிட்டது. அமைதியின்றி எழுந்தான்.
‘நீங்க கடையில் இருங்க. இதோ வரேன்’ என்று எங்கோ போனான்.
அரை மணிக்கு மேலாயிற்று. வெய்யில் கொஞ்சம் தணிந்தது. நீராழி மண்டபத்திலிருந்து ஆண் புறாக்கள் கும்மாளிக்கும் ஓசை இன்பமாய் மிதந்துவந்தது. லேசான காற்று வீசிற்று.
தையற்காரன் திரும்பி வந்தான். வரும்பொழுதே சீட்டியடித்துக்கொண்டு வந்தது எனக்கு வியப்பாயிருந்தது. நேரே பெட்டியண்டை உட்கார்ந்ததும் தையல் வேலையைத் தொடங்கிவிட்டான்.
தையற்காரனை நான் உற்றுநோக்கிக்கொண்டிருந் தேன். அவனிடம் ஏதோ குறைவுபட்டது. இன்ன தென்று முதலில் புரியவில்லை. பிறகுதான் அவன் வலது கையிலிருந்த பொன் தாயித்துக்குப் பதிலாக தாம்பரத் தாயித்திருப்பது தெரிந்தது. கடையிலிருந்து போய் விட்டுத் திரும்பி வருவதற்குள் இந்த மாறுதல்! என் வியப்பு அதிகப்பட்டது.
‘ஆமாம், உன் தங்கத் தாயத்து ஒரு நிமிஷத்திற்குள் என்ன ஆய்விட்டது?’ என்று கேட்டேன்.
‘என் சம்சாரம் காசு வேணும்னு கேட்டுவிட்டுப் போனாளோ இல்லியோ!..பாவம் ! உண்மையாய் அவளை ரொம்ப கோவிச்சிக்கொண்டு விட்டேன். கையில் காசில்லை. இப்படியே தட்டானிடம் போய் தாயித்து மேலேயிருந்த பொன்னைக் கழட்டி காசுக் கடையில் கொண்டுபோய் போட்டேன், மூணு ரூபாய் கிடைச்சுது. அதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறே னென்று சொன்னேன். தேவையில்லை, அந்த துரை சாணிங்களைத் தேடிப் பிடிச்சு காசுகேட்டு மருந்து வாங்கிப் போட்டுவிட்டேன்’ என்று அழுதாள் மனைவி. …வாஸ்தவம் தானே.. நான் வேட்டைநாய் மாதிரி விழுந்துவிட்டேன்…’
‘இப்பொழுது குழந்தைக்கு எப்படி இருக்கிறது?’ என்றேன்.
‘தேவலை. ஒன்றும் பயமில்லையென்று துரைசாணி சொன்னாள்.’
‘ஆனால் நீ துரைசாணியைப் பார்த்தாயா?’
‘ஆமாம். பணத்திற்கு செலவில்லாமல் போகவே வீட்டை விட்டுத் திரும்பினேன். இந்தக் தெருக்கோடி வரையில் வந்துவிட்டேன். அப்புறம் என்னவோ தோணித்து. அந்த துரைசாணி ஆஸ்பத்திரிக்குப் போய் அவளைப் பார்த்து குழந்தையின் நிலையைப்பற்றிக் கேட் டேன். பயம் வேண்டாம் என்று ஆறுதல் சொன்னாள்.
“பணம்?”
‘அந்த ஆஸ்பத்திரி வாசலிலே மேரியாத்தா சிலை இருக்குதல்லவா? அங்கே ஒரு உண்டி இருக்கு.அதற்குள் போட்டுவிட்டேன்.’ என்று நிறுத்தி மௌனமானான் தையற்காரன்.
நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |